‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’

This entry is part 33 of 40 in the series 6 மே 2012

மலர்மன்னன்
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களில் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முக்கியமானவர். சென்னையில் திருவல்லிக்கேணி-திருவட்டீஸ்வரன்பேட்டையிலிருந்து அண்ணா சாலைக்குச் செல்லும் எல்லிஸ் சாலை நமக்கு நினைவுறுத்து வது இவரைத்தான்
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவதற்காக 1798-ல் இந்தியா வந்த எல்லிஸ், பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிறகு 1810-ல் சென்னை மாவட்டக் கலெக்டர் பதவியை ஏற்றார். தென்னிந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த எல்லிஸ், தென்னிந்தியப் பகுதிகளில்  பணியாற்ற வரும் ஆங்கிலேயே அதிகாரிகள் இம்மொழிகளை அறிந்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தி, 1812-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் தென் மொழிகளில் முக்கியமாகத் தமிழும் தெலுங்கும் கன்னடமும் பயில்வதற்கான கல்லூரி ஒன்றை முன்னின்று தொடங்கி வைத்தார். அதுவரை இந்தியா என்றாலே சமஸ்க்ருதம், ஹிந்துஸ்தானி, உருது, பாரசீகம் ஆகிய மொழிகளில் பரிச்சயம் இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் இருந்த ஆங்கிலேய துரைத்தனத்தின் போக்கை அவர் மாற்றியமைத்தார்.
மொழிகளைக் கற்பதில் எல்லிஸுக்கு இருந்த ஆர்வமும் ஆற்றலும் அபாரமானவை. ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்ற எல்லிஸ் வெகு  விரைலேயே செய்யுள் இயற்றும் அளவுக்குத் தமிழில் புலமை பெற்றுவிட்டார்.  திருக்குறளின் மீது அவருக்கு இருந்த அளவு கடந்த  ஈடுபாடு அதனை ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கச் செய்தது.
தமிழ் மொழியின் மீது எல்லிஸுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காலப் போக்கில் தமிழர் பண்பாடு, தமிழர்களின் சமய நம்பிக்கை ஆகியவற்றிலுங்கூட அவரை ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளச் செய்துவிட்டது. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயவைத் துதித்து எழுத்துக்கு ஒன்றாக ஐந்து செய்யுள்களை இயற்றும் அளவுக்கு ஹிந்து சமயக் கோட்பாட்டிலும் தத்துவச் செறிவிலும் அவரது உள்ளம் தோய்ந்து போனது. தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு எல்லீஸ் எழுதிய ஒரு செய்யுளும் காணப்படுகிறது.
மொழி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் கவனம் செலுத்தத் தவறவில்லை. சென்னையில் நிலவிய தண்ணீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண இருபத்தேழு கிணறுகளை ஆங்காங்கே வெட்டச் செய்தார், எல்லிஸ். ஹிந்து சமயச் சடங்குகளின் பிரகாரம் அவற்றைத் தொடங்கியும் வைத்தார்!
இந்தக் கிணறுகள் தோண்டப்பட்டதையொட்டித் தமிழில் தாம் இயற்றிய கல்வெட்டு சாசனத்தில்தான் ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே’ என்று அவர் தம்மை அறிவித்துக் கொள்கிறார். அத்துடன், ‘வார, திதி நட்சத்திர யோக கரணம் பார்த்து சுப தினத்தில் இதனோடு இருபத்தேழு துரவு கண்டு புண்ணியாஹவாசனம் பண்ணுவித்தேன்’ என்றும் அந்த சாசனத்தில் அறிவிக்கிறார். இந்தக் கல்வெட்டு தற்சமயம் மதுரை திருமலை நாயக்கர் மஹால் தொல்லியல் துறை அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஹிந்து சமயத்தில் எல்லிஸுக்கு இருந்த ஈடுபாடு பற்றி அவருடைய நண்பரும் மொழியியல் ஆய்வாளருமான வில்லியம் எர்ஸ்கின் பதிவு செய்துள்ள கருத்துகள் கவனிக்கத் தக்கவை.
தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்வதிலும் ஹிந்துக்களின் வாழ்க்கை முறை, இலக்கியம் ஆகியவற்றை அறிவதிலும் எல்லிஸ் குறிப்பிடத் தக்கவராக இருந்தார் என்கிறார், எர்ஸ்கின். தமிழில் அதற்கே உரித்தான நயங்களுடன் எழுதக் கூடியவராக எல்லிஸ் இருந்தார் என்று கூறும் எர்ஸ்கின், தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். தமிழர்களின் செயலாற்றலில் மதிப்பு வைத்திருந்த எல்லிஸ், தமிழர்களுள் ஒருவராகவே வாழ்ந்தார் என்றும் தமிழர்களின் மனப் போக்கை நன்கு அறிந்திருந்தார் என்றும் எர்ஸ்கின் பதிவு செய்துள்ளார்.
துரதிருஷ்ட வசமாக எல்லிஸ் 1819 ஆம் ஆண்டு தமது 41 ஆவது வயதிலேயே வயிற்று வலி மருந்து என்று நினைத்து தவறுதலாக நச்சுப் பொருள் எதையோ உட்கொண்டு உயிரிழக்க நேரிட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் அவர் மதுரையில் மதுரை மாவட்ட கலெக்டருடன் தங்கியிருந்தார். அவரது உடல் ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறையிலும் உள்ளூர் மக்களுடன் அவர் கலந்துறவாடி வந்தது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மறைவையொட்டி அவரைப் போற்றியும் இரங்கல் தெரிவித்தும் தமிழில் ஒரு நீண்ட செய்யுள் கல்வெட்டாகக் காணப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளின் தனித்தன்மையை ஐரோப்பாவுக்கு முதலில் எடுத்துக் கூறியவர் சென்னை மாவட்டக் கலெக்டர் எல்லிஸ். அதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1856-ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்ட பிஷப் கால்டுவெல் தமது முன்னோடி எல்லிஸ் என்று அறிந்திருந்தும் அதனைத் தமது முன்னுரையில் உரிய முறையில் பதிவு செய்வதற்கு பதிலாக மிகவும் அலட்சிய தொனியில் மேட்டிமைப் போக்குடன் போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பது வியப்பூட்டுகிறது. அடுத்து வந்த பதிப்புகளில் அந்தச் சிறு குறிப்பும்கூட  இல்லாமற் போனது விசித்திரம்.
தென்னிந்திய மொழிகளின் தனித் தன்மையைத் தமக்கு முன் அடையாளங் காட்டியவர் எல்லிஸ் என்பதை கால்டுவெல் தெரிவித்தபோதிலும்  எல்லிஸின் பார்வை இலக்கண அமைப்பு சாராமல் வெறும் சொற்களுடன் நின்று விடுவதாகக் குறை கூறுகிறார். மேலும், ’எல்லிஸ் என்னும் சென்னை அரசு ஊழியர்’ என்று ஒரு பெரிய மனுஷ தோரணையுடன்  எல்லிஸை அவர் குறிப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை. எல்லிஸின் பணியை கால்டுவெல் குறைத்துக் கூறுவதற்கும் அடுத்து அவரை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவதற்கும் என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
எல்லிஸ் சென்னை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றியபோது கம்பெனியின் சார்பில் நாணயம் வெளியிடும் அதிகாரமும் பெற்றிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் நாணயத்தை வெளியிட்டார். அன்றைக்கு இரட்டை வராகன்தான் அதிகப் பெறுமானம் உள்ள நாணயமாக இருந்தது. திருவள்ளுவரின் உருவத்தை இருப்பதிலேயே அதிக மதிப்புள்ள நாணயத்தில் பொறித்ததன் மூலம் திருவள்ளுவர் மீது தமக்குள்ள மரியாதையை எல்லிஸ் தெரிவித்துக்கொண்டார் போலும்!
[இக்கட்டுரையில் இடம் பெறும் பல தகவல்கள் நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட தாமஸ் டிரவுட்மன் எழுதிய நூலின் தமிழாக்கமான திராவிடச் சான்று என்ற நூலிலிருந்து திரட்டப்பட்டவை. திருவள்ளுவர் நாணயம் பற்றிய விவரம் ஐராவதம் மகாதேவன் எழுதிய திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டது (தினமணி சுடர், மார்ச் 04, 1995)]
நன்றி: நம்ம சென்னை மே 01, 2012

+++

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை“என்ன சொல்லி என்ன செய்ய…!”

14 Comments

  1. Avatar s.madhurakavy

    You are giving lot of historical informations.I would like to convey my appreciations for your research works.1

    thank you very mu

  2. Avatar paandiyan

    கால்டுவெல்லை துதிபாடி ஒருகூட்டம் இன்னும் இங்கு வராதது ஆட்ச்யர்யமாக உள்ளது …….

  3. Avatar puthiyamaadhavi

    கால்டுவெல் அவர்களின் ஆய்வைப் பற்றி மிக அதிகமான கேள்விகளை முன்வைத்தவர் ட்ரவுட்மன். எல்லீஸ், ஸ்டீவன்சன், ஹாட்க்சன் ஆகியோரின் ஆய்வின் தொடர்சியாகவும் வளர்ச்சியாகவும் மட்டுமே கால்டுவெல்லை நாம் அணுக வேண்டும்.
    அப்பா மலர்மன்னன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல அவர் எல்லீசனைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடவில்லை தான்.கால்டுவெல் எல்லீஸைப் பற்றி தரும் இத்துறையில் முதன்முதல் உடைப்பை ஏற்படுத்தியவர் சென்னையைச் சேர்ந்த எல்லீஸ் ஆவார். அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் புலமை மிக்கவர். காம்ப்பெல் அவர்களின் தெலுங்கு இலக்கண நூலுக்கான முன்னுரையில் சுருக்கமான ஒப்பியல் ஆய்வை மேற்கொண்டுள்ளார். மூன்று திராவிட மொழிகளுக்கிடையே உள்ள ஒலிக்கூறுகளை ஒப்பிடுகிறார். இலக்கண அமைப்பை அல்ல. (கால்டுவெல், 1856: 4)’’ என்ற கால்டுவெல்லின் குறிப்பை ட்ரவுட்மன் மேற்கோள் காட்டுகிறார்.
    தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்றுக்குமிடையிலான ஒப்புமைகளைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லும் ஆய்வாகத் தான் எல்லீஸினுடைய ஆய்வு இருந்தது என்பது கால்டு-வெல் தரும் விளக்கம். இதில் கால்டுவெல் எல்லீஸை எவ்வளவு குறைவாக மதிப்பிட்டிருக்கிறார் என்பதைக் குறித்துக் கேள்வி எழுப்பலாம். ஆனால் இப்போது பிரச்சனைக்குரிய இந்த இரண்டாம் பதிப்பில் _ 1875இல் வந்த அந்தப் பதிப்பு இப்போது நமக்கு மறுபதிப்பாக வந்துள்ள சூழலில், எல்லீஸ் பற்றிய இந்தக் குறிப்பு கால்டுவெல்லின் முன்னுரையில் இல்லை.

    கால்டுவெல்லை விட எல்லீஸை ஓரம் கட்டுவதில் இந்த இரண்டாம் பதிப்புக்குப் பங்கு இருந்திருக்கிறது. கால்டுவெல்லின் ஒட்டுமொத்த நூலில், எல்லீஸ்பற்றி வரக்கூடிய இரண்டு மூன்று குறிப்புகள் பற்றி ட்ரவுட்மன் குறிப்பிடும்போது “எங்கெல்லாம் எல்லீஸ் தவறிழைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கால்டுவெல் எல்லீஸைக் குறிப்பிடுகிறார். எனவே எழுதியதை மீண்டும், மறுபதிப்பாக வரும்போது, சில பகுதிகளை வெட்டுவதில் வெளியாட்களுக்கு மட்டுமல்ல, கால்டுவெல்லுக்கும் பங்கு இருந்தது என்பது தெரிகிறது. எல்லீஸ் போன்றவர்கள் இத்துறையில் பணிபுரிந்தது தெரியவந்த பொழுதுங்கூட தான் செய்கிற பணியில் இந்த ஆய்வுகள் பெரிய அளவு பங்களிக்கவில்லை என்றெல்லாம் கால்டுவெல் சொல்கிறார்.

    எல்லீஸ், தமிழை அல்லது தென்னிந்திய மொழிகளைப் பாடமாக வைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகள் போராடி இங்குள்ள கல்லூரிகளில் அதை நடை முறைப்படுத்தி யவர்களில் ஒருவர். 40 வயதிற்கு முன்பாகத் தான் எழுதியதை வெளியிடக்கூடாது என்ற முடிவில் இருந்ததன் காரணமாகப் பல தகவல்கள் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ட்ரவுட்மன் நிரூபிப்பது என்னவென்றால் ‘எல்லீஸ் திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டறியாமல் இருக்கலாம். ஆனால் திராவிடச் சான்று என்பதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிரூபித்துவிட்டிருக்கிறார். கால்டுவெல் அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தரவில்லை என்று ட்ரவுட்மன் வாதிடுகிறார்.

    கால்டுவெல்லின் நூல்களில் இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பலர் என்ன செய்தார்கள் என்கிற பதிவு இல்லை. இங்கிருக்கக் கூடிய சைவம் கால்டுவெல்லுக்குப் பிடிக்காததினால் அவர் அதைச் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் சோமசுந்தர நாயகர், சி.வை. தாமோதரம்பிள்ளை, மனோன்மணீயம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகிய பலபேரைக் கால்டுவெல் பொருட்டாகக் கருதவில்லை.(ஆதாரம். அ.மங்கையின் கட்டுரை: மாற்றுவெளி

  4. Avatar மலர்மன்னன்

    என் அன்பு மகளே மாதவி,
    நீ என் கட்டுரைக்கு எதிர்வினை செய்திருப்பதாக எனது இன்னொரு மகள் சொன்னாள். உடனே என்ன எழுதி யிருக்கிறாய் என்று பார்த்தேன் (என்னால் தொடர்ந்து விடாமல் எதிர்வினைகளைப் பார்க்க அவகாசம், ஆற்றல் இரண்டும் இருப்பதில்லை). உன்னுடைய ஆய்வுப் பார்வை எனக்குப் பெருமிதம் தருகிறது. உனக்கு எவ்வளவு அழகாகவும் தீர்மானமாகவும் சொல்ல வேண்டியதைச் சொல்ல வருகிறது!தற்சமயம் மிகவும் மும்முரமாக, இரவு-பகல் என்கிற மாறுபாட்டைக் கூட உணராமல் திராவிட அரசியல் குறித்து ஒரு நூலை எழுதி வருகிறேன். இதில் எல்லிஸ், கால்டுவெல் தொடர்பான விவரங்களுக்கு ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறேன். எல்லிஸ்ஸுக்கு இல்லாத உள்நோக்கம் கால்டுவெல்லுக்கு இருந்ததை அதில் விவரித்துள்ளேன். இதுவரை 17 அத்தியாயங்கள் எழுதியாகிவிட்டது. எப்படியும் மே மாத இறுதிக்குள் எழுதி முடித்து விடுவேன். ஆங்கிலத்தில் ’உள்ளம் விழைகிறது ஆனால் உடல் ஒத்துழைப்பதில்லை’ என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு (Spirit is willing but flesh is weak ) ஆனால் உள்ளத்தின் விழைவை உடல் உணர்ந்து ஒத்துழைப்பதால் நலிவும் வலியும் தெரியாமலே சோர்வடையமல் வேகம் குறையாது எழுதி வருகிறேன். எல்லிஸ் திராவிட என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தவேயில்லை என்பதையும் கால்டுவெல்லுக்கு ஏன் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இருந்தது என்பதையும் பதிவு செய்துள்ளேன். சென்னப்பட்டணத்து எல்லீசன் கட்டுரை நான் பல நாட்களுக்கு முன் எழுதிய சிறு கட்டுரை, நம்ம சென்னை என்கிற இதழுக்கென்றே அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டது. அந்த இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரை வெளியாவது சாத்தியமில்லை. சென்னை தொடர்பான சங்கதிகளுக்காக மட்டுமே நடைபெறும் அந்த இதழில் அறிமுகம் போன்ற கட்டுரைகளை மட்டுமே எழுத இயலும். எனவேதான் ’எல்லிஸின் பணியை கால்டுவெல் குறைத்துக் கூறுவதற்கும் அடுத்து அவரை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவதற்கும் என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்’ என்று கோடி காட்டுவதோடு நிறுத்திக்கொண்டேன். உன்னைப் போல் கட்டுரைகளுக்குத் தொடர்பான விஷயங்களை மட்டும் புத்திசாலித்தனமாக விவாதிப்பது படிக்கவும் பதில் எழுதவும் உற்சாகம் தருகிறது.
    அன்புள்ள ஸ்ரீ மதுரகவி, நீங்கள் அளிக்கும் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. ஸ்ரீ பாண்டியன், உங்கள் நகைச்சுவையை ரசிக்கிறேன். ஆனால் இங்கும் அனாவசியமான திசை திருப்பல்களும் வசை மாரிகளுமாக ஒரு தொடர்கதை வேண்டாமே! திருப்பிப் போட்டுக் கல்லால் அடித்தால் ஆமை சாகும், சிவ சிவா என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதா?
    மிக்க நன்றியுடன், மலர்மன்னன்

  5. Avatar Kavya

    “ஆங்கிலத்தில் ’உள்ளம் விழைகிறது ஆனால் உடல் ஒத்துழைப்பதில்லை’ என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு (Spirit is willing but flesh is weak )”

    பைபிளில் உள்ள ஒரு வசனம்.

  6. Avatar Kavya

    “எல்லிஸின் பணியை கால்டுவெல் குறைத்துக் கூறுவதற்கும் அடுத்து அவரை ஒரேயடியாகப் புறக்கணித்து விடுவதற்கும் என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.”

    இதை மலர்மன்னனே ஏன் சொல்லவில்லை? அவரே யோசித்து நமக்குச் சொல்லலாமே ? கால்டுவெல்லின் சூழ்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் தமிழ் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்த குறும்ப்புத்தனங்களையும் மலர்மன்னனே சொன்னால் படிக்கச்சுவையாக இருக்கும்.

    மல்ர்மன்னன் இன்னும் திராவிடக்கட்சிகள் கால்டுவெல்லை வைத்தே கடை கட்டுகிறார்கள். உங்களைப்போன்றேர் எப்படி கால்டுவெல் சொன்னவை பொய்களாகுமென்று சொன்னால், அவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு போய்விடுவார்கள். உங்கள் புதிய நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  7. Avatar puthiyamaadhavi

    அன்பு அப்பா மலர்மன்னன் அவர்களுக்கு,
    என் வணக்கமும் நன்றியும்.
    நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல் புத்தகத்தை நானும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன். திராவிட அரசியலின் ஆரம்பமும் வளர்ச்சியும் கண்ட காலத்தில் வாழ்ந்த உங்களைப் போன்ற சிந்தனையாளர்களின் பதிவுகள் மிகவும் தேவையானவை.
    எல்லா எழுத்துகளுக்கும் ஒரு தளமும் எழுதுபவருக்கு ஓர் உள்நோக்கமும் இருக்கத்தான் செய்யும். ஏன் பத்திரிகை செய்திகளில் கூட உள்நோக்கம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
    நீங்களும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால்
    திராவிட அரசியல் என்பதைவிட அந்த திராவிட அரசியலால்
    ஒரு கூட்டம் வளர்ந்தது. அவர்களை நம்பிய கோடானுக்கோடி
    தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தார்கள்.
    அப்படி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தக் கோடியில்
    ஒரு எச்சமாய் நான்….
    உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    (வழக்கம்போல உங்களுடன் நான் முரண்படும் தளத்தைவிட்டு நகராமல்!)

    அன்பு மகள்,

    புதியமாதவி

    • Avatar punai peyaril

      திராவிட அரசியல் தொடக்கத்தில் இடையில் தான் இலட்சிய வேட்கையுடன் எத்துனை எத்துனை உள்ளங்கள் கனவுகளுடன் தங்கள் வாழ்வை பணயம் வைத்தன… ஆனால் கடைசியில் கருணாநிதி – எம்ஜிஆர் என்று இரு புள்ளிகளில் இயக்கமே நின்று போனது. இன்று இருவரின் அள்ளக்கைகளும், அவர்களுக்கு உற்சாக விருந்து தந்தவர்களும் பல்கலைக்கழகம், தொழிற்கூடம் , அதிகாரம் என்று செழிப்பில் திளைக்க… இதோ நார் அறுந்த செருப்பாய் உபயோகமற்று… பல இலட்சிய திராவிடர்கள் தளர்ந்து போய்.. நடை பிணங்களாய்….. மம… உண்மைகளை எழுதி விடுங்கள்… கோடானு கோடி வணக்கங்கள் அதற்கு இப்போதே…

    • Avatar Kavya

      எல்லா எழுத்துகளுக்கும் ஒரு தளமும் எழுதுபவருக்கு ஓர் உள்நோக்கமும் இருக்கத்தான் செய்யும். ஏன் பத்திரிகை செய்திகளில் கூட உள்நோக்கம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
      நீங்களும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல.//

      ஒவ்வாக்கருத்து.

      உள்ளோக்கத்துடன் எழுதுபவர்கள் ஆராய்ச்சியாளர்களல்ல. அவர்கள் ஆராய்ச்சியென்ற போர்வையில் அஜன்டாக்களைத்தள்ளுப்வர்கள்.

      உலகில் ஏராளமான புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் எல்லாத்துறையிலும் மிளிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நூல்களெல்லாம் படிக்கக்கிடைக்கின்றன. அவர்களெல்லாம் உள்ளோக்கத்தில் எழுதினார்கள் என்று எவராலும் சொல்லவியலாது.

      அப்படி எழுதுவது உயர்ந்த மனித நாகரிகம். நமக்கு பத்தவில்லையென்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதுவே விதி. நாங்கள் விதி விலக்கல்ல என்று சம்சாரிக்கவேண்டாம்.

  8. Avatar R.Venkatachalam

    நான் முன்னாள் உளவியல் பேராசிரியன். பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவன். திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற நூலை எழுதி அதனை வெளியிடும் தறுவாயில் உள்ளேன்.சென்னை பாவைபிரிண்டர்ஸ் அச்சடிக்கிறார்கள் இந்த மாத இறுதிக்குள் பணி முடியும் என எதிர்பார்த்துக்கொண்டு உள்ளேன். துக்ளக்கில் விளம்பரம் தந்து இருந்தேன், நிற்க. திருக்குறள் நூல் எழுதும்போது எல்லிஸ் பற்றி படித்தேன். அவருடைய மொழி பெயர்ப்பு முற்றுப்பெறவில்லை எனவும் அறிவேன். தங்களுடைய நூலினை வாங்க விழைகிறேன். அது வெளி இட்டவுடன் எனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம். நான் தமிழ் கற்றவன் அல்ல. ஆகையால் தங்களுடைய விவாதத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. நன்றி வணக்கம்
    அர.வெங்கடாசலம்

    • Avatar punai peyaril

      நீங்கள் உளவியல் பேராசிரியர் எனும் கோணத்தில், தமிழகத்தில் பெரும்பால மக்கள் உளவியல் ரீதியாக தமிழ் தமிழர் எனும் வார்த்தைகளால் உணர்வு நிலை மிக ஆட்கொண்டு சித்தம் தடுமாறிய நிலையோ எனும் படியாக வாழும் நிலை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் பணிவான யோசனை….

  9. Avatar மலர்மன்னன்

    //திருக்குறள் நூல் எழுதும்போது எல்லிஸ் பற்றி படித்தேன். அவருடைய மொழி பெயர்ப்பு முற்றுப்பெறவில்லை எனவும் அறிவேன். – அர.வெங்கடாசலம்//

    நன்றி, மகிழ்ச்சி. நான் எழுதுவது திராவிட அரசியல். அதில் எல்லிஸ்-கால்டுவெல் இருவர் பார்வைகளையும் ஒப்பிட்டு ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே உண்டு. திருக்குறள் தொடர்பாக அதில் ஏதும் இருக்காது. ஆம். அவர் சில குறட் பாக்களை மட்டுமே மொழிபெயர்த்துள்ளார். உங்கள் புத்தகம் பற்றிய தகவல் ஆர்வமூட்டுவதாக உள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரி எங்கே?
    -மலர்மன்னன்

    • Avatar R.Venkatachalam

      அன்பு மலர்மன்னன்,
      மின் அஞ்சல் வெளியிடப்படாது என்பதை இப்பொழுதுதான் பார்த்தேன். என்னுடைய மின் அஞ்சல்

      prof_venkat1947@yahoo.co.in

      நன்றி வணக்கம்.

      புனைபெயரில் அவர்களுக்குத் தங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. நான் திருக்குறளினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விள்க்கமும் எழுதி உள்ளேன். வெளியீட்டாளர்கள் கிடைக்காத்தால் அதையும் நானே வெளியிடவுள்ளேன். அதன்பிறகு மலையாளாத்திலும் இந்தியிலும் வெளி இட வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. 584 குறட்பாக்களுக்கு இதுவரை யாரும் கூறாத விளக்கங்கள் இடம்பெற்று உள்ளன என்னுடைய தமிழ் புத்தகத்தில்.

  10. Avatar மலர்மன்னன்

    அன்புள்ள மாதவி / புனைப்பெயரில்,
    தயவு செய்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள் என வேண்டுகிறேன்.
    நானாகவே ஓர் எல்லைக் கோட்டை வரைந்துகொண்டு அதற்குட் பட்டே எழுதியுள்ளேன் (எழுதி முடித்துக்கொடுத்துவிட்டேன்!).
    திராவிட இயக்கம் என்பது சரியல்ல, அது வெறும் சமயோசித அரசியல்தான் என்பது அதன் அடிப்படை. அதற்கு நூறு ஆண்டு நிறைவு என்பது எந்த அளவுக்குச் சரி, அதைக் கொண்டாடும் வாரிசுரிமை தி.மு.க., தி.க. ஆகியவற்றுக்கு உண்டா என்பது அதன் கட்டமைப்பு. இதில் சம கால கருணாநிதி/எம்.ஜி.ஆர். இடம்பெற மாட்டார்கள். மாதவி, நீ சொல்வதுபோல் எனக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. நான் அறிந்ததை அறிந்து கொண்ட விதமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவும் நானாக அல்ல, பலர் திரும்பத் திரும்பக் கேட்பதால் தான். பல விஷயங்கள் அவகாசம் இல்லாததாலும் உடல் நிலை சோர்வினாலும் ஆதாரங்களுக்காகப் பழைய கிடைக்காத நூல்களைத் தேடிச் சென்று படி எடுத்து வரப் பொருளாதார வசதி போதுமான அளவு இல்லாததாலும் ஒப்புக்கொண்ட பிறகும் எழுத முடியாமல் போகிறது. திராவிட அரசியல் எழுதுவதற்கே ரூ. 10 ஆயிரம் செலவு செய்ய நேரிட்டது! பதிப்பாளர் செலவை ஏற்றுக் கொண்டதால் எழுத முடிந்தது. உண்மையில் எந்நேரமும் ஏகாந்தமாக அன்னையுடன் உறவாடிக் களிப்பதிலும் ஸ்ரீ க்ருஷ்ணாம்ருதத்தில் திளைத்திருக்கவுமே விரும்புகிறேன்.
    அன்புடன்,
    மலர்மன்னன்

Leave a Reply to s.madhurakavy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *