தனி ஒருவனுக்கு

என் நிழலுக்குள்ளேயே

அவன் நிழல்கூட விழாதுதான்

அடங்கி நடந்துகொண்டிருந்தான்

குழந்தை.

கேள்விகள்

காம்பாய் வளைந்திருக்க

அவன் பதில்கள்

அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன.

ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே

தடம் மாறியதறியாது

வேறொன்றில்

நின்று கொண்டிருக்கும் மனம்

குழந்தைக்கு மட்டுமில்லாது

எனக்கும் ஆனதில்

மீன்களின் ஞாபகம்

வியாபித்திருக்கும்

குளத்தின் நினைவில்

கருக்கொண்டிருந்த

கவிதை விளைத்தமௌனத்தில்

துணுக்குற்றவனின்

கவனம் ஈர்க்க

” ஒரு ஊரில் ” என ஆரம்பித்தால்

சொல்லிவிடப் பயிற்றுவித்திருந்த

ராஜவம்சத் தொடரைச்

சொல்லத் தூண்டியபோது

சொல்லாது

வேரோடு அறுத்து

” ஒருத்தருமில்லை” என்றாக்கியது

மழலைக் கோபம்.

—- ரமணி

Series Navigationஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்