சோப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 15 in the series 23 அக்டோபர் 2016

 

ஸ்ரீராம்

அந்த கடைக்குள் வெண்ணிலா நுழைந்தபோது அது அத்தனை சிறிய கடையாக இருக்குமென்றோ, அதிலும் ஓர் நகைக்கடையாக இருக்குமென்றோ அவள் நினைத்திருக்கவே இல்லை. வீட்டு வேலை என்று தான் அழைக்கப்பட்டிருந்தாள். அதுதான் அவளுக்கும் வழக்கம்.

வெண்ணிலா புரியாமல் பார்க்க, தினக் லால் பேசினார்..

” நம்பள்கி கடை இது.. ஜொல்ஸ் கொஞ்சம் இருக்குது.. அதை க்ளீன் பண்ணனும்.. ” என்றுவிட்டு உள்ளே திரும்பி அகலம் குறைவான ஓர் கதவை காட்டினார். வெண்ணிலா கதவு திறந்தாள். சின்ன டாய்லர். அதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர். சோப் ஒன்றும் தாம்பாளமும் இருந்தது.

“களுவி குடுத்துடு.. இந்தா பணம்..” என்றுவிட்டு ஐந்நூறு  ரூபாய்த் தாள் ஒன்றை தந்தார் தினக் லால்.

எப்போதும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்ப்பது தான். முதல் முறையாக ஒரு கடையில். அதுவும் நகைகளை. வாழ் நாளில் கடைசியாக எப்போது குந்துமணி தங்கத்தை ஸ்பரிசித்தது என்று ஒரு கணம் யோசனை போனது. எந்த பிரதானமான நிகழ்வும் நினைவுக்கு வரவில்லை.

வேலை செய்யும் வீட்டு அம்மாக்கள் அணியும் நகைகளை ஏக்கத்துடன் பார்த்தது தான். தொட்டது கூட இல்லை. தங்கள் தொட்டு பார்க்க எப்படி இருக்கும் என்று பார்க்க வெகு நாட்களாக வெண்ணிலாவுக்கு ஒரு ஆசை. என்றாவது நிறைவேறும் என்று காத்திருந்து காத்திருந்து அந்த நொடி வரை வந்தாகிவிட்டது. கடைசியில் தொட்டுப்பார்க்க ஆண்டவன் தனக்கென அருளிய ஒரே ஒரு வாய்ப்பு , அதை கழுவும் வாய்ப்புத்தானோ என்று ஒரு கணம் தோன்றியது அவளுக்கு.

தாம்பாளத்தில் லால் கொடுத்த தங்க நகைகளை இட்டு நீர் ஊற்ற குழாயை திறக்க, உடைந்த குழாய் கட்டுப்பாடின்றி நீரை கொட்டத்துவங்க, வெண்ணிலாவின் சேலை நனைந்தது.

“கொழா லூசா இருக்குது” லாலில் குரல் உரத்து கேட்டது. அருகில் இருந்த பழைய துணியை இரண்டாக மடித்து உடைந்த குழாயில் வைத்து கட்ட, நீர் வரத்து பெருமளவு குறைந்தாலும், கொஞ்சமாக வந்து தரையை நனைத்தபடியே தான் இருந்தது. அந்த நீர் சோப்பில் தொடர்ந்து பட, சோப் சீக்கிரம் கரைந்து விடும் போலிருந்தது. அனேகம் நகைகள் இருந்தன. பெரும்பான்மை பழைய நகைகளாக இருந்தன. அக்கம்பக்கத்தினருடைய அடகு வைக்கப்பட்ட நகைகளாக இருக்குமென்று தோன்றியது.

“சோப்பு கரைஞ்சிட்டே போனா எப்படி எல்லாத்தையும் க்ளீன் பண்றதாம்?” வேலைக்காரி வெண்ணிலா கேட்டாள்.

“சம்பளம் அளந்து அளந்து தான் கொடுக்கிறது.. அதுக்கு வசதியாச்சும் செஞ்சு தரலாமில்ல” என்றாள்.

“என்னா வஸ்தி வேணும் உன்க்கு?” என்றார் நகை வியாபாரி தினக் லால்.

“சோப்பு இங்கனக்குள்ளயே வச்சிருந்தா தண்ணில நனைஞ்சு சீக்கிரம் கரைஞ்சிடுது.. ஒண்ணு நீங்க சோப்புக்கு தனியா காசு குடுங்க‌.. இல்லைன்னா சோப்பு நனையாத மாதிரி இடம் குடுங்க‌” என்றாள் வெண்ணிலா.

“க்ளீனிங்குக்கு மொத்தமா காசு குடுத்தூட்ச்சு.. இனிமே காசு நஹி.. வேலையை முடி” என்றார் லால் வாய்க்குள் பான் குதப்பியபடி.

வெண்ணிலா முறைத்தாள். லாலிடமிருந்து காசு பெயராது என்று தெரிந்துவிட்டிருந்தது. இத்தனை பெரிய நகைக்கடை வைத்திருக்கிறான். காசு என்று வந்தால் கஞ்சனாக இருக்கிறானே என்று தோன்றியது அவளுக்கு. ஒரு வேளை கஞ்சனாக இருக்கிறவனிடம் தான் காசு சேருமோ?  என்று ஒரு கணம் யோசனை வந்தது.  கடை ஆட்கள் பயன்படுத்த இருந்த‌ ஒரே ஒரு சின்ன பாத்ரூமில் எங்கும் நீராக இருந்ததால் சோப் நீரில் நனைந்து சீக்கிரம் கரைந்தது.

“தண்ணீல நனைஞ்சா ஒரு நகைக்கே நாலு சோப்பு கூட ஆவும்.. ” முனகியபடியே வெண்ணிலா கழுவிய நீரை வெளியில் கொட்டப்போகையில் சோப்பையும் நீர் படாமல் பாலித்தீன் கவரில் வைத்து எடுத்துப்போனாள். கொட்டும் இடம் ஒரு வாய்க்கால். சற்று தள்ளி இருந்தது. கொட்டிவிட்டு வர அரை மணி ஆகலாம். சின்ன கடைதான் என்பதால் கழுவ இடமே இருக்கவில்லை.

வெண்ணிலா சோப்பை கையோடு கொண்டு செல்வதை பார்த்துவிட்டு “இன்னா.. நீ சோப்பை எங்க எட்த்துட்டு போறே?” என்றார் லால்.

“உள்ளயே வச்சிந்தா தண்ணீல சீக்கிரம் கரையிது.. உன் கடை நகையெல்லாம் நான் கைக்காசு போட்டு சோப்பு வாங்கியா கழுவ முடியும்? நனையாம இருந்தாத்தான் நிறைய கழுவ முடியும்.. அதான் சோப்பை கையோட எடுத்துட்டு போறேன்.. சோப்பை வேணா நீயே வச்சிக்க… சோப்புக்கு காசு கொடு போதும்..” என்று சொல்லியவாறே சோப்பை லாலிடம் நீட்டினாள் வெண்ணிலா.

“ஆங்.. செய்..செய்..என்னா வேணா செய்… காசு நயா பைசா குட்க்க முடியாது” என்றார் லால் கண்டிப்புடன் அவளுக்கு புறமுதுகை காட்டியபடி.

வெண்ணிலாவுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் கை நீட்டி காசு வாங்கியாகிவிட்டது. வேலையை பாதியில் நிறுத்தினால் தனக்குத்தான் கெட்ட பெயர் வரும். அந்த கெட்ட பெயர் இனி வரக்கூடிய நான்கைந்து வேலைகளை மட்டுப்படுத்தலாம். அதனால் இறுதியில் நஷ்டம் தனக்குத்தான் என்று தோன்றி பேசாமல் சோப்பை கையிலெடுத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள். தாம்பாளம் முழுவதும் அழுக்கு நீர். அந்த நீரில் அவளது வியர்வைத்துளிகள் ஆங்காங்கே விழுந்தன. தனது முகத்தை அந்த அழுக்கு நீரில் ஒரு நிமிடம் பார்த்தாள். அவளது முகம் தெளிவில்லாமல் அங்குமிங்கும் ஆடியபடி இருந்தது. சற்று முன் கழுவிய நகைகள் பழைய மாடல். லாலின் மனைவியிடன் நல்ல புதிய ரக மாடல் நகைகளை பார்த்த நியாபகம் இருந்தது. லாலில் மனைவி எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?

தனக்கும் லாலின் முதல் மகனுக்கும் ஒரே வயதுதான். நகையிலேயே குளிக்க வேண்டுமென்றால் லாலிற்கு மருமகளாக போக வேண்டும்.  அது நடக்குமா? வாய்க்கால் அருகே பணக்கார வீட்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். தாம்பாளத்தை வாய்க்காலில் கவிழ்க்கையில் தான் அழுக்கு நீரை வெளித்தள்ளும் தனது கரிய நிற கைகளை அவளே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். அவளின் கைகள் மீது சூரியனின் ஒளி விழுந்துகொண்டிருந்தது. தனது கரிய நிறம் அந்த சூரியனால் விளைவது என்று எண்ணிக்கொண்டாள். சற்று தள்ளி இருந்த முள் கம்பி வேலிக்கு அந்தப்பக்கம்  நூலகத்தின் ஓரம் மரத்தின் நிழல் விழுந்தது. அங்கே நின்றால், இதே கரிய நிற கைகள் கொஞ்சம் வெளுப்பாக தெரியலாமென்று தோன்றியது.

தன்னை யாரோ பார்ப்பது போலிருக்க அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சூரியனின் பேரொளி அவள் முன்னே அந்த கம்பி வேலிக்கு அந்தப்பக்கம் விழுந்தது. அந்த பேரொளி விழுந்த இடத்தில் கம்பிகளை நறுக்கும் கட்டர் வெய்யிலில் கிடந்தது. அந்த கம்பி வேலி அவளை அந்த பேரொளியில் நிற்க விடாமல் தடுத்தது. அவளுக்கு தனது கைகளை பேரொளியில் வைத்துப்பார்க்க ஆசை வந்தது. அது ஒன்று தான் அவளை பலரும் விரும்பக்கூடிய இடத்தில் வைக்குமென்று அவளுக்கு தோன்றியது. அவள் கம்பி வேலியில் இந்தப்பக்கம் நின்று கைகளை நீட்டி தன்னுடலை கம்பிகள் சேதப்படுத்திவிடாதவாறு உடலை முறுவலித்து எக்கி அந்த கட்டரை எடுக்க முயன்றாள். முடியவில்லை. கம்பி வேலி ஒரே சீராக நேர் கோட்டில் இல்லாமல் சற்றே வளைந்து நெளிந்து நீண்டிருந்ததால், வேலியின் சில இடங்கள் கட்டருக்கு மிக அருகில் சென்றன. ஆனால் காற்றின் போக்கில் அந்த கம்பி வேலி தொடர்ந்து அசைந்து கொண்டும் இருந்தது. கம்பி வேலியின் சில இடங்களை குறித்து வைத்தால் காற்றின் போக்கில் அடைகள் அசைகையில் ஏதேனும் ஒரு தருணத்தில் கட்டரை எட்டிவிடலாம் போலத்தான் இருந்தது. இரண்டொரு கம்பிகளை கால் விரலிடுக்கில் நிறுத்த இன்னும் கொஞ்சமாய் முன்னே நகர முடிந்தது. அது கட்டரை ஓரளவு எட்ட வகை செய்தது. ஆனால் முழுமையாக அல்ல.

நேரமாகிக்கொண்டிருந்தது. லால் திட்டக்கூடும். நேரத்துக்கு காரியம் நடக்கவில்லை என்று ஏசக்கூடும். உடனே கடைக்கு திரும்ப வேண்டுமென்று தோன்றியது. கைகளில் நிறம் பேரொளி பட வேண்டும். பேரொளி பட‌ கம்பி வேலி கடக்க வேண்டும். கம்பி வேலி கடக்க கட்டர் தேவை. கட்டரை எட்ட கம்பி வேலியினூடே முயற்சித்த இடத்தை விரலால் கிறுக்கி குறித்தாள் அடுத்த முறையில் நேரத்தை சுருக்க.

பேரொளி பார்த்து பெருமூச்சுவிட்டுவிட்டு லாலின் கடை நோக்கி நடந்தாள். அவள் விரலால் குறித்த இடம் விளையாடிக்கொண்டிருந்த பணக்காரவீட்டு  பிள்ளைகள் சிறு நீர் கழித்ததில் அழிந்துபோனது.

பத்து பதினைந்து முறையாவது வெண்ணிலா வாசலுக்கும் உள் அறைக்குமாய், அடகு வைக்கப்பட்ட பழைய தங்க நகைகளை கழுவிய தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு வந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் கிறுக்கி வைத்து குறிப்புகளை பணக்கார சிறுவர்களின் விளையாட்டு அழித்தது அவளை கட்டரை நெருங்க விடாமலே செய்தது. ஒரு முறை கூட அவளை நோக்கி நீண்ட அந்த பேரொளி கரங்களை அவள்  பற்றிக்கொள்ளவில்லை அல்லது பற்றிக்கொள்ள இயலவில்லை. பொறுத்துப்பொறுத்து பார்த்திருந்த பேரொளி அவளை கைவிட்டு கை நீட்டிய மனிதர்களை கவனிக்க போய்விட்டிருந்தது. வெண்ணிலா  மீண்டும் தனது வேலைக்கே திரும்பியது பேரொளியை உதாசீனப்படுத்தியது போன்றதானது.

இறுதியாய் வெளியில் சென்ற வெண்ணிலா வெகு நேரமாய் திரும்பி வராமல் போக, லால் பாத்ரூமை எட்டிப்பார்த்தார். வெண்ணிலா ஒரு தாம்பாளத்தில் நகைகளை சோப் நுரையில் விட்டிருந்தாள். சற்று குனிந்து பார்க்க அந்த நகைகளில் இரண்டை காணவில்லை.

வெண்ணிலா ஏன் சோப்புடன் வெளியே சென்றாள் என்று அப்போது புரிந்தது. கட்டரை எட்டிவிடும் கம்பி வேலிக்கு காத்திருக்கும் கால அவகாசம் அவளிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால்  சோப்புடன் வெளியே செல்ல அவளிடம் இருந்த துணிவு போதுமானதாக இருந்தது.

சோப்புக்குள் தங்க நகைகளை வைத்து வெண்ணிலா எடுத்துப்போய்விட்டதை தாமதமாக‌ அறிந்து “ஹே பகவான்!!” என்று அலறியபடியே  விழுந்தார் லால். தொலைவில் போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலி அவருக்கு கேட்டிருக்க நியாயமில்லை.

– ஸ்ரீராம்

Series Navigationவெளிச்சளிச்சம்கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *