டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14

This entry is part 21 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா…எண்டே குருவாயூரப்பா…..! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் …டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ …! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே. நீ ஒண்ணும் கெட்டுப் போகலை.  ஏதோ …அப்படி இப்படி இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு வாழற வழியைப் பாரு. அதுக்காக அதையே நினைச்சுண்டு வேறெந்த முடிவுக்கோ அல்லது  இனிமேல் கல்யாணமே  பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிண்டோ  உன் வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்காதே.

இத்தனை நடந்திருக்கு….அவனே, உன்னோட நல்லவனாட்டமா பழகிண்டு இருந்துட்டு டக்குன்னு ஒரு நிமிஷத்தில் எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொருத்திக்கு தாலியை கட்டலையா ? சூழ்நிலை….சுண்டைக்காயிலைனு..

..இதே…நீ அப்படி ஒரு காரணங்காட்டி செய்துக்க முடியமா ..?அது என்ன நியாயம் ? கொஞ்சமாவது நீ அவனோட நினைவில் இருந்திருந்தா இப்படியெல்லாம்  நடந்திருக்குமா ?இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து என்கிட்டே அவ்வளவு தைரியமா பேச நோக்குத் தான் அவ்வளவு துணிச்சல் எங்கேர்ந்து வந்தது ? அவன் சட்டைக் காலரைப் பிடித்து நாலு கேள்வி நாக்கைப் பிடுங்கறாப்பல கேட்காம, இப்படி உன்னைத் தொலைச்சுட்டு வந்து இங்க வந்து என்னை மிரட்டி உருட்டறே ? ரொம்ப நன்னாருக்குடீ நீ பண்றது.ரொம்ப நன்னாருக்கு…பெத்த வயிறு அப்படியே குளிர்றது…! சித்ராவின் குரல் ஓங்குகிறது.

இப்ப அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே நீ..?  ஐயையோ…..இப்படியாச்சே…..நான் என்ன பண்ணுவேன்னு நேரா இந்த வசந்தியை மாதிரி தற்கொலை பண்ணிக்க பீச் எங்கேன்னு  தேடீண்டு ஓடச் சொல்றயா? அவன் தான் அவனோட புத்தியை காமிச்சுட்டான்…அதைப் புரிஞ்சதுக்கப்பறமும் அவனையே நினைச்சுண்டு அவனுக்காக உயிரை விட நான் என்ன பைத்தியமா என்ன ? இல்லாட்டா…என்னை இப்படிப் பண்ணீட்டானேன்னு …அவனைப் பழி வாங்க அலையணுங்கிறியா ? அவனைப் புரிஞ்சுண்டு அவனோட சங்காத்தமே இனி நமக்கு வேண்டாம்னு நினைச்சுண்டு மனசுலேர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டு நகர்ந்து வந்துட்டேன்.

இதுக்கெல்லாம் போய் சாவாளோடீ ?
வேற எதுக்கெல்லாம் சாவாளாம் ..? .நீயே சொல்லேன்..

மானம் போறது…!

மானம் போறதுக்கெல்லாம் சாக நான் ஒண்ணும் கவரிமான் ஜாதியில்ல….கௌரி..! எதையும் எதிர்த்து நின்னு வாழப் பொறந்தவளாககும்.

ம்கும்…..இப்படி உன்னைப் பெத்ததுக்கு நான் தான் எங்கயாவது  போய் விழுந்து சாகணம் .

அவ்வளவு கோழையா நீ..! நோ….வே…! என்னைவிட பல மடங்கு தைரியமும், விவேகமும் உன்கிட்ட இருக்கு…ஜஸ்ட்…என்னை…நீ .நான் நினைச்சா மாதிரி வாழ விடு..! அது போதும் நேக்கு.

இப்ப வரைக்கும் நீ நினைச்சா மாதிரி தானே வாழ்ந்துண்டு வந்து  இங்க வந்து நிக்கறே….! இன்னும் எங்க போய் நிக்கணும்..?

மேற்கொண்டு பேசப் பிடிக்காத கௌரி மௌனமானாள். இரவின் அமைதி இருவரின் இதயத்திலும் நிறைந்தது. உறக்கமே வராமல் படுக்கையில் படுத்துக் கொண்டதும் அவரவர்  மனத்துக்குள்  கேள்விகள் எழ ஆரம்பித்தது.

அம்மா….வசந்திக்கு நல்லதா நாலு புடவைகள் வாங்கணும்….அதெல்லாம் நீ கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வரவரைக்கும் அவளையும் கொஞ்சம் பார்த்துக்கோ.

கெடக்கறது கெடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனைல வெய்யின்னு….பத்தாத குறைக்கு அவளை வேற அதான் அந்த வசந்தியை வேற என் தலைல கட்டப் போறியா ? நானே பாட்டியை கூட்டிண்டு வந்து நம்மாத்தில் வெச்சுக்கலாம்னு நினைச்சேன். அம்மாவோட மடிக்கும் ஆச்சாராத்துக்கும் இவள் இங்க இருந்தால் தோதுப்படாது..

நீ சும்மா அவளைப்  பத்தியே  சொல்லாதே. அவளும் பாவம். வசந்தி நல்ல பொண்ணும்மா. உனக்கு ஒரு பேச்சுத்துணை. பாட்டியை கொஞ்ச நாட்கள் கழித்து அழைச்சிண்டு வந்துக்கோ. இப்ப இருக்கற நம்ம பிரச்சனை கொஞ்சம் ஓயட்டும்.

இதைக் கேட்டதும் சித்ரா எழுந்து உட்கார்ந்தே விட்டாள் ….நீ    நேரங்கெட்ட நேரத்தில் லண்டனுக்குப் போய்த் தான் ஆகணுமா? நேக்கென்னமோ அது சரியாத் தோணலை. அதான் அப்பா இருக்கும்போதே ரெண்டு தடவை நீ ஆபீஸ் விஷயமா லண்டனுக்குப் போய்ட்டு  வந்தாச்சே…இன்னும் என்ன ? முன்னமாதிரி நேக்கும் உடம்பு தள்ளலை.

சரி…போகலை..உனக்காக..கான்ஸல் பண்றேன்…சந்தோஷம் தானே…?  மணி மூணாகப் போறதும்மா.  நிம்மதியாப் படுத்துத் தூங்கு.

அடுத்த சில மணி நேரங்களில் பொழுது.புலர்ந்ததும் நாள் பிறந்தது.

வழக்கம் போல விடியற்காலையில் எழுந்து பால் பாக்கெட்டை எடுக்க வாசலுக்கு வந்த சித்ரா ஆச்சரியத்தில் திகைத்தாள்.
அச்சுப் பதித்தது போல அழகான  கோலம் ‘சித்ரா குட் மார்னிங் ‘ என்று சிரித்தபடி வாசலை அடைத்திருந்தது..

வசந்தி எங்கே..? என்று சித்ராவின் விழிகள் அவளைத் தேடியது.

பின்புற வராண்டாவில் தோய்த்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள் வசந்தி.

இத்தனை சீக்கிரம் எழுந்து இத்தனை வேலைகள் நீ செய்யணுமா வசந்தி ? காப்பி சாப்பிட்டியோ …இரு கொண்டு வரேன் என்றபடி  சமையலறைக்குள் சென்றவள் அங்கும் சுடச்சுட பால் காய்த்து, டிகாக்ஷன் போட்டு வைத்திருந்ததைக் கண்டதும் , வசந்தியா….ரோபோவா..? என்று வாய்பிளந்து நின்றாள் .

அம்மா….நான் குளிச்சுபோட்டு ஈரபுடவையை கட்டிக்கிட்டுத் தான் பாலைக் காய்ச்சினேன்மா…..என்ற வசந்தியைப் பார்த்த சித்ரா இரு வரேன் என்று உள்ளே போனவள் தனது புடவைகள் உடைகளை எடுத்துக் கொண்டு வந்து இந்தா மாத்திக்கோ….தணுப்புல ஜுரம் வந்துடப் போறது…என்றவள்…..இத்தனை பாந்தமா வேலைகள் பண்றியே …உன்னைப்போயி உதறித் தள்ள எப்படி அவாளுக்கு மனசு வந்தது?
ஆயிரம் .சொல்லு…நல்லதுக்கும்…நல்லவாளுக்கும்….காலமில்லை…போ..! ஒண்ணு செய்யலாம்…நானே  உங்காத்துல இன்னைக்கு உன்னைக் கொண்டு விடவா ?

வேண்டாம்மா….அவங்க என்னைத் தேடவே மாட்டாங்க…! எனக்கு கௌரிம்மான்னா உசுரு…நான் இங்கயே இருந்துக்கறேன்மா. என்னிய  அந்த நரகத்துல கொண்டு போய் சேர்த்துடாதீங்க…வசந்தி கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்ததும்.

சரி…சரி…..இரு….கௌரி சொல்றபடியே இருக்கட்டும்.  என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து  காலைக்கடன்களுக்காக நகர்ந்தாள் சித்ரா.

ஆச்சு….வசந்தி இவர்கள் வீட்டுக்கு வந்து விளையாட்டுப் போல மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. அவள் சொன்னது போலவே அவளைத் தேடி இது வரையில் யாருமே வராதது சித்ராவுக்கும், கெளரிக்கும் ஆச்சரியம் தான்.

கௌரியும் வாக்குக் கொடுத்தது போல வசந்திக்கு “அன்பின் வசந்தம்” என்ற மழலையர் காப்பகம் ஒன்றை அவளது  வீட்டின் அருகிலேயே  ஏற்பாடு செய்து கொடுத்தாள். வசந்தி…உன்னைத் தவிர இந்தக் காப்பகத்தை வேற யாரால சிறப்பாக நடத்த முடியும் ? இது நீ தொழும் ஸ்வாமி உன்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த வரம்…என்று சொன்னதும்,,,,வசந்தி கண்ணீர் மல்க கௌரியின் காலில் விழுந்தாள். கௌரி அவளை எழுப்பி அணைத்துக் கொண்டாள் .

அதே சமயத்தில், இந்த மூன்று மாதத்தில் கௌரியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள். சித்ராவிடம்  கௌரி போடும்  நித்ய சண்டைகள், முறைப்பது, மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வது வேறு எந்த வாக்குவாதங்கள் செய்வது என்று எதுவும் இல்லாமல் மெளனமாக நாட்கள் நகர்ந்தது.

முன்பெல்லாம் கௌரி வீட்டுக்குள் நுழைந்ததும் கூடவே வீடு முழுக்க பாட்டு சத்தம் அலறும். அத்தோடு கூடச் சேர்ந்து கௌரியும் கத்திக் கொண்டிருப்பாள். மின்சாரம் இல்லாத நேரங்களில் கௌரியின் விசில் சத்தம் வீட்டின் மூலை முடுக்கில் கூட எதிரொலிக்கும். இப்போதெல்லாம் கௌரியின் சுதந்திரமான சத்தங்கள் எதுவும் கேட்காமல் வீடே வெறிச்சென்று இருப்பதைக் கண்டு சித்ரா வசந்தியிடம் அங்கலாய்த்துக் கொண்டே இருப்பாள்.

எப்படி கலகல வென்று இருந்த பொண்ணு இப்படி ஊமைக்கிளியாய் மாறிப்போய்ட்டாளே. முந்தில்லாம் எப்பவும் அந்த ரேவதியோட  ஃபோன்ல சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருப்பா…இப்ப அவளும் அமெரிக்கா போய்ட்டாளாம். என் கிட்டயும் மனசைத் திறந்து பேச மாட்டேங்கறா….எதைக் கேட்டாலும்…ம்ம்ம்ம்….ம்ஹும்…தான் பதிலா வரது. அந்தக் கடன்காரன் இப்படித் துள்ளித் திரிஞ்சுண்டு இருந்தவளை சூனியம் பிடிச்சவளா ஆக்கிட்டானே…படுபாவி…என்று  ஒவ்வொரு நாளும் மனத்துக்குள் புலம்பிக் கலங்கிக் கொண்டிருந்தாள் சித்ரா.

திடுமென ஒருநாள் வீட்டு வாசலில் புது கார் வந்து நின்றதும், யாராயிருக்கும் என்று சித்ரா கண்ணாடியை சரி செய்து கொண்டு பார்க்கவும், ஓட்டுனர் இருக்கையில் இருந்த கௌரி, இந்த கார் நான் புக் பண்ணியிருந்தேன்….இப்ப வாங்கிட்டேன்…என்று சொல்லி “இந்தா சாவி…என்று சித்ராவின் கைகளில் சாவியைத் தருகிறாள்.

எதுக்குடி இப்ப கார் நோக்கு..? அதான் ஆபீஸ்லேர்ந்து தினம் கார் வரதே….இந்த ஊரு டிராஃபிக்குக்கு..இந்தக் கார் ஒண்ணு தான் கேடு..?
சித்ரா சொன்ன எந்த வார்த்தையும் அவள் காதுவரை கூட எட்ட விடவில்லை.

எனக்குத் துணைக்குத் தான் இந்தக் கார்…. நான் எல்லாம் பார்த்துக்கறேன்…சொன்னவள்….அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

அமைதியிலும் மௌனப் போராட்டத்திலும் ஏமாற்றத்தால் ஏற்பட்ட வலியிலும் அவனை மறந்து போ மனமே….. என்று சொல்லிச் சொல்லி மனத்தைப் பழக்கிக் கொண்டிருந்தாள் கௌரி. அவள் வாங்கியிருந்த கார் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பாதுகாப்பாக, மனோ தைரியம் தருவதாகவும் உணர்ந்தாள்.

காதல் வாழ்வதைக்  காட்டிலும் காதல் தோற்கும் போது தான் அது வாழ்கிறது. ஒரு மாயை மனத்தை ஆக்கிரமித்து ஆள்கிறது…வாழ்கிறது. அதே மாயை ஒரு மனத்தைக் கொன்று சாகிறது.

மனம்  தான் தோற்றுவிட்ட அந்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல நகரத் தொடங்கிய போது தான் அவளுக்குள்ளேயே ‘அவன்’ விஸ்வரூபமாக உருவாகிக் கொண்டிருந்ததன் அடையாளங்கள் ‘அவளுக்குள்ளிருந்து’ கதவைத் தட்டியது.

கௌரி நாளுக்குநாள் பயந்தாள் ..! உள்ளுக்குள் உறைந்து போனாள் …! தன்னையே வெறுத்தாள் ….! வேலையிலும் கவனச் சிதறல்கள்…

அடுத்தது என்ன..? நாளாக நாளாக அவளது மனப் போராட்டத்துக்கு விடை தேடினாள் .

யாருக்கும் தெரியாமல் லேடி டாக்டரிடம் சென்று அவள் சந்தேகப் பட்ட விஷயத்தை ஊர்ஜிதம் செயது  கொண்டாள். ஒரு பெண் சந்தோஷப் பட வேண்டிய ஒரு விஷயம், தனக்கு மட்டும் கலக்கத்தை தரும் அவலத்தை எண்ணி நொந்து போனாள் .

மனம் சில நொடிகள் கலங்கினாலும், வசந்தி அன்று சொன்ன ‘குழந்தை’ என்ற சொல் மீண்டும் அவளுக்கு நினைவுக்கு வந்து போனது.

அம்மாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா..?.
நினைப்பதற்கே உள்ளுக்குள் பயம் கவ்வியது. ஊரைக் கூட்டுவாள்….ஒப்பாரி வைப்பாள்.

ஒருவேளை கார்த்திக்கு தெரிஞ்சால்…..?
எந்த விஷயமும் இல்லாத போதே அவளிடம் அந்த கடிதத்தை காட்டி முடிச்சுப் போட்டுப் பேசியவன், இப்போது ‘இது’ தெரிந்தால் அவன் என்ன சொல்வான்? என்று நினைக்கும் போதே அவள் இதயத்தை திராவகத்தால் நனைத்து எடுத்தது போல துடித்தாள்.

வேண்டாம்….அவனுக்கு எக்காரணம் கொண்டும் இதைத் தெரியப் படுத்த மாட்டேன்..திஸ் இஸ் காட்ஸ்
கிஃப்ட்…ஐ வில் கிவ் பெர்த்….! தீர்மானம் செய்து கொண்டாள். ஆனாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டிய நேரம் இப்ப  வந்தாச்சு. சொல்லிடு..சொல்லிடு என்று அவளது உள் மனது பச்சைக் கொடி காண்பித்தது. எப்ப சொல்லப் போறே…? கேள்வி நாவின் நுனியில் காவல் கிடந்தது.

அந்த நேரத்துக்காக காத்திருந்தவள்…..அடுத்த நாள் காலை காப்பி குடித்து முடித்தவுடன்,  அம்மா….உங்கிட்ட கொஞ்சம் பேசணம்…..

‘மலர் போல மலர்கின்ற
மனம் வேண்டும் தாயே…
பலர் போற்றிப் பாராட்டும்
குணம் வேண்டும் தாயே…
வரம் தரும் அன்னையே…
வணங்கினோம்…உன்னையே…”

காலை ஆறுமணி என்று டிவியில் வழக்கமாய் வரும் பாடல் உறுதி செய்தது. வசந்தி வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்பவாவது என்னை மதிச்சு பேசணம்னு சொல்றியே…சொல்லு…சொல்லு..எதாக்கும் சம்சயம்..?.ஆவலோடு டிவியை அணைத்து விட்டு வந்து கௌரியின் முன் ஆஜரானாள் சித்ரா.

நான் குளிக்கலையாக்கும்……முனகினாள் கௌரி.

பரவாயில்லை….அப்பவே நான் கீஸர்  போட்டாச்சு…வெந்நீர் வீணாப் போகும், நானே குளிக்கப் போறேன்..என்னவோ பேசணம்னு சொன்னியே…அது இதுதானா?

ஆமா…நா குளிச்சு மூணு மாசமாசமாச்சுன்னு சொன்னேன். நீ தான் கவனிக்கலை.

திடுக்கிட்ட சித்ரா….அச்சச்சோ…..பகவானே.….ஏண்டி இப்படி காலங்கார்த்தால எழுந்ததும் என் தலைல அக்னியை வாரிக் கொட்டறே..? பதறிவிட்டாள்.

இப்படியாகும்னு நான் நினைக்கலை…நேத்து தான் லேடி டாக்டர்ட  கன்ஃபர்ம் பண்ணீண்டேன் ..எனக்குள்ளேருந்து ஏதோ ஒரு பயம் வந்து எட்டிப் பார்க்கறதும்மா.. என்னை…அந்த பயமே பலவீனப் படுத்திடுமோன்னு பயப்படறேன்.

அந்தக் கர்மத்தை அழிச்சுடு…!

அழிச்சுட்டா மட்டும்….!

முதல்ல அந்த துரோகியோட தடயத்தை அழிச்சுடு…! அப்பறமா அடுத்ததை பத்தி யோசிக்கலாம்.

அழிக்கறதைத் தவிர்த்து வேற வழி சொல்லு..ம்மா…குரல் கம்முகிறது கௌரிக்கு.

அப்டியானா…..பெத்துக்கப் போறியா?

ஏன்….ஏன்….பெத்துக்கக் கூடாது?   எனக்கும் அவனுக்கும் இந்நேரம் கல்யாணம் நடந்திருந்தா இதே விஷயம் உனக்கு சந்தோஷமாத் தானே இருக்கும்..? இதே ஒரு சாதாரண மஞ்சள்கயிறுக்கு நீ பச்சைக்கொடி காட்டுவே…! இல்லையா..?

ஒரு தப்பை சரியாக்க விதண்டாவாதம் செய்யாதே..! நம்ம சொந்தக்காரா ஒருத்தர் விடாமல் என் மூஞ்சில காறித்துப்புவா…
கௌரியைப் பார்த்தியா முத்தல்ல டௌரி தர மாட்டேன்னு வம்புக்கு நின்னா….அப்பறம்…கல்யாணம் பண்ணிக்காமல் பிள்ளையைப் பெத்துண்டாள்னு….இதுக்கும் மேல வேறென்ன வேணம் ?  ஆத்து மானம் ஆகாயம் முட்டும் பறக்கும்…நோக்கு வேணாக் காலம் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்வரைக்கும் தான். சமூகம் இன்னும் முழிச்சிண்டு தான் இருக்கு.

ப்ளீஸ்..அதுக்காக ஒவ்வொரு வீடாக் கதவைத் தட்டி ‘இது தான் நடந்தது ‘ ன்னு சொல்லீண்டு நிக்கச் சொல்றியா? எனக்கு சரின்னு படற விஷயம் அடுத்தவாளுக்கு தப்பாத் தான் படும்…இன்க்லூடிங்  யூ ..! எனக்கு ஆயிரம் பேர் சப்போர்ட் பண்ணினா அது தான் சமூகம்…! இனிமேல் அதுவும் நடக்கும். எந்த ஒரு விஷயத்துக்கும் கண்மூடித் தனமா கூட்டம் சேர்ந்துடும்…அதுக்கெல்லாம் பயப்பட முடியாது.
என் மனசாட்சி தான் எனக்கு ஆர்மி.

ஆசையைப் பாரு..!  அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாத பட்சத்தில்  இந்த தவறை சரியா மாற்ற முடியாது.. இந்தப் பாவத்தை  எந்த கங்கையில் முங்கினாலும் கரைக்க முடியாது.

சித்த முன்னாடி நீ ‘அழிச்சுடு’ ன்னு சொன்னியே…அது தான் கரைக்க முடியாத பாவம்மா… ஆனால்….இது….அப்படியா..? நீயே சொல்லு. என்றவள் சித்ராவின் முகம் பார்த்து கேட்கிறாள்.

அம்மா….அன்னிக்கு உன் தனிமைக்கு ஒரு துணை அவசியமோன்னு  நான் தப்புக் கணக்கு போட்டேன்…ஆனால் இப்ப உணர்றேன், வாழ்க்கைத் துணைங்கறது மனசு சார்ந்த விஷயம். காலேஜ் ரூமில் பெஞ்சு மாத்தி உட்கார்ந்துக்கற மாதிரி ஈஸியான விஷயமில்லைன்னு.

மனசு ஒரு விஷயத்தை இது இத்தோட அவ்வளவு தான்னு நகர்ந்து போயாச்சுன்னா, அதுக்கப்பறம் அந்த விஷயத்துக்கு மனசுக்குள்ள பெருசா எந்த விதமான மதிப்புமே இருப்பதில்லை.  நாங்க செஞ்சது தப்பு தான். ஒத்துக்கறேன். ஆனாலும் ஒரு பூரணத்தோடு கழிந்துவிட்ட அந்த நாளுக்கு இறைவனே சாட்சி கையெழுத்துப் போட்டிருக்கும் போது..நான் ஏன் .இதைப்  ‘ பாவம்’னு  நினைச்சுண்டு கங்கையில் கரைக்க நினைக்கணம். நானும் வாழ்ந்ததற்கு சாட்சியாய் குழந்தையைப் பெத்துண்டு, என் குழந்தையோட கங்கையில் மூழ்கி புண்ணியம் தேடிக்கக்  கூடாதா ? மேற்கொண்டு பேச முடியாமல் திணறுகிறாள் கௌரி.

இவளை  ஒண்ணுமே தெரியாத சின்னப் பொண்ணுன்னு நான் தான் நினைச்சுண்டு மெத்தனமா இருந்துட்டேன்….எவ்வளவு வித்தாரம் பேசறா..பாரேன் , மனசுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரா தன்னைத் தேற்றிக் கொண்டிருக்கையில் , கௌரி தன்னிலை மறந்து மயக்கமாகிச் சரிவது கண்டு, அச்சச்சோ…என்னாச்சுடி கௌரி , வசந்தி…இங்க வா என்று குரல் கொடுத்தபடியே  தாய்மனத் தவிப்போடு ஓடிச்சென்று மகளைத் தாங்கிப் பிடிக்கிறாள்.

(தொடரும்)

Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 26-27-28ஸூ ஸூ .
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *