தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  

                             

பொங்கு திரிபுரம் வெந்து பொடிபட

      வந்து பொருளும்ஒரு பொருநர்கைத்

தங்கு சிலைமலை கொண்ட பொழுதுஉல

      கங்கள் தகைவதுதண்டமே.                [161]

[பொருநர்=வீர்ர்; சிலை=வில்; தகைதல்=கட்டளை இடுதல்]

      இவ்வுலகங்களைத் தம் தண்டாயுதத்தால் அன்னை அருளாட்சி செய்து வருகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் திரிபுரங்களை வெந்து பொடிபட அழித்தபோது வீரரான அவர் கையில் இருந்த வில்லாக இருந்த மேருமலைதான் அன்னையின் கையில் இருக்கும் தண்டாயுதமாகும்.

=====================================================================================

தடிந்த துரக குலங்கள் உரக

     பிலங்கள் வயிறு தழங்குமா

வடிந்த குருதி படிந்த பருதிகள்

      மட்கவரும் கட்கமே.                    [162]     

[தடிந்த=கொன்ற; துரககுலம்=குதிரைக் கூட்டம்; உரகம்=பாம்பு; பிலம்=பாதாளம்; தழங்க=இரைச்சலிட; மட்க=மழுங்க; கட்கம்=கைவாள்]

      தாருகன் என்னும் அசுரன் ஏவிய குதிரைப் படைகளை அன்னை வெட்டி வீழ்த்தியதால் பாய்ந்த ரத்தம் பாம்புகள் தங்கியிருக்கும் பாதாள லோகத்தின் வயிறு இரைச்சலிடும்படி பாய்ந்தது. அந்த இரத்த வெள்ளத்தில் தோய்ந்த

அன்னையின் கைவாளானது சூரியனின் ஒளியே மழுங்கும்படிச் செக்கச் சிவந்ததாய் இருக்கும்.

=====================================================================================

                         எறிப்ப எறிபடை நிசிசரன் சிரம்

ஒருபதும் கரம் இருபதும்

தறிப்ப ஒருசரம் விடுவதும் கடல்

      சுடுவதும் குனிசாபமே.                   [163]

[எறிப்ப=ஒளிவீச; எறிபடை=போர்க்கருவிகள்; நிசிதரன்=அரக்கன்; சிரம்=தலை; தறிப்ப=வெட்டுப்பட; குனி=வளந்த; சாபம்=வில்]

      ஒளிவீசும் படைக்கலங்களை ஏந்திய அரக்கனான இராவணன் பத்துத்தலைகளும், இருபது கைகளும், வெட்டுப்படுமாறு அம்பைச் செலுத்தியதும், கடலை வற்றச் செய்ததும், இந்த அன்னையின் கையில் உள்ள வளைந்த வில்லேயாகும்.

=================================================================================

இகலும் நிசிசரகணமும் அவுணரும்

      இடியின் மலையென மடியஎப்

பகலும் ரவிஒளி இரிய நிலவொளி

      வரிய வரும்ஒரு பணிலமே.            ]164]

[இகல்=மாறுபாடு; நிசிசரகணம்=அரக்கர் கூட்டம்; அவுணர்=அசுரர்; இரிய=கெட; வரி=வடிவம்; பணிலம்=சங்கு]

      தேவியுடன் போரிட்ட அரக்கர்களும் அசுரர்களும் இடிவிழுந்து தூள்தூளான மலைகள் போலாக, பகலிலும் ஆதவனின் ஒளிகெட்டுப் போகுமாறு, நிலவொளி வீசுவதுபோல ஒளிவிடும் தன்மையுடன் அழகிய வடிவு கொண்டதாம் தேவியின் வலம்புரிச் சங்காகும்.

=====================================================================================                        

                         இருவர் உதயமும்இருள ஒளிவிடும்

                              எனையபலர் இரணியரெனும்

                        ஒருவர்உரம் இருபிளவு படநடும்

                              உகிரி தனதொரு திகிரியே.             [165]      

[உரம்=மார்பு; உகிர்=நகம்; திகிரி=சக்கரம்]

      இப்பாடல் அன்னையின் சக்கரத்தின் பெருமை பேசுகிறது. சூரியன், சந்திரன் இருவரின் ஒளியும் மங்கி இருளாகச் செயும் தன்மை கொண்டது அதுவாகும். கீழே விழும் தன் குருதியிலிருந்தும் ஒவ்வோர் இரணியன் தோன்றிப் பல இரணியர் வருவர் என்னும் தன்மை வாய்ந்த இரணியர் பலர் வரினும் அவர்கள் மார்பை இரண்டாகப் பிளக்கும் நகமுடைய பெருமை கொண்டதாகும் தேவியின் சக்கரம்.

=====================================================================================

                        அரவின் அமளியின் அகில பணாமணி

                              அடைய மரகத மானஓர்

                        இரவி வெயில்இலன் மதியும் நிலவிலன்

                              இறைவி ஒளிவெளி எங்குமே.           [166]

[அரவு=பாம்பு; அமளி=படுக்கை; பணாமணி=பாம்பின் படத்தில் உள்ள மாணிக்க மணி; இரவி=சூரியன்]

      அன்னை பாம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறாள். அப்பாம்பிற்கு ஆயிரம் தலைகள் உள்ளன. அப்பாம்பின் படங்களில் உள்ள மாணிக்க மணிகள் எல்லாம் மரகத மணிகளாகி விட்டன. அதனால் சூரியன் ஒளி இழந்தான். சந்திரனும் தன் ஒளி குறைந்தான்; அப்படித் தேவியின் திருமேனியின் ஒளி எங்கும் வீசித் திகழ்ந்து கொண்டுள்ளது.

=====================================================================================

                        கோகனகன் நாள்பெறு கொடுங்கனகன்

                              ஆகம் இருகூறு படுகூர்

                        ஏகநக நாயகி அனந்தசய

                              னத்தினி திருந்தருளியே.               [167]

[கோகனகம்=தாமரை; கொடுங்கனகன்=கொடியவன் இரணியன்; ஆகம்=உடல்; ஏகநகம்=ஒரு விரல் நகம்; அனந்தசயனம்=பாம்புப் படுக்கை]

      இரணியன் தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரமனிடம் பெற்ற நல்ல வரத்தினாலே, அன்னை இரணியனின் உடலைத் தம் ஒற்றை விரல் நகத்தாலே இருகூறாகப் பிளந்தாள். அப்படிப்பட்ட அன்னை இங்கு இவ்விதமாகப் பாம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறாள்.

=====================================================================================

            எறிபடை வல்ல விசயை இசைகெழு தெய்வமகளிர்

                  எழுவரும் வெள்ளை முளரி இனிதுரை செல்வமகளும்

            மறிகடல் வைய மகளும் மலர்கெழு செய்யு திருவும்

                  வரஇரும் மெல்ல உரகன்மணி அணிபள்ளி அருகே.  [168]

[விசயை=துர்க்கை; இசை=புகழ்; முளரி=தாமரை; செய்ய=சிவந்த; வரஇரும்=வந்து இருங்கள்; உரகன்=ஆதிசேடன்; பள்ளி=இருக்கை]

      வெற்றி தரும் சிறந்த ஆயுதங்கள் ஏந்திய துர்க்கையும், புகழுடைய சப்த கன்னியரும், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளும், அலைகடலையே ஆடையாக உடுத்தி உள்ள நிலமகளும், செந்தாமரை மலரில் குடிகொண்டிருக்கும் திருமகளும், தாங்கள் வந்து அமர வேண்டும் எனத் தேவியின் தோழியின் தோழிப் பெண்கள் அழைக்க அவர்களும் அங்கு வந்து அமர்ந்தனர்.

=====================================================================================

            வருகதை தெய்வமகள் என்மருமகள் வள்ளி வதுவை

                  வனமகிழ்பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனிது

            ஒருகதை சொல்லு தவள ஒளிவிரி செவ்வி முளரி

                  ஒளிதிகழ் அல்லி கமழும் ஒருமனை வல்லி எனவே.    [169]

[தெய்வமகள்=வள்ளி; வதுவை=திருமணம்; தவளம்=வெண்மை; செவ்வி=அழகு; முளரி=தாமரை; அல்லி=பூவின் உள்இதழ்; மனி=இடம்;வல்லி=கொடி]

      தெய்வ மகளான என்மருமகள் வள்ளியை விரும்பி மணம் செய்துகொண்ட முருகன் மதுரையில் சமணரை வாதில் வெல்ல உள்ளதை நீ அறிவாய்; அந்தக் கதையை அழகிய வெள்ளைத் தாமரையின் ஒளிவீசும் அக இதழான மொட்டை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் கொடி போன்ற கலைமகளே சொல்வாயாக.

முருகன் திருஞான சம்பந்தராக அவதரித்துச் சமணரை வாதில் வென்றமை இங்குக் கூறப்படுகிறது.

========================================================================        

             எழுமலை சொல்லும் அசனி இளமயில் வள்ளிகணவன்

                  இறைமலை வில்லி புதல்வன் இகல்மகள் ஐயைகளிறு

            கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத

                  கதைகளில் உள்ளது அமணர் கழுமிசை கொள்வதிதுவே.  [170]

[எழுமலை=கிரவுஞ்ச மலை; அசனி=இடி; இறை=சிவன்; வில்லி=வில்லாக உடையவன்; இகல்மகள்=வலிமை வாய்ந்தவள்; களிறு=ஆண்மகன்; கழுமலம்=சீர்காழி; உய்ய=பிழைக்க]

      பறக்கும் மலையான கிரவுஞ்சம் போன்ற மலைகளையே அழிக்கும் இடியேறு வள்ளி மணாளன் மேருமலையை வில்லாகக் கொண்ட சிவனின் புதல்வன், வலிமை வாய்ந்த துர்க்கையின் மகன், எனத்திகழும் முருகன் திருக்கமலம் என்னும் பெயர் பெற்ற சீர்காழியானது புகழ்பெற அங்குத் திருஞான சம்பந்தராக அவதரித்துச் சமணரைக் கழுவில் ஏற்றிய கதையை இனி சொல்கிறேன்.

=================================================================================

Series Navigationஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்கம்பனில் நாடகத் தன்மை