சேவை

Spread the love

01       

                      டாக்டர் ஜி. ஜான்சன்

 

அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால் அன்றாடம் படகுகளில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

          வேறு அகதிகள் முகாம்கள் இராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு தங்க இடமும், உணவும் , சில அடிப்படை வசதிகளும் தமிழக அரசு செய்து தந்தது.
           அவர்கள் அவ்வாறு தங்குவது தற்காலிகமே என்பதால் முழுமையாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
          அப்போது தனியார் தொண்டூழிய நிறுவனங்களின் உதவி அதிகம் தேவைப பட்டது. நான்அப்போது திருப்பத்தூர்  சுவீடிஸ் மிஷன்  மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி. நாங்கள் சுற்று வட்டார கிராமங்களில் பத்து சுகாதார மையங்கள் நடத்தி வந்தோம்.
           திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் சோழபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு அகதிகள் முகாம் ஒன்று செயல் பட்டது. நாங்கள் அங்கே சென்று அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தோம். அங்கு பலருக்கு காய்ச்சல், இருமல், சளி ,வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மருந்துகள் தருவோம். ஒரு சிலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து உள் நோயாளிகளாகவும் சிகிச்சை தந்தோம்.

அதற்கான நிதி உதவி எங்களிடம் அப்போது இல்லைதான். கிராம சுகாதார மையங்களின் நிதி ஒதுக்கீட்டில் இதையும் சேர்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் காலை என்னைக் காண ஒரு பெண்மணி வந்தார். நல்ல உயரம். தங்க நிறம். சிரித்த முகம். தன்னை மகேஸ்வரி வேலாயுதம் என்று அறிமுகம் செய்து கொண்டார். சரளமான ஆங்கிலம் பேசினார். தமிழ் பேசும்போது அது ஈழத் தமிழ். தான் விடுதலைப் புலிகளின் சார்பாக வந்துள்ளதாகக் கூறினார். அவர் ஒரு வழக்கறிஞர் .

அவர் கூறியவை எனக்கு வியப்பை உண்டு பண்ணியது. விடுதலைப் புலிகள் எவ்வளவு சிறப்பாகத் திட்டமிட்டு செயல் படுகிறார்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் நடத்தும் விடுதலைப் போருக்கு உலகளாவிய நிலையில் நிதி சேர்க்கப் படுவதாகவும், அதில் பெரும் பகுதி ஆயுதங்களுக்குச் செலவாகிறது என்றார். அதனால் மருத்துவச் செலவுக்கு நிதி குறைவாக உள்ளது என்றார்.

இருந்த போதிலும் இங்கு வந்துள்ள அகதிகளின் நல்வாழ்வுக்கு தான் பொறுப்பு ஏற்றுள்ளதாகத் தெரிவித்தார். சோழபுரம் அகதிகளின் முகாமில் நாங்கள் மேற்கொண்டுள்ள மருத்துவச் சேவைக்கு நன்றி கூறினார்.

அவர் மதுரையில் ” தமிழ் தகவல் மையம் ” ( Tamil Information Centre ) விடுதலைப் புலிகளின் சார்பில் தலைமையகமாக வைத்து இயங்குவதாகக் கூறினார். நேரம் கிடைத்தால் என்னை அங்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

அதன் பின்பு தான் வந்ததின் நோக்கத்தைக் கூறினார்.

” டாக்டர். மண்டபம் அகதிகள் முகாமில் பலருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்கு உங்களுடைய உதவி நாடி வந்துள்ளேன். அங்கு ஒரு சிறு சுகாதார நிலையம் அமைக்கணும். அதை நீங்கள் செய்து தருவதோடு அதை நீங்களே நடத்தணும். ” என்றார்.

” அமைத்துத் தருவதில் சிரமம் இல்லை. ஆனால் அதை இங்கிருந்து நடத்துவதில் சிரமம் இருக்குமே? எப்படியும் இங்கிருந்து மண்டபம் செல்ல இரண்டு மணி நேரமாவது ஆகும். ” நான் அதில் உள்ள சிரமத்தைக் கூறினேன்.

” .சிரமம்தான் டாக்டர். ஆனால் முயற்சிப்போமே? இது ஒரு அவசர கால நடவடிக்கைதான். நாங்கள் அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விடுகிறோம். போக்கு வரத்த்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விடுகிறோம். தேவையான மருந்துகளும் வாங்கித் தருகிறோம். இங்கிருந்து மருத்துவரும் தாதியரும் தந்து நீங்கள் உதவுங்கள். மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறவேண்டியவர்களை இங்கே கொண்டு வந்து விடுவோம். ” அவர் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தார்.

அவருக்கு வயது முப்பதுதான் . அவரின் மன உறுதி என்னைக் கவர்ந்தது. தன் இன ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அந்த இளம் பெண்ணின் சேவை உணர்வு என்னை ஈர்த்தது. நான் அதிகம் சிந்திக்கவில்லை. சரி என்று கூறிவிட்டேன்!

அதன் பின்பு நாங்கள் இருவரும் போர்க் கால துரிதத்துடன் செயல் பட்டோம்.

அன்றே அவருடன் மதுரை சென்றேன். தமிழ் தகவல் மையம் ஒரு கட்டிடத்தின் மாடியில்அமைந்திருந்தது. உள்ளே நுழைந்ததும் புலிகளின் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு உருவப் படம் வரவேற்றது. அருகே புலிகளின் கொடி இருந்தது. சுவர்களில் மறைத்த இளம் புலிகளின் படங்கள் வரிசை விரிசையாகக் காணப்பட்டன.

ஒரு ஒலி பெருக்கியில் தொடர்ந்து ஆங்கிலத்தில் செய்தி வந்த வண்ணமிருந்தது. அது போர்முனையிலிருந்து வரும் செய்தி. அன்று அதுவரை எத்தனை பேர்கள் உயிர் நீத்தனர் என்பது உடனுக்குடன் தெரிய வருமாம். அதோடு பி.பி.சி. வானொலியும் ஒலித்துக் கொண்டிருந்தது. தொலைப்பேசிகள், மின்னஞ்சல் கருவிகள் நிறைந்த பரபரப்பான தகவல் நிலையமாககத்தான் அது காட்சியளித்தது.

என்னென்ன கருவிகள் ,என்னென்ன மருந்துகள், ஊசி மருந்துகள் தேவை என்பதை பட்டியலிட்டு மகேஸ்வரியிடம் தந்தேன்.

அவரிடமிருந்து முறைப்படி உதவி கோரும் கடிதம் பெற்றுக்கொண்டேன்.

அன்று மாலை நாங்கள் மண்டபம் சென்று வாடகை வீடு பார்த்தோம். அதன் பின்பு அங்குள்ள அகதிகள் முகாம் சென்றோம். அங்கு நான் கண்ட காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தன! அளவுக்கு அதிகமான பேர்கள் ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது போன்றிருந்தது. உடமைகள் அனைத்தையும் இழந்துபோன பரதேசிகளாகவே அவர்கள் தோன்றினர்.

அந்த வாரமே புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. சுகாதார மையம் திறப்பு விழாவுக்கான நாளும் குறிக்கப்பட்டது.

திறப்பு விழாவுக்கு ஒரு சில புதியவர்கள் வந்திருந்தனர். அவர்கள் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பாதர் போத்தினாதன் என்பவர் அவர்களில் ஒருவர். அவர் ஜெபம் செய்தார். நான் ரிபன் வெட்டினேன். மகேஸ்வரி குத்து விளக்கு ஏற்றினார். ( படம் இணைத்துள்ளேன் ).

நாங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அங்கு மருத்துவக் குழுவுடன் அங்கு சென்று நிறைய அகதிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.

சில வாரங்கள் கழிந்தன..

போர் இன்னும் தீவிரமானது.

மகேஸ்வரி மீண்டும் என்னைக் காண வந்தார்.

சிறிது நேரம் மண்டபம் பற்றி பேசினோம். அதன் பிறகு அவர் இன்னொரு திட்டம் பற்றி விவரித்தார்.

” டாக்டர். போர் தீவிரமடைந்துள்ளது. இப்போது அகதிகள் அதிகம் வருகின்றனர். அவர்களை இப்போது உள்ளபடி கவனித்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது எங்கள் புலிகள் நிறைய பேர் குண்டடி பட்டு காயத்துடன் உள்ளனர். அங்கு போர் முனையில் எங்களுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. அதனால் எங்களின் தலைவர் அவர்களுக்கு இங்கு சிகிச்சை தரச் சொல்கிறார். நீங்கள் இதற்கு உதவலாம் டாக்டர். ” நிலைமையைக் கூறினார் .

இதுவரை அகதி முகாம்களில் இருந்தவர்களுக்கு மருத்துவச் சேவை செய்தோம். அவர்கள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் பிரச்னை இல்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இங்கு வந்தால் வேறு ஈழ இயக்கத்தினரால் பிரச்னை வருமோ என்ற அச்சம் எனக்கு உண்டானது.

நான் யோசிப்பதைப் பார்த்த அவர், ” என்ன டாக்டர் யோசனை? ஏதும் பிரச்னை வரும் என்று பயப்படுகிறீரா? ” அவர் கேட்டார்,

” ஆமாம். இவர்கள் புலிகள். அவர்களை இங்கு வைத்திருப்பது தமிழ் நாடு அரசுக்குத் தெரிய வேண்டும்.அரசின் அனுமதியுடன்தான் அவ்ர்களை இங்கு கொண்டுவர வேண்டும். ஆமாம். காயப்பட்டுள்ளவர்களை நீங்கள் எப்படி இங்கு கொண்டு வந்து சேர்ப்பீர்கள்? ” வினவினேன்.

” அது சுலபம். அவர்கள் மோட்டார் படகுகளில் இரவில் வந்து இறங்குவார்கள். நாங்கள் ஆம்புலன்ஸ் மூலம் இங்கு கொண்டு வந்து விடுவோம். அரசுக்கு தெரிவிப்பதை நாம் மாவட்ட ஆட்சியர் மூலம் செய்வோம். ”

” ஆமாம். அப்படிதான் செய்ய வேண்டும். புலிகள் இங்கு தங்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பும் கேட்க வேண்டும் . இல்லையேல் அவர்களைத் தேடி வேறு கோஷ்டியினர  இங்கு வந்துவிட்டால் நிலைமை விபரீதமாகும். ”

” அப்படி அரசு அனுமதி தந்துவிட்டால் வேறு என்ன பிரச்னை டாக்டர்? ”

‘ குண்டடி பட்ட புலிகள் இவர்கள். துப்பாக்கி ரவைகள் ஆழமாகப் பதிந்திருக்கும். அவற்றை வெளியேற்ற அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். ஊசி மருந்துகள், கட்டு போடுதல், அவர்களுக்கு உணவு என்று நிறைய செலவு வரும் . மருத்துவமனையின் நிதியிலிருந்து இதற்கு செலவு செய்ய இயலாது. அதான் இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன். ” உண்மையைச் சொன்னேன்.

” எங்கள் நிதியிலிருந்து நாங்கள் ஓரளவு தருகிறோம். உங்களால் ஆன உதவி செய்யுங்கள் டாக்டர் . ” அவர் தைரியமூட்டினார்.

நான் மீண்டும் யோசித்தேன். அப்போது அந்த பொறி தட்டியது.

உற்சாகத்துடான் அவரைப் பார்த்துக் கூறினேன்.

” எதற்கும் நான்  சுவீடிஸ் மிஷன் செயலரிடம் பேசிப் பார்க்கிறேன். அவர்கள் நிதி உதவி தந்தால் கவலை இல்லை. அவர்கள் இதுபோன்ற மனிதாபிமான செயல்களுக்கு நிதியுதவி செய்வர். இன்றே நான் பேசிவிடுகிறேன். அதற்குமுன் நாம் இப்போதே சிவகங்கை செல்வோமா. மாவட்ட ஆட்சியர் திரு கோபாலனை எனக்குத் தெரியும். அவரிடம் முதலில் தெரிவித்து விடுவோம். அவர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று விடுவார். ”

அப்போது தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி. அவர் விடுதலைப் புலிகளுக்கு முழு ஆதரவு தந்துகொண்டிருந்தார்.

அதன்பின்பு அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. அது போர்க்காலம் என்பதால் தாமதிக்கவும் முடியாது., அங்கு ஒவ்வொரு நாளும் பலர் காயப்படலாம். உடலில் துப்பாக்கி ரவைகளை வைத்துக்கொண்டு வலியுடன் துன்பப்படுவர் இளம் புலிகள்!

மாவட்ட ஆட்சியர் இன்முகத்துடன் எங்களை வரவேற்று உதவினார். நாங்கள்  கூறியதைக் கவனமுடன் கேட்டார். உடன் தமிழக முதல்வருடன் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்றார். புலிகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் தாங்கும் வார்டில் காவல் துறையினர் இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பார்கள் என்றும் கூறினார். நாங்கள் நன்றி கூறி விடை பெற்றோம்.

அன்று இரவே நான்   சுவீடிஸ் மிஷன் செயலர்  மறைத்திரு பெர்க்லண்ட் ( Rev..Berglund )  அவர்களுடன் தோலை பேசி மூலம் பேசினேன். அவரும் இது நல்ல சேவை என்றும் , இதற்கான மருத்துவ செலவுகளை மிஷன் ஏற்றுக்கொள்ளும் என்றார். உடன் இந்த திட்டத்தைத் துவங்கிவிடுமாறும் கூறினார்.

மறு நாள் காலை மகேஸ்வரியை மீண்டும் சந்தித்தேன்.

அவர் படுக்கை மற்றும் உணவு செலவை ஏற்க சம்மதித்தார்.

நான் எங்கள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் இந்த திட்டம் பற்றி கூறினேன்.அறுவை சிகிச்சை வார்டை முழுவதுமாக விடுதலைப் புலிகளுக்காக்காக தயார் செய்தோம். இதர அறுவை சிகிச்சை நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றினோம்.

நான் திருப்பத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருடன் தொடர்புகொண்டு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தேன்.

ஒரு சில நாட்களில் முதல் படகில் குண்டடி பட்ட பத்து புலிகள்  இரவில் வந்து இறங்கிவிட்டனர். அவர்களை இரவோடு இரவாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்துவிட்டார் மகேஸ்வரி!

மறுநாள் முழுதும் அவர்களுக்கு துப்பாக்கி ரவைகளை வெளியேற்றும் பணியில் டாக்டர் பாலகிருஷ்ணன் ஈடுபட்டார். வார்டில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் பல ரவைகள் அகற்றப்பட்டன. பெரும்பாலும் கைகால்கள், இடுப்பு, முதுகு ,கழுத்து போன்ற பகுதிகளில் ரவைகள் அகற்றப்பட்டன. நெஞ்சில் பட்டவர்கள் மரணம் அடைந்திருப்பர்.

அன்று இரவு டாக்டர் பாலகிருஷ்ணனுடன் வார்டுக்குச் சென்றேன். புலிகள் அனைவரும் பதின்ம வயதினர்தான். ஆனால் நல்ல உடலுறுதியுடன் இருந்தனர். அறுவை சிகிச்சைக்குப்பின் அனைவரும் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

இரண்டொரு நாட்களில் அடுத்த படகில் புலிகள் இன்னொரு பத்து புலிகள் வந்தனர். அவர்களுக்கும் ரவைகள் அகற்றப்பட்டன. ஒரு சிலருக்கு கால் எலும்புகளில் துளைத்திருந்தன. அவர்களுக்கு தக்க வகையில் சிகிச்சைகள் தரப்பட்டன.

சிறிது நாட்களில் வார்டிலிருந்த நாற்பது படுக்கைகளும் நிறைந்து விட்டன. குணமானவர்கள் திரும்ப போர்முனைக்குத் திரும்பினர். அவர்களின் படுக்கைகள் புதியவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுபோன்று போர் முடியும்வரை சில மாதங்கள் தொடர்ந்தது.

அவர்கள் அவ்வாறு தங்கி சிகிச்சை பெற்ற வேளையில் ஒரு உண்மை தெரிந்து வியப்புற்றேன். அதை ஸ்டாஃப்  நர்ஸ் அமுதா மூலம் தெரிந்து கொண்டேன்.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு வலி குறைக்கும் மாத்திரைகளை அவள் தந்த போது புலிகள் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டனராம்!

நான் அவர்களைப் பார்த்து அது பற்றிக் கேட்டேன்.

” டாக்டர் , எங்களுக்கு வலி தெரியணும். அப்போதான் நாங்கள் திரும்பி போய் இன்னும் ஆவேசத்துடன் போர் புரிவோம் .”

இது கேட்டு நான் அவர்களின் மன உறுதியையும், இனப் பற்றையும், தனி நாட்டுக்கான தணியாத தாகத்தையும், தங்களின் தலைவர் மேல் ( பிரபாகரன் ) வைத்துள்ள விசுவாசத்தையும், உயிரை துச்சமென மதிக்கும் வீர உணர்வையும், கண்டு பிரமித்துப் போனேன்!

( முடிந்தது )

 

 

Series Navigationகுகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –