சுமை தாங்கி

குமரி எஸ். நீலகண்டன்

ஒருவன் நடக்க முடியாமல்

தடுமாறுகிறான்.

இன்னொருவன்

கைத்தாங்கலாய்

அனுசரணையுடன்

உதவுகிறான்.

நோயுற்று இருக்கும்

அம்மாவின் துயரத்தைச்

சொல்லி ஒருவன்

கதறி கதறி அழ

சுற்றி இருக்கும் பலரின்

கண்களில் நெருப்பு எரிய

தீ அணைக்கும் வண்டி போல்

கன்னத்திலெல்லாம்

நீர் பாய்ந்து வழிகிறது.

ஒருவன் செருமி செருமி

இரும பக்கத்திலொருவன்

கோப்பையில் தண்ணீர் விட்டு

உதவுகிறான்.

ஆடையே இல்லாமல்

ஒருவன் அழுது புலம்ப

இன்னொருவன் தன்

ஆடையை அவிழ்த்து

அவன் மானம் காக்கிறான்.

எல்லாம் டாஸ்மாக்

கடை முற்றத்தில். 

punarthan@gmail.com

Series Navigationகேளுங்கள் …….