செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்

செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
This entry is part 33 of 43 in the series 29 மே 2011

[எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும் என் அனுதாபங்கள்.!]
அமெரிக்கக் குடியரசு கட்சியின் தீவிர பழமைவாதக் கருத்துகளின் பெண் முகம் சாரா பாலின். நம்மூர் பதின்ம வயது இளைஞர்களின் பேச்சுவழக்கில் சொல்வதென்றால், நாற்பதுகளிலும் ஹாட்டாக தோற்றமளிக்கும் இருக்கும் மாமி. இப்படிப்பட்டகருத்துகளைச் சொல்பவர்களையும், சாரா உதிர்க்கிற அபத்தமான வாதங்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களையும், சாராவும் அவர் ஆதரவாளர்களும் செக்ஸிஸம் என்று தாக்குகிறார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். சாராவைவிடவும் பழமைவாதக் கருத்துகளை வைத்திருக்கிற ஆண்களும், சாரா அளவுக்குக் கவர்ச்சியாக (இந்த இடத்தில் அழகாக என்று எழுதுவதா, கவர்ச்சியாக என்று எழுதுவதா, எடுப்பாக என்று எழுதுவதா, இல்லை வேறு பொருத்தமான சொல் இருக்கிறா என்ற சந்தேகத்தில் கவர்ச்சியாக என்பதை placeholder போல பயன்படுத்துகிறேன்.) இல்லாத பெண்களும் குடியரசுக் கட்சியில் நிறையவே இருக்கிறார்கள். ஆனாலும் சாராவை ஆதரிக்கிற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆண்கள் சாராவை மட்டும் குறிப்பாக ஏன் ஆதரிக்கிறார்கள். அதற்கும் சாராவின் தோற்றம் முக்கியமான காரணம் என்றே நான் நினைக்கிறேன். அதுவும் ஒருவகையில் செக்ஸிஸம்தான். செக்ஸிஸம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பாலினம் சார்ந்த அவமதிப்பு (discrimination based on sex) என்பதுதான் பொருள். என்றாலும், பாலினம் சார்ந்த மதிப்பையும் செக்ஸிஸம் என்றே அடக்கலாம் என நினைக்கிறேன். சாராவுக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் தங்கள் ஆதரவின் பெரும்பான்மை கொள்கையின் அடிப்படையில் அமையாமல் தோற்றத்தின் அடிப்படையிலேயே எழுகிறது என்பது தெரியாமல் இருக்காது. ஆனால், அதுகுறித்து அவர்கள் ஏதும் முணுமுணுப்பது இல்லை. ஆக, ஆதரவு தருகிற (அல்லது நேர்மறை விளைவுகளை உண்டாக்குகிற) செக்ஸிஸம் ஏற்றுக் கொள்ளத்தக்கது.  எதிர்ப்பு தெரிவிக்கிற செக்ஸிஸம் எதிர்க்கத் தக்கது.
இங்கே சாரா பாலின் ஓர் உதாரணம்தான். ஹில்லாரி அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட முயன்றபோது, ஹில்லாரி கிளிண்டனை எதிர்ப்பவர்களையும் செக்ஸிஸம் என்று ஹில்லாரி ஆதரவாளர்கள் முத்திரை குத்தினார்கள். சாரா அளவுக்கு ஹில்லாரி வயதில் இளையவரோ, தோற்றத்தில் ஹாட்டானவரோ இல்லை.  (இருந்தால் கிளிண்டன் ஏன் மோனிகா பின்னால் போயிருக்கப் போகிறார் என எழுதத் தோன்றியது. ஹில்லாரி ஹாட்டாக இருந்திருந்தாலும் கிளிண்டன் மோனிகா பின்னால் போயிருப்பார். இது ஆண்களின்உளவியல்.) சாரா அளவுக்கு ஹில்லாரி பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்டவரும் இல்லை. ஆக, இந்த இடத்தில் செக்ஸிஸம் என்ற வாதம் பொருந்துமா? பொருந்தும். ஹில்லாரியையும், சாராவையும் செக்ஸிஸக் கருத்துகள் சொல்லித் தாக்குகிற பெண்களும்கூட இருக்கிறார்கள் என்பது விஷேடம். ஆக, செக்ஸிஸம் என்பது எதிர்-பால் சார்ந்த விஷயம் இல்லை. அதனால், ஆண்கள் கொஞ்சம் ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். செக்ஸிஸத்தைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? ஏற்கனவே நல்ல சொற்கள் இருக்கின்றனவா? பால்பேதம் அல்லது பாலினபேதம் எனலாமா? பால்பேதம் என்ற தலைப்பில் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று இருப்பதாக நினைவு.
பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்பதே பெண் விடுதலை. பெண்ணியம் என்பது மேற்கத்திய சொல். பெண்விடுதலைதான் நம் சொல் என்று ஒரு பேட்டியில் ஜெயகாந்தன் சொன்னார். இரண்டு சொற்களுக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை ஆராயப் புகுந்தால், மேற்கத்திய சிந்தனை மரபுக்கும், கீழைத்தேய (இந்திய) சிந்தனை மரபுக்கும் உள்ள வேறுபாடுகளில் வந்து முடியலாம். பெண் விடுதலை வேண்டுவோர் ஆண்களையும் பெண்களையும் சரியாக நடத்துகிற நிலை வேண்டுபவர். ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் இருக்க இயலாது என உணர்ந்தவர். ஆனால், பெண்ணியம் என்பது பெரும்பாலும், ஆண்களுக்கெதிரான நிலைப்பாடாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பெண் விடுதலை பெற்ற பின்னும் பெண்ணியத்துக்கான தேவை இருக்கும் என்கிறார்கள். ஆண்கள் இருக்கும்வரை பெண்ணியம் இருக்கும் போல. பெண்ணியத்தில் ஆண் பெண்ணுக்கெதிராக எப்போதும் கட்டமைக்கப்படும் பாத்திரம். இதுதான் பெண்ணியத்தின் சரியான வரையறையா என்றால், தமிழ்ச் சூழலில் பெண்ணியம் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.  தன்னின் அடையாளத்தைப் பெண் மறக்காத வரையில், ஆண் குறித்த விமர்சனங்கள் பெண்ணுக்கு இருக்கும் வரையில் பெண்ணியம் இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்தப் பெண்ணியம் ஓர் அரசியல் ஆயுதமே தவிர இதில் இருக்கிற பலன்கள் வேறென்ன என்பதைப் பெண்ணியவாதிகள்தான் சொல்ல வேண்டும்.
என்னுடைய தோழிகளில் சிலர், தன் பாலினத்தை (ஜெண்டரை) மறந்துவிட்டே நட்பு, எழுத்து ஆகிய துறைகளில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். பெண் என்ற அடையாளத்துடன் அவர்களைப் பேசினால் அதை எதிர்க்கிறர்கள். பெண் என்பதால் தங்களுக்குத் தனிச்சலுகை வேண்டாம் என எழுதுகிறார்கள். இது நிச்சயம் பெண்ணியம் தாண்டிய முதிர்ச்சியான நிலைதான். உடலியல் ரீதியான பெண் அடையாளங்களை மறந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபடுவது சாத்தியப்பட நிறைய பயிற்சியும் பக்குவமும் வேண்டும். ஆனால், இந்த அணுகுமுறை ஆண்களுக்குச் சாத்தியமாகப் போய்விடக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது. பாலினம் சார்ந்த வேறுபாடு பார்க்க வேண்டாம் என்று பெண்ணே சொல்லும்போது, அதன் அடிப்படையிலேயே அங்கே ஆண்களின் கை ஓங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. பாலினம் சார்ந்த பெண் அடையாளங்களை, மறந்துவிட்டு வாழப் பழகுதல் என்பதைவிட, பெண்கள் தங்கள் பாலினம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டாடுவதே சரியான செயலாக இருக்கும். பாலினம் சார்ந்த அடையாளங்களை ஒரு பெண் மறந்தாலும் அதை நினைவுபடுத்த பத்து ஆண்கள் இருந்து கொண்டே இருப்பர். அது பாலினம் சார்ந்த அவமதிப்புகளுக்கு (செக்ஸிஸம்) கொண்டு செல்லும். பாலினம் சார்ந்த அடையாளங்களை ஒரு பெண் கொண்டாடும்போது, அந்தக் கொண்டாட்டத்தில் ஆண்களும் ஈடுபட்டாக வேண்டிய நிலை உண்டாகும். அது பாலினம் சார்ந்த மதிப்புக்குக் கொண்டு செல்லும்.
2ஜி ஊழல் குறித்தும், அதில் கைதானவர்கள் பற்றியும் நான் என்ன எழுதுவது? நீதிமன்றங்கள் இவ்விஷயத்தை மேற்பார்வையிடுவதும், வழிநடத்துவதும் பாராட்டத்தக்கது. இதன் பின்னுள்ள அரசியலை அல்ல, கனிமொழியின் கைது சரியா தவறா என்பதை அல்ல நான் இங்கே பேச வருவது. கனிமொழியின் ஒரு கட்டுரைத் தொகுப்பு, இரண்டு கவிதைத் தொகுப்புகளை பல வருடங்களுக்கு முன்னர்வாசித்திருக்கிறேன். பெண் என்பதால் எந்த அனுகூலமும் பெற விரும்பாத, பெண்ணியம் பேசுகிற முகமாக அவ்வெழுத்துகளில் கனிமொழி தெரிந்தார். கனிமொழிக்கு முன் – ஜாமீன் (தனித்தமிழில் ஆர்வமில்லை எனினும், துறைசார்ந்த தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு உண்டு. ஆனால், முன் – ஜாமீனுக்குப் பயன்படுத்தப்படும் பிணை என்ற சொல் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. யோசித்தால் பிடிக்காமல் போனதற்குக் காரணங்கள் கண்டுபிடிக்கலாம். வேறு ஏதும் நல்ல சொல் இதற்கு இருக்கிறதா?) கேட்ட ராம் ஜெத்மலானி, அவர் பெண் என்பதாலும், தாய் என்பதாலும் அவருக்கு முன் – ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். கனிமொழியுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் வழக்கறிஞர் வாதம் அமைந்துவிட முடியாது. ஆகக் கடைசியில் பெண்ணியம் சென்று சேர்கிற இடம் – பெண் என்பதால் அனுகூலம் வேண்டும் என்று கேட்பதுதானா எனத் தோன்றியது. அரசியல்வாதியானதால் கனிமொழி இழந்தவைகளில் பெண்ணியமும் ஒன்றாகிப் போனது. இது கனிமொழியின் நிலை அல்ல, அவர் வழக்கறிஞரின் சட்ட வியூகம் என்று இதற்கும் தி.மு.க. எம்.பி யாரும் பதில் சொல்லக் கூடும். (ராஜாதான் அனைத்துக்கும் பொறுப்பு, கனிமொழி அல்ல என்று ஜெத்மலானி வாதாடியதற்கு, அது அவரின் சட்ட வியூகம், திமுகவின் நிலை அல்ல என்று ஒரு தி.மு.க. எம்.பி சொன்னார்).
அரசியல், தத்துவம், பொருளாதாரம், இலக்கியம் என்று வாழ்வின் துறைகளில் ஆணித்தரமான கொள்கையுடையவர்கள், அவற்றைத் தம் சொந்த வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க முடியாத நிலையில், அக்கொள்கையில் இருந்து மாறியதை தெளிவாக ஒத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்தக் கொள்கையில் இருந்து தான் வளர்ந்து பிறிதொரு நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதைப் பதிவு செய்ய வேண்டும். இதை இங்கே செய்பவர்கள் யாருமில்லை. நம்மின் பெரும்பாலோரின் பிரச்னை இதுதான். நமக்குள் நடக்கிற வளர்சிதை மாற்றங்கள், அத்யாவசியமான சமரசங்கள் ஆகியவற்றை மௌனத்தின் மூலமோ, அவற்றை நியாயப்படுத்துவதன் மூலமோ அல்லது ”ஆரம்பம் முதலே நான் இப்படித்தான்” என்கிற பொய்களின் மூலமோ கடக்க முயல்கிறோம்.

Series Navigationதாமரை இலையும் சின்னக்குத்தூசியும்உறையூர் தேவதைகள்.

2 Comments

  1. //அரசியல், தத்துவம், பொருளாதாரம், இலக்கியம் என்று வாழ்வின் துறைகளில் ஆணித்தரமான கொள்கையுடையவர்கள், அவற்றைத் தம் சொந்த வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க முடியாத நிலையில், அக்கொள்கையில் இருந்து மாறியதை தெளிவாக ஒத்துக் கொள்ள வேண்டும்.//

    உண்மை.

  2. Avatar RANGIEM N ANNAMALAI

    RIGHT ARTICLE.SHE SHOULD NOT APPLIED.LIKE VAIKO,RAJA THEY COULD HAVE FACE THIS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *