சிலம்பில் அவல உத்தி

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு எந்தக் காப்பியத்திலும் அமையவில்லை எனலாம்.

அவலம்

அவலம் என்பதைத் தொல்காப்பியர், ‘அழுகை’ என்ற மெய்ப்பாடாகக் குறிப்பிடுகின்றார். அழுகையானது,

‘‘இழிவே, இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே’’(1199)

என நான்கன் அடிப்படையில் தோன்றும் என்று தொல்காப்பியர் தெளிவுறுத்துகின்றார். பிறர் ஒருவரை இழிவுபடுத்தும்போதும், ஒன்றை இழக்கும்போதும், தன்னிலையில் மடியும், வருத்தமும், இளைப்பும் ஏற்படும்போதும், வறுமையுறும்போதும் ஒருவருக்கு அவலம் ஏற்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நூற்பாவிற்கு உரையெழுதிய பேராசிரியர், “இவை நான்கும் தன்கண்தோன்றினும், பிறன்கண் தோன்றினும் அவலமாகும்” என்று குறிப்பிடுகின்றார்.

“அவலம்” என்னும் சொல் சங்கப்பாடல்களில் “ஆழ்ந்த வருத்தம், துன்பம், துன்பக்கடல், வறுமை, மனக்கவலை, மாயை, கேடு” ஆகிய பொருள்களில் அமைந்துள்ளது. தமிழில் “அவலம்”, “துன்பியல்” என்ற இருசொற்களும் ஆங்கிலத்தில் (Tragedy) “டிராஜடி” என்ற சொல்லைக் குறிப்பினவாக உள்ளன. அழுகை என்பது தானே அவலித்தல், பிறரவலங்கண்டு அவலித்தலென (துன்பப்படுதல்) இருவகைப்படும்.

அவலமும் காப்பியங்களும்

சுவை, கருத்து, வடிவம் ஆகிய கூறுகள் காப்பியத்திற்கு இன்றியமையாதவை. இவற்றில் “சுவை” என்னும் கூறு காப்பியத்தின் வெற்றிக்கும் நிலைப்பாட்டிற்கும் காரணமாக அமைகிறது. அறிஞர் தா.ஏ.ஞானமூர்த்தி, “இரக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளோடு அவற்றிற்குத் தொடர்பான உணர்ச்சிகளையும் மக்கள் உள்ளத்தில் எழுப்பி அவற்றைச் சுவையுடையனவாக ஆக்குவது துன்பியல் நாடகமாகும்” என்பர். துன்பியல் நாடகம் நோயைத் தணிவிக்கும் மருத்துவச் சிகிச்சை போன்றது. ஓர் உணர்ச்சியினை அதைப்போன்ற உணர்ச்சியின் மூலமாகத் தணிவிப்பதாகும் என்னும் புட்சரின் கருத்தினை தா.ஏ. ஞானமூர்த்தி மேற்கோளாகக் காட்டுவது நோக்கத்தக்கது.

சேக்ஸ்பியரின் அவல நாடகங்களைப் பற்றி ஏ.சி.பிராட்லி குறிப்பிடும்போது “தவிர்க்க இயலாத வகையில், மிகவுயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுகின்றார். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதென்பர். மேலும் அது ஒருவருக்கு எளிதாக ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செய்களினால் தாமே விளைவதாகும்” என்று குறிப்பிடுகின்றார். இக்கூற்றுடன் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் புறப்பாடலின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

சிலம்பில் அவலத்தின் நிலைக்களன்கள்

ஓர் உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு படைக்கப்படும் காப்பியத்தில் வறுமை களைந்து வளம் சேர்க்க வேண்டும் என்னும் உயரிய நோக்கம் மிக்கிருப்பதால் வறுமை என்ற நிலையில் இரட்டைக்காப்பியங்களில் மிகுதியும் அவலச்சுவை இடம்பெறவில்லை எனலாம். சிலம்பில் கோவலன் இலம்பாடு நாணுத்தரும் எனக் குறிப்பிடுவதைக் கொண்டு அவன் வறுமையின்பிடியுள் சிக்கினாலும்கூட துவண்டுபோய்விடவில்லை. வறுமையுற்ற போது மீண்டும் வாழ்தல் வேணடிச் சிலம்பை முதலீடாகக் கொண்டு மதுரைக்குச் செல்கிறான். மேகலையில் பசிப்பிணிபோக்குதல் பரம்பொருளுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்பட்டதால் அதிலும் வறுமையின் சித்தரிப்பு அவலம் என்ற நிலையில் இடம்பெறவில்லை எனலாம்.

இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியனாகின்ற நிலையை அடைவது துன்பத்தைத் தரும் அவலமாகும் எனக் கொள்வதற்கில்லை. ஏனெனில் இந்நிலை பின்னால் மாறும் அதை மாற்றும் நிலைமையும் வந்துசேரும். இந்நிலைக்களன் சிலம்பில் காணப்படவில்லை. இழவு என்பது மீட்க முடியாத தன்மை உடையதாக அமையின் பேரிழப்பாகத் தோன்றுகையில், அவலச்சுவை மேலோங்கும். அன்புடையாரின் உயிரிழப்பு  இணையற்ற இழப்பாகச் சிலம்பில் காட்டப்பட்டுள்ளது.

அசைவுநிலை என்பது முன்பு இருந்த நன்னிலை மாறிப் பெலிவுகெட்டு, வேறொரு துயர நிலையை எய்தி அதனால் இறந்துபடுதல் எனக் கொள்ளலாம். தன் செயல்களினாலோ, குறைபாட்டினாலோ, பலரும் போற்ற வாழ்ந்தவன் வீழ்ந்துபடுகின்ற நிலையே இவ்வசைவாகும். இவ்வாறு வீழ்ச்சியுறுகின்ற அவல வீரர்களுக்காக இரக்கமும் அனுதாபமும் ஏற்படுவது இயற்கை. இத்தகைய மாந்தர்கள் தம்வாழ்வைச் சீரமைத்துக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சியின் போது வீழ்ச்சியுற்றால் (கோவலன் கொலையுறுதல்) அதுவே கழிபேரிரக்கத்தைத் தோற்றுவிக்கின்றது. இந்நால்வகை நிலைக்களன்கள் அல்லாமல் பிரிவின்கண் தோன்றும் அவலமும் பெரிதாகக் காப்பியங்களில் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவலத்தை வெளிப்படுத்தும்  முறைகள்

அவலச்சுவைக்கு மெருகூட்டிப் படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்து ஈர்க்கும் தன்மை கொண்டவை உத்திகள். இளங்கோவடிகள் இயற்கை உவமைகள்,  சொல்லாட்சி,  நிமித்தம்/சகுனம், கனவு, ஒலிநயம் ஆகியவற்றின் வழி அவலச்சுவையை வெளிப்படுத்துகின்றார்.

இயற்கை வழி அவலம்

இயற்கையும் மானுடவாழ்வும் இணைந்தே நடைபோடுவது. ஆதலால் படைப்பாளி இயற்கையை விட்டு மனிதனைப் படைப்பதில்லை. அந்திமாலைக் காதையில் கண்ணகியின் பிரிவுத்துயரத்தைக் கூறுகையில் நிலமடந்தை திசை முகம் பசுப்பெய்தவும், செம்மலர்க்கண்கள் நீர்வாரவும் தன் கொழுநனாகிய ஆதித்தனைத் தேடுகின்றது என்றும் கற்பனை நயம் காட்டப்படுகின்றது. “நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை மீன்” என்னும் கூற்று பொற்கொல்லன் கையில் சிக்கிய கோவலனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் சுரந்தன ளடக்கி” (புறஞ்சேரி., வரிகள்: 48-51)

என்ற பாடலில், பின்னால் நிகழப்போகும் தீமையை முன்னறிவிப்புச் செய்வது போல் ஆற்றின் வழியாக உணர்த்துகின்றார் அடிகள். தாமரை, ஆம்பல், குவளை போன்ற மலர்கள் தேன் நிரம்பப்பெற்று ஆடுவது, கோவலன், கண்ணகியர் துன்பத்தினைப் பொறுக்கமாட்டாமல், கண்ணீர் சொரிந்து வருந்தி அசைவதாக அவலச்சுவை இயற்கையின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. தன் கணவன் கள்வனோ என வினவும் கண்ணகிக்குச் செங்கதிரோன் கள்வனல்லன் என்று பதிலுரைத்து, அவனைக் கொன்ற இவ்வூரை நெருப்பு எரித்து அழிக்கும் என்றும் கூறுவதாக இளங்கோவடிகள் இயற்கைவழி அவலச்சுவை வெளிப்படுத்துகின்றார்.

உவமை வழி அவலம்

“ஊதுலைக் குருகி னுயிர்த்தனன் கலங்கி” (புறஞ்சேரி, வரி:45)

“ஊதுலைக் குருகி னுயிர்த்தன ளுயிர்த்து” (அழற்படு, வரி:152)

என்றவிடங்களில் ஊதுலை உவமை அவலச்சுவையை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வெயில் தணிவதை எதிர்நோக்கியிருத்தல், கொடுங்கோல் வேந்தன் அழியும் நேரத்தை எதிர்நோக்கியிருக்கும் குடிமக்களுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது. வரந்தரு காதையில், மாதவி மணிமேகலையின் துறவினைக் கேட்ட மன்னனும் நாட்டு மக்களும் அடைந்த துன்பமானது நல்மணியினைக் கடலில் வீழ்த்தோர்க்கு ஒப்பிட்டு உவமை கூறப்பட்டுள்ளதும்,

“கொடி நடுக்குற்றது போல்”

என்னும் உவமை கானுறை தெய்வத்தின் நடுக்கத்திற்குக் கூறப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது. இராமனைப் பிரிந்து அயோத்தி வருந்துவதுபோல், கோவலனைப் பிரிந்து புகார் வருந்தியதாகக் காட்டுமிடத்தும் அவலச்சுவை உவமையின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கனவு வழி அவலம்

கனாத்திறமுரைத்த காதையில் கண்ணகி காணும் கனவு பின்னர் வரக்கூடிய கேட்டினை முன்னரே அறிவிப்பது போல அமைந்து அவலச்சுவையை மிகுவிக்கின்றது. “கனவு கண்டேன் கடிதீங்குறும்” (அடைக்கலக்காதை, வரிகள்: 95-106) என்று கோவலன் கூறுமளவுக்கு அவன் கண்ட கனவு துன்பம் விளைவிக்கின்றது. எருமைக்கடாவின்மீது தான் ஏறிவருவது போலவும், மாதவி மணிமேகலை இருவரும் துறவு பூணுவது போன்றும் நள்ளிருள் யாமத்தில் கோவலன் கனவு காண்கின்றான். பாண்டிமாதேவி கண்ட கனவும் துன்பத்தின் முன்னறிவிப்பே. பாண்டியனின் அரசுக்கு வரக்கூடிய கேட்டினைக் குறிப்பாக உணர்த்தி அவலச்சுவையைத் தருவதில் இக்கனவும் குறிப்பிடத்தக்கது.

சிலம்பில் இடம்பெற்றுள்ள மூன்று கனவுகளின் வழியாக இளங்கோவடிகள் அவலச்சுவையை மிகுதிப்படுத்தி கற்போர் உள்ளத்தை கரையவைத்து அவலத்தில் ஆழ்த்துகின்றார்.

நிமித்தம் வழி அவலம்

பின்னால் நிகழப் போகும் தீமையை முன்னெடுத்துக்கூறும் அவல உத்திகளில் ஒன்று சகுனம் அல்லது நிமித்தம் ஆகும். இளங்கோவடிகள் இந்திரவிழாவூரெடுத்த காதையில்,

“கண்ணகி கருங்கணு மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத் தொளித்திநீ ருகுத்தன
எண்ணுமுறை யிடத்தினும் வலத்தினுந் துடித்தன”

                                (சிலம்பு,இந்திரவிழா. வரிகள்: 237-240)

என்னும் வரிகளில் கண்ணகியின்  இடக்கண்ணும், மாதவியின் வலக்கண்ணும் துடிப்பதாகக் காட்டப்படுகின்றது.

கண்ணகி கோவலனை அடையப்போவதால் அவளுக்கு இடக்கணணும், மாதவியை விட்டுக் கோவலன் பிரிந்துபோகப் போவதால் அவளுக்கு வலக்கண்ணும் துடிப்பதாகக் காட்டுமிடத்து தீமையையும் நன்மையையும் முன்னரே குறிப்பவை நிமித்தங்கள் என்பதை நிறுவுகின்றார் ஆசிரியர். “புரையிட்ட பால் தோயாதிருத்தல், திமில் எருது முன்வருதல், வெண்ணெய் உருகாதிருத்தல், பசுக்கூட்டங்கள் மெய்நடுங்கித் துவளுதல்” ஆகியவை துன்ப நிகழ்ச்சியைச் சுட்டும் நிமித்தங்களாகச் சிலம்பில் காட்டப்படுகின்றன.

சொல்லாட்சி வழி அவலம்

கண்ணகியின் துயரநிலையைக் கண்டு பேச முடியாமல் தடுமாறும் தோழியின்,

“சொல்லாடாள் சொல்லாடா நின்றாளந்
நங்கைக்கு சொல்லாடுஞ் சொல்லாடுந்தான்”

                           (துன்பமாலை, வரிகள்: 9-10)

என்ற வரிகளில் இடம்பெறும் சொல்லடுக்கு அவலச்சுவையை அதிகப்படுத்துகின்றது. “அவலங்கொண்டழிவலோ” “கிடப்பதோ” “உரையாரோ” என்ற “ஏகாரச் சொற்கள்” பயன்படுத்தப்படுவது துன்பத்தின் மிகுதியை உணர்த்துவதுடன் இரக்கக் குறிப்பையும் உண்ர்த்துகின்றன. அவல உணர்ச்சி ஒருவனை ஆட்டிப்படைத்து நினைக்குந்தோறும் துடிக்க வைக்கும் தன்மை கொண்டதாயத் துலங்குகின்றது.

உலக வாழ்க்கையில் இன்பமொன்றே அறிந்து அதில் திளைப்பவர்கள் உயர்ந்த ஞானிகளாவதில்லை. துன்பத்தில் உழன்றவரே உயர்ந்தோர் ஆகின்றனர் என்னும் கூற்றிற்கேற்ப உலக மகாகாவியங்களின் கதைமாந்தர்கள் துன்பத்தில் உழன்று உயர்ந்த காரணத்தினால்தான் மக்களின் இதயங்களில் மங்காத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.

அவ்வகையில் சிலம்பில் இடம்பெறும் அவலக் காட்சிகள் கற்போரின் உள்ளத்தில் ஆழப்பதிந்து நிலைபெற்றுவிடுகின்றன. இவ்வவலம் வாழ்க்கையில் தடம்புரளாமல் இருப்பதற்கு வழிகாட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும். அவலமும் மனிதனைச் செம்மைப்படுத்தும் என்பதற்குச் சிலப்பதிகார அவலம் சான்றாக அமைந்திலங்குகின்றது.

Series Navigationதீப்பற்றிக் கொள்ளும் வார்த்தைதாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !