ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் பட்டிருக்கிறது. அதுவும் பச்சை வண்ணம்” என்றான். ‘அ’ நின்று திரும்பிப் பார்த்து “பார்வைக் கோளாறா உனக்கு? இது சிவப்பு வண்ணக் கேடயமப்பா” என்றான். ‘ஆ’ “உன் கண்களில் கோளாறு! பச்சை உனக்கு சிவப்பாகத் தெரிகிறது” என்றான். ‘அ’ “முட்டாளே! தவறாக ஒன்றைச் சொல்லி விட்டு அதைச் சரி என்று நிலை நாட்ட என்னைக் குறை சொல்கிறாயா?” என்றான். “யாரை முட்டாள் என்கிறாய்? கேடயத்தை சரியாகக் காண முடியாத நீயெல்லாம் ஒரு படை வீரன்!” என்றான். உடனே ‘அ’ “என் வீரத்தையா எள்ளுகிறாய்?” என்று கத்தியை உருவினான். “ஆ”வும் பின்வாங்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க இருவர் உயிருமே பிரிந்தது.

அற்பமான ஒரு விஷயத்துக்காக இருவரும் உயிரை விடக் கூடத் துணிந்தனர். கேடயத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு வண்ணம் இருக்கக் கூடிய சாத்தியம் அவர்கட்கு எட்டவில்லை. அகந்தை அறியாமையோடும் அற்பத்தனத்தோடும் வெளிப்படுவது கண்கூடு.

சுவையான மறுபக்கம் என்னவென்றால் மனிதனின் அற்பமான அன்றாடத் தேவைகளுக்கும், வசதிகளுக்கும், சுகங்களுக்கும் தீனி போடும் விதமாகவே பெரும்பான்மையோரின் தொழிலோ பிழைப்போ அமைந்திருப்பது. வரும்படி அதிகமான தொழிலில் பலவும் இவ்வகைப்பட்டதே. எனவே அற்பத்திற்கு சேவை செய்து மதிப்புடன் நடமாடும் தேர்வோ கட்டாயமோ உள்ளவர் ஒரு புறம். மறுபுறம் கலைகள், இலக்கியம், ஆன்மீகத் தேடல் என்று துவங்கி அற்பங்களின் மூச்சு முட்டும் சூழலில் தன் அசலைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடி உதாசீனங்களையும் நிராகரிப்பையும் விழுங்கப் பழக இயலாது அவஸ்தைப் படும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு சிறுபான்மையானவர்.

அற்பமானவற்றின் முடிவுப் புள்ளியில் தான் ஆன்மீகம் தொடங்குகிறது. அற்பமானவற்றுக்கும் தேடிப் பிந்தொடரும் அளவு உன்னதமானவற்றிற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையானது. தேடல் திசை மாறாது ஓயாது வழிநடத்தும் கொடுப்பினை உள்ளோருக்கு புற உலகம் பெரிய சிறையாகிறது. தேடலின் மேன் நிலையில் ஏனையரை இளப்பமாகவோ தனது எதிரியாகவோ நினைக்காது ஒரு தனிமையைச் சுமந்தே ஜீவிப்பது சாத்தியமாகிறது. அதற்கும் அப்பாற்பட்ட ஆழ்ந்த புரிதல் சித்தித்த நிலையில் முழுமையான சாந்தியும் பிரபஞ்ச இயங்குதலில் மனித இனம் அங்கமாகவும் பொருந்தாமலும் இரண்டுமாகவும் இருக்கும் முரணை அவதானித்து மெளனமாகும் பெரு நிலை சாத்தியமாகிறது. அந்நிலையில் நின்று மௌனம் கலைத்த ஜென் பாரம்பரியத்திய ஆசான்களின் பதிவுகளை நாம் வாசிக்கிறோம்.

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மஸாஹிடே” யின் கவிதைகளில் நிலவும் பறவையும் படிமங்களாவதைக் காண்கிறோம். நம்முடன் பயணிப்போரோ அல்லது சில விழுமியங்களோ நம் பற்றுக் கோடுகள் ஆகின்றனர். நம் வாழ்க்கையின் நிலைப்பின் மையமாய் நம் மனதுள் அவர் நிற்பது கோபுரங்களை பொம்மைகள் தாங்குவது போன்ற ஒரு தோற்றமே. நிலவும் பறவையும் தம் நகர்வுக்கும் இருக்கும் தொலைவுக்கும் ஏற்ப நம்முள் வெவ்வேறு பிம்பங்களை வீழ்த்துகின்றனர். அவை மாறிக் கொண்டே இருக்கின்றன. நிலையின்மையே நிலையானதாய் நிதர்சனமாகிறது. நாம் அதை ஏற்க மறுக்கிறோம். எனது என்று ஏதுமில்லை என்னும் இறுதி உண்மையை ஏற்று விடலாம். பின் பிடிமானம் ஏதுமின்றி மீதி வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்னும் கேள்வி பூதாகாரமாய் நம்முள் எழுகிறது. தனிமை என்பதும் தனித்து நின்று தேடல் என்பதும் நம் திடமான முடிவைப் பொறுத்தது. ஆன்மீகம் ஒரு கும்பலின் ஒரு கூட்டத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கூட்டு நடவடிக்கையாக எப்போதுமே இருக்க இயலாது. ஒருவருக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு சாதனை அது.

பண்ணைக் கிடங்கு
எரிந்து சாம்பலானது
என்னால்
இப்போது நிலவைக்
காண இயலும்

நான் நடக்கும் போது
உடன் வரும் நிலவு
தண்ணீருக்குள் தோழன்

நிலவைப் போல
பறவை கடந்து செல்லும் போது
தண்ணீருக்கு ஒரு நண்பன்

Series Navigationகோழியும் கழுகும்…விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி