சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு


ஆர்.பி. ராஜநாயஹம்

தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110

சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள்

Hell is a city much like London என்றான் ஷெல்லி.
Paris is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான்.
சுப்ரபாரதிமணியனின் ‘தேநீர் இடைவேளை’ நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும்.
அவருடைய கட்டுரைகள் ‘உலக மயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்’, ‘கரையும் நதிக்கரைகள்’, ‘கடத்தல் கலாச்சாரம்’ போன்றவற்றை வாசிக்கும்போது அவர் Tiruppur is a dingy sort of Town என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
இந்திரா பார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை. ஆதவன் விவரித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிருந்து வேறுபட்டு மணியன் தான்சார்ந்த திருப்பூர் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதைக் காண முடியும். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல், கலாச்சார நிகழ்வுகளின் மீதான ஆய்வாக ‘தேநீர் இடைவேளை’ நாவல் பிரமாண்டமாக விரிகிறது. ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
உலகமயமாக்கலில் திறந்தவெளிச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களும், தண்ணீரும், வீடும் கூட அரிதாகி விடுகிற அவலம். ஐயாயிரம்கோடி அந்நிய செலாவணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறிவிட்டது. நொய்யலாறு ரசாயணக் கழிவுகளால் சாக்கடையாகிக் கரைந்துவிட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபான தொழிலையும் நிராகரித்துவிட்டு வந்திருக்கிற துயரம். சாதாரண தொழிலாளிகளும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள். முறையான தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்புமே இல்லாத சூழ்நிலை. மில் கொட்டகைகளில் அடைபடும் பெண்களும், ஆண்களும், கல்யாணத்திற்குப் பணம் சேர்க்க, பெண்களுக்கு மாங்கல்யத் திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில்கூட இங்கே பெண்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்களில் தினக்கூலிகளாக வேலை செய்ய வேண்டிய துரதிர்ஷ்டம்.
‘தேநீர் இடைவேளை’ நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள். மல்லிகா, ரங்கநாதன், ஷமீம், போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஷ் சிங், வாசகர், செந்தில் ஆகியோரின் கடிதங்கள்-இரண்டாவது பகுதி தோற்றுப்போன தொழிற்சங்கவாதி அந்தோணி ராஜின் டைரிக் குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைரிக் குறிப்புகள்.
தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்திரித்தவர்கள். பெண் மனதின் நுட்பங்களைத் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்தவர்கள். ‘தேநீர் இடைவேளை’ நாவலில் மல்லிகா, ஷமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடைய சிக்கல்களும் சிக்கனமான வரிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விரித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிரிஜா. அருக்காணி என்ற விளிம்பு நிலைப் பெண்கள் கூட முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். ஷமீம் மில் கொட்டகையில் தன் அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம். அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அவளுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான இதுபோன்ற சித்திரிப்புகளில் ஆவேசமிக்க கலைஞனாக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேண்டும். ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்குச் சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில். பொதுவான கழிப்பறை, குளியலறை.
ரோசாலக்சம்பர்க் மனிதகுலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா? கம்யூனிசமா என்று கேள்வி கேட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தோணிராஜின் டைரி ஒரு சமுத்திரம் போல ஷேக்ஷ்பியரின் டெம்பஸ்ட்., ஈ.எம்.எஸ். அருந்ததிராய், தொழிற்சங்கப் பெண்கள் அம்முவும் கோவிந்தம்மாளும், தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம் கேட் மீட்டிங் கூட்டங்களின் மூலம் ஜீவா, சி.ஏ. பாலன், பாலதண்டாயுதம் ஆகியோரின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்துவிட்ட விஷயம். கேட் மீட்டிங்கை ஒழிக்க நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்களை அமைத்தது. புரூக் பாண்ட் டீ வந்த புதிதில் தொழிலாளிகளுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேநீர் வழங்கப்பட்டு, பின் சம்பளப் பணத்தில் பிடித்தல் செய்து, அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது. தெலுங்கானா போராட்டம், விவசாயிகளின் போராட்டம், தெபாகா போராட்டம், ஆனைகட்டி துவைப் பகுதி ஆதிவாசி போராட்டம் மாதிரி கூட கேட் பூங்காவுக்கு எதிராக போராட்ட அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு. சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விஷயங்களை அந்தோணி ராஜின் டைரி உள்ளடக்கியிருக்கிறது.
ஏதேனும் ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா? என்ற கேள்வி உலுக்கி விடுகிறது.
செந்தில் இளைஞன் His whole future is before him – மெகாசீரியல் அபத்தங்கள் இவனை உறுத்தும் அதே வேளையில் சிநேகாவைப் பிடிக்கிறது. லாரித்தண்ணீர், கல்வி, டியூசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை தமிழ்வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கல்வி பற்றி, குழந்தையின் மருந்து செலவுப்பணம் பள்ளிக் கட்டணமாகக் கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறையச் சிந்திப்பவன், வாசிப்பதுதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாசிப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரமைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனிமனித விருப்பம். ஜர்னலிசம் செய்ய முடியாத சில விஷயங்களை நாவல் செய்துவிடும் என்று இவனால் கருத முடியவில்லை. மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக் கனவுகளில் மிதக்கிறான். கேபிரியல் மார்க்வெஸ் “நான் பத்திரிகையாளன். கூடவே கொஞ்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருப்பதனால் பத்திரிகைச் செய்தி எழுதும் பாணியிலான இலக்கியப் படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப் பேரைச் சென்று சேர்க்கின்றன என்று செந்தில் டைரிக் குறிப்பு எழுதுகிறான். 40 வயது பெண் பிணவண்டியை இடுகாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவதைப் பற்றிக்கூட டைரியில் எழுதுகிறான்.
வாசிப்பு இலக்கியக் கூட்டம் என்று இருந்த ராஜேந்திரன், இப்போதெல்லாம் மாறிப்போய் இலக்கியவாதிகளின் துரோகங்களும், ஒதுங்கும்படி செய்துவிட்டதாகக் கூறுவதை இவனால் அங்கீகரிக்க முடியவில்லை. செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஐன்ஸ்டீன் I have never read anybody என்று சொல்லவில்லையா? ‘புயலிலே ஒரு தோணி’ ப. சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ? வாசிப்பு, இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் ‘கதவு’ கதையை பாராட்டி சுந்தர ராமசாமி அதில் செகாவியன் டச் இருப்பதாகச் சொன்னபோது கி.ரா. செகாவியன் என்றால் என்ன என்று அந்தக் காலத்தில் கேட்டார். முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்ற படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டபோது சிட்டி பதட்டத்துடன் வேண்டாம். ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் என்று சொன்னாராம்.
ஃபிடல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிரியல் கார்சியா மார்க்வெஸின் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள். ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களைக் கோபப்படுத்துகிறது.
நாவலில் ரங்கநாதன் sexual poverty திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது ஐம்பது என்பது சரியில்லை. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள். ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைரியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக்கூடாது என்ற தீர்மானம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாரிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
சமீபத்திய கதைசொல்லி 15து இதழில் திரும்புதல்… என்ற சிறுகதையின் ஆண்பாத்திரம் எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் என்று கேட்டதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை அக்டோபர் 2004 இதழில் இவருடைய ‘நீலப்படமும், சுசித்ராவும்’ புதிய பார்வை அக்டோபர் 1-15-2004 இதழில் பிரசுரமாகியுள்ள ‘சூடு’ ஆகிய கதைகளும் பாலியல் உணர்வையே வெளிப்படுத்துபவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கோடாங்கியில் பிரசுரமாகியுள்ள ‘மாற்றங்கள்’ உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலைமாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதரணநிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளைக் குறியீடாக்கிப் பேசுகிறது. ‘தேநீர் இடைவேளை’ நாவலில் வருவது போல இந்தச் சிறுகதையிலும் தெருவோர குடியிருப்பில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது. தேநீர் இடைவேளை நாவலில் தெருவோர குடியிருப்பு பெண்களைப் பற்றி மணியன் அழுக்கான பெண்கள் எல்லாத் துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டார்கள் என்று கவிதையாகச் சுட்டுகிறதைப் பார்க்கலாம். சினிமா பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நுலாக வரவேண்டும். நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான விமர்சனக் கட்டுரைகள். அவர் நடத்திவரும் கனவு பத்திரிகையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.
இங்க்மார் பெர்க்மன் Face to Face படம் பற்றி தணிக்கை குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு. ‘முகாமுகம்’. ஒரு சரிதம் ஒரு திரைப்படம். மதவாத மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள். தில்லி கதா திருவிழா. மங்கம்மாக்கள், பூலன் தேவியின் குரல், மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’, மலையாளிகளின் சிம்மாசனங்கள். கவிஞனும் தடைசெய்யப்பட்ட இசைக் குறிப்புகளும், ரகு ரோமியோ, குறும்படங்களின் தணிக்கை மீதான வன்முறை போன்ற கட்டுரைகள் பல அபூர்வ உலகளாவிய திரைப்படங்களிலிருந்து ‘பீ’ குறும்படம் வரை விரிவாகத் தொட்டுப் பேசுபவை.
பிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக கானுயிர் காப்போம் என்ற கட்டுரையின் அக்கறை. சா. கந்தசாமி என்னும் கலைஞன் மிக சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைஞனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். படைப்பு மனம் சஞ்சலமுறும் பின் நவீனத்துவம் என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பைத் தெரிவிக்கிறது.
ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கித்தூக்கி ஒரு பச்சோந்தி பார்த்துக் கொண்டிருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். அப்படியா? நானும் கூட கலையாகத்தான் இருக்கிறேன் என்று அதனிடம் வாய்விட்டு சத்தமாகவே கூறினாராம்.

Series Navigationஅப்துல் கலாம்இரா. பூபாலன் கவிதைகள்