சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்

Spread the love

கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் காண முடிகிறது. சூர்யகாந்தனது ‘மானாவாரி மனிதர்கள்’, ‘பூர்வீக பூமி’ போன்ற அவரது ஆரம்ப நாவல்கள் ஆர்.சண்முகசுந்தரத்தின் வெற்றிடத்தை நிரப்பும் படைப்புகளாக அடையாளம் காட்டின.

சூர்யகாந்தன் பன்முகப் படைப்பாளி. கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்து வருபவர். இவரது எழுத்துக்களின் மையம் கொங்குநாட்டு மக்களின் வாழ்வியலையே அதிகமும் சார்ந்தது. தனது மண்ணில் கண்ட மனிதர்களின் பெருமையையும் சிறுமையையும் தனது கதைகளில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட அவரது நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்தான கதைகள் பத்தினை ‘முத்துக்கள் பத்து’ எனும் பிரபல எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பு வரிசையில் ஒன்றாக ‘அம்ருதா’ பதிப்பகத்தார் வெளியிட்டு
அவரைப் பெருமைப்படுத்தி உள்ளார்கள்.

இத்தொகுப்பின் முதல் கதையான ‘பழனியம்மாள்’, கரிசல்காட்டுப் படைப்பாளி கி.ராஜநாராயணனைப் போன்று முழுதும் பேச்சுநடையிலேயே அமைந்துள்ள உருக்கமான கதை. கொங்குவட்டார மக்கள் மொழி வெகு இயல்பாக கதை முழுதும் அமைந்து, வாசகரை அந்தப் பிராந்தியத்துக்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. கதைநாயகி பழனியம்மாளின் பரிதாபமான – பொருள் மற்றும் தெய்வநம்பிக்கை இழப்பு பற்றி கதை பேசுகிறது. மகள் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகளும் பணமும் திருட்டுப் போகிறது. போலீசில் புகார் செய்தும் களவு போனவை திரும்புவதற்கான நம்பிக்கையை இழந்த அவள் வயிறெரிய ஊருக்கு வடக்கில் காட்டுக்குள் இருக்கும் குடலுருவி மாரியாத்தா கோயிலுக்குச் சென்று ஆத்தாவிடம் முறையிடுகிறாள். குற்றவாளி களைத் தண்டித்து ஊருக்குக் காட்டிக் கொடுக்கிற சக்தி வாய்ந்த மாரியாத்தாவிடம் பிராது கொடுத்துவிட்டு வந்து பதினைந்து நாட்களாகியும் பலன் தெரியவில்லை. தன் பாதத்தில் இருந்த குத்துவிளக்கையே திருடனுக்குப் பறி கொடுத்து நிற்கிற மாரியாத்தாளால் அவளுக்கு நியாயம் எப்படிக் கிட்டும்? நம்பிய தெய்வமும் ஏமாற்றிய கோபத்தில் அரளிக்காய்களைப் பறித்துவந்து அம்மனின் முகத்தில் வேகமாக எறிந்துவிட்டு வெளியேறுகிறாள்.

‘கொழுந்துகளை நறுக்கும் வேர்கள்’ என்கிற இரண்டாவது கதை இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறந்த கதை என்று சொல்லலாம். கவித்துவமான தலைப்பு கதையின் கருவுக்குப் பொருத்தமாய் அமைந்துள்ளது. குடிகாரத் தகப்பனால் மனைவிக்கு மட்டுமல்ல பெற்ற மக்களுக்கும் நேர்கிற கொடுமையை நெஞ்சு பதறச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் மகள் அப்பாவை எதிர்பார்க்காமல், பாடப் புத்தகம் வாங்க ராப்பகலாய் வேப்பங்கொட்டை பொறுக்கி விற்று சேர்த்து வைத்திருந்த பணத்தை பாவி அப்பன் எடுத்துக் குடித்து மகளைக் கதறி அழ வைப்பது நமக்கும் வலியை ஏற்படுத்துகிறது.

‘வாழப் பிறந்தவர்கள்’ எழைமக்களிடம் காணப்படும் மனித நேயத்தையும் நேசத்தையும் சொல்கிற கதை என்றால், ‘மண்ணின் மடியில்’ என்கிற கதை அதே மக்களிடம் காணப்படும் சிறுமையைச் சொல்கிறது. தாய்க்கு ஏற்பட்ட அவப்பெயரால் ஊர்விலக்கம் செய்யப்பட்ட மகன், தாயின் பிணத்தை எரிக்க யாரும் உதவாததால் பிணத்தை எரிக்க வேறு வழி தெரியாமல் தன் குடிசையோடு வைத்து எரித்துவிட்டு ஊரைவிட்டே போகும் கொடுமையைச் சொல்கிறது.

‘நிச்சயதார்த்தம்’ என்கிற கதை ஜாதகப் பொருத்தம் பார்க்கும் மூட நம்பிக்கையால் ஒரு பெண்ணின் வாழ்வு சிதைக்கப்படும் கொடுமையைச் சொல்கிறது. ‘ரத்தப் பொழுதுகள்’ என்கிற அடுத்த கதை கிராமத்து மக்களின் சாதி மற்றும் அந்தஸ்து பார்க்கும் இன்னொரு மூடத்தனத்தால் ஒரு காதல் இணையின் சோகமான முடிவை உருக்கமாய்ச் சொல்கிறது.

‘தன்மானம்’ என்கிற அடுத்த கதையும் கிராமங்களில் நிகழ்கிற இன்னொரு வக்கிரத்தைச் சித்தரிக்கிறது. ஊரில் கோயில் கட்ட – இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் நூறு ரூபாய் வரி கொடுக்க வேண்டும் என்ற கெடுபிடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊரைவிட்டே வெளியே நேர்கிற ஒரு குடும்பத்தின் அவலத்தை சொல்கிறது கதை.

‘வேறு எந்த சாதியுடனும் திருமண உறவு உண்டாக்கிக் கொள்ளாத கம்பள நாய்க்கர்களின் பிடிவாதக் கொள்கையால், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதலர்களின் உறவை ஏற்றுக்கொள்ளாத ஒரு கிராமத்தில் நிகழும் சிறுமைகளை விவரிக்கிறது ‘ஊருக்கு வெளியே’ என்கிற கதை.

‘விளைவு’ என்கிற கதையும் கிராமத்து மக்களின் மூட நம்பிக்கையை பற்றியதுதான். மழை பெய்யாததற்கு ஊரில் யாரோ செய்துவிட்ட பெரிய தவறுதான் காரணம் என்று நம்புகிறார்கள் ஊர்மக்கள். தவறு செய்தவர் தாமே முன்வந்து தவறை ஒப்புக் கொண்டால் தீட்டு நீங்கிவிடும், அப்புறம் மழை பெய்யும் என்று பஞ்சாயத்து முடிவு செய்கிறது. யாரும் முன் வராதபோது கூலிவேலை செய்யும் விதவைப் பெண்ணொருத்தி முன் வந்து வெளியேறுகிறாள். ‘இவளா?’ என்று ஊர் வியக்கும்போது கூட்டத் தலைவருக்கு மட்டும் வியப்பில்லை. காரணம் அவளது தவறுக்குக் காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என்ற முத்தாய்ப்புடன் கதை முடிகிறது.

‘அய்யனார்’ என்கிற கடைசிக் கதையும் கிராமத்து மனிதர்களின் வேறுவிதமான நம்பிக்கை, அதன் காரணமாய் நிகழும் கொலை போன்ற செயல்களைச் சித்தரிப்பதாக உள்ளது.

இப்படி எல்லாக் கதைகளும் சூர்யகாந்தனது நெஞ்சு பொறுக்காத கிராமத்து அவலங்களையே அதிகமும் பேசுபவையாக அமைந்துள்ளன. சமூகக் கொடுமைகளைக் கண்டு மனங்கசிந்து, நெஞ்சில் ஈரம் கசிய மனிதநேயத்துடன் இவற்றைப் படைத்துள்ளார் சூர்யகாந்தன். கவிமனம் கொண்டவர் என்பதால் கதையில் வரும் வருணனைகள் எல்லாம் கவித்துவத்துடன் படைப்புக்கு அழகூட்டுகின்றன. எளிய, அலங்காரமற்ற, பாசாங்கற்ற அழகு நடையால் வாசிப்பு தடங்கலற்று சரளமாய் ஓடுவது இவரது தனித்தன்மை. திருமதி.திலகவதியின் அணிந்துரை நூலுக்கு அணி சேர்க்கிறது. 0

நூல்: சூர்யகாந்தன் முத்துக்கள் பத்து.
ஆசிரியர்: சூர்யகாந்தன்
வெளியீடு: அம்ருதா.


– வே.சபாநாயகம் –

Series Navigationமூன்று தலைமுறை வயசின் உருவம்(78) – நினைவுகளின் சுவட்டில்