ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்

21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்

1033219மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று அறிந்த போதும், பிரிய மனமின்றி அழுதார். சானுக்கு இரண்டு வருட கெடு வைத்தார் தந்தை. அந்த இரண்டு வருடங்களில் அவனால் வெற்றி பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவிற்கே திரும்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார்.

வெற்றி பெற இரண்டு வருடங்கள் போதவில்லையென்றாலும், தோல்வியைச் சந்திக்க அதுவே போதுமானது என்று சான் எண்ணினான். அதனால் அரை மனத்துடன் அதற்குச் சம்மதித்தான். இரண்டு வருடத்தில் சாதிக்க முடியாததை அதற்குப் பிறகு சாதித்து விட முடியுமா என்ன?

வில்லி சான் மேல் முழு நம்பிக்கையுடன் ஹாங்காங்கிற்குக் கிளம்பினான். இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி இருந்தது.

விமானப் பயணத்தின் போது தன்னுடைய கழகப்பயிற்சிக்குப் பின் கழகத்தை விட்டு வெளியே வந்த அனுபவங்கள் நினைவிற்கு வந்தன.

சீன ஒபரா மவுசு குறைய குறைய கழகத்தின் குரு, குழந்தைகளை சீன குங்பூ படங்களில் துணை நடிகர்களாக நடிக்க அனுப்பினார். அதன் முலம் கிடைக்கும் பணத்தில் மாணவர்களுக்கு சிறு தொகையை கொடுத்து விட்டு மீதி பணத்தில் கழகத்தை நடத்தி வந்தார்.

வன்மக்கலை படங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதிலும் நன்றாக ஓடியதால், ஷா சகோதரர்கள் பல படங்களை வெளியிட்டனர். அதில் குங்பூ கலைஞர்களாக கழக மாணவர்கள் பலரும் நடித்தனர். அதனால் அவர்கள் வெளியுலகத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. சிறு வயதில் கழகத்தில் சேர்ந்து வாலிப வயதையடைந்த மாணவர்கள் பலருக்கும் இந்த அனுபவங்கள், வெளியுலகத்தில் தாங்களாகவே சுதந்திரமாக வாழ முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் மூத்த மாணவன் யூன் தாய் எல்லா மூத்த மாணவர்களையும் அழைத்தான். சம்பாதிக்கும் ஒவ்வொரு 75 வெள்ளிக்கும் 5 வெள்ளி மட்டுமே குரு மாணவர்களுக்கு கொடுத்து வந்தார். அது மிகவும் குறைவு என்று தான் எண்ணியதை வெளியிட்டான். மற்ற மாணவர்களும் அதை ஒப்புக்கொண்டனர். குருவிடம் இது பற்றி பேச முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அன்று இரவே அனைவரும் குருவிடம் பேசச் சென்றனர். மாணவர்கள் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். குரு ஆரம்பத்தில் இருந்தது போல் அத்தனை கண்டிப்புடன் இருக்கவில்லை. இளைஞர்களிடம் தன் கண்டிப்பு செல்லுபடியாகாது என்று உணர்ந்திருந்தார். அதனால் 5 வெள்ளிகளுக்கு பதிலாக 35 வெள்ளிகளைத் தர ஒப்புக்கொண்டார்.

கழகத்தில் பெற்ற பயிற்சி வேறெந்தப் பயிற்சிக்கும் ஈடாகாது என்று இன்றும் ஜாக்கி நினைவு கூர்வார். வெளியுலகத்தை மாணவர்கள் அறிய அறிய, ஒவ்வொருவராக வெளியே செல்ல ஆரம்பித்தனர். குழுவாகத் செய்ய எதுவும் இருக்கவில்லை. விழாக்கள், திருமண விழாக்கள், லெய் யுன் கேளிக்கை பூங்காவின் அரங்கம் என்று பல இடங்களில் நடத்தப்படும் ஒபரா நிகழ்ச்சிகள் மறைய ஆரம்பித்தன. மற்ற ஒபரா பள்ளிகளும் மூடப்பட்டு வந்தன. அதனால் அத்துடன் அவர்கள் மட்டிலும் ஒபரா பயிற்சி, ஒபரா வரலாறு முற்று பெற்றது என்றே சொல்லலாம்.

ஒபரா பயிற்சி பெற்றோர் அதிக அளவில் வெளியே வர வர, வன்மக்கலைஞர்களிடையே போட்டி அதிகமானது. அதனால் படங்களில் நடிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தருவது குருவுக்கும் குதிரைக் கொம்பானது.

குருவிற்கு எவ்வளவு தான் நன்றிக்கடன் பட்டிருந்தாலும், வெளியே சென்று வாழ்வது தனக்கும் நலம் பயக்கும் என்று சானுக்குத் தோன்றியது. ஏழு சிறிய நற்பேறுகள் குழுவிலிருந்த மாணவர்கள் பலரும் விட்டுச் சென்றிருந்தனர். சான் மட்டும் ஒப்பந்தம் காரணமாகவும் குருவிடம் கொண்டிருந்த விசுவாசம் காரணமாகவும் அவருடன் கழகத்தில் இருந்து கொண்டிருந்தான். ஒரு நாள் சானும் தன் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றி எண்ணி ஒரு முடிவுக்கு வந்தான்.
குருவிடம் சென்றான். சுற்றி வளைக்காமல் தன் அபிப்பிராயத்தைக் கூறினான். குரு அவனை உண்மையாகவே தன் மகனாக பாவித்த காரணத்தால் அவனைப் பிரிய விரும்பவில்லை. ஆனாலும் சான் வளர்ந்துவிட்ட நிலையில், அவனது விருப்பத்திற்கும் மதிப்புக் கொடுக்க எண்ணினார். சானிடம், “மனம் முடிவு செய்த பின் உடல் அதை ஏற்று நடக்கத்தானே செய்யும். நல்லபடியாகச் சென்று வா”, என்று வாழ்த்தி அனுப்பினார். ஒப்பந்தம் முடிவு பெறவில்லையென்றாலும், தன்னால் சம்பாதிக்க முடியும் என்ற தைரியத்தில், வெளியே செல்ல அனுமதி கேட்டு அதில் வெற்றியும் பெற்றான். குருவின் சம்மதம் பெற்றதும் சுதந்திரப்பறவையானான்.

இந்த விசயத்தை ஆஸ்திரேலியாவிலிருந்த தன் பெற்றோரிடம் தொலைபேசியில் கூறினான். சொன்னதுமே, அவனைத் தங்களுடன் வந்து இருக்குமாறு அவனது தந்தை கூறினார்.

“கொங் சாங்.. உனக்கு இங்கே பிடிக்கும். உனக்கு வேலை வாங்கிக் கொள்ளலாம். வசதியான வீட்டில் வாழலாம்” என்றார்.

பேசுவது தெளிவாகக் கேட்ட போதும், அவர் சொன்ன விசயம் பிடிக்காததால், “சரியாகக் கேட்கவில்லை” என்று சாக்கு சொன்னான்.

பிறகு, “நான் அங்கே வர மாட்டேன்..” என்றான் முடிவுடன்.

“கழகத்தில் உன் ஒப்பந்தம் முடிந்தது. ஒபரா நிகழ்ச்சிகளுக்கு அங்கு எந்த வரவேற்பும் இல்லை. நீயாக அங்கே எப்படிச் சமாளிக்க முடியும். இங்கே ஆஸ்திரேலியாவில் நிறைய வேலை இருக்கிறது. பிடித்ததைச் செய்யலாம்”

“நான் இங்கு இப்போது வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் திரைப்படத்தில் ஸ்டண்ட் கலைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறேன்”

“அதில் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்.. சொல்..”

சான் அது பற்றி சற்றும் யோசித்ததில்லை. கையில் இதுவரை கிடைத்த பணத்தில் விரும்பியதை வாங்கிச் சாப்பிட மட்டுமே முடிந்தது. தங்குவது, ஆடைகள் அனைத்தையும் குரு பார்த்துக் கொண்டார். தந்தை சொன்னதும் தான் அது பற்றி யோசித்தான்.

“உன்னால் வாழ்க்கையை கஷ்டமில்லாமல் நடத்த முடியாது..” என்றார் தொடர்ந்து.

வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன், “முடியும் அப்பா.. முடியும்” என்று சொன்னான். பேசிக்கொண்டே இருக்கும் போதே, தந்தையிடம் எப்படிப் பேசினால் சம்மதம் பெறலாம் என்றும் யோசிக்கலானான். அப்போது திடீரென ஒரு யோசனை தோன்றியது.

“என்னை ஒரு திரைப்படக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நான் எல்லா நேரமும் அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்” என்று ஒரு பொய்யைக் கூறினான்.

தந்தையை மடக்க இதுவே சிறந்த வழியாகத் தோன்றியது. மறுமுனையில் அமைதி. தந்தை உயிரே போனாலும், ஒப்பந்தம் தவறாத குடும்பத்தில் வந்திருந்ததால், அரைமனதுடன் சான் ஹாங்காங்கிலேயே தங்க ஒத்துக்கொண்டார்.

“எவ்வளவு நாள் ஒப்பந்தம்?”

“இரண்டு வருடங்கள் அப்பா..”

“அப்போ இந்த இரண்டு வருடங்கள் எங்கே தங்கப் போகிறாய்?”

தந்தை சரியான கேள்வியைக் கேட்டு மடக்கினார். கழகத்தில் இனி தங்க முடியாது. அப்படி குருவிடம் அனுமதி பெற்றுத் தங்கினாலும், சில மாதங்களிலேயே குரு அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவு செய்து விட்டபடியால், அங்கும் தொடர்ந்து தங்க முடியாது. என்ன செய்வது? பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான்.

“ஒப்பந்தத்தை மீறுவது மோசமான செயல். அதை விடவும் என் மகன் தெருவில் வளர்வது மோசமானது..” என்றார் தந்தை.

அவர் தன்னை ஹாங்காங்கில் தங்க விடாமல் ஆஸ்திரேலியா வர வைக்க வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்கிறார் என்று சானுக்குத் தோன்றியது. அவர் பேசுவதைக் கேட்க அவன் விருப்பமில்லாமல் தொலைபேசியைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவர், “வேறு வழியில்லை.. உனக்கு இருக்க ஒரு வீட்டை வாங்கிக் கொடுப்பதைத் தவிர..” என்று முடித்தார்.

அவர் என்ன கூறினார் என்பதை சரியாக கவனிக்காததன் காரணத்தால், “ஆனால் அப்பா.. நான் ஆஸ்திரேலியா வந்து.. “ என்று இழுத்தான். அதைச் சொல்லும் போது தான் அவர் கூறியது புரிந்தது.

உடனே, “அப்பா.. தொடர்பு சரியாகயில்லை. என்ன சொன்னீர்கள்? வீடா.. எனக்கா?” என்றான் ஆச்சரியத்துடன்.

“ஆமாம்..”

“உண்மையாகவா?”

“உண்மையாக.. நீ கழகப் படிப்பை வெற்றிகரமாக முடித்தற்கான பரிசாக..” என்றார் மகிழ்ச்சியுடன்.

சானுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தான் கழகத்தை விட்டு வெளியே சென்றால் தங்குவதற்கு இடமின்றி தவிக்காமல், தங்க சொந்த வீடே கிடைக்கப்போகிறது. தந்தைக்கு நன்றி கூறினான்.

சான் உடனே வீடு பார்த்தான். வீடு 40000 வெள்ளி. சிறிதேயானாலும் சொந்த வீடாயிற்றே. அவன் தன் தந்தையின் பரிசை ஏற்று அங்கே வாழ ஆரம்பித்தான்.

சிறு வயதில் பள்ளி கல்லூரி வாழ்க்கையை இழந்ததை எண்ணி சான் பின்னாளில் பெரிதும் மனம் வருந்தியதுண்டு. பல்கலைக்கழகங்கள் அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பட்டம் அளிக்கும் போது அதை வெளிப்படையாகவே சொன்னதும் உண்டு. பட்டம் பெற்ற போது அவர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்பதை இந்தப் புகைப்படம் தெளிவாகக் காட்டும்.

சான் கழகத்தை விட்டு வெளியே வந்தது சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற காரணம் மட்டுமன்றி மற்றொரு காரணமும் இருந்தது.

அதற்கு ஒரு பெண்ணே காரணமாக இருந்தாள்.

ஒரு முறை, குரு, சானை ஒரு கண்காட்சியில் நடத்தப்பட்ட செய்முறை அரங்கிற்கு தேர்வு செய்து அனுப்பினார். பெய்ஜிங் ஒபராவைப் பற்றி வெளிநாட்டவர்க்கு அறிமுகப்படுத்த வேண்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அதற்காக சான் கழகத்தை விட்டுக் கிளம்பினான். பயணம் நெடியதாக இருந்ததால் பேருந்துப் பயணத்தின் போது உறங்கிப் போனான். அடைய வேண்டிய இடம் வந்தும் தூங்கிக்கொண்டே இருந்தான். ஓட்டுநர் அவன் இறங்காததைக் கண்டு, அவன் அருகே வந்து கத்தினார். பயந்து போய் அவசர கதியில் இறங்கினான். கண் முன்னால் என்ன இருக்கிறது என்று காணத்தவறி, முன்னே நின்று கொண்டிருந்த பெண்ணை இடித்துத் தள்ளிவிட்டான்.

அவன் வயதையொத்த பெண் அவள் என்பதாலும் அவன் இறங்கி வேகத்தைக் கண்டதாலும், அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு, எதுவும் கூறாமல், சுதாரித்து எழுந்தாள்.

சான் பல முறை மன்னிப்புக் கோரினான். அவள் கத்தாமல் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட விதம் அவனுக்கு பிடித்தது. அவள் அழகாகவும் இருந்தாள். மயங்கினான். நிகழ்ச்சியை மறந்தான். அவள் யார் என்று அறிய உடனே அவளைப் பின் தொடர எண்ணினான். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணும் அவன் செல்ல வேண்டிய அரங்கத்திற்குள்ளேயே சென்றாள். அவனும் பின் தொடர்ந்தான்.

வழியில் அவனை அடையாளம் கண்டவர் அவனை மேடைக்கு பின்னே அழைத்துச் சென்றார். பெண்ணைத் தொடர முடியாமல், வேறு வழியின்றி அவர் பின்னே சென்றான். எதுவும் செய்ய முடியாமல் அவளைத் தேடவும் முடியாமல் தவித்தான்.

நிகழ்ச்சி ஆரம்பமானது. அது பெண்கள் குழுவின் நிகழ்ச்சி. மேடைக்கு பின் இருந்ததால் மேடையைக் காண முடியவில்லை. இனிய குரலுடன் ஒரு பெண் மேடையின் நடுவே நின்று கொண்டு பார்வையாளர்களை நெகிழச் செய்தாள். அவளது குரலின் இனிமை கருதி, குரலுக்குரியவரைக் காண, சான் மேடையைப் பார்த்தான். பெண்ணைக் கண்டதும் அவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவன் கண்டு மயங்கிய பெண்ணே, பார்வையாளர்களையும் மயக்கிக் கொண்டிருந்தாள். அவளும் தன்னைப் போன்றே ஒபரா கலைஞராக இருந்தது அவனுக்கு பேரானந்தத்தைக் கொடுத்தது.

நிகழ்ச்சி முடிந்தும் அவளது எண்ணத்திலேயே நின்று கொண்டு இருந்தான். யாரோ அவனருகே வந்து, “என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய். அடுத்த நிகழ்ச்சி உன்னுடையது..” என்று சொன்னதும்தான் நனவுலகிற்கு வந்தான்.

தான் அன்று வாழ்க்கையிலேயே மிகச் சிறப்பான நிகழ்ச்சியைக் கொடுத்ததாக நினைவு கூர்வார் ஜாக்கி.

கழகப்பயிற்சியின் அனைத்து அம்சங்களையும் வெகு சிறப்பாகச் செய்து காட்டினான். பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்க, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தான்.

நிகழ்ச்சி முடிந்ததும், அந்த பெண்ணிடம் சென்று பேச விரும்பினான். நேரே அவளிடம் சென்று “நிகழ்ச்சி எப்படி இருந்தது?” என்று பேச்சுக் கொடுத்தான்.

“நன்றாகச் செய்தாய்..” என்று அந்தப் பெண் சொல்ல, “உன்னை விடவா?” என்று கூறி அவளைப் பாராட்டினான். அவள் எங்கு இருப்பவள் என்று கேட்டான். கௌலூன் பகுதியில் இருப்பதாக பதில் வந்ததும் ஆறுதல் பெருமூச்சு விட்டான். தானும் அந்தப் பகுதியில் வாழ்வது தன் அதிர்ஷ்டமாகக் கருதினான்.

குழுவினர் அவளை வேகமாக அழைத்துச் சென்ற போது, “ என் பெயர் யூன் லோ. உன் பெயர் என்ன?” என்று அவசரமாகக் கேட்டான். அவள், “என் பெயர் ஓ சாங்” என்று சொல்லிச் சென்றாள்.

அந்த நாள் சானுக்கு வாழ்வில் மறக்க முடியாத நாள். அந்தப் பெண்ணும் மறக்க முடியாத நபரானாள். அடுத்து வந்த நாள்களில், அவளது இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அவளிடம் சென்று பேசிப் பழக ஆரம்பித்தான். ஒரே பகுதியில் வசித்ததாலும் குருவின் இரும்புக்கரத்திலிருந்து தப்பியதாலும் தினம் சென்று சந்தித்தான்.

ஆறு மாதம் சான் மகிழ்ச்சியுடன் வளைய வந்தான். அப்போது சானுக்கு சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கு பதினைந்து நாள்கள் தோழியை விட்டு பிரிந்து செல்ல மனம் வரவில்லை. அப்போது ஓ சாங்கிற்கும் தாய்லாந்து செல்ல வாய்ப்புக் கிட்டியதால், இருவரும் பிரிந்து பயணித்தனர். அந்தப் பயணத்தின் போது சான் பிரிவுத்துயரத்தால் பைத்தியமாக அலைந்தான் என்றே சொல்ல வேண்டும். அவள் நினைவாகவே இருந்து, அவளுடன் கனவுலகிலேயே பேசினான்.

பயணம் முடிந்து, மறுபடியும் சந்தித்தது, சானுக்கு போன உயிர் திரும்பியது போன்றிருந்தது. எந்தப் படப்பிடிப்பிற்குச் சென்றாலும், பத்து மணிக்கு ஓ சாங்கைச் சந்திக்கத் திரும்பி விடுவான். ஒரு நாள் அந்தச் சந்திப்பிற்கு தடை ஏற்பட்டது. சானைச் சந்திக்க தன்னால் வர முடியாது என்றாள். ஏன் என்று சான் கேட்க, தன் தந்தை ஒரு சாதாரண ஸ்டண்ட் கலைஞனுடன் பழகுவதை விரும்பவில்லை என்று கூறினாள். மற்ற காதலைப் போன்றே அந்தஸ்து காரணமாக இவர்களது காதலும் முறிந்தது.

ஓ சாங் கூறியதைக் கேட்ட பின், அவனுக்கு தன்னையே பிடிக்காமல் போனது. தான் ஏழையாகப் பிறந்ததால் தானே இந்நிலை. சாக வேண்டும் போலிருந்தது. பிறகு ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் துணிந்தான்.

இது நடந்த பல வருடங்களுக்குப் பின், இதோ வெற்றியைத் தேடி ஹாங்காங் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

—-

Series Navigation