சார் .. தந்தி..

Spread the love

 

ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

 

எஸ்வி சேகரின் நாடகத்தில் ( அல்வான்னு நினைக்கிறேன்). சார் தந்தி என்று 4 முறை தந்தி வரும். ஐந்தாவதா ஒரு ஆள் சார் தந்தி என்று சொல்வார். அட..அது தினத்தந்தின்னு சொல்லி பேப்பர்ல ந்யூஸ் படிக்க ஆரம்பிச்சிடுவார் எஸ்வி சேகர். இப்ப எல்லாம் தந்தி இருக்கா..

 

ரங்கமணி சொன்னார் இப்பவும் கூட திருமணக் கூடங்கள்ல வாழ்த்துத் தந்தி வர்றத பார்த்து இருக்கதா. என் திருமணத்துக்கு வந்த வாழ்த்துத் தந்திகளை ஒரு ஃபைலா போட்டு ஒரு ட்ரங்குப் பொட்டில போட்டு வைச்சிருக்கேன். அதப் பார்க்க ஏழு கடல் , ஏழு மலை தாண்டுற மாதிரி போகணும் அவ்வளவு சாமானுக்கு நடுவில இருக்கு. மேலும் அண்டாகா கசம் .. அபுல் கா ஹுகும் நு சொன்னாதான் பொட்டியே திறக்கும். அவ்வளவு நாளாச்சு திறந்து பார்த்து.( ஒரு சுத்தியல் வேணும்னு நினைக்கிறேன்.:)

 

என்னோட ஐயா ஒரு முறை தந்தியை வாங்கினதும் படிச்சு விஷயத்தை சொன்னாங்களாம் பாட்டையாகிட்ட. உடனே பாட்டையா தந்தியைப் படிக்கிற அளவுக்கு படிச்சாச்சு எனவே படிச்சதெல்லாம் போதும்னு படிப்பை நிறுத்திட்டாங்களாம். !

 

நான் கல்லூரியில் படிச்சபோது ஒரு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் . அப்ப என் அப்பா தன்னோட அலுவலக ட்ரெயினிங்குக்காக கோவையில் இருந்தார். அப்போ ஃபோன் எல்லாம் பண்ணினா பிபி கால். ட்ரெயினிங் காலேஜ்ல எப்பிடி கூப்பிடுறது.

 

இப்போ மாதிரி நாலணாவுக்கெல்லாம் செல்ஃபோன் விக்காத காலம். ( இந்த சுதந்திர தினத்தன்னிக்கு எல்லா ஏழை மக்களுக்கும் செல்ஃபோன் இலவசமா வழங்கப்படப்போறதா பேப்பர்ல படிச்சேன். மாசா மாசம் அதுக்கு பராமரிப்புத் தொகையா 100/- ரூபாய் கொடுப்பாங்களாம். ஏழைன்னு எதை வைச்சு நிர்ணயம் பண்ணப் போறாங்கன்னு தெரியலை. இன்னிக்கு எல்லார் கையிலயும் செல்ஃபோன் இருக்கு. பிச்சை எடுக்குறவங்க கூட (பேசும் படத்துல வர்ற மாதிரி மூட்டைக்குள்ள கட்டுக்கட்டா பணம் வைச்சிருக்கிற மாதிரி ) செல்ஃபோனும் வைச்சிருக்கலாம்.)

 

என் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தந்தி கொடுக்கணும். என்னோட ஆசையை என்னோட ஐயாகிட்ட சொன்னேன். தபாலாபீசெல்லாம் போனதில்லை. என் ஐயாவின் கணக்குப் பிள்ளையிடம் கொடுக்கச் சொல்லி சொன்னாங்க. நானும் ஒரு லெட்டர் எழுதுற ரேஞ்சுக்கு பாசமழையைப் பொழிஞ்சு. DEAR DAD, YOU ARE A SPECIAL PERSON TO ME . I FEEL PROUD OF YOU. IN THIS SPECIAL BIRTHDAY I WANT TO WISH YOU. “HAPPY BIRTHDAY TO YOU.. HAPPY LONG LIFE TO YOU.. MAY THE GOOD GOD BLESS YOU.”. EVER YOURS LOVING DAUGHTER., THENU. அப்பிடின்னு ( இன்னும் கூட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் இருக்கும்.. மறந்துட்டேன். கிட்டத்தட்ட ஒரு பாராகிராஃப் அளவு) எழுதி கல்யாணம் அண்ணன் கையில கொடுத்தாச்சு.

 

அவர் ஐயாகிட்ட போய் இது ரொம்ப பெரிசா இருக்கு. இத அனுப்ப இன்னும் காசு கேக்குறாங்கன்னு சொல்லி இருக்காரு. உடனே ஐயா கூப்பிட்டு ஒரு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாங்க பாருங்க. “படிச்ச பிள்ளதானே நீயி. பாசம் இருக்கதுதான். ஒரு பிறந்த நாள் வாழ்த்து இப்பிடிப் பெரிசாவா அனுப்புறது. இதுக்கு எல்லாம் நம்பர் இருக்கு. 5 ஆம் நம்பர் பிறந்தநாள் வாழ்த்துக்கு. அதையே அனுப்பிடலாம். அதை அனுப்பினா 5 ரூபாய்தான். நீ எழுதி இருக்க ஒவ்வொரு எழுத்துக்கும் காசு என்றார்..!”

 

திருமணத்துக்கு வாழ்த்துத்தந்தி இருப்பது போல ( 27 ந்னு ஞாபகம்..). சீரியஸா இருந்தா, அல்லது இறந்துட்டா எல்லாம் நம்பர்தான். தந்திக்கு நம்பரைக் குறிச்சு அட்ரஸைக் கொடுத்துட்டா போதும் .. டொக் டொடக் நு நம்ம தந்தி உடனே போய் சேர்ந்துடும்.

 

இந்த தந்தி ஆசை விட்டு வைக்காம பையனோட ஸ்கூல்ல சயின்ஸ் எக்ஸிபிஷன் நடந்தபோது ஒரு சயின்ஸ் புக்ல படிச்ச படி தொடர்ந்தது. ( BILL NYE THE SCIENCE GUY.. டிவியில் பார்க்குறது மற்றும் விஞ்ஞான விளையாட்டு, அறிவியல் சோதனைகள்னு புஸ்தகம் படிச்சிட்டு சின்னப் புள்ளயில கால்கேட் டூத் பேஸ்ட ரெண்டா கட்பண்ணி அதுல தண்ணி ஊத்தி மூடி மெழுகுல சுட வைச்சு ராக்கெட் அனுப்புறதுன்னு ஒரு விஞ்ஞானி ரேஞ்சுக்கு பலதும் பண்ணியாச்சு..)

 

மூணு நாலு கட்டைகளை வாங்கி வந்து ( இதுக்காக சா மில் எல்லாம் போனோம்..:) அத ஒரு கம்பியில் இணைச்சு டொக் டொக்குன்னு சத்தம் வர வைச்சு அந்த அதிர்வை இன்னொரு கட்டையில் பதியிறது.இதுதான் தந்தி. இந்தத் தந்தியடிக்கிற கருவியை செய்தோம். ( எக்ஸிபிஷன்ல வைச்சு தந்தி கொடுத்தீங்களான்னு கேக்குறீங்களா.. ஹிஹி.. இல்லை..)

 

பள்ளி கல்லூரித் தோழிங்களைப் பிரிய மனமில்லாமல் ஒவ்வொரு விடுமுறையின் போதும் கடைசி நாளில் கைகோர்த்து அலைந்து திரிந்து பிரியா விடை கொடுத்துப் பிரிவோம். அப்ப யேய் மறந்துடாதேடி நான் போய் லெட்டர் போடுறேண்டி என்றால் என் தோழி மீனாக்ஷி சரிடி நான் போய் தந்தியடிச்சிடுறேன் என்பாள். இப்ப எல்லாம் ஊருக்குப் போறவங்க நம்ம அன்புத் தொல்லை தாங்காம ARRIVED SAFELY ந்னு மெசேஜ் அனுப்பிடுறாங்க.

 

இந்த மாதிரி நம்ம வாழ்க்கையில ( அரிசியைப் போலக் காணமப் போயிக்கிட்டு ) இருக்க விஷயங்கள்ல தந்தியும் ஒண்ணு. அப்புறம் மறக்க முடியாத விஷயங்கள் ”சார் போஸ்ட் ” என்ற சத்தம். இது எல்லாம் கேட்டு பல நாளாச்சு. ஸ்டாம்ப் கலெக்ஷன்னு ஒரு ரணகளமும், அதகளமும் நடக்கும். இன்னும் காணாமல் போனவர்கள் பட்டியலில் க்ரீட்டிங் கார்ட்ஸையும் சேர்த்துக்கலாம்.

 

எனவே இந்த விஷயங்களை எல்லாம் ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்துல இருக்கோம். உங்ககிட்ட இருக்க பழைய தந்திங்க, க்ரீட்டிங் கார்டுங்க , பழைய கடிதங்கள் எல்லாத்தையும் பொக்கிஷமா காப்பாத்தி வைங்க.. ஒரு வேளை சுஜாதாவோட கதை “தலைகீழ் ராணி” யில் தலைகீழா ஸ்டாம்ப் ஒட்டிய கவர் மாதிரி பல ஆயிரங்களுக்குப் பின்னாளில் விலை போகலாம். !

Series Navigationநம்பிக்கை ஒளி! (5)“சபாஷ், பூக்குட்டி…!”