தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

Spread the love

                    

                                                                                                                                  வளவ. துரையன்

 

                   என்று பேய்அடைய நின்று பூசல்இட

                        இங்கு நின்று படைபோனபேய்

                  ஒன்று பேருவகை சென்று கூறுகஎன

                        ஓடி மோடி கழல் சுடியே.               241

 

[பூசல்=ஆரவாரம்; பேருவகை=மகிழ்வு; மோடி=துர்க்கை; கழல்=திருவடி; சூடி=அணிந்து]

 

இப்படிப் பேய்கள் எல்லாம் சேர்ந்துத் தங்கள் பசித்துயர் பற்றி ஆரவாரக் கூச்சல் இட, வீரபத்திரர் படையுடன்  சென்ற பேய்களில்  ஒன்று ஓடி வந்து, ‘நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறேன் கேளுங்கள்” என்று கூறித் தேவியின் திருவடிகளில் தலைதாழ்த்தி வணங்கியது.

                  ”இரைத்த கூர்பசி உழந்த பேய்கள்!இனி

                        என்பின் வாரும்” என முன்பு சென்று

                  உரைத்ததோ அதுவும் இல்லையோ திரிய

                        யாகசாலை புக ஓடவே.                     242

 

[இரைத்த=துன்புறுத்துகிற, கூர் பசி=மிகுந்த பசி; உழந்த=வருத்திய]

 

”மிகுந்த பசியினால் வருந்தும் பேய்களே! என்னுடன் வாருங்கள்” என்று வந்த அந்தப் பேய் சொல்லிற்றோ இல்லையோ, அடுத்த நொடி எல்லாப் பேய்களும் அப்பேயைத் தொடர்ந்து ஓடின.

                  ஓடுகின்றதனை நின்றபேய் தொடர

                        ஓடிஓடி உளையைப் பிடித்து

                  ஆடுகின்ற கொடிமாட முன்றில்விட

                        ஐயை கண்டருளி அதனையே.                243

 

[உளை=தலைமுடி; முன்றில்=முன்னால்; ஐயை=காளி]

 

அப்படி, ஓடுகின்ற பேயை, அங்கு நின்றிருந்த ஒரு பேய் பின்தொடர்ந்து சென்று, அதன் முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு கொடி அசைந்தாடும் மாடக் கோயில் கோபுர வாசலின் முன் நிறுத்த, தேவி அருள் நோக்கம் கொண்டு அதனைப் பார்த்து,

===================================================================================

                  ”அஞ்சல் என்றுதிருவாய் மலர்ந்து அயனும்

                        அம்பரத்தவனும் உம்பரும்

                  எஞ்சல் இன்றிஉடன் நின்று அவிந்தபடி

                        எம்படைக்கு உரைசெய்க” என்னவே.               244

 

[திருவாய் மலர்தல்=கூறுதல்; அயன்=பிரமன்; அமபரத்தவன்=தேவேந்திரன்; உம்பர்=தேவர்; எஞ்சல் இன்றி=மீதம் இன்றி; அவிதல்=அழிதல்]

 

“பயப்படாதே” என்று, தேவி திருவாய் மலர்ந்து, பிரமனும், தேவேந்திரனும், மற்ற தேவர்களும் ஒருவர் கூட மீதம் இல்லாமல் அழிந்துபட்ட கதையை நம் படைகள் கேட்குமாறு நீ சொல்வாயாக” என்று கூறினார்

 =====================================================================================

                        காளிக்குக் கூளி கூறியது

 

                        ”பாவியார் சிறுதக்கனார் ஒரு

                              பக்கமாய பரம்பரன்

                        தேவியால் முனிவுண்டு கெட்டது

                              கேண்மின்” என்று அது செப்புமே.         245

 

[சிறு தக்கனார்=பாவியான சிறுமைக் குணம் கொண்ட தக்கன்; ஒருபக்கமாய=உடலின் ஒரு பகுதியாக; பரம்பரன்=பரம்பொருளான சிவபிரான்; தேவியார்=உமாதேவி; முனிவு=சினம்; கேண்மின்=கேளுங்கள்; ஏ=அசைச்சொல்]

 

பாவியான சிறுமைக் கொண்ட தக்கன், உடலின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் உமையன்னையின் கோபத்திற்கு ஆளாகிக் அழிந்த கதையைக் கேளுங்கள் என்று அப்பேய் சொல்லத் தொடங்கியது.

                        எல்லை நாயக ராசராச

                              புரேசர் ஈசர் இதற்குஈனும்

                        தொல்லை நான்மறை நிற்க மற்றொரு

                              கேள்வி வேள்வி தொடங்கியே.           246

 

[எல்லை=உலகம்; நாயகர்=தலைவர்]

 

உலகங்களுக்கெல்லாம் தலைவர், இராசமாபுரத்தைக்காக்கும் ஈசன் சிவபெருமானே என நான்மறைகள் அறுதியிட்டுச் சொல்லியிருக்க இதைக் கேள்விக்குள்ளாகுமாறு தக்கன் வேறொரு வேள்வி செய்யத் தொடங்கினான்.

                  கங்கை மாநதி வீழ்புறத்தது

                        கனகளத்தொரு களன் இழைத்து

                  ”அங்கண் வானவர் வருக” என்றனன்

                         முனிவர் தன்படை யாகவே.                    247

 

[வீழ்=பாயும்; களன்=இடம்; அங்கண்=அங்கே; படை=துணை]

 

கங்கை ஆற்றின் கரையில் கனகலன் என்னும் இடத்தில் யாகசாலையை அமைத்து. தேவர்கள் அங்கே வருக என தக்கன் அழைப்பு விடுத்தான். முனிவர்கள் பலரும் அவனுக்குத் துணையாக இருந்தனர்.

 

                  அழைத்த வானவர் பயணம் என்றலும்

                        அசுரர் நின்றிலர் ஆசையால்

                  இழைத்த யாகவிபாகம் முற்பட

                        உண்ணலாம் என எண்ணியே.                    248

 

[இழைத்த=செய்த; விபாகம்=பங்கு]

 

வானவர்கள் வருக என அழைப்பு வந்ததும் புறப்பட்டு விட்டார்கள். அசுரர்க்கு அழைப்பு இல்லை. ஆனால் அவர்களும் வேள்வியின் அவிர்ப்பாகம் உண்ணலாம் எனும் ஆசையால் புறப்பட்டு விட்டார்கள்.

                        பாவகாதிகள் லோக பாலர்

                              பரந்து வந்து புரந்தரன்

                        சேவகாதிகள் போல நாலிரு

                              வேழம் ஏறினர் சேரவே.                 249

 

[பாவகன்=அக்கினி; பரந்து=சேர்ந்து; புரந்தரன்=இந்திரன்; நாலிரு=எட்டு; வேழம்=யானை]

 

அக்கினி முதலான திசைக்காவலர் எண்மரும் இந்திரனின் சேவகர் போல எட்டுத்திசைகளிலிருந்தும்  எட்டு யானைகள் மீதேறி வந்தனர்.  [இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் எட்டுத்திக்குப் பாலகர்கள் ஆவர்]

                        திங்கள் வெண்குடை மேலெ றிப்ப

                              அருக்கர் பன்னிருய்வர் தேரிலும்

                        தங்கள் வெங்கதிஎ நடுஎ றிந்தனர்

                              உடுஎ றிப்பொளி தவிரவே.                250

 

[எறிப்ப=நிழல் தர; அருக்கர்=சூரியர்; உடு=நட்சத்திரம்]

        

       சந்திர வட்ட வெண்குடை நிழல் தர சூரியர் பன்னிருவர் தம் தேரில் ஏறி நட்சத்திரங்களின் ஒளி மங்கும்படி வந்தனர். பன்னிரு சூரியர்கள்: தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன்,சவித்துரு. துவட்டா

 

Series Navigationஅதிர்ச்சி