டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

This entry is part 1 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்

காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும் பண்றது? பேசாமே பக்கத்து ரூம்ல இருங்கோன்னு காவேரி மாமி சொல்லிட்டா. இன்னும் எத்தனை மணியாகுமோ ? சரி…இந்த கௌரி ரொம்ப நேரமா யாரோடையோ ஃபோன்ல பேசிண்டு இருக்கா. இந்த பிரசாத்தும் மங்களமும் என்னவோ மும்முரமா பேசிண்டு இருக்காளே… அவா என்னதான் பேசிக்கறான்னு கேட்போம். சித்ராவுக்கு இருப்புக் கொள்ளாமல் மெதுவாக அவர்கள் பக்கம் செல்கிறாள்.

இங்க என்னவாக்கும் ரகசியம் நடக்கறது…? அவர்களது அருகில் வந்த சித்ரா மங்களத்தின் தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுக்கிறாள். ரெண்டு பேரும் ரொம்ப சுவாரசியமா எதைப் பத்தியாக்கும் பேசிண்டு இருக்கேள்?

குழந்தைக்கு எப்போலேர்ந்து ‘வேக்ஸினேஷன்’ கொடுக்கணும்னு கேட்டுண்டு இருந்தார்..அதைப் பத்தி தான் சொல்லிண்டு இருந்தேன் மாமி.i

இனிமேல் டெல்லி போய் தான் முதல்ல பீடியாட்ரீஷியனைப் பார்க்கணம், ஆனாலும் இது ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு, அந்தப் பொண்ணோட கடைசி வார்த்தையும், பார்வையும், என் மேல அவங்க வெச்சிட்டுப் போன நம்பிக்கையும் தான் காரணமா இருக்கலாம்.எல்லாம் என் அம்மாவோட ஆசிதான்னு நினைக்கறேன் மாமி என்று பிரசாத் சொன்னதும் சித்ரா ஆமாமாமாம் என்று தலை அசைக்கிறாள்.

மாமி நானும் கயாவுக்கு வரணமா…? இல்லாட்டா நீங்க சாப்ட்டுட்டு கிளம்புங்கோ….நான் வரலை என்கிறாள் மங்களம்.

என்ன மங்களம் இப்படிச் சொல்லிட்ட ….நீயும் கண்டிப்பா எங்களோட கயாவுக்கு வரணம்…மாட்டேன்னு சொல்லிடாதே.நீ கூட இருந்தால் ஒரு நிம்மதி, தைரியம் தான் எங்களுக்கு.

அம்மா…..ரேவ்ஸ்…மா….ரேவ்ஸ்..தான் இப்போ போன் பண்ணிருந்தா…ஆபீஸ்ல என்னோட நம்பர் வாங்கிண்டு…பேசினா. இப்போ அவள் சென்னை வந்திருக்காளாம் சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு வந்தாள் கௌரி. அவளோட குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு தெரியுமா..?

போச்சுப் போ….இப்ப அது ரொம்ப முக்கியம்..அன்னிக்கு ஒன்னைப் பொண் பார்க்கற சமயம் பார்த்து ஃபோனை பண்ணி அவ தானே தனிக்குடித்தனம் போன கோலாகலத்தைச் சொல்லி ஒரு கலாட்டா பண்ணி, வந்த சம்மந்தத்தை சரிப்பட்டு வராமே பண்ணினா….இப்ப எதுக்குப் பண்ணினாளோ ?

ஐயோ….அம்மா….அன்னிக்கு நடந்ததை அப்படியே ஞாபகம் வெச்சுண்டு இருக்கியே….அதுக்கப்பறம் அவள் ஃபாரின் போயாச்சில்லையா.
இப்போ அவா ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலையாம், டிவோர்ஸ் வாங்கிண்டு தனியா வந்துட்டாளாம்.சொல்லி சந்தோஷப்பட்டாள்.

என்னது? டிவோர்ஸ் வாங்கிட்டு சந்தோஷப்பட்டாள்னு சொல்றேளே கௌரி, ஏன் அப்படி?

அவளைத்தான் கேட்கணம் ..ஆனா, என் ஆஃபீஸ்லயும் நிறைய பேர் இப்படித் தான் அவசரப்பட்டு மேரேஜ் பண்ணிப்பா ஆறே மாசம் தான் குட்பை சொல்லிட்டு வந்துட்டே இருப்பா. கேட்டால், என்னால போராட முடியலை சாமீ..ன்னு பெரிய கும்பிடாப் போட்டுட்டு “இப்பத்தான் நான் நிம்மதியா இருக்கேன்னு” சொல்லிண்டு போயிண்டே இருப்பா.

சிலர் கல்யாணம் நடக்கலைன்னு உயிரைப் கொடுப்பா , சிலருக்கு நடந்த கல்யாணமே உயிரை எடுத்துடும்….அப்ப கல்யாணம் மட்டும் தானா ஒருத்தரோட வாழ்கையின் நிம்மதியை நிர்ணயம் பண்றது….என்ன உலகமோ என்ன மனசோ…சித்ரா சொன்னதும்,

அப்படியும் இருக்கலாம்….அட்ஜஸ்ட்மென்ட் இல்லாட்டா எங்கேயுமே குப்பை கொட்ட முடியாது பிரசாத் முடிக்கிறான்.

ஏன் நாங்கள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்? கௌரி எதிர் கேள்வி கேட்கிறாள்.

அதானே….மங்களமும் இந்த விவாதத்தில் சேர்ந்து கொள்கிறாள்.

குடும்ப அமைப்பு அப்படியாக்கும் இருக்கு…உங்க பாட்டி காலத்துலேர்ந்து…பிரசாத் வாயை மூடவில்லை..அதற்குள் கௌரி,

போதும் நிறுத்துங்கோ…இன்னும் என் பாட்டி பூட்டி காலத்துக்கெல்லாம் நாங்க போயிண்டிருக்க முடியாது…எங்க பாட்டிக்கு பத்து குழந்தைகளாம்…..வாழ்நாள் பூரா குழந்தைகள் பெத்துட்டு ஆஸ்பத்திரிலயே செத்தும் போனாளாம் எங்கப்பா சொல்வார். நல்லவேளையா அந்தக் காலமெல்லாம் ஒழிஞ்சுது.

அம்மா தாயே கௌரி…உன்னோட பெண்ணியம் கொடியை என்கிட்டத் தூக்காதே….நான் பாவம் அப்பாவி…!

இந்தக் காலத்துலயும் பெண்களுக்கு கஷ்டம் இருக்கத்தான் இருக்கு. எங்கோ சில இடங்கலில் கொஞ்சம் சுதந்திரம் இருக்கு, நான் இல்லேங்கலை..ஆனா மெஜாரிட்டி பெண்கள் கஷ்டப்படறா அது தான் நிஜம்.

பேசாமே கல்யாணமே பண்ணிக்காமல் இருந்துடலாம். எந்தக் கஷ்டமும் வராதே.

ஒரு பந்தத்துலேர்ந்து விடு பட்டால் தான் சுதந்திரம் ன்னு நினைச்சுண்டு டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டு அப்பறம் என்ன பண்ணுவா மறுபடியும் கல்யாணம் பண்ணீண்டு அதே இடத்தில் தான் மட்டிப்பா….சில வேளையில் அங்கயும் அதே இறுக்கம் தான் இருக்கும் அப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்க கத்துண்டுடுவா. வேறென்ன பண்றது அட்ஜஸ்ட் பண்ணிண்டே ஆகணும் வேற வழி..?

பிரசாத் நீங்க சொல்றது நிஜம் தான். எந்த ஆணும் முதல்ல தனக்கு விடுதலை வேணும்னு நினைக்கறதில்லை. பெண்கள் தான் தங்கள் சுதந்திரம் பற்றி அதிகம் நினைக்கறா

ஏன்னா….ஆண்கள் ஏற்கனவே சுதந்திரத்தோட தானே இருக்கா. அவாளுக்கு எதுக்கு ‘சுதந்திரத்துக்கு சுதந்திரம்’?

பேச்சு எங்கியோ போறது……கௌரி நிறுத்து…பிரசாத் போதும், போதும்,,,நிறுத்துங்கோ….மங்களம் அவாள்ளாம் சாப்டு ஏந்தாச்சா பாரேன் சித்த.

மங்களம் எழுந்து உள்ளே சென்று வருகிறாள்….இதோ இன்னும் ரெண்டு நிமிஷம் வேய்ட் பண்ணச் சொல்றா அம்மா…!

சரி…சரி…இருக்கோம்.

பெண்களுக்குத் தான் எத்தை பேரு…வாழாவெட்டி, மறுதாரம், கீப், தாசி, வேசி, பரத்தை,டிவொர்சீ ,விதவை,,அபலை,பேதை,விடோ, பெண்,அம்மா, மனைவி இது மாறிப் பட்டத்தை மட்டும் வாரிக் கொடுத்திருக்கா, இதே ஆண்களுக்கு…….இப்படியெல்லாமா இருக்கு..?

அரும்பாக்கத்துல இருந்தா என்ன? அமெரிக்கா போனா என்ன,? பெண்களோட நிலைமை கடைசில இன்னொருத்தருக்காக மட்டும் தான் போல.

கௌரி….இதெல்லாம் அனுபவிச்சப் பிற்பாடு தான் ஒரு பெண்ணுக்கே ஞானோதயம் வரும். அதுக்குப் படணம் ..பட்டவா மறுபடியும் அந்த குண்டுக்குள்ள விழமாட்டா. சிலருக்கு நினைச்சபடி வாழ்க்கை அமைஞ்சுடறது. ஆனா மோஸ்ட்லி இப்பல்லாம் இவர் சொல்றாப்பல நிறைய எதிர்பார்ப்புக்களோட ஒரு கல்யாணத்தை ஏத்துக்கறதால, அதில் ஒரு பங்கு குறைந்தால் கூட என்னவோ பெரிசா தான் எதையோ இழந்தா மாதிரி அந்த பந்தத்தையே தூக்கி போடவும் தயாராயிடறா . யாருக்கும் இங்கே நினைச்ச வாழ்கை கிடைகறதில்லை. கிடைச்ச வாழ்கையை வாழவும் தெரியலை. மங்களம் சொல்லிவிட்டு கௌரியைப் பார்க்கிறாள்.

யாரையும் நம்ப முடியலையாக்கும்….பிரசாத் சொல்லிவிட்டு மங்களத்தைப் பார்க்கிறான்.

அது எங்க காலத்துலயும் தான் இருந்தது. ஏமாந்து போறது காலகாலமா வந்துண்டு தான் இருக்கு. இருந்தும் இப்போ இன்னும் ஜாஸ்தியாயிருக்கு. இப்போல்லாம் பொண்கள் முந்தி மாதிரி இல்லை…நேரா டிவி சானலுக்குப் போயிடறா….”சொல்வதெல்லாம் உண்மை” வாய்மையே வெல்லும்” ன்னு போய் உட்கார்ந்துண்டு அவனையும் இழுத்துவெச்சு நேருக்கு நேரா ‘இப்ப நீ என்னிய கல்யாணம் பண்ணிக்கப் போறியா இல்லியாடா…” ன்னு நெத்தியடியா கேள்வி கேட்கறா தெரியுமா?

ச்சேசே…. போமா ….ஒருத்தன் ஏமாத்தறான்னு தெரிஞ்சுண்டே , மறுபடியும் அவன்கிட்டயே போய் அடாவடியா கல்யாணம் பண்ணிண்டு அந்தப் பொண்ணு பெரிசா என்னத்த சாத்திச்சுடப் போறா? ஆனந்தமா ஆரம்பிக்க வேண்டிய விஷயம் அடாவடில ஆரம்பிச்சா அத்தோட முடிவு தான் என்னவாயிருக்கும்? தெனம்….நீயா..? நானா..? தான்.இதை மனசுல வெச்சுண்டு தான் நான் கார்த்திக் எப்ப வந்தாலும் வேண்டாம்ங்கற முடிவுக்கே வந்தேன்.

இப்பக் கூட கார்த்தி எங்க ஆஃபீஸுக்கு போயிருக்கான். என்னோட புது ஃபோன் நம்பரை வாங்க. அங்கேர்ந்து எங்க ஆபீஸ் ரிசெப்ஷனிஸ்ட் எனக்கு நேரா ஃபோன் பண்ணி கொடுக்கட்டுமா? வேண்டாமான்னு? கேட்டா. நான் ஏற்கனவே இதை எதிர்பார்த்தேன்.அதான் சொல்லி வெச்சுட்டு வந்தேன். யாராயிருந்தாலும் எனக்கு கால் பண்ணி கேட்டுட்டு என் நம்பர் கொடுங்கன்னு.நான் நினைச்சது சரியாச்சு.
நான் கிளியரா சொல்லிட்டேன் கொடுக்காதேன்னு. அவன் என்ன வேணா நினைச்சுக்கட்டும்.

அடப்பாவி…இன்னும் எதுக்கு உன்னோட பேசணுமாம்..அந்தக் கடங்காரனுக்கு? பண்ணின டேமேஜ் எல்லாம் பத்தாதா?

இப்ப ரேவ்ஸ் தான் கேட்டா..உனக்கு கல்யாணம் ஆயாச்சாடின்னு? ..கல்யாணம் ஆகலை….ரெண்டு குழந்தைகளாயாச்சுன்னு சொன்னேன்….வாவ் னு வாயைப் பிளந்தா…..அவ சொல்றாம்மா…..என்ன விட நீ லக்கிடின்னு. எல்லாம் ஊர்ல வந்து சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த மங்களம் அதிர்ச்சியுடன், கௌரி…என்னால நம்பவே முடியலை…நீங்களும் இவ்வளவு ஸ்போர்டிவா எடுத்துண்டு இருப்பேள்னு.

வேற வழி? எடுத்துண்டு தான் ஆகணும். பிரச்சனையை ஃபேஸ் பண்ணணும் . பயந்துடக் கூடாது. அதான் என் பாலிசி.

கௌரி, நீங்க ஏன் பிரசாத்தைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? மங்களம் இப்படி நேருக்கு நேர் இந்தக் கேள்வியைக் கேட்பாள் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.

லேசாக அதிர்ந்தாலும், இல்லை…பிரசாத் என்ன ஊறுகாயா? பாவம் பிரசாத்…..நல்லாயிருக்கட்டும்…..எங்களுக்குள் அந்த எண்ணமே இல்லை…பளிச்சென்று சொல்லிவிட்டு பிரசாத்தைப் பார்த்ததும், அவனும் ஆமாம் மங்களம்…..கௌரி சொல்றது சரி தான். என்கிறான்.

இது தான் சரியான சந்தர்ப்பம் என்பதைப் புரிந்து கொண்ட சித்ரா, ஏன் கௌரி…நீ பிரசாத்தை கல்யாணம் பண்ணிகிறயான்னு கேட்டால் என்ன சொல்லுவே?

தர்மசங்கடமான நிலையில் மங்களம் நெளிகிறாள்.

மங்களம்…வா…எலை போடு….அவா எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடு…காவேரி மாமியின் குரல் மங்களத்தை அப்போது காப்பாற்றியது போலிருந்தது அவளுக்கு.

(தொடரும்)

Series Navigationபெண்ணுக்குள் நூறு நினைவா ?
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *