சூடு சொரணை இருக்கா?

குமரன்

இப்பதிவுக்கு வேறு தலைப்பு வைக்கலாம் என்று தான் விருப்பம். ஆனால் அதன் விளைவு என்னாகும் என்று யோசித்ததால், ஒரு புண்ணாக்கும் ஆகாது என்று புரிந்ததால், இப்படி வைத்து விட்டேன். ஏனென்றால், விறுவிறுப்பான விஷயங்கள்தான் தலைப்புச் செய்திகளாய் வருகின்றன. இன்னும் உடைத்துச் சொல்வதானால், நம்மை, சற்றே வக்கிரமான செய்திகள் தான் வசீகரிக்கின்றன. அல்லது வக்கிரப்படுத்தப்படும் செய்திகள் வசீகரிக்கின்றன. எனவே தான் ஒரு “விறுவிறுப்பு”க்காக இப்படி தலைப்பு வைத்திருக்கிறேன். மனம் விரும்பிய தலைப்பை இறுதியில் தருகிறேன்.

வாரம் முழுதும் எந்த ஊடக வடிவத்தை வாசித்தாலும் “நெருப்புடா” “பருப்புடா” தவிர வேறெதையும் பார்க்க முடியவில்லை. போன மாதம் முழுக்க ரயில் நிலைய கொலைக்காக பல்வேறு வகையில் பொங்கி எழுந்து உட்கார்ந்த இடத்தில் இருந்து ஊருக்கு உழைக்கும் ஃபேஸ்புக் ட்விட்டர் போராளிகள் அனைவரும் இந்த மாதம் “நெருப்புடா” என்று அடுத்த வேலைக்கு தாவி விட்டார்கள். வடிவேல் பாணியில், “அது போன மாசம்…” என்று இச்சமூகம் (என்னையும் சேர்த்துதான் சார்) அனைத்தையும் பொறுப்பற்று கடப்பதை பார்த்து வெறுப்புற்று ஆயிரக்கணக்கான அர்த்தமற்ற பகிர்வுகளை “ஸ்கோர்ல்” செய்து கொண்டிருந்த என் கண்ணில் சிக்கியது “பியூஷ் கைது” என்ற ஒரு பகிர்வு.

அநேகமாக அதை அனுப்பியவர் ஒரு பழம் பஞ்சாங்கமாகத்தான் இருக்க வேண்டும். பியூஷ் போல…ஏனென்றால், சமூக பிரக்ஞை கொண்டவர்களை இன்று பழம் பஞ்சாங்கம் என்று அழைப்பது தானே முறை? பாவம் அதை பகிர்ந்தவர். கபாலியின் காட்டாற்று பகிர்வு வெள்ளத்தில் இது போன்ற துளசி இலைகள் கண்ணில் தட்டுப்படுமா என்ன? உடனே தொலைக்காட்சி செய்திகளை துழாவினேன்…அங்கும் நெருப்பும் பருப்பும் தான்…அத்துடன் வழக்கமான குலுக்கல் நடனங்களும், “சிந்தனை” விவாதங்களுமாய் சேனல்களின் சமூகப் பணி செவ்வனே நடந்து கொண்டிருந்தது. இச்செய்தி பற்றிய தடயமே இல்லை. மறு நாள் செய்தித்தாள்களிலோ…கிட்டத்தட்ட ஒரு பெட்டிச் செய்தி ஆக வந்திருந்தது பியூஷ் கைது பற்றிய செய்தி.                       

இயற்கையின் அனைத்து அம்சங்களையும் அள்ளி எடுத்து கொள்ளை அடிக்கும் கும்பல் மிகுந்த நம் நாட்டில், இயற்கை ஆதாரங்கள் மீது நமக்கு அக்கறை உண்டெனில் இப்பெயர் நமக்கு பரிச்சயமாகியிருக்கும். என்னடா இது நம் பக்கத்து பெயராக இல்லையே…நமக்கும் இவருக்கும் என்ன தொடர்பு…என்ன விஷயம் இது…என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு…ராஜஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர் பியூஷ். இவரும் நம் போல் சுயம் சார்ந்த சாமானியராகத்தான் சில வருடங்கள் முன்பு வரை தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருந்திருக்கிறார். ஏதோ ஒரு பொறி தட்டுகையில், சில அர்த்தங்கள் நம்மை குட்டுகையில் நம் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் பயணிக்கத் துவங்கி விடும் இல்லையா? அப்படித்தான் கொசுவலை தொழிற்சாலை நடத்தி வந்த பியூஷ், தான் இயற்கை மீது கொண்ட பற்றுக்கும் செய்யும் தொழிலுக்கும் உள்ள முரண்பாடு புரிய தொழிலை விடுத்து “இயற்கை ஆர்வலர்” என்னும் பெயரில் “பாவ” காரியங்களில் ஈடுபடத் துவங்கினார். பாவ புண்ணியங்களை பற்றிய பொருளையே மாற்றியமைத்தவர்கள் இல்லையா நாம்?

பியூஷ் செய்த பாவம் தான் என்ன? ஒன்றா இரண்டா? அதான் உள்ளே தள்ளி விட்டார்கள். அவர் செய்த பாவங்களின் பட்டியல் இதோ: ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் பியூஷ் மனுஷ். ஆம். ஒரு செடி கூட நட நேரமில்லாத, நேரமில்லாதது போல் காட்டிக் கொள்ளும் சமூகத்தில், நூறு ஏக்கர் பரப்பில் ஒரு காட்டை நம்முன் உருவாக்கியிருக்கிறார். பெரிய ஏரியான மூக்கனேரியை பொதுமக்களை வைத்தே மீட்டெடுத்திருக்கிறார். இது தவிர்ந்து நான்கு ஏரிகள் , இரண்டு குளங்கள் என சேலத்தின் நீராதாரத்தையே மீட்டெடுத்து இருக்கிறார். கல்வராயன் மலையை காப்பாற்றியவர் எனலாம். ஜின்டால் நிறுவனம் இரும்புத்தாது எடுக்க கல்வராயன் மலைத்தொடர்களில் கை வைக்க முயன்ற போது போராடி தடை வாங்கியவர்…இப்படி இவர் செய்த பாவங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

“கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்”, “சேலம் மக்கள் குழு” என, அதிகாரவர்க்கம் புழுக்கள் என நினைக்கும் மக்களை குழுக்களாய் திரட்டி பல போராட்டங்களை முன்னெடுத்தார். முளையிலேயே இவரை கிள்ளி எறியா விட்டால் பின்னர் தங்கள் “பெரும் முன்னேற்றங்களுக்கு” இவராலும் இவரை பார்த்து “கிளம்பும்” மற்றவராலும் இடையூறு வரும் என்று “சிலரோ” “பலரோ” நினைத்தார்கள் போலும்…சமயம் பார்த்து காத்திருந்தனர்…சமீபத்தில் ஒரு மேம்பாலத்திற்கான பணி சேலத்தில் துவங்கியது. முன்னறிவிப்பு ஏதுமின்றி துவங்கிய இப்பணியினை கண்டித்து  ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினார் பியூஷ். இவருடன் இன்னும் இருவரையும் சேர்த்து கைது செய்த போலீஸ், அவர்களை ஜாமீனில் விட இவரை மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொண்டது (மீண்டும் இப்பத்தியை படிக்கவும்).ஒரு சாதாரண போராட்ட வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் அசாதாரண “கவனிப்பு”க்கு உள்ளானார். சுமார் மூன்று நாட்கள் தனிமையில் வன்மங்களை சந்தித்திருக்கிறார் பியூஷ். மெல்ல மெல்ல விஷயம் அவரின் அமைப்பு சார்ந்தவர்கள் மூலம் வெளியில் வர, “பெட்டிச் செய்தி” ஆனது.

நம் சமூகத்தின் சாபம், வெட்கக் கேடு, இது போன்றவற்றைப் பற்றியெல்லாம் படித்தால், பத்து இருபது பேரை பந்தாடி, நாடி நரம்புகள் புடைக்க வசனம் பேசி, நிலம் மீட்பது, நீர் மீட்பது, ஊர் மீட்பது, உரிமை மீட்பது ஆகிய அனைத்தையும் இரண்டு மணி நேரத்தில் செய்து, இடையிடையே கதாநாயகிகளின் இடையில் கன்னம் வைத்து இளைஞர்களுக்கு காதல் பாடமும் எடுக்கும் அளப்பரிய பணி செய்யும் போலி கதாநாயகர்கள் நடித்த படங்கள் நினைவுக்கு வருமே அன்றி, பியூஷ் போன்றவர்கள் யாரென்றும் அறிய ஆவல் எழாது.

ஒரு ரயில் நிலைய கொலையை பக்கம் பக்கமாய், அங்குல அங்குலமாய் வெளியிட்டு, வாசித்து, அலசும் சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இன்னொரு பக்கம் பியூஷுக்கு நேர்ந்ததை ஏறெடுத்தும் பார்க்காததன் காரணம்?


கட்டுரையை மறுமுறை வாசித்துக் கொள்ளுங்கள். அது தான் பதில். நல்ல வேளை, பியூஷ் வடமாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், “தமிழருக்கு நல்லது செய்ய தமிழருக்குத்தான் உரிமை. வெளிமாநிலத்தவர் இங்கு வந்து எதற்கு சமூகப்பணி செய்ய வேண்டும் அதனால் தான் இவ்வாறு நேர்ந்தது” என்று “கிளம்பிடாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்க” வகையில் தமிழை உயிர்மூச்சாகக் கொண்ட கட்சிகள் எதுவும் இன்னும் கிளம்பவில்லை. கலி இன்னும் முழுசாக முற்றவில்லையே…

“சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ்” என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன். அதை வைக்கும் தகுதி எனக்கும் இல்லை அதை வாசிக்கும் தகுதி உங்களுக்கும் இல்லை என்பதால், எனக்கும் உங்களுக்கும் வேகமாக குறைந்து வரும் அல்லது இல்லாமல் போன ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறேன். சம்மதம் தானே? வாருங்கள், பல சேனல்களில் “சிறப்பு கண்ணோட்டம்” காட்டுகிறார்கள். எந்தெந்த தியேட்டர்களில் எந்தெந்த வகை அபிஷேகங்கள் நடந்தன, ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களின் “சிறப்பு பேட்டி” என ஊரில் முக்கியமான விஷயங்கள் நிறைய நடக்கின்றன. கண்டு களிப்போம்.

Series Navigationபண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்காப்பியக் காட்சிகள் – ​14. சிந்தாமணியில் க​லைகள்