சொல்லியும் சொல்லாமலும் – பாகம் இரண்டு

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

“உன் கை மெல்லியது கபிலா”

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்

கபிலனின் கை பற்றி வியந்தான்

கபிலனோ தன் காதலன் பாரியின் உடல் பற்றிச் சொன்னான்..

“உன் உடல் மா வலிமை கொண்டது பாரி”…

சொல்லியும் சொல்லாமலும்

சில ஓரின சமிக்ஞைகள்.

மெல்லியன் கபிலன் தன் மனைவி பற்றிக் கவிதை பாடவில்லை…..

வல்லியன் பாரி தன் மனைவி பற்றிக் கவிதை பாடவில்லை

ஆனால் பாரியும் கபிலனும்

கலந்த கேண்மைக்கு கவிதைகள் உண்டு…

உள்ளங்கைக்குள் மறைந்த ஒரு நெல்லிக்கனியாய்

புறநானூற்றுக்குள்ளேயே அகத்திணையைப் புகுத்திய

புலவன் கபிலனும் புரவலன் பாரியும் புவிக்குச்

சொல்லியும் சொல்லாமலும் சென்ற ஓரினக் காதல்.

களவுக் கவிஞன் கபிலன்

அவன் அகத்திணைக் கற் பனையில் ஊறிய காமக் கள்ளினை

தலைவனும் தலைவியும் தாறுமாறாய்க் குடித்தனர்.

கபிலனின் அகத்திணைத் தலைவன் ஆண்மகன் பாரி..

பாரியின் தலைவியாய்

கற்பனையில் வந்தது கபிலனே எனச்

சொல்லியும் சொல்லாமலும் ஒரு

ஓரினக் காதல்.

பறம்புமலையோன் பாரியை

கபிலன் காதலித்து இருந்ததால்தான்

அவன் அகத்திணை முழுதிலும் பெரும்பாலும்

குறிஞ்சியாகவே பூத்துக் குலுங்கினான்.

மதுரையிலே பிறந்த கபில மல்லிகை மொட்டு

பறம்பு மலைக்குப் போய் குறிஞ்சிப்பூவாய் மலர்ந்த கதையில்

சொல்லியும் சொல்லாமலும் ஒரு

ஓரினக் காதல்.

நின்னோடு உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே என

பெண்ணையாற்றின் முன் வடக்கிருந்த கபிலன்..

பெண்மையின் அடையாளம்.

பாரி பாரி என்று பல ஏத்திப் பாடி

அம் மாரியின் காதலில் மயங்கிய கபிலன்

சொல்லியும் சொல்லாமலும் சென்ற ஒரு ஓரினக் காதல்.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையைப் பிரிந்த துயரில் பாரியின் மகளிர்..

அப்போது காதலன் பாரியைப் பிரிந்த கபிலனின் துயரினைச்

சொல்லாமல் சென்றதை

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலாவது

நாம் புரிந்து கொண்டோமா? ஓரினக் காதல் அறிந்து கொண்டோமா?

சங்க காலப் பாடல்களின் சொந்தக்காரர் எனச்சொல்லி

தத்தம் சுயநலத்திற்காய்…

இடைசெருகல் பல செய்த ஆண் வர்க்கம்

ஓரினக் காதலை ஒரேயடியாய் மறைத்து விட்டது.

பாரி கபிலனின் ஓரின நட்பு பாடையோடு போனது.

குறிஞ்சிப் பூவில் ஒளிந்திருக்கும் ஓரின வாசத்தை

ஆண் புலவனும் பெண் புலவியும் நாற்றமென மறந்தார்கள்.

சங்கக்காதல் என்றால் ஆண்பெண்ணுக்கு மட்டுமென

இறுமாப்பில் மிதந்தார்கள்.

தலைவன் தலைவி பற்றியே பேசும் புலவர்கள்…

தலைவனுக்குள் ஒளிந்திருக்கும் தலைவனையும்

தலைவனுக்குள் ஒளிந்திருக்கும் தலைவியையும்

சொல்லியும் சொல்லாமலும்

கொன்று விட்ட கதை.. கொடுமையான சோகக்கதை.

இன்று ஆயிரம் ஓரினப் பாரிக்கள்..

வடுவூரிலும் வடிவூரிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கபிலர்களோடு தாம் கொண்ட உடல் உறவின்

கதைமறைத்து வாழ்பவர்கள்..

காறித் துப்புதலுக்கு பயந்துபோய்..

இருட்டுக்குள்ளேயே ஒரு இன்ப காவியம் எழுதி

பகல் காற்றில் அதைப் பறக்க விடுபவர்கள்.

வெளியே வாருங்கள் பாரிக்களே…ஓரினக்

கவிதை பாடுங்கள் கபிலர்களே..

குறிஞ்சியில் பிறந்த ஓரினக் காதல்

முல்லையிலும் மலரட்டும். பாலையையும் சோலை ஆக்கட்டும்.

மருதம் மணக்கட்டும்.. மாநெய்தல் சிறக்கட்டும்.

வாழிய ஓரினக் காதல்.

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

Series Navigationசுசீலா பெரியம்மாசொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று