அக்னிப்பிரவேசம் – 8

This entry is part 12 of 31 in the series 4 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

அடையாரில் மிக நவீனமான் பங்களா அது. சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர்கள். உள்ளே இரு பக்கமும் பசுமையான புல்வெளி. ஒரு பக்கம் டென்னிஸ் கோர்ட், இன்னொரு பக்கம் ரோஜாத் தோட்டம். காம்பவுண்டு  சுவர்களைச் சுற்றிலும் ஒட்டினாற்போல் வளர்ந்திருந்த அசோகமரங்கள். அணுவணுவாய் செல்வச் செழுப்பை எடுத்துக் காட்டிக்கொண்டு, பார்த்ததுமே பணக்காரர்களின் வீடு என்று எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்தச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக என்பது போல் வாசலில் கூர்க்காவுடன் உள்ளே பெரிய அல்சேஷன் நாயும் இருந்தது.

பணத்தால் மனிதன் வாங்க முடிந்த எல்லா வித நவீன சாதனங்களும்  அந்த வீட்டில் இருந்தன. அப்பொழுதுதான் ஒப்பனை செய்து கொண்ட திரைப்பட நடிகையைப் போல் அந்த பங்களா  செயற்கை நாகரிகத்துடன் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. அழகாய் இல்லாதது அந்த வீட்டில் வசித்து வந்த மனிதர்களின் மனங்கள் மட்டும்தான். மனதில் இல்லாத சந்தோஷத்தை கண்கள் மூலமாய் எடுத்துக் காட்டுவது ஒன்றுதான் பணத்தால் வாங்க முடியாதாது. அதனால்தான் அவள் எப்போதும் கண்களை மூடிக்கொண்டு பூஜை பண்ணிக்கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டோ இருப்பாள்.

சாஹிதியை பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆயாவும், படிப்புச் சொல்லிக் கொடுத்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு கவர்னஸ் ஒருத்தியும் இருந்தார்கள். அதைத் தவிர அந்த வீட்டில் எல்லா வேலைகளுக்கும் தனித்தனியாக வேலைக்காரர்கள் இருந்தார்கள்.

இரவு பதினோரு மணி அடித்தது. நீல நிற காண்டெஸ்ஸா கார் கேட் அருகில் வந்து நின்றதுமே கூர்க்கா சல்யூட் அடித்து கேட்டைத் திறந்தான்.

வீட்டு வாசலுக்கு அருகில் சிம்மாசலம் தயாராய் நின்று கொண்டிருந்தான். சந்திரன் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, இறங்கி மெதுவாய் நடந்து வந்தான். அவனிடமிருந்த சிறப்பு குணம் அதுதான். எவ்வளவு குடித்தாலும் தள்ளாட மாட்டான். உளறமாட்டான். அவன் வந்து சோபாவில் உட்கார்ந்ததுமே சிம்மாசலம் பூட்சையும் சாக்சையும் அவிழ்த்தான். நிர்மலா அறையிலிருந்து வெளியே வந்தாள். சிம்மாசலம் அங்கிருந்து உள்ளே போய்விட்டான். அந்த இடத்தில் நிசப்தம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த நிசப்ததிலிருந்து அவள் குரல் மெதுவாய் ஒலித்தது.

“நீங்க எதுக்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டீங்க?”

எதிர்பாராத அந்தக் கேள்விக்கு குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தான். பதினைந்து நாட்களுக்குப் பிறகு பத்தாயிரம் மைல்கள் தூரத்திலிருந்து வந்திருக்கும் அவனைப் பார்த்து அவள் கேட்ட முதல் கேள்வி அது. அவளுடைய மூட் சரியாக இல்லை என்று உணர்ந்து கொண்டான். உடனே பதில் சொல்லவில்லை.

“உங்களைத்தான்? கல்யாணம் எதுக்குப் பண்ணிக்கொண்டீங்க? குழந்தையை எதுக்கு பெற்றுக் கொண்டீங்க?” குரலை உயர்த்தி அதட்டுவது போல் கேட்டாள்.

அதற்குள் அவன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுவிட்டான். அஃபென்சை  டிஃபென்ஸ் மூலமாய் சரிக்கட்டிக் கொண்டு போவது அவனுக்குப் பழக்கம் இல்லாதது. வியாபாரப்புள்ளி அவன். தனக்கு என்று ஒரு வாதத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் அவனால்.

“நீ என்னை எதுக்குப் பண்ணிக்கொண்டாய்?” அவனும் அதே தொனியில் கேட்டான்.

நிர்மலா அடியுண்டவள் போல் பார்த்தாள்.

அவன் சோபாவிலிருந்து எழுந்தான். “என் பணத்தைப் பார்த்துதானே? அழகான பங்களா, விலை உயர்ந்த நகைகள்.. புடவைகள்.. அவற்றை அணிந்துகொண்டு பெருமையாய் சுற்றுவதைதானே நீ விரும்பினாய்? நீ விரும்பியதை எல்லாம் தந்துவிட்டேன். வேறு என்ன வேண்டும் உனக்கு? கல்யாணம் கல்யாணம் என்று அழுவார்கள் ஆகும் வரையில். அதற்குப் பிறகு எதுக்குப் பண்ணிக்கொண்டோம் என்று அழுவார்கள். பெண்களுக்கு அழுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது” என்றான்.

அவனிடமிருந்து அப்படிப்பட்ட பதிலை எதிர்பார்க்காத நிர்மலாவின் கண்களில் நீர் சுழன்றது. ஆனாலும் சமாளித்துக் கொண்டாள். “நான் ஒன்றும் பிச்சைக்காரக் குடும்பத்திலிருந்து வரவில்லை. எங்க அப்பாவும் நல்ல பணக்காரர்தான். நானும் சிறுவயதிலிருந்தே காரில் சுற்றியவள்தான்” என்றாள் ரோஷத்துடன்.

”பின்னே என்னை இல்லாமல் இருபத்திநான்குமணி நேரமும் உன் காலடியில் விழுந்துக் கிடக்கிறவனை விலை கொடுத்து வாங்கியிருக்கலாமே?”

‘நீங்களும்தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உங்களுடன் சேர்ந்து கிளப்பில் டான்ஸ் ஆடி, சீட்டு விளையாடும் அந்த மேனாமினுக்கியைப் பண்ணிக்கொண்டு இருப்பதுதானே?”

“ஷட் அப்! அந்தக் கல்யாணத்திற்கு நீதான் தடையாக இருந்தாய்.”

“தடையாய் இருந்தது நான் இல்லை. உங்க கோழைத்தனம். காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதாய் நம்ப வைத்துவிட்டு, கடைசியில் கல்யாணப் பேச்சு வரும் போது தந்தையை சம்மதிக்க வைக்க முடியாமல் போனதால் என் காலில் வந்து விழுந்தீங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்ல வேண்டிய  தேவை எனக்கு என்ன வந்தது? நான் எதற்கு கெட்ட பெயர்வாங்கிக் கொள்ளணும்? அதோடு மாமா வந்து காலில் விழாத குறையாய் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். தந்தையை சம்மதிக்க வைக்க முடியாமல் போனால் அப்போதே சொத்தை விட்டுவிட்டு போய் அவளையே பண்ணிக்கொண்டு இருக்க வேண்டியது.”

“ஆமாம். இப்படிப்பட்ட சாக்கைச் சொல்லித்தான் கல்யாணத்திற்கு சம்மதித்தாய். நான் வேறு ஒருத்தியை காதலித்தாலும் அதில் உனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. எந்த விதத்திலும் சொத்து உங்கள் கையை விட்டுப் போய்விடக் கூடாது. அதுதானே வேண்டும்? அதோடு அழகாய் இருக்கிறோம் என்ற கர்வம் உனக்கு. உன்னை மறுத்துவிட்டு அந்த தாரிணியிடம் எதைப் பார்த்து மயங்கி விட்டேன் என்று உன் ஈகோ அடிபட்டு விட்டது. அதனால்தான் என்னைப் பண்ணிக்கொண்டாய்.”

திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். வேறொரு நபருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தும் கூட கொழைத்தனத்தினால், வேறு ஏதோ பலவீனதினால் திருமணம் செய்துகொண்டு, அதற்குப் பிறகு தினந்தோறும் இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டும், வெறுத்துக்கொண்டும், தேவைக்காக இரவு நேரத்தில் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர். அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி எதுவும் புரியாது. அதற்கு அந்த ஜோடிதான் எடுத்துக்காட்டு.

நிர்மலா அரும்பாடு பட்டு ஆவேசத்தை அடக்கிக்கொண்டு “நான் உங்களை நாள் முழுவதும் என்னோடு கூடவே இருங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு குழந்தையின் தந்தையாய் உங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்ளச் சொல்கிறேன்” என்றாள்.

“வேண்டியதை எல்லாம் பார்த்துக்கொள்ள நீ சும்மாதானே இருக்கிறாய். நான் வெறு தனியாய் பார்த்துக்கொள்ள என்ன இருக்கிறது?”

“நான் பார்த்துக் கொண்டால் போதுமா? நீங்க பதினைந்து நாட்கள் வெளிநாட்டுக்குப் போய்விட்டீங்க. வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. இருந்தாலும் பம்பாயிலேயே இருந்து விட்டீங்க. இந்த ஊருக்குக் காலையிலேயே வந்திருக்கீங்க. ஆனாலும் வீட்டுக்கு வந்து சேரும்போது இரவு பதினொருமணி. நேற்று சாஹிதியின் பிறந்தநாள். அந்த விஷயம்கூட உங்களுக்கு நினைவு இல்லை. பணம்… பணம்.. பணம்.. அவ்வளவுதான்.! சம்பாதிப்பதற்காக கஷ்டப்படுவது, அந்தக் கஷ்டத்தை மறப்பதற்காகக் குடிப்பது. ‘அப்பா என் வரவில்லை?’ என்று அவள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டீங்க. பிறந்தநாள் அன்றைக்காவது அந்த பிஞ்சு மனதை சந்தோஷப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இல்லையா?”

“பதினைந்து நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தால் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பார்த்துவிட்டேன். இனி சினிமா வசனங்கள் போதும். எனக்கு தூக்கம் வருகிறது.” விருட்டென்று தன் படுக்கையறைக்குள் போனான் சந்திரன்.

நிரம்லா அந்த இடத்திலேயே சோபாவில் உட்கார்ந்து ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தாள். அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வு இருந்த போதிலும் தன்மீது அன்பு வைத்திருந்த மாமாவின் வார்த்தையைத் தட்ட முடியாமல் இந்தத் திருமணத்தைப் பண்ணிக்கொண்டாள். திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தாய் தைரியம் சொன்னாள். அவ்விதமாய் சில நாட்கள் நன்றாகத்தான் இருந்தான் சந்திரன். சாஹிதியை உண்டான பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ரொம்ப மாறிவிட்டான். தாரிணிக்கு திருமணம் ஆகிவிட்டதென்றும், வெளிநாட்டுக்குப் போய்விட்டாள் என்றும் கேள்விப்பட்டாள். அதுதான் காரணமா? அப்பொழுதிலிருந்தே இதே கதைதான். குறைந்தபட்சம் அந்தக் குழந்தைக்காவது இந்த சச்சரவுகள் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

ஆனால் தந்தையின் கார் ஹாரனைக் கேட்டுவிட்டு உற்சாகமாய் எழுந்து வந்த சாஹிதி அறையை விட்டுவெளியே வரப் போனவள், அவர்களின் சண்டையைக் கேட்டுவிட்டு பயந்துபோய் அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் என்பது நிர்மலாவுக்குத் தெரியாது. அவர்களுடைய சண்டையை முழுவதுமாக கேட்டுவிட்டாள் என்றும், நடந்தவற்றை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட அந்த பிஞ்சு மனதில் அந்த சின்ன வயதிலேயே வாழ்க்கையைப் பற்றி அளவு கடந்த பயமும், கோழைத்தனமும் நிரம்பி விட்டதென்றும் அவளால் ஊகிக்க முடியவில்லை.

சாஹிதிககு உறக்கம் வரவே இல்லை. நிர்மலா ஹாலைவிட்டு வெளியே வந்து தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டதைப் பார்த்த பிறகு வந்து படுக்கையில் விழுந்தாள்.

‘அம்மாவும், அப்பாவும் ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள்? டாடி எப்போதும் ஏன் அப்படி மம்மியை அழவைத்துக் கொண்டு இருக்கிறார்?’ என்று நினைத்துக்கொண்டாள் அந்தச் சிறுமி. தாய் எங்கேயுமே போக மாட்டாள். தன் பள்ளிகூடதிற்குக்கூட வர மாட்டாள். பூஜை பண்ணிக்கொண்டோ, புத்தகங்களைப் படித்துக்கொண்டோ உட்கார்ந்திருப்பாள். தந்தை எப்போதுமே வீட்டில் இருக்கவே மாட்டார். பக்கத்து வீட்டில் எப்போதும் குழந்தைகள் அம்மா அப்பாவுடன் புல்தரையில் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்து வெளியே போவார்கள். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். தன்னுடைய தாய் தந்தையும் அதுபோலவே இருந்தால் எவ்வளவு நன்றாக ரிக்கும்! இவ்வாறு எண்ணிக்கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

தூக்கத்தில் சில்லென்று கை ஒன்று தன்மீது படவே சாஹிதி மெதுவாய் கண்களைத் திறந்து ‘மம்மி’ என்று கூப்பிடப் போனவள் நிறுத்திக்கொண்டாள். வந்தது மம்மி இல்லை, டாடி.

“டாடீ!” மெதுவாக கூப்பிட்டாள்.

“சாரி பேபி. உன் பிறந்த நாளுக்கு வரவில்லை என்று அழுதாயா? வர முடியாமல் போய்விட்டது” என்றான். அவன் குரலில் நேர்மை இருந்தது.

“இல்லை டாடி. அழவில்லை. அழுகை வந்தது. ஆனால் எல்லோரும் பார்த்தால் நன்றாக இருக்காது என்று அடக்கிக்கொண்டேன்.”

விடிவிளக்கு வெளிச்சத்தில் அவன் கண்களில் லேசாய் நீர் திரையிட்டு பளபளத்தது. தன்னால் ஏன் வரமுடியவில்லை என்றும், பம்பாயில் எவ்வளவு முக்கியமான கூட்டம் இருந்தது என்றும் சொல்லுவோமா என்று தடுமாறினான்.

ஆனால் உடனேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டு, “குட் கர்ல்! படுத்துத் தூங்கு. நேரமாகிவிட்டது” என்று நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு  அங்கிருந்து போய்விட்டான்.

தந்தை கூட நல்லவர்தான். அவர் வீட்டிற்கு வந்ததுமே அம்மா அதுபோல் கத்தாமல் இருந்திருக்கணும்’ என்று நினைத்துக்கொண்டாள் சாஹிதி. எது நல்லது எது கேட்டது, தவறு யாருடையது என்று புரியாத குழப்ப நிலை. அவள் வயது அதற்குக் காரணம் இல்லை.

இந்த உலகத்தில் எந்த இருவருக்கும், எந்த இரு கட்சிகளுக்கும், எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே சொல்ல முடியாது. அவரவர்கள் பொறுத்த வரையில் அவர்கள் செய்வதுதான் சரி.

காலையில் எழுந்ததுமே படுக்கையின் மீது ஒரு பெரிய பாக்கெட் தென்பட்டது.

“எது? நேற்று இரவு இல்லையே?” என்று நினைத்துக் கொண்டே சாஹிதி மேல் கவரைப் பிரித்தாள். உள்ளே அட்டைப்பெட்டியில் ஒன்றரையடி உயரமுள்ள அழகான பொம்மை இருந்தது. பொன்னிற தலைமுடி, பிங்க் கலரில் பிராக். பின்னால் திருப்பிப் பார்த்த போது பட்டன தென்பட்டது. அதை அழுத்தியதும் லேசாய் சிரிப்பு சத்தம் கேட்டது.

“ஹலோ! ஐ ஆம் பமீலா. டூ யூ லைக் மி? ஐ லைக் யூ. ஐ யாம் யுவர் பிரெண்ட்.”

சாஹிதி வியப்புடன் கிறீச்சிட்டாள். அந்தக் குழந்தையின் முகம் சந்தோஷத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பேசும் பொம்மையை மார்போடு அழுத்திக் கொண்டாள். ‘டாடீ … நல்ல டாடீ! என்மீது டாடிக்கு எவ்வளவு பிரியம்!’ என்று எண்ணிக்கொண்டாள்.

தான் இறந்த பிறகு தன்னுடைய மகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிநேகிதியாக இருக்கப் போகிறது என்று நாற்பது டாலர் கொடுத்து அந்த பொம்மையை வாங்கும் போது சந்திரன் ஊகித்து இருக்கவில்லை.

******

சின்ன வயதில் மனிதனில் வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சாஹிதிககு ஒரு நாள் அப்படிப்பட்ட சம்பவம்தான் எதிர்ப்பட்டது.

சாஹிதி அழகானவள் இல்லை. விஸ்வம், அருந்ததி இருவரின் சாயலைகளைக் கொண்டு பிறந்துள்ள அவளிடம் பெரிய மனிதர் வீட்டு குணாதிசயங்கள் இல்லை. முக்கியமாய் நிர்மலாவிடமிருந்த மிடுக்கும், பெரிய மனித தோரணையும் அவளிடம் படியவில்லை. எதிர்காலத்தில் அதுதான் அவளுள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மைக்கு வழி வகுத்தது.

தாயும் தந்தையும் எதிரும் புதிருமானவர்கள். சந்திரன் மேடீரியளிஸ்ட். நிர்மலா சந்தேகப்படுவது போல் அவன் என்றுமே தாரிணியிடம் கண்மூடித்தனமான காதலில் ஆழ்ந்து விடவில்லை. வருமானம் அவன் அகத்தை திருப்திப் படுத்திக்கொண்டிருந்தது. தன்னுடைய வெற்றியில் தன்னோடு தன் மனைவியும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவன் விருப்பம். ஆனால் நிர்மலாவுக்கோ வெறு விதமான, பெயருக்கு ஏற்றாற்போல் எளிமையான வாழ்க்கையில் விருப்பம். அவ்விதமாய் இருவரின் வழிகளும் வேறுவேறாகி விட்டன.

யாருடைய வாதம் சரியானது என்றோ, யார் யாரால் பாதிக்கப் படுகிறார்கள் என்றோ அச்சிறுமிக்கு தெரியாது. வேதனை மட்டும்தான் மனதில் எஞ்சி நின்று கொண்டிருந்தது. தன்னுடைய ஏமாற்றத்தை மறப்பதற்காக சந்திரன் வியாபாரத்தை தஞ்சம் அடைந்தான். எதைத் தஞ்சமடைய வேண்டும் என்று தெரியாத வயது சாஹிதிககு.

சிறுகாற்றில் உறுதியுடன் நிற்பதற்காக முயற்சி செய்கிறது அகல்விளக்கு. ஒரு பலமான காற்று வந்து அதை அணைத்துவிட்டுப் போகிறது.

கற்பழிப்பு தேவையில்லை. திருமணம் அவசியம் இல்லை. ஒரு குழந்தையின் மனதில் முத்திரை பதிந்து போய் விடுவதற்கு சிறிய அலையே போதுமானது.

அந்த அலையின் பெயர் பிரமஹம்சா.

அப்பொழுதுதான் கோவிலிலிருந்து திரும்பி வந்த நிர்மலா தோட்டத்து நாற்காலியில் உட்கார்ந்து பழரசம் அருந்திக் கொண்டிருந்தாள்.

இருட்டிக் கொண்டிருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தன. பாட்டு பாடிக் கொண்டிருந்த சாஹிதி ஏதோ யோசனை வரவே தாயிடம் வந்தாள்.

‘மம்மி! நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன?”

“அவை மின்னுவதில்லை கண்ணம்மா. பற்றி எரிகின்றன. அந்த வேதனை நம் கண்ணுக்குத் தெரியக் கூடாது என்று வைரம் போல் ஜோலித்தபடி பிரமையை ஏற்படுத்துகின்றன. ரொம்ப தூரத்தில் இருப்பதால் அப்படித் தோன்றுகின்றன.”

“நான் பெரியவள் ஆனதும் பைலட் ஆகப போகிறேன். டாடியிடம் சொல்லி ராக்கெட் வாங்கச் செய்து அதுகிட்டே போய் அந்த நெருப்பை அணைத்து விடுகிறேன்.”

“ரொம்ப நல்ல கற்பனைதான். ஆனால் அது சாத்தியமில்லை. நாளைக்கு உங்க டீச்சரைக் கேள். ஏன் என்று சொல்லுவாள்.”

நிர்மலா அதிகம் படித்தவள் இல்லை. சாஹிதி இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும் போதெல்லாம் பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொண்டு விடுவாள். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. தேவையற்ற வேதனையில் மூழ்கி நாளெல்லாம் கழிப்பதை விட புதிதாக கற்றுக்கொள்வதில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்று நிறைய பேருக்குத் தெரியாது. நிர்மலா ரொம்ப சாதாரணமான பெண். கணவனின் அன்பைப் பெறமுடியாமல் போனதற்கு மாற்று மருந்து கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றுதான் என்று அவள் நம்பினாள். கடவுள் அனுக்கிரகம் செய்தால் கணவன் “என்னை மன்னித்துவிடு நிர்மலா” என்று தானாகவே நெருங்கி வருவான். அந்தத் தெய்வம் எந்த உருவில் அனுக்கிரகம் பண்ணுவாரோ தெரியாது. அதனால் எல்லா தெய்வங்களையும் அவள் வணங்கி வந்தாள்.

*******

“காரை அனுப்பி வைக்கச் சொன்னால் ஏன் அனுப்பவில்லை?” சந்திரன் கோபமாகக் கேட்டான். அவன் எப்போது வந்தான் என்று இருவருமே கவனிக்கவில்லை.

“கோவிலுக்குப் போயிருந்தேன். தாமதமாகிவிட்டது. திரும்பி வந்ததுமே அனுப்பினேன்” என்றாள் நிர்மலா. அவன் கார் ரிப்பேரில் இருந்தது.

“சுவாமி அறை முழுவதும் எல்லா விக்கிரகங்களை தங்கத்தால் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறாய். காலை நாலு மணிக்கே எழுந்து பூஜை பண்ணுகிறாய். குடி மூழ்கி விட்டாற்போல் இன்னும் எந்த கோவிலுக்குப் போகணும்? எனக்குத் தேவை என்று தெரிந்துகூட நீ காரை அனுப்பாமல் போனதற்குக் காரணம் என்ன? நீ என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?” தீவிரமான் குரலில் கேட்டான்.

பின்னால் சந்திரனின் நண்பன் ராஜேஷ், அவன் மனைவி, மகன் நின்று கொண்டிருந்தார்கள். அவளுக்குப் புரிந்துவிட்டது. கார் தேவைப்பட்டது அவர்களுக்கக்தான். நடந்த தவறுக்கு தண்டனையாய் அவர்களுக்கு முன்னால் அவமானப்படுத்த வேண்டும் என்பது சந்திரனின் உத்தேசம்.

“இன்மேல் எப்போதும் காரைப் பயன்படுத்த மாட்டேன். கோவிலுக்குப் போகணும் என்றால் பஸ்ஸில் போய்க் கொள்கிறேன்” என்றாள் ரோஷத்துடன்.

“அந்தக் காரியத்தைச் செய்து எங்களைக் காப்பாற்று. ஆனாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று தெரிந்தும் இந்த பெண்கள் இப்படி கோவில் குளம் என்று சுற்றுவானேன்?”

பக்கத்தில் இருந்த ராஜேஷின் மனைவி “அந்த பெண்கள் கூட்டத்துடன் என்னைச் சேர்த்து விடாதீங்க சந்திரன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

நிர்மலாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “பின்னே எங்கள் பதி தெயவத்தின் கவனம் வெறு பெண்ணின் பக்கம் திரும்பக்கூடாது என்று அந்த தெய்வத்தை வேண்டிக்கொள்ளாமல் இருக்க முடியாது இல்லையா” என்றாள் அதே வேகத்துடன். பதிலடி கொடுப்பது கடவுள் அவளுக்கு தந்த வரம்..

ராஜேஷுக்கு அவள் இரண்டாவது மனைவி. அவளுக்குகூட அது இரண்டாவது திருமணம்தான். வேடிக்கை என்னவென்றால் முதல் கணவனிடமிருந்து அவளுக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்து இவ்விருவரின் திருமணத்தை நடத்தி வைத்தது சந்திரன்தான். அவளுக்கும் சந்திரனுக்கு நடுவில் ஏதோ உறவு இருப்பதாய் வதந்தி

அவள் எண்ணம் புரிந்ததுமே சந்திரன் கோபத்தால் கொதித்தெழுந்தான். அவன் கை வேகமாய் மேலே எழும்பிற்று.

அதற்குள் “மம்மி! அவனைப் பார்” என்ற சாஹிதியின் கூச்சலைக் கேட்டுவிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

ராஜேஷின் மகன் தொட்டிலில் கிடந்த பமீலா போம்மையிடம் போய் காலைப் பிடித்துத் தலைகீழாய் தொங்கவிட்டு ஆட்டியபடி கேலியாய் சிரித்துக் கொண்டிருந்தான். வெளியில் தெரிந்து கொண்டிருந்த அதன் உள்ளாடையைப் பார்த்து “ஷேம்.. ஷேம்” என்று கத்திக் கொண்டிருந்தான்.

ராஜேஷும் அவன் மனைவியும் அந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சாஹிதி ஓட்டமாய் போய் பொம்மையைப் பிடுங்கிக்  கொண்டாள். திரும்பவும் பறிக்க முயன்ற அந்தச் சிறுவனை மாறி மாறி அடித்தாள். சந்திரன் வியப்பிலிருந்து மீண்டவனாய் விரைந்து சென்று சாஹிதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

நிர்மலா வேகமாய் போய் அவனைத் தள்ளிவிட்டு சாஹிதியை இழுத்து அனைத்துக் கொண்டாள்.

“மம்மி! எனக்கு அந்த பொம்மை வேண்டும்.” ராஜேஷின் மகன் அழுது கொண்டிருந்தான்.

எங்கே அவன் பிடுங்கிக்கொள்வானோ என்று பலமாய் அழுத்திக்கொண்டாள் சாஹிதி. அவளுக்கு துக்கம் வரவில்லை. பயம் அதை வென்றுவிட்டது.

“நாளைக்கே வாங்கித் தருகிறேன். கார் வந்து விட்டது போல் இருக்கு. வாங்க போவோம். இந்த வீட்டில் யஜமானருக்கு மட்டுமே இல்லை. வந்த விருந்தாளிகளுக்கும் வரவேற்பு சரியாக இருக்காது.” சந்திரன் வாசலை நோக்கி நடந்தான்.

“மம்மி! அவன் பமீலாவை எப்படி தூக்கினானோ பார்த்ததாயா? இப்படித் தானா நடந்துகொள்வது? பமீலாவை தலைகீழாய் தூக்கி ஷேம் ஷேம் பண்ணி விட்டான்.” தேம்பி தேம்பி அழுது கொண்டே பமீலாவின் உடைகளை சரி செய்தாள் சாஹிதி.

நிர்மலா வேதனையுடன் மகளை அருகில் எழுத்து அணைத்துக் கொண்டாள். பமீலாவை யாரவது பொம்மை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் சாஹிதியால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவ்வளவு தூரம் உயிர்த் தோழியாகி விட்டிருந்தது அது.

“அழாதேம்மா. அடுத்த தடவை அவன் நம் வீட்டுக்கு வந்தால் நன்றாக அடித்து விடலாம்.”

“ஏம்மா? ஏன் அப்படி நடந்து கொண்டான்? அவனுக்கு மூளை சரியாக இல்லையா?”

“ஆண்பிள்ளை இல்லையா. அதான் பெண்களை அழ வைப்பதுதான் அவர்களுக்கு சந்தோஷம்.” சமாதானப்படுத்திக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள் நிர்மலா.

சாஹிதி சிறு பெண் என்றும், அப்படிப் பட்ட பெண்ணிடம் சுய இரக்கத்தைப் பற்றி உபதேசம் பண்ணக் கூடாது என்றும், அவ்வளவு பெரிய வார்த்தைகளைப் பேசக்கொட்டாது என்றும் நிர்மலாவுக்குத் தெரிதிருக்கவில்லை. நிறைய பேர் வீடுகளில் இதுபோல் நடந்து கொண்டுதான் இருக்கும்.

அன்று இரவு சாஹிதிக்கு தீவிரமாய் ஜுரம் வந்துவிட்டது. உறக்கத்தில் ஒரே புலம்பல். ராஜேஷின் மகன் வந்து பலவந்தமாக பமீலாவைப் பிடுங்கிக் கொண்டு போய் தூக்கில் போடுவது போலவும், தந்தையும், ராஜேஷ் அங்கிளும் தொலைவில் நின்று சிரித்தபடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் பயங்கரமான கனவு வந்தது.

அவள் அழுது கொண்டு இருந்த போது தந்தை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுகிறார். அவளும் பமீலாவும் நாதியற்றவர்களாய் தெருவில் பிச்சை எடுக்கிறார்கள். தெருவில் பசங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து பமீலாவைத் தரச் சொல்லி துன்புறுத்துகிறார்கள். தராததால் கல்லால் அடிக்கிறார்கள்.

அந்த சம்பவம், அதைத் தொடர்ந்து வந்த ஜுரம் சாஹிதியின் மனதில் பலமான் முத்திரையைப் பதித்துவிட்டன. அவள் கோபம் அவளுள் துவேஷதைத் தூண்டவில்லை. பயத்தை ஏற்படுத்தியது. எதுவும் செய்ய முடியாத கோழைத்தனத்தை உண்டாக்கியது.

இந்த இரண்டுமே வாழ்நாள் முழுவதும் அவளை விட்டுப் போகவே இல்லை.

(தொடரும்)

Series Navigationமச்சம்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -1
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *