சில நேரங்களில் சில நியாபகங்கள்.

Spread the love

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு
முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள்.
தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று
பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள்
பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய்
இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள்
வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று
அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள்
விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய்
சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள்
எங்கேயும் எப்போதும் சுமந்தோடும் உடல் வழி மலம் போன்றே
விட்டுத் தொட்ட சில வேண்டா நியாபகங்களையும்
தூக்கித் திரிய வேண்டியதிருக்கிறது சமயங்களில்.

Series Navigationக‌ரிகால‌ம்அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3