டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

பிரசாத்துக்கு குப்பென்று வியர்க்கிறது……முகம் கருத்து இறுகியது …இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது. கைகள் உதறலெடுக்கக் கையிலிருந்த பிஞ்சுக் குழந்தையும் சேர்ந்து அவனது நடுங்கும் கரங்களில் ஊஞ்சலாடியது.

 

கலக்கத்துடன் அவன்  மங்களத்தை ஏறிட்டுப் பார்த்து கையிலிருந்த குழந்தையைக் காட்டி….இப்ப எப்பிடி?  என்று கண் சாடையில் கேட்டவன், அப்படியே கௌரியின்  பக்கம் மெல்லமாகப் பார்வையைத் திருப்புகிறான். தன் தலை மேல் யமுனை பாய்ந்து அவனை அப்படியே அமிழ்த்துவது போல பயத்தில் உறைந்து போகிறான். காலுக்குக் கீழே பூமி நழுவுவது போலவும் தொண்டைக்குள் கோலிக் குண்டு அடைத்துக் கொண்டது போலிருந்தது. அம்மா கல்யாணியின் மரணத்துக்குப் பிறகு மரணச் செய்தியை எங்கு கேட்டாலும் கண்கள் இருண்டு விடும் பிரசாத்துக்கு..

 

 

ம்ம்ம்….வேணி தானம் முடிஞ்சது…..ரெண்டு பேருமா மெதுவா இறங்கி தடுக்கு போட்டிருக்கும் அதைப் பிடிச்சுண்டு முங்கிக் ஸ்நானம் பண்ணிண்டு  வாங்கோ…மாமி….உங்களால முடியலைன்னா சொம்பால எடுத்து ஜலத்தை மேல விட்டுக்கோங்கோ போதும்…..என்று புரோஹிதர் அவரது மிஞ்சிய சாமான்களை பையில் எடுத்து போட்டுக் கொண்டே அவசர குரலில் சொல்கிறார்.

 

நிலைமையைப் புரிந்து கொண்ட மங்களம் ..தனது  சத்தம் கேட்டு குழந்தைகள் பயந்து எழுந்து விடக் கூடாதே என்று திரும்பிக் கொண்டு பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள் ஓஃபோ…..யாராச்சும்…தேடுங்க….அந்தப் பொண்ணு தண்ணீல விழுந்து மூழ்கிட்டாங்க..! ரொம்ப நேரமாச்சு…இன்னும் வெளிலயே வரலை…..அந்தக்  குரலில் பயத்தின் எதிரொலி இருந்தது.

 

அச்சச்சோ…….! சித்ராவும் சேர்ந்து கத்துகிறாள்….என்ன சொல்றே மங்களம்……! அந்தப் பொண்ணைக் காணமா? நம்ம குழந்தைகள் எல்லாரும் உன் கிட்ட இருக்கா தானே? குழப்பத்துடன் எட்டிப் பார்க்கிறாள் சித்ரா.

 

அவளோட குழந்தையும் நம்மகிட்ட தான் இருக்கு….அவளைத்தான் காணம், கங்கையோட போய்ட்டா…….

 

என்னது? சித்ராவின் குரலில் அதிர்வு…கௌரி திடுக்கிட்டு விழிக்கிறாள்.

 

இப்பக் கத்தி என்ன பிரயோஜனம்ங்கறேன்,,,? இப்படித் தான் சிலதுகள்…பிராணனை விட இங்கே வந்துடும். இதுகள் பண்ற பாவங்களுக்குப் பாவம் இந்த கங்கை தான் அம்புட்டா அதுகளுக்கு. அதோட மூஞ்சைப் பார்த்தாத் தெரியலை…? பாவமெல்லாம் கரைஞ்சுடும்னு சிலபேர் வந்து முங்குவா. பிராணனை விடணும்னே இப்படி சிலர்…இங்க இது சகஜம் தான். கர்மம் தொலைஞ்சது…..யாரு தேடுவா.?  தேடினாக் கிடைக்கற ஆழமா இது…..? அம்பது அறுபதடி ஆழம்  கீழே அப்படியே இழுத்துண்டு போகும்…! போட்டும் விடுங்கோ….புண்ணியம் தான். என்ன கஷ்டமோ? நீங்க ஜாக்ரதையா தலை முழுகிட்டு  வாங்கோ….என்றவர்…இவா குளிச்சாச்சுன்னா அவ்ளோதானே…..திரும்பிடலாம் இல்லையா? என்று படகை ஏறக்கட்டுவதில் குறியாய் இருந்தார் அவர்.

 

பார்த்துப் பார்த்துக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன பிராணன் இந்த பிராமணன்…என்று நினைத்த சித்ரா கௌரியைப் பார்க்கிறாள்….அந்தப் பார்வையில் பாரு….இவாளோட ஏளனத்தை…? என்பது போலிருந்தது.

 

என்ன மாமா…. இப்படிப் பேசறேள்….? அதிர்ந்தாள் கௌரி…! ஒரு பொண்ணு விழுந்திருக்கா…! நீங்க இப்படி வியாக்கியானம் பண்றேளே..!

 

நேரமாறது…..உங்களுக்குத் தெரியாது….படகுக்குப் பணம் கொடுக்கணம்….இல்லாட்டா மீட்டர் ரீடிங் மாதிரி ஏறிண்டே போகும்…இதுக்கே ஆயிரம் ரூபாய்…தெரியுமோன்னோ …சீக்ரம் ஆகட்டும்..! இதெல்லாம் தற்கொலை கேசு…என் வாயால சொல்ல வேண்டாம்னு பார்த்தேன். நான் தான் அப்பவே சொன்னேனே….நீங்க கேக்கலை..!ம்ம்…ம்ம்…என்று குரலாலேயே அவசரப் படுத்தினார். காசில…பிரயாகைல …கயால…ஹரித்துவார்ல காசில்லாதவாளுக்கு ஒரு சாண் இடமில்லை….! உங்கள மாதிரி இங்க வரவாள நம்பித்தான் கொத்துக் கொத்தா பண்டாக்கள்…..பத்து ரூபாயை எடுத்து உயரக் காட்டி நீட்டுங்கோ….அப்போங் காணும் புரியும்……அத்தப் புடுங்க எங்கேர்ந்தேல்லாமோ புத்தீசல் மாதிரி கை நீளும்…! ம்கும்….! காசுக்கு இருக்குற மதிப்பு  காசிக்குக் கூடக் கிடையாது. அவர் பாட்டுக்கு தனக்குத் தெரிந்ததைச் சொல்லும் சந்தர்ப்பமாக நினைத்துப் பேசி பெருமையுடன் சித்ராவை ஒரு பார்வை பார்த்து, என்ன மாமி…நான் சொல்றது சரி தானே…? என்கிறார்.

 

அது சரி…..இப்ப என்னவாக்கும் பண்றது? குழந்தையை வேற எங்க கிட்ட கொடுத்துட்டு…அந்தப் பொண்ணு இப்படி பண்ணித்தே…! யாரோட பொண்ணோ ……யாரோட பொண்டாட்டியோ…இப்படி விழுந்து செத்துப் போச்சே,,,,,.சித்ரா வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறிக் கொண்டிருந்தாள்.

 

ஏம்மா…சித்த வாயை மூடிக்கோயேன். எல்லாரும் பதட்டத்தில் இருக்கோம்…நீ அதுக்குள்ள இப்படிப் பேசிடாதே….வந்துடுவா…என்கிறாள் கௌரி.

 

அதற்குள் பக்கத்திலிருந்த சிலரின் சலசலப்பு…..விழுந்தால்லாம்…..பொழைக்க முடியாது…..பெரிய பெரிய முதலைகள் இருக்கும்…..இந்நேரம் அவ்ளோதான்….பொணமாக் கூட மிதக்க முடியாது. ஒரு படகோட்டி சத்தமாகச் சொல்லிவிட்டு…எல்லாரையும் கலைந்து போகச் சொல்லுங்க பண்டிட்ஜி…ன்னு அங்கிருந்தே கத்துகிறான்.

 

அங்கிருந்த பண்டாக்களும்….ஹாங் …ஹாங் ….கீலே முத்லே நிற்யா இருக்கு, உள்ளே விலுந்தா பொளிக்க முடியாத்…நீங்க படகு திருப்புங்கோ…

 

பிரசாத்துக்கு எல்லாமே புரிந்தது..கடைசியா அவள் கை தொழுது, என்ன வார்த்தை…சொன்னாள் …நான் அதற்கு தான் என்ன பதில் சொன்னேன் என்றெல்லாம் யோசிக்கலானான்.! கௌரி….ப்ளீஸ்…விடுங்க…வாங்க, நாழியாகுது…நாம அங்க போய் பேசிக்கலாம். என்கிட்டே இந்தக் குழந்தையைக் குடுத்துட்டு நீங்க பார்த்துக்கங்கன்னு கையெடுத்துக் கும்பிட்டுச்  சொல்லிட்டுத் தான் போனாங்க. அவங்க ஒரு முடிவுல தான் நம்மளத் தேர்ந்தெடுத்து உதவி கேட்டிருக்கணம். நமக்குத் தான் அது தெரியலை. நாம அவங்களுக்கு உதவணும்னு நினைச்சோம்…..அவங்க வேற மாதிரி நினைச்சிருந்திருக்கணம்.

 

ஆமா….அந்தக் குழந்தை…என்ன குழந்தை பிரசாத்..?

 

பெண்…குழந்தை..பேரு கல்யாணி…!

 

என்ன சொல்றேள் பிரசாத்..? அது….நீங்க எப்போ கேட்டேள் ..?

 

அவங்க என் கிட்ட குழந்தையை தந்ததும் கேட்டுட்டேன்….என் அம்மாவோட பேரு. அவங்க தமிழ் கூட பேசினாங்க…கொச்சைத் தமிழ்.

 

சாட்சாத்……உங்கம்மா உங்ககூடவே  வந்தாச்சுன்னு நினைச்சுக்கலாம். சில விஷயம் சில காரணங்களுக்காகவே நடக்கும் தெரியுமோ…சித்ரா திடீரென சொல்லிவிட்டு, அந்தக் குழந்தையை இந்தச் சொம்புத் தண்ணீல லேசா ப்ரோஷணம் பண்ணிட்டு கங்கை கொடுத்ததா நினைச்சு நீயே உங்க  பொண்ணா எடுத்து வளர்த்துக்கோங்கோ…..என்கிறாள்.

 

பிரயாகை க்ஷேத்திர தானங்கள் அட்சயமாகி பலன் தரக்கூடியது. பார்த்தேளா….அம்பி….கைமேல பலன்.! என்றவர் இதுக்கெலாம் கூடியும் கொடுத்து வெச்சிருக்கணமாக்கும்..மாமி சொன்னாளோல்லியோ…..! அப்படியே செய்யுங்கோ….பச்சைக் குழந்தை….அதும் பெண் குழந்தை…..கங்கா மாதாகி ஜெய்….னு சொல்லி…ஜல சமாதியான அந்தப் பெண்ணுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு இந்தக் குழந்தையை சுவீகாரம் பண்ணிக்கோங்கோ…சாஸ்த்ர சித்தாந்தப்படி கங்கையே தானம் கொடுத்தாப்பல….இந்தக் குழந்தைக்கு ‘கங்கா கல்யாணி ‘ன்னு பேரை மாத்திடுங்கோ…..’மங்களானி பவந்து’….என்று கையைத் தூக்கி ஆசி வழங்குகிறார்.

 

பிரசாத், மெல்ல தன கைகளுக்குள் நெளியும் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டே, அவர்கள் சொன்னபடி செய்ய எழுந்திருக்கிறான்..

 

இதென்ன அதிசயம்….? கௌரி தான் இதுவரை நடந்த எதையும் நம்பவே முடியாதவளாக, நம்பாமலும் இருக்க முடியாமல் அதிர்ச்சியில் மெளனமாக கையை கன்னத்தில் வைத்துத் தாங்கியபடி அமர்ந்திருக்கவும்,

 

கௌரி….ரொம்பல்லாம் கவலைப் படாதேங்கோ….இதெல்லாம் இங்க சகஜம் தான். என்று மங்களம் சொல்கிறாள்.

 

ம்ம்ம்…என்று யதார்த்தத்திற்கு வந்தவளாக, இதெல்லாம் எனக்கு ரொம்பப் புதுசா இருக்கு…நடக்கற எதையும் என்னால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியலை.

 

வாழ்க்கைன்னா அப்படித்தான்…..எதெல்லாம் நம்மால சிந்தனை செய்ய முடியாமல் இருக்கோ…அதெல்லாம் நடக்கும்போது…அதுதான் புதிரான வாழ்கையாறது. இதுக்கே நீங்க இப்படி அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கேளே, அப்போ என்னோட கதையைக் கேட்டால்…..? நானும் இந்த மாதிரியான முடிவுக்கெல்லாம் வந்தவள் தான்..என்று நிறுத்துகிறாள்..மங்களம்.

 

தப்பு தப்பு மகா தப்பு…! பெண்கள் ஏன் இவ்வளவு கோழையா இருக்கா..!தைரியமா அணுக வேண்டிய விஷயங்களை அவங்க தைரியத்தை இழந்து யோசிக்க ஆரம்பிக்கும் போது தான் இந்த மாதிரியான முடிவு முன்னுக்கு வந்துடறது. தைரியமா வாழ முடியாதுன்னு நினைக்கறவா அதை விட சாகத்துணியறதுக்குத் தான் தைரியம் ஜாஸ்தி வேணும்ங்கறதை மறந்து தொலைச்சுடறா என்ன பண்றது..கௌரி வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வருகிறாள்.

 

படகை கரை சேர்த்த படகுக்காரன், ம்ம்…எல்லாரும் இறங்குங்க….ஜாக்கிரதை…..என்று சொல்லிக்கொண்டே கௌரியைப் பார்த்து…நீ தான் அவளை இதுல வரச்சொன்னே…? என்றபடியே படகைக் கட்டுகிறான்.

 

அம்மா…..அப்போ இதுக்கெல்லாம் நானா காரணம்…? ஹெல்ப் பண்ணலாம்னு தான் நினைச்சேன்….!

 

உன் மேல தப்பேயில்லை கௌரி… இது நடக்கணம்னு இருந்திருக்கு…யாராலத் தடுத்துட முடியும்.?

 

சொன்னா சொல்லிட்டுப் போட்டும்னு விடேன்….சித்ரா சமாதானக் குரலில் கௌரியைப் பார்த்து சொல்லிக் கொண்டே,எப்போ…எங்கே….போய் சாப்பிடலாம்.? என்று புரோஹிதரைப் பார்த்துக் கேட்கிறாள் சித்ரா.

அகோரப் பசி ஒரு பக்கம், திடீரென்று நடந்த  சோகம் ஒரு பக்கம் என ஒருவரை ஒருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டே பேசாமல் நடக்கிறார்கள் .

 

 

இங்கதான் தாராகஞ்சுல ….சிவமடம் இருக்கு அங்க தான்  உங்களுக்கு மதியச் சாப்பாடு. இங்கேர்ந்து நாலு மைல் தான் . வாங்கோ…இன்னும் தம்பதி பூஜை, ஆச்சார்ய சம்பாவனை இருக்கு அது முடிஞ்சப்பறமாத் தான் சாப்பாடு….பின்னே சித்தநாழி இருந்துட்டு காசி கிளம்ப வேண்டியது தான்…நாளைக்கு அங்க தேவ ருணம்ங்கற பைரவ தண்டனையை முடிச்சுட்டு நேரா கயா கிளம்பிடணம், அங்க தான் பித்ரு ருணங்கற பிண்டப்ரதானாதிகள் பண்ணணம்..கயால  பிண்டம் போட்டு சிரார்த்தம்…கேள்விப் பட்ருப்பேளே….”பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயால  பிண்டம்”ன்னு…அதாவது, பாவம் களைவது, பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றுவது..இப்படி…இந்த ஷேத்திர மகிமையைச் சொல்லீண்டு போனால் மாளாது…கயால நீங்க பார்த்தால் அசந்து போய்டுவேள்…அங்க தான் பல்குனி நதி ஓடறது……18 மைல்  தூரம் வெறும் மணல் தான் நதியா ஓடறது…..ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சாபத்துக்குக் கட்டுப்பட்டு….ம்ம்ம்…..  சொல்லீண்டெ போலாம்….காசில சொல்றதுக்கு விஷயமா இல்லை….! பல்குனி நதி, அக்ஷயவடம் அங்கேர்ந்து முடிஞ்சா புத்தகயா பார்க்கலாம். பின்னே வாரணாசி..அத்தோட எங்க செலவு முடியறது. பெரிய லெக்சர் கொடுத்துவிட்டு இந்தாப்பா…அம்பி,,,குடிக்க ஜலம் இருந்தாக் கொடேன்…என்று நிறுத்துகிறார் அவர்.

 

எனக்கே மூச்சு வாங்கறது…..அம்மா…என்னம்மா இவர் வேற…..உன்ன மாதிரியே வாயைத் திறந்தா மூட மாட்டேங்கறார்….? நமக்கு இருக்கற மனக் கஷ்டத்துல…..இவர் வேற..நேரம் தெரியாமே….தமுக்கடிச்சுண்டு….கௌரி பல்லைக் கடித்தபடி சொல்கிறாள்.

 

வேதம் சொல்ற வாயோன்னோ……! பழக்க தோஷம்….எல்லாம் சித்த நாழி தான்…அப்பறம் பாரேன்….சாப்டதும் அக்கடான்னு ஓஞ்சு போய்டுவார்.அப்பறம் வாய் பேசாது…குறட்டை தான் பேசும்..என்று சிரிக்கிறாள் சித்ரா.

 

சும்மாரும்மா………கேட்டுடப் போறது….

 

ஒண்ணும் கேக்காது…..அவருக்கு இருக்குற காது அப்படி….கேக்காத காது…! அப்பவே நான் கவனிச்சேன். நீ  ஒண்ணு கேட்டால் அவர் ஒண்ணு சொல்வார்.. இப்ப நான்  கூட சாப்பாடு எங்கேன்னு கேட்டேன் …அவர் அதை விட்டுட்டு என்னென்னமோ சொன்னார்.

 

சரி..சரி…இப்போ நீ உன் மெயின் டோரைக்  க்ளோஸ் பண்ணு…என்று வாயைப் பொத்தி ஜாடை காட்டுகிறாள் கௌரி.

 

ம்கும்…என்று அமைதியான சித்ராவைப் பார்த்து ‘உம்’ மென்றிருந்த மங்களமும் தனை மறந்து சிரிக்கிறாள்.

 

பிரசாத் தன் கையில் நெளியும் பச்சைக் குழந்தையை விட்டுப் பிரிய மனமில்லாமல், அப்படியும் இப்படியுமாக கைகளுக்குள் அடக்கிப் பார்த்து நெஞ்சோடு அணைத்து கொள்கிறான். முகத்தில் ஒரு பெருமிதம் பொங்குவதை கௌரி கவனித்தவளாக , “அப்போ…பிரசாத் கழுத்துல ‘L’ போர்ட் மாட்டிட வேண்டியது தான் என்று சொல்லவும்…..

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் அம்மா,

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஜெயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *