தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

 

 

                                           

                                                       வளவ. துரையன்

சங்கெ டுத்து உடைத்த யின்றி

      தன்துணைத் தனிப் பெரும்

கொங்கு டைச் சரோருகக் கிழங்

      ககழ்ந்து கொண்டுமே.         [381]

 

[கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி]

 

பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப் பிடித்து அதிலிருந்த சங்கை எடுத்து உடைத்தன. அதில் உள்ள பூச்சிகளைப் பிடித்துத் தின்றன. தேன் உடைய தாமரை மலரின் கிழங்குகளத் தோண்டி எடுத்து உண்டன.

கைவழிக் குலப் பொருப்போர்

      எட்டுடன் கலந்து கொண்டு

அவ்வழிப் புயங்கம் எட்டும்

      அம்பு யத்திருத் தியே.          [382]

பொருப்பு=மலை; புயங்கம்=அம்பு; அம்=அழகிய; புயம்=தோள்]

 

மேருமலைக்குத் துணையாக நிற்கும் எட்டுமலைகளைப் பூதப் படைகள் பிடித்தன. அவற்றை எட்டு நாகங்களால் கட்டின. பின் அவற்றைத் தம் தோள்களில் போட்டுக் கொண்டன.

நீர் கலக்கி மீனஏறு

      எடுத்த யின்று நீல்நிறக்

கார்கலக்கி வான ஏறு

      செவ்வி யோடு கவ்வியே.     [383]

 

[மீனஏறு=சுறாமீன்; அயின்=தின்று; கார்-மேகம்; செவ்வி=அழகு; வானஏறு=இடி]

 

பூதப்படைகள் நீர் நிறைந்த எல்லாக் கடல்களையும் கலக்கின; அவற்றில் இருந்த சுறா மீண்களைப் பிடித்துத் தின்றன; கரு நிற மேகங்களைக் கலக்கின. இடி ஏற்றைத் தம் வாயில் கவ்வின.

ஆழி மால்வரைப் புறத்து

      இறைத்து வாரி அற்றபின்

பாழி மால் பெருங்கடல் பெருந்தி

      மிங்கி லங்கள் பற்றியே.         [384]

 

[ஆழி=சக்கரம்; மால்வரை=பெரிய மலை; வாரி=கடல்; அற்றபின்=நீரற்று வற்றிய பின்; பாழி= அகன்ற; மால்=பெரிய]

 

பெரிய மலையான சக்கரவாளகிரிக்கு அப்புறத்தில் இருக்கும் பெருங்கடல்களின் தண்ணீரை எல்லாம் இறைத்தன; கடல் வற்றிப் போனபின்னர் ஆழப் பெருங்கடலில் உள்ள பெரிய திமிங்கிலங்களை எல்லாம் பிடித்துத் தின்றன.

அடவிமுற்றும் அசலம் முற்றும்

      அவனி முற்றும் அதிர்படத்                         

தடவிமுற்றும் உயிர் தொலைச்சி

      வயிறு வேட்கை தணியவே.                 [385]

 

[அடவி=காடு; அசலம்=மலை; அவனி=பூமி; அதிர்பட=அதிர்ந்து போக; தணிய= அடங்க]    

 

காடுகளில், மலைகளில், மற்றும் பூமியில் உள்ள உயிரினம் எல்லாம் அஞ்சி நடுங்க அவற்றைத் தேடிப் பிடித்து பூதப்படைகள் தம் வயிற்றுப் பசி அடங்கத் தின்றன.

பிடிபிடித் துணித் துணிப் பி

      ணிக்கெனப் பெயர் புலத்து

இடிப்பு இடித்து எருத் திறத்து

      எயிற்று அரைத்து இறக்கியே.

 

[துணி=வெட்டு; பிணி=கட்டு; பெயல்=மழை; புலம்=இடம்; எரு=இறைச்சி= திறம்=தன்மை; எயிறு=பல்]

 

”பிடி! பிடி! வெட்டு! வெட்டு! கட்டு! கட்டு” என இடியோசை போல முழங்கிய பூதங்கள் பிடித்தவர்களின் தசைகளை எல்லாம் பல்லால் கடித்து மென்று அரைத்து தம் வயிற்றுக்குள் தள்ளின.

வாலெடுத்து நாகர் தங்கள்

      திவ்ய பானம் வைத்தபொற்

சாலெடுத்து வாய் மடுத்து

      வெவ் விடாய் தணித்தவே.            [387]

 

[திவ்ய=மேலான; மடுத்து=குடித்து]

 

நாகலோகத்தின் நாகங்கள் தம் வாலெடுத்துத் தம்மைத் தாக்குமுன்னரே பூதங்கள் அவை பொற்குடங்களில்  வைத்திருந்த அமுதபானத்தை அருந்தித் தம் தாகத்தைத் தணித்துக் கொண்டன.                       

 கொண்டல்கோள் அறுத்து வான

      ஆறுகோள் அறுத்து மேல்

அன்டகோள் கைப் புறத்து

      அறாத நீர் அறுத்துமே.        [388]

 

[கொண்டல்=மேகம்; வானஆறு=கங்கை ஆறு; அறாத=வற்றாத]

 

அவை மேகத்தைப் பிழிந்தன; கங்கை ஆற்றைக் குடித்தன; இன்னும் அண்டகோளங்களில் இருக்கும் வற்றாத நீர் நிலைகளின் நீரை முழுதும் குடித்துத் தம் தாகத்தைத் தீர்த்துக் கொண்டன.

மண்ணில் செந்தீ அடுப்ப உடுப்பல மாய்ந்தன

கண்ணில் காய்ச்சிக் குடித்தன நாற்பால் கடலுமே.                 [389]

 

[அடுப்ப=பொருந்த; உடு=நட்சத்திரம்; மாஉய்ல்=அழிதல்]

 

மண்ணுலகின் நெருப்பு  எல்லாம் வானில் சென்றழிந்தன. அதனால் நட்சத்திரக் கூட்டங்கள் கருகின; நான்கு திக்குகளிலும் உள்ள கடல்களின் நீரை தங்கள் கண்களின் நெருப்பாலேயே காயச்சி அவை குடித்தன.

உயிர்ப் பெரும்பசி தீர்ந்தகொல்! இல்லைகொல்! உண்டுவெண்

தயிர்ப் பெருங்கடல் மாய்த்தன பூத வேதாளமே.                   [390]

 

[உயிர்ப்பசி=வயிற்றுப் பசி]

 

இப்படி எல்லவற்றையும் தின்று தீர்த்த பின்னரும் பூதங்களின் வயிற்றுப் பசி தீர்ந்ததா? இல்லையே! அவை தயிர்க்கடலைக் குடித்து அக்கடலை முழுதும் வற்றச் செய்துவிட்டன.

அப்புளித்தயிர்க் கடலின் உப்புக்கடல் அடையவே

கொப்புளித் தவை இரண்டும் ஒன்றாக்கிக் குடித்தவே.             [391]

 

அவை குடித்த தயிர்க்கடல் புளித்துப் போனது. எனவே அதனுடன் உப்புக்கடலை சேர்த்துக் கலக்கிக் குடித்துக் கொப்பளித்தன.

பொய்க் கடல்புறத் தெய்வங்களைப் பொரித்துத்தினா

நெய்க் கடற்பசை அற்றது எங்குண்டு இனி நெய்யே.                 [392]

 

[பொரித்து=வருத்து]

 

பொய்மதவாதிகள் கூறும் கடவுள் கதைளை எல்லாம், பேய்கள் நெய்யிலே போட்டு வருத்துத் தின்றன. உலகில் எங்கும் நெய்யே இல்லை என்னும் நிலை வந்தது.

வடியவாங்கி மடுக்க எங்கேஉள? வந்துதாம்

படியஅன்று அளறாயின தெண்ணீர்ப் பரவையே.                        [393]

 

[மடுக்க=குடிக்க படிய=-நீராட; அளறு=சேறு; பரவை=கடல்]

 

நல்ல நீரை உடைய கடல்களை எல்லாம் பூதப்படைகள் குளித்துச் சேறாக்கி விட்டபடியால் இங்கே குடிக்க நீர் ஏது? இல்லை.

கருப்புச் சாற்றுக் கடல்அன்று பிழைத்ததோ கழுது

விருப்புச் சாற்றில் குடித்தன கிடந்தன வெடித்தே.     [394]

 

[கழுது=பேய்; விருப்பு=விரும்பிய’ சாறு=விழா]

 

கருப்பஞ் சாற்றுக்கடலையும் விட்டு விடாமல் அதன் சாறு முழுதும் பூதப்படைகளால் குடிக்கப்பட அதுவும் வறண்டு வெடித்துப் போனது.

மட்பெருங் பழங்கலத்தொடும் எடுத்தன எடுத்துக்

கட்பெருங் கடல்குடித்தன் தடித்தன கழுதே.                      [395]

 

[மட்பெருங்கடல்=பூமண்டலம்; கட்பெருங்கடல்=தேன்கடல்]

 

பூதப்படைகள் தேன்கடலை அது இருக்கும் பூமண்டலமான பாத்திரத்தோடு எடுத்துக் குடித்ததால் அவற்றின் உடல் தடித்துப் போயிற்று.

வேலின் மாயன் மாய்வுற விடும்பலி

      மேவுநாயகன் விடுபடைக்

காலின் மாய்வன அல்லவோ! ஒரு

கையின் மாய்வன கடலுமே.                                    [396]

 

[மாய்வுற=மடிய]

 

சிவபெருமானின் சூலப்படையால்  இப் பூதப்படைகள் மாயவனையே மாய்த்தன. அகத்தியர் தம் ஒருகையால் அள்ளிக் குடித்த கடல் இப்பூதப்படைகளின் காலுக்கு அடங்காது.

நதிகள் ஏழினினும் முதற்கிரிகள் ஏழினும்அறா

      நளினி ஏழினும் வலம்புரியும் நல்லமைகோ

ததிகள் ஏழினும் எடுத்துஅடைய உள்ளன எனும்

      சங்ககோடிகள் குறித்துஅகிலமும் தகரவே.                        [397]

 

[நளினி=சுனை; தகர=நொறுங்க]

 

ஏழு நதிகள், ஏழு மலைகள், அம்மலைகளில் உள்ள வற்றாத சுனைகள் ஏழிலும், கடல்கள் ஏழிலும் உள்ள சங்குகள் எல்லாவற்றையும் எடுத்துப் பூதகணங்கள் உலகங்கள் எல்லாம் உடைந்து போகும்படி ஊதினவாம்.

சக்கரக் கிரியும் எக்கிரியும் எப்புடவியும்

      சமையவந்து தகரத் தழுவினும் தழுவும்நின்று

அக்கரத்து உலகு உடைக்கினும் உடைக்கும் இதில்ஓர்

      அலகையே எனவிரிஞ்சன் அலம் வந்தலறவே.    [398

 

[கிரி=மலை; புடவி=உலகம்; தகர=நொருங்க; அலகை=பேய்; விரிஞ்சன்=பிரமன்; அலம்=அச்சம்]

 

சக்கரவாளகிரியை மட்டுமன்று. எந்த மலைகளையும் எந்த உலகையும் தகர்த்து அழிப்பவை இவை.  இதில் ஒருபேயே தன் ஒரு கையாலேயே உலகை உடைத்துத் தூளாக்கினாலும் ஆக்கும் என்று பிரமதேவனே பயந்து அலறவே.

”ஓர் எயிற்றினும் வயிற்றின் ஒருபாலும் இடவே

      உள்ளது எவ்வுலகும் அல்லது ஒருபூதம் ஒருபேய்

ஈஎயிற்றினும் வயிற்றின் இருபாலும் இடவேறு

      இல்லையே எனவெறித்து அயன்மறித்து இரியவே.       [399]

 

[எயிறு=பல்; ஈர் எயிறு=இரண்டாவது பல்; மறித்து=மனம் தடுமாறி; இரிதல்=விலகுதல்]

 

ஒரு பூதம் இவ்வுலகம் முழுவதயும் தன் ஒரு பல்லில் கடித்து வயிற்றுக்குள் தள்ளும்; இன்னொரு பல்லில் வைத்துத் தின்று வயிறு நிரப்ப இன்னோர் உலகம் இல்லையே என்று பிரமன் மனம் தடுமாறிப் போனான்.

சுடர்க்கிளர்த்தனைய செய்யகிரி பங்கிவிரியச்

சுழல் விழிப்புகை பரந்துதிசை சூழவரு பேய்

கடல் குடித்தவனி தின்றுலகும், அண்டமும் எழக்

கதுவும் ஊழிமுடி விற்கனல் எனக்கடுக்கவே. 400

 

[சுழல்=சுருள்; பங்கி=தலைமுடி; அவனி=உலகம்; கதுவும்=தின்ன; கடுக்க =எரிக்க]

 

நெருப்புச் சுடர் போலத் தலைமுடி மலைபோல் நிமிர்ந்தும், சுருண்டும் விரிந்து கிடக்க, திக்குகள் எங்கும் நெருப்புப் புகை எழும்பும் கண்களுடன் பேய்கள் சுற்றி வரும். கடல் நீர் முழுதும் குடித்து உலகை வாயிலிட்டு ஊழித்தீ எழுவதைப் போல அனல் வெப்பம் பரவ ஒரு பேய் சுற்றி வரும்.

 

Series Navigationஅன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரைகொரோனோ தொற்றிய நாய்