ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014
(1)
‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர் ஞானம் என்பதன்மீதான ஒரு விளையாட்டு என்றும் குறிப்பிடுகிறார். அர்த்தமற்ற விளையாட்டல்ல என்றும் குறிப்பிடுகிறார். அந்த விளையாட்டை உள்வாங்கமுடிகிறதே தவிர அப்படியே புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நின்று, நிதானித்து, தேங்கி நகர்ந்திருக்கிறேன் என்பதே உண்மை. தெளிந்து நகர்ந்தேன் என்று சொல்லமுடியாது. நாஞ்சில் நட்டிற்கே உரிய சொல்லாடல் மலையாளம் கலந்தபின் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதாகுமா? சித்தர் ஞானம் என்று ஆசிரியரே குறிப்பிட்டதால் ஒரு சில இடங்களை எடுத்த்துக்காட்ட விரும்புகிறேன். “கர்மத்துக்கும் கசண்டிக்கும் மருந்தில்லை மொதலாளீ” “ சொல்லுத சொல்லு சுகம்.சொல்லாத சொல்லோ மகாசுகம்.கட்டிப்போட்டிரும் பாத்துகிடும்”
“மானம்,காத்து,பூமி,தண்ணி, தீ…பின்ன அஞ்சும் சேந்து அஞ்சிலே வெளைஞ்ச சித்தமும், சித்தத்திலே வெளைஞ்ச சித்தும் , சித்தநாதனும் எல்லாமே. சொல்லித்தொடங்கணும், சொல்லி நிக்கணும், சொல்லாம அறியணும், சொல்லை விடணும். “
“இஞ்ச பாரும்வே ஒரோ பிராயத்துக்கும் உலகம் ஓரோண்ணாக்கும்.ஒரு வயசுக்குட்டிக்கு உள்ள உலகமில்லே ரெண்டு வயசுக்குட்டிக்கு. கரஞ்சு (2)விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமாவேய்? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு…இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்…”
அடுத்து “ ஆசான் சொல்லுவாரு, மொத்தம் ரெண்டு பூலோகம் உண்டூண்ணு ஒரு மண்புழு நினைச்சுதுண்ணுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது திண்ணு வெளிக்கெறங்கின மண்ணு. அப்படியாக்கும் கத..” இன்னொரு இடத்திலே ருசியைப்பத்திப்பேசும்போது நான் இருபது ஆண்டுகளுக்குமுன்பு சிங்கப்பூர் வானொலியில் நேயர்களோடு பேசும்போது ஒரு கேள்விகேட்டேன். தலைவாழை இலைபோட்டு அதில் பதினாறு வகையான கறிகள்வைத்து விருந்து வைத்தாலும் எது இருந்தால் அந்த உணவு ருசிக்கும்? என்று கேட்டேன். நேயர்கள் தம்விருப்பப்படி பதில் சொன்னார்கள். யாரும் சரியானப்பதிலைத் தரவில்லை. பின்பு நானே விடையைச்சொன்னேன். அதாவது ‘பசி’ இருக்கவேண்டும் என்றேன். அந்த நாளை ஞாபகப்படுத்தியது அவருடைய எழுத்து. “ ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன? அதன் தந்திரமென்ன?” இப்படி நிறைய நிறைந்த குறுநாவல். அவற்றுள் இன்னொன்று.. ‘தன் உடலெங்கும் எழுந்த உயிரை,அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதாரபிந்துவை,அதில்திகழ்ந்த நாதத்தை உணர்ந்தார்’ இதுபோன்ற சித்தர் ஞான விளையாட்டுக்களைப் படிக்க நேர்ந்தது. இதைத்தொடர்ந்து நான்கு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் விமர்சனத்திற்கு நான் எடுத்துக்கொண்ட கதை ‘களம்’.

இது கர்ணன் கதை.கர்ணன் படம் பார்த்த அனுபவம் சொல்லிக்கொள்ளாமல் தலைகாட்டியது.நடிகர்திலகத்தை நேரில் (3)காண்பதுபோல் இருந்தது. கர்ணன் படத்தைப்பார்த்து கதை எழுதப்பட்டதல்ல. கதையைப்பார்த்துப் படம் எடுக்கப்பட்டதுமல்ல. கதை மகாபாரத்த்திலிருந்து எடுக்கப்பட்டது. அதை எழுத்திலே சிறப்பாகக் கொண்டுவருவதாக இருந்தாலும், அல்லது நுட்பமாகப் படமெடுப்பதாக இருந்தாலும் எப்படி இருக்கவேண்டுமோ அப்படிப்படைக்கப்பட்டவை கதையும் படமும். படம் பார்க்காதிருந்திருந்தால் கர்ணன் மட்டுமே நம்மனக்கண்முன் தோன்றுவான். பார்த்ததால் நடிகர் திலகம் தோன்றுகிறார். ஜெயமோகனின் கதைவட்டத்துக்குள் வியூகம் அமைக்காமல் நுழைந்துவரமுடிந்த கதை இந்தக் ‘களம்’

கதையில் மகாபாரதத்தின் ஒருகாட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. கூர்மையான வசனங்கள், நேர்த்தியான சொல்லாட்சிகள், வர்ணனைகள் காட்சியைக் கண்முன்கொண்டுவந்தன. இளவரசர்களின் அரங்கேற்றக்களம் அஸ்தினாபுரத்தில் நடக்க இருப்பதை அவ்வளவுத்துல்லியமாகச்சொல்லப்பட்டிருக்கிறது!.
தர்மன்,அர்ச்சுனன், பீமன்,துரியோதனன் எப்படி உடையணிந்து வருகிறார்கள் என்ற விளக்கம் வியப்பில் ஆழ்த்தியது. அரங்கேற்றக்களமாக நாளை அமைந்தாலும் எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் என்பதைத் தர்மன் “ என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்தப்பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும்போர்க்களமாக ஆகப்போகிறது என்றும், தம்பி.. ஆயுதங்களுக்குத் தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்குப்படுகிறது. அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்க்களம் நோக்கி மெளனமாக இட்டுச்செல்கின்றன” அதற்கு அர்ச்சுனன்.. “ தத்துவத்திலிருந்து நீங்கள் கவிதை (4)நோக்கி வந்துவிட்டீர்கள் அண்ணா!” என்கிறான். தர்மன் பெயருக்கேற்றவாறு போர்கூடாதென்பதிலும், இவை விளையாட்டாகத்தொடங்கி வினையாக முடியும் என்பதிலும் தெளிவாக இருக்கின்றான். ஆனாலும் இடையே ‘எந்தப்பயிற்சியும் போர்தான்’ என்பதை அர்ச்சுனன் கூறுகிறான். தர்மன் போர்கூடாதென்பதில் தெளிவாக இருந்தாலும் தம்பிகளின் போர்த்திறன், துடிப்புடைய இளமை அவர்களைப் போர்நோக்கியே இழுத்துச்செல்வதை உணர்கிறான். தர்மன் யோசிப்பதை, மெளனம் காட்டுவதை ‘அச்சத்தில் இருக்கிறானோ’ என்பதுபோல் அர்ச்சுனனின் வசனம் வெளிப்படுகிறது. “ என் வில்லிலும் பீமனின் தோளிலும் ஐயம் கொள்கிறீர்களா அண்ணா? அர்ச்சுனனின் கேள்வி. “ஆயுதங்களை நான் அஞ்சுகிறேன் தம்பி. அவை மனிதன் மீது படர்ந்திருக்கும் பாதாளத்தின் சக்தி என்று தோன்றுகிறது” இது தர்மனின் வாக்கு. பொதுவாக ஆயுதங்கள் நம்மை வஞ்சம் தீர்க்க காத்திருப்பதாக கூறுவது உலக நடைமுறைக்கு ஏற்ற கருத்தாக, பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.ஆயுதங்களைக் கையாளுவது நாமாக இருந்தாலும், அவற்றின் வஞ்சத்தில் நாம் வீழ்ந்துவிடும் நிலை உண்டு என்ற உண்மை போரின் அபாயத்தை; கொடுமையை; தீமையைப் புலப்படுத்துகிறது. ஆனாலும் பயிற்சிக்களம் கருதி தர்மன் பெருமூச்சுவிடுவது சுட்டப்பட்டிருக்கிறது. நம்மை வெல்ல துரியோதனனால் முடியாது என்பதைத் தெளிவாக அர்ச்சுனன் தெரிந்துவைத்திருப்பதால் அதற்கேயுரிய பெருமிதம் கலந்த அலட்சியம் அவன் சிந்தையில் குடியேறிவிட்டதை நாமும் உணர்கிறோம். தர்மனும் உணர்கிறான். தர்மன் ஒரு சுற்று அதிகமாகச்சிந்திக்கிறான், இறுதிமுடிவும் அவனுக்குத்தெரிகிறது என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டியது. அதன் விளைவு தர்மன் தானே சதுரங்க ஆட்டத்தில் இறங்கிவிடுகிறான். அத்துடன் “இந்த ஆட்டம் வெளியே உள்ள மகத்தான (5)சதுரங்கத்திலிருந்து என்னை மீட்கிறது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான். எதிர்காலத்தில் சூழப்போகும் மேக இருளிலிருந்து விடுவித்துக்கொள்ள தேடும் உபாயமாக சதுரங்க ஆட்டம் தர்மனுக்கு கைகொடுக்கிறது. அடுத்தநாள் களமுற்றம் நோக்கி தம்பியர் நால்வர்சூழ செம்பட்டாடையும் இளமஞ்சள் மேலாடையும் மகர கங்கணமும் தோரணமாலையும் அணிந்து நடக்கும்போது செம்மண் விரிந்த களமுற்றம் கண்ணில்பட்டதுமே அவன் உடல் சிலிர்க்கிறது. “புதுநிலம்கண்ட புரவிபோல் அவன் தயங்கி பின்னால் நகர அர்ச்சுனன் “தலைநிமிர்ந்து செல்லுங்கள் அண்ணா,நாளை அஸ்தினாபுரத்தின் அதிபர் யாரென இன்று தெரிந்துவிடும்” என்கிறான். இருவேறு மனநிலையை
காட்சிப்படுத்துகிறார் ஜெயமோகன். களத்தில் முதலில் விகர்ணனும் மகோதரனும் கதைப்போர் செய்கிறார்கள்.அது குழந்தைவிளையாட்டாகாக்கருதப்படுகிறது. அடுத்து சகாதேவனும் துர்முகனும் வேல்போர் புரிகிறார்கள். நகுலனும்யுயுத்சுவும் வாள்போர் புரிகிறார்கள். அது “இருபாம்புகளின் சண்டைபோலிருந்தது.பாம்புகளின் நாக்குகள்போல் வாள்கள்” நகுலனைப்பார்த்து “உன் உதிரத்தைக்கவனித்த அக்கணமே நீ தோற்றுவிட்டாய்” என்று யுயுத்சு கூறுகிறான். அதுபோலவே துரோணர் “ வாளுடன் அரங்கில் நின்ற முதற்கணமே உன் தோல்வி தீர்மானிக்கப்பட்டுவிட்டது நகுலா” என்கிறார். “அவன் உன் கண்களைமட்டும் பார்த்தான். உன்பார்வையோ அவன் வாளிலிருந்தது” என்கிறார். இந்த இடத்தில் நம்மூர் பழமொழி நினைவுக்கு வருகிறது. அதாவது “முசப்புடிக்கிற மூஞ்சியைப்பாத்தா தெரியல” என்பதுதான். இதுவெல்லாம் போர்க்களத்தில் நிற்கும் நம் அசைவுகள் போட்டியின் முடிவை தெரிவித்துவிடுகின்றன என்ற அறிவை; நுட்பத்தைத் )தெரிந்துகொள்ளமுடிகிறது. அடுத்து பீமன், (6)துரியோதனன் கதைப்போர். அது காட்டில் கரிய பெருந்தசைகள் திமிறி அதிரமோதிக்கொள்ளும் கொம்பன் யானைகள்போல் அவர்கள் சுற்றிவந்தார்கள். “யானைமுகத்து மதம்போல அவர்கள் உடலிலிருந்து வியர்வை வழிந்தது” என தத்ரூபமாக வர்ணிக்கிறார் ஜெயமோகன். “புயற்காற்றில் சுழன்று பறக்கும் ஆலமரக்கிளைகள்போல அவர்களின் கரங்கள் காற்றில் வீசின.மலைப்பாறைகள்போல கதாயுதங்கள் தீப்பொறிபறக்க முட்டித்தெறித்து சுழன்றுவந்து மீண்டும் முட்டின”. என விவரித்து விளக்குகிறார்.பீமனின் சக்தியை “மழைக்கால மலையருவிபோலப்பெருகியபடியே இருந்தது” என்றும், துரியோதனனின் உள்ளிருந்து அவன் ஆத்மாவின் கடைசி உத்வேகம் விசையாகமாறி வெளிவந்தது” என்கிறார். இவற்றையெல்லாம் திருதராஷ்ரருக்கு சஞ்சயன் விளக்கிக்கொண்டிருந்தவன் நிறுத்திவட விழியற்ற மன்னன் பெருமூச்சுவிட்டு உலோக ஒலிகளைக்கேட்டுக்கொண்டிருந்ததையும் குறிப்பிடத்தவறவில்லை. பீமன்,துரியோதனன் இருவரையும் அஸ்வத்தாமா முடிவுக்குக்கொண்டுவர துரோணரின் அறிவிப்பில் தொடங்குகிறது கதையின் கரு.
துரோணர் தன்மகனைவிட ப்ரியத்துக்குரிய அர்ச்சுனனை அறிமுகப்படுத்துகிறார்.அரங்கிற்குள் வந்த அர்ச்சுனன் வில்லால் வித்தைகளைக் காட்டுகிறான்.. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஆனந்தக்கண்ணீருடன் குந்தி குந்தியிருக்கிறாள். துரியோதனன் அமைதியிழந்து கதையைச்சுழற்றியபடி நிற்கிறான். “இவனுக்கு நிகரான வில்லாளி இந்த பாரதவர்ஷத்தில் எவருமில்லையென அறிவிக்கிறேன்” என்கிறார் துரோணர். அரங்கம் அதிர்கிறது. வடக்குமூலையிலிருந்து வில்லாளி ஒருவன் சுடர் சிந்தும் குண்டலங்களும் மின்னும் கவசமும் அணிந்து அரங்கின் நடுவே வந்து நிற்கிறான். “யார் இவன்? யார் அவன்?” (7)“சூதபுத்திரனா? இளஞ்சூரியன் போலல்லவா இருகிறான்?” அரங்கம் கலகலக்கிறது. அர்ச்சுனன் கொந்தளிக்கும் மனத்தோடு பார்க்கிறான். தன்னைவிட பேரழகனை அன்றுதான் பார்க்கிறான். நாணெடுத்து தன் வித்தையைக்காட்டுகிறான். “பார்த்தா ,நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா” அழைக்கிறான். குந்திதேவி நினைவிழந்துவிடுகிறாள். அவனைப்பார்த்து “நீ யார்?உன்பெயரென்ன? உன் குலமென்ன? உன் ஆசிரியர் பெயரென்ன? கிருபர் கேட்கிறார். அவமானத்தின் எல்லைக்கே போகிறான் இளைஞன். அவன்தான் கர்ணன். “அர்ச்சுனன் பாரவர்ஷத்தின் வில்லாளியல்ல, இந்த அரண்மனையிலேயே பெரிய வில்லாளி, அவ்வளவுதான்” என துரியோதனன் துரோணரைப்பார்த்துப்பேசுகிறான்.
“அரச மரியாதை இல்லாத எவரும் இங்கு அரங்கேற முடியாது” இது தூரோணர். பீமன் “உன் குலமென்ன ,சொல்” என்கிறபோது கர்ணனின் கண்கள் எரிந்தன. மெல்லிய குரலில் கர்ணன் “ வீரர்கள் வாயால் வெற்றிபெற எண்ணுவதில்லை” என்றான். “குருநாதரே இவன் மாவீரன்.சிம்ம்ம் தன் வல்லமையாலேயே வனராஜனாகிறது.இவன் மன்னனாகவேண்டும் அவ்வளவுதானே? அங்க நாட்டுக்கு இக்கணமே இவனை மன்னனாக்குகிறேன்.” துரியோதனன் சூளுரைக்கிறான். ஏற்பாடு நடைபெருகிறது. “ இந்தக்கணம் முதல் நீ என் நண்பன்.என் உடைமைகளும்,உயிரும் மானமும் உனக்கும் உரியவை.” எனக்கட்டித்தழுவுகிறான் துரியோதனன். அப்போது கர்ணனின் தோள்களின் தகிப்பை துரியோதனன் உணர்ந்த்தாக எழுதுவது நுட்பத்தின் நுட்பம். “என் நண்பன் இதோ மண்ணும் விண்ணூம் சாட்சியாக மணிமுடி சூடுகிறான்” என்றுமணிமுடியைக் கையிலெடுக்கும்போது குதிரைலாயத்திலிருந்து குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையுடன் அதிரதன் உள்ளே வருகிறான். யார் நீ என்று கேட்கிறபோது (8)“இவர் என் தந்தை. இவரது தோள்களிலே நான் வளர்ந்தேன்” என்கிறான் கர்ணன். “குதிரைக்காரனின் மகனா நீ?” என்கிறார் துரோணர். “ஆம், இவரே என் தந்தை! கருணையே ஆண்மையின் உச்சம் என்று எனக்குக்கற்பித்த ஞானகுருவும் இவர்தான்.” என்றான் கர்ணன். உடனே கூட்டிச்செல் என்கிறார் கிருபர்.
“குருநாதர்களே,பூமாதேவி வலிமையானவனுக்குரியவள் என்று எனக்குக் கற்பித்தவர்கள் நீங்கள். இதோ அங்க நாட்டுமகுடத்தை நான் கர்ணனுக்குச்சூட்டுகிறேன். மறுப்பவர் வாட்களுடன் களம் புகட்டும்” அறைகூவினான் துரியோதனன். சில கணங்கள் களத்தைச்சுற்றி நோக்கிவிட்டு மணிமுடியை கர்ணனின் சிரத்தில் வைத்தான். மங்கலங்கள் நிகழ அங்க நாட்டு அரசனான் கர்ணன்.முதலில் தந்தையின் காலில்விழுந்து வணங்கியபோது அவர் அழுதார். இருவரும் கண்ணீரில் கலந்தனர். துரியோதனன் அறைகூவல்விடுக்க,பீமன் அதிரச்சிரித்தபடி “பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகிவிடாது சுயோதனா” என்றான். அர்ச்சுனன் தயாராகிவிட்டான்.கர்ணனும் தயாராகிவிட்டான். அதிரதன் கர்ணனின் கரங்களைப்பிடித்துக்கொண்டு இப்போது கெளந்தேயர்களுடன் போரிடலாகாது என உறுதி கேட்கிறார். அத்துடன் என்னை நீ அறிவாய் என்கிறார். “ஆம் தந்தையே, உங்களுக்கு நிகரான விவேகியை நான் கண்டதில்லை” என்கிறான் கர்ணன்.பீஷ்மர் கைகாட்ட சூரியன் மறைந்ததனால் சபை முடிந்ததென கிருபர் அறிவிக்கிறார். தர்மன் தலைகுனிந்தபடி நடக்கிறார். ‘நாம் வெற்றிபெறுவோம்’ என்று அர்ச்சுனன் கூறும்போது, ‘நாம் வெல்வோம்.சுயோதனன் சூதன்மகனை நம்பி அத்துமீறுவான். நம்மிடம் தோற்பான். ஆனால்..’ என்றான் தர்மன். அர்ச்சுன்ன அதிர்ச்சியில் நிற்க, தர்மன் “தன் அறத்தால் சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்றுசெல்வான் தம்பி” என்றான் தர்மன்.
(9)சூதன் சம்மட்டியுடன் உள்ளே வரும்போது அனைவரும் மகிழ்ந்தோம். “ஆனால் அவன் ஒரு கணம்கூட அவரை நிராகரிக்கவில்லை.அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர்சொரிந்துவிட்டார்கள்” என்கிறான் தர்மன். குனிந்த தலையுடன் செல்லும் தருமனை நோக்கி அர்ச்சுனன் சில கணங்கள் தனித்து நின்றான்.

குலத்தால் அவமானப்பட்ட கர்ணன் துரியோதனனால் மூடிசூட்டிக்கொள்ளும் தருணத்தில் தன் தந்தை சாணம்படிந்த அழுக்கு உடையுடன் தோன்றியதும் சற்றும் அலட்சியமோ, வெறுப்போ காட்டாமல் ஏற்றுக்கொண்ட தருணம் முக்கியமானது. கல்லூரியில் இன்றைக்கும் மகனைப்பார்க்க விரும்பிய தந்தையை நிராகரித்த செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அதுமட்டுமல்ல கருணையே ஆண்மையின் உச்சம் எனப்போதித்த ஞானகுரு என்றும் சொல்கிறான். பிறப்புத்தகுதியால் நிராகரிக்கப்படும்போது வளர்ப்புத்தகுதியை பெருமைப்படுத்திய கர்ணனை தேவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனமுடிப்பது கதையின் உச்சம்.
இடம்பொருள் ஏவல்கருதி பெற்றோரை அலட்சியமோ, உதாசினமோ செய்யக்கூடாது என்பது நியதியாகிறது.
சிம்மம் எப்போதும் சிம்மம்தான். போட்டியில் திறமைக்குத்தான் முதலிடம். பூமாதேவி வலிமையானவனுக்குரியவள் என பல்வேறு கூறுகளை முதன்மைப்படுத்துவது ஒரு சிறுகதையில் நிகழ்கிறது என்பது எழுத்தாளர் ஜெயமோகனின் ஆற்றலுக்கும் அறிவுக்கும் சாட்சியாகிறது.
(முற்றும்)

Series Navigation