சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

This entry is part 16 of 17 in the series 7 நவம்பர் 2021

 

 

                                         குமரி எஸ். நீலகண்டன்    

 

           

                                             

சிவகுமார் ஒரு பிறவிக் கலைஞர். கலைஞர்கள் எப்போதுமே படைக்கப் படுகிறார்கள். அவர்களின் சூழலையும் அதனுள் இயங்குகிற அவர்களின் சுய உந்துதலையும் பொறுத்து கலைஞன் மாபெரும் கலைஞனாக உருவெடுக்கிறான். பழனிமலை உச்சியில் ஒலித்த அப்பாவின் உரத்த திருப்புகழும் அம்மாவின் உறுதியான கடுமையான உழைப்பும் காசி கவுண்டன்புதூரில் ஒரு கலைஞனை விளைவித்தது. 

பருத்திக் காட்டில் அவள் பாசனம் செய்த வியர்வையும் அந்த வளமான மண்ணின் ஈரமும் வாசமும்தான் சிவகுமார் என்ற கைக்குழந்தையின் ஓவியக் கருவிகள். சிவகுமார் இயல்பாகவே பாலப் பருவத்திலேயே தன்னை வரைய ஆரம்பித்தான். வறுமைக்காகவோ எதிர்பாராத துயரங்களிலும் சிவகுமார் தனது சுய ஓவியத்தை சமனம் செய்து கொள்ளவில்லை. தனது சுய ஓவியத்தின் கோடுகளை அவன் சூழலுக்கு தகுந்தாற்போல் அழகு படுத்தினான். அவன் தனது சுய ஓவியத்தை அழித்து அழித்து வரையவில்லை. கோடுகள் போகிற போக்கில் தனது சுய ஓவியத்தை அழகுபடுத்திக் கொண்டான்.

பாலப் பருவத்திலிருந்து இன்று வரை அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தனித் தனி காட்சிகளாக அவரது நினைவறையில் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட அதிக திறனுடன் பதிவாகி இருக்கிறது. அவரின் நூல்களைப் படித்தால், கொங்கு தமிழில் அவரின் உணர்வுபூர்வமான உரையைக் கேட்டால் அதுவே தமிழ் மண்ணின் வரலாறாக இருக்கும். தமிழிலக்கியத்தின் வரலாறாக இருக்கும். தமிழ் திரைப்பட வரலாறாகவும் இருக்கும்.

கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார், ரஜினி, கமலஹாசன், லக்ஷ்மி, ஏ.பி.நாகராஜன், பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கண்ணதாசன், வாலி உட்பட்ட ஏராளமான திரை ஆளுமைகள் எல்லோரும் விதவிதமானவர்கள். அவர்கள் மட்டுமல்ல தமிழ் திரையுலக வரலாற்றில் யாருமே அறியாத நூற்றுக் கணக்கான கலைஞர்களைப் பற்றி சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்தில் சொல்ல அவரிடம் எப்போதும் உணர்வுபூர்வமாக ஒரு செய்தி இருக்கிறது.

  அவர்களைச் சுற்றி வீசுகிற ஒளி வட்டங்களின் நுட்பங்களை நொடியளவுத் துல்லியமாக காட்சி படுத்தி  மக்களுக்கு பயனுறச் சொல்பவர் சிவகுமார் மட்டுமே. யாரையும் விமர்சிக்கிற நோக்கு சிறிதளவும் இல்லை அவரிடம். சமுதாயத்திற்கு பயன்பட வேண்டுமென்ற நோக்கில் குறையொன்றுமில்லை நோக்குதான் அவருக்கு.

பொய்யாக யாரையும் கொண்டாடுவதும் இல்லை. மெய்யைப் புதைத்து சாதுர்யமாய் நகர்ந்து விடுவதுமில்லை.  உண்மையை உணர்வுபூர்வமாக வெளியில் காட்சிப் படுத்துகிற சாகச கலைஞன் அவர். முருகனை தலைமுறையாய் விரும்பி வணங்குகிற அவருக்கு எல்லாம் love all serve all தான். அதனால் கடவுளுக்கு எது பிடிக்குமோ அதை தனது இயல்பாக கொண்டிருப்பவர் அவர்.  

சிவகுமாரின் வாழ்க்கையினை ஒவ்வொரு 20 வருடங்களாக பிரித்தால் அது ஒரு அந்தாதியாகவே இருக்கும். சிவகுமார் என்ற ஓவியத்தின் முதல் 20 வருடங்களில் ஒரு வறண்ட மண்ணின் வளமான பாலகனாகவும், ஒரு ஒவியனாகவும் தன்னை வரைந்து கொண்டார். அடுத்த 20 வருடங்களில் 40 வயது வரை ஒரு ஓவியனாகவும், உன்னதமான நடிகனாகவும் தன் உருவத்தை அலங்கரித்தார். 40 லிருந்து 60 வரை  நடிகனாகவும், ஒரு எழுத்தாளனாகவும் தன் உருவத்திற்குள் வண்ணங்கள் தீட்டினார். 60 லிருந்து 80 வரை ஒரு எழுத்தாளனாகவும், ஒரு ஈடு இணையற்ற உன்னத பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இனி 80 லிருந்து 100 வயது வரை அவர் ஒரு பேச்சாளராகவும், திருக்குறள் போன்ற சித்தாந்தங்களை சமூகத்தில் விதைக்கிற ஆன்மீக ஒளியாகவும்தான் நான் அவரை எதிர்நோக்குகிறேன்.

அளவான உணவுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சி, நிறைந்த நேர்மறையான மனது, சிக்கனமில்லாமல் பகிர்ந்து கொள்கிற பரந்த அன்புள்ளம், கொடையான மனது, தன்னை வரைந்த கோடுகளாலேயே குடும்பத்தையும் வரைந்து அவர்களுக்கு அளித்த உயிரூக்கம் இவைதான் சிவகுமாரென்ற இளைஞனின் ஆரோக்கியத்தின் ரகசியம்.

சிவகுமார் குறித்த கட்டுரைகளெல்லாம் இதழ்களில் வருகிற போதெல்லாம் அவர் வாட்ஸ் அப் வழி தனிப்பட்ட அளவில் நண்பர்களுக்கு பகிர்வது உண்டு. அப்போதெல்லாம் அவரின் ஒவ்வொரு வளர்கிற வயதிலும் தன்னை வரைந்த ஓவியத்தின் தரத்தை சமூகத்தோடு உரசி உறுதிப்படுத்துகிற தன்மையைத்தான் பார்க்கிறேன்.

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பார் ஔவையார் பாட்டி. சிவகுமாரின் எழுத்துக்களையெல்லாம் இப்போது நான் படிக்கிற போது நான் அவரின் கதை சொல்லும் உத்தி, அவற்றை கோர்வையாய் காட்சிப் படுத்துகிற விதம் ஆகியவற்றைப் பார்க்கிற போது ஏன் இவர் இயக்குனராக இயங்கி இருந்தால் உலக அளவில் ஒரு உயர்ந்த இயக்குனராக சத்யஜித்ரே போல் ஆகி இருப்பார் என நினைப்பதுண்டு. இன்னும் அவருடைய ஈர மண்ணில் இளமை அனுபவங்களில் எத்தனை உயர்வான உணர்வுபூர்வமான கதைகள் இருக்கின்றன. இதையெல்லாம் இவரால் எத்தனை வெற்றிகரமான திரைப்படங்களாக அன்றே தந்திருக்கலாமென நினைப்பதுண்டு.

ஆனால் அதற்கான விடையை நானே ஊகித்துக் கொண்டேன். சிவகுமார் எதைச் செய்கிறாரோ அதை எந்த சமனமுமில்லாது உள்ளுணர்வுடன் உயர்ந்த உறுதியுடன் தரத்துடன் செய்யும் இயல்பு கொண்டவர். அவர் தொட்ட துறையில் அவரை விட உயர்வாக இன்னொருவர் செய்வதற்கு இடமளிக்காத தரத்தைப் பேணுபவர். நடிக்கிற காலத்தில் நடிப்பை மட்டுமே ஆழ்ந்த ஈடுபாடுடன் செய்தார். அவ்வாறே காலம் அவரது சிறகுகளை கட்டுப்படுத்தி இருக்கின்றது.

என்னிடம் கூட அவர் எப்போதாவதுதான் தொலைபேசியில் பேசுவார். அவர் பேசாத தருணங்கள் தவத்தில் இருக்கும் தருணங்களாக கொள்ளலாம். அவர் பேசும் தருணங்களில் ஒரு மணி நேரம் கூட உரையாடல் நீடித்ததுண்டு. அந்த உரையாடலில் அவரின் தவப்பயனாய் இராமாயணத்தைக் கேட்க இயலும். மகாபாரதப் போர் நம் காதுகளில் முழங்கும். திருக்குறள் கதைகளாய் ஒலிக்கும்.

அவரது வாழ்க்கைப் பாதையில் இடறுகிற தடைக் கற்களில் அவர் தடுமாறுவது இல்லை. அங்கே அந்த தருணத்திலேயே கீறல்களை கோடுகளாக்கி தன் சுய சித்திரத்தை அலங்காரமாக்கிக் கொள்வார். உதாரணத்திற்கு 2005 ல் ஒரு தொலைக்காட்சி தொடரின் இளம் நடிகையின் திமிறான பேச்சில் நடிப்பையே விட்டு வெளியே வந்தார். தெய்வமாக நினைக்கிற அந்த தொழிலுக்கு அவர் அளித்த மரியாதை அது. அதன் பயன். கம்பராமாயணம், மகாபாரதம் என்ற இந்திய இரு பெருங்காவியங்களை குறுகிய நேரங்களில் செறிவாக, சுவையாக, மக்கள் மனங்களில் ஆழமாக பதித்தார். தீதையும் தடையையும் இப்படி நன்மையாய் மாற்றுபவர்கள்தான் உலகின் வல்லவர்கள்.

சிவகுமார் தன்னை சுற்றி இருப்பவர்களையும் தன்னோடு இணைத்து அழகுபார்த்து சுயபடம் எடுத்துக் கொள்கிற ஆன்மா. தன் இயல்போடு சிவகுமாரை இணைத்து தன்னை அழகு பார்ப்பதென்பது அபத்தம்.

கல்லூரிகளிலும் புத்தக கண்காட்சிகளிலும் சிவகுமார் நிகழ்த்திய சிறப்புரைகள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாவது உண்டு. அதற்கு சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ஃபோர்பிரேம் தியேட்டரில் ஒரு சிறப்புக் காட்சியாக நண்பர்களுக்கு மட்டும் ஒரு சிறு தேநீர் விருந்துடன் அதைக் காண வைப்பார். அதில் பெரும்பாலும் ஐ. ஏ. எஸ் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பழைய நாடகக் கலைஞர்கள், நடிகர்கள், இதழியலாளர்கள், எழுத்தாளர்களென குடும்பத்தினரோடு 100 பேர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருப்பர்.

அவருடைய உரையின் காட்சிப் பதிவு ஆரம்பமானதுமே ஒரு தியான மண்டபத்தின் அமைதியை அங்கு காணலாம். சிவகுமாரின் உரையின் வார்த்தைகளுக்கிடையே மிதக்கிற இயல்பான மௌனத்தின் இடையேதான் அந்த அறையில் இருக்கிற மௌனத்தை உணர இயலும். அந்த மௌனத்தில்தான் சிவகுமாரின் உரையின் மேல் பார்வையாளர்களின் ஆழ்ந்த கவனமும் மரியாதையும் துல்லியமாக பிரதிபலிக்கும். சிவகுமாரின் உரைக் கோடுகள் பார்வையாளர்களின் இதயத்தில் சித்திரமாய் கோடுகள் கிழிக்கும்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது வாசலில் நின்று ஒவ்வொருவரையும் விசாரித்து நன்றிகூறி, தன்னோடு அவர்களை பாசமாய் அரவணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வார். அவரது கம்பராமாயாண, மகாபாரத சொற்பொழிவுகளைக் கேட்டு வெளியே வந்த சிவகுமாரின் வயதை ஒத்த சில ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் கூட சிவகுமாரின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய தருணங்களில் அவரை ஒரு ஞான குருவாக பார்த்து வியந்திருக்கிறேன். அப்போது அந்த சூழலில் சாதி, மதம், இனம், பதவியென எந்த பேதமுமின்றி விழுவதிலும் எழுவதிலும் எந்த தலைச் சுமையுமில்லாத அன்பை சுவாசிக்கிற வெறும் காற்றை மட்டுமே உடலுக்குள் வைத்திருக்கிற ஆழமான மனிதர்களைத்தான் அங்கே பார்த்தேன்.

தவமும் தர்மமும் உலகில் இருக்கிறது என்பதற்கு சிவகுமாரின் குறள் கதைகளின் நாயகர்கள்தான் உன்னதமான உதாரணங்கள். வாழ்ந்த மனிதர்களின் கதையை சுவையாக நகர்த்தி குறளின் குரலாக சிவகுமார் ஒலிக்கிற விதம் மிக அருமை. வாழ்வியலுக்கு தேவையான நல்ல அனுபவங்களை குறளின் கருத்தோடு ஒன்றாக்கி தந்திருக்கிறார். அவரது 80 வது வயதில் அவர் உலகிற்கு தந்த உன்னதமான பரிசு இது.

சிவகுமாரை யாரும் எதிர்மறையாய் கூற மாட்டார்கள். ஆனாலும் சிவகுமார் மிகவும் வித்தியாசமான பன்முகம் கொண்ட ஒரு வியத்தகு ஆளுமை. அவரை ஊடகங்கள் வழி உள் வாங்கியதை விட அவரின் புத்தகங்களை படித்து தெரிந்து கொண்டால் உங்களுக்கு கிடைக்காத ஒன்று நிச்சயமாக கிடைக்கும். அவரது புத்தகங்களை வாசியுங்கள். அவரது உரையைக் கேளுங்கள். அவரது அன்பை சுவாசியுங்கள்.

நான் எப்போதும் சிவகுமாரின் குடும்ப ஆரோக்கியத்தின் ரகசியத்தை எண்ணி பார்ப்பேன். அப்போது எனக்கு தோன்றும். சுவாசிக்கும் போதெல்லாம் சிவகுமாரின் ஒவ்வொரு உள்மூச்சும் சொல்லும் ”நான் ஒழுக்கத்துடன் வாழ்ந்திருக்கிறேன்” என்று. அதே மூச்சு வெளியே வரும்போது சிறிது நிதானமாக நெடு மூச்சாக சொல்லும் ”என் குடும்பத்தையும் ஒழுக்கமாக்கி இருக்கிறேன்” என்று.

குமரி எஸ். நீலகண்டன்

செல்-94446 28536  

punarthan@gmail.com

 

 

Series Navigationஉலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *