தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்?

தமிழகத்தில் தேர்தல்கள் பொதுவாகவே திமுகவை சுற்றி சுழன்றிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறு சொல்வதற்கு காரணம் திமுகவுக்கு தமிழ்நாட்டில் சுமார் 25 சதவீதமே வாக்குக்கள் உண்டு என்பதால்தான்.

தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது திமுகவுக்கு எதிர் வாக்குகள் சேர்ந்து நிற்கிறதா அல்லது சிதறியிருக்கிறதா என்பதை வைத்தே முடிவு செய்யலாம். திமுகவுக்கு எதிரான வாக்குக்களையும் அது எப்போது கூட்டணியில் சேர்த்துகொள்கிறதோ அப்போது திமுகவுக்கு வெற்றியும் கிடைக்கும். உதாரணமாக பாமகவின் வாக்குகள் அனைத்தும் ஒரு காலத்தில் திமுகவின் வாக்குக்களாக இருந்தவை. ஆகவே பாமக திமுக இணையும் போது திமுக வெற்றி பெறும். பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது அதிக பயனை அதிமுகவுக்கு தராது. ஆனால், திமுக எதிர்ப்பு வாக்குக்களை கோர்க்க உதவும்.

தேமுதிகவின் வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்குகள். அந்த தேமுதிக வலிமையாக போட்டியிட்டால் அது அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குக்களை சிதறடிக்கும். அப்போது அதிமுக தோற்கும். உதாரணம் 2009 பாராளுமன்ற தேர்தல். அப்போது தேமுதிக சுமார் 10 சதவீத வாக்குக்களை பெற்றது. இது அதிமுகவின் வாக்குக்களை சேதப்படுத்தியது. அந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் முன்னணி 27 எம்பிகளையும் , அதிமுக முன்னணி 12 எம்பிகளையும் பெற்றது. தேமுதிக ஒரு இடத்தில் வெற்றிபெறவில்லை என்றாலும் அது 10 சதவீத வாக்குக்களை பெற்று அதிமுகவின் வெற்றி சாத்தியங்களை குறைத்தது.

திமுகவும் பாமகவும் இணைந்து நின்றால், திமுக பெரும் வெற்றி பெறும். உதாரணம் 2004 தேர்தல். அந்த தேர்தலில் சுமார் 39 இடங்களை திமுக அணி கைப்பற்றியது. அந்த தேர்தலில் அதிமுக சுமார் 30 சதவீத வாக்குக்களை பெற்றிருந்தாலும், திமுக 24.6 சதவீத வாக்குக்களை பெற்று பெரும் வெற்றி பெற்றது.

திமுக வெற்றி பெறுவது என்பது இரண்டு விஷயங்களை பொறுத்தது. முதலாவது பெரும் கூட்டணியை அமைக்க வேண்டும். அல்லது அதற்கு எதிரான வாக்குக்கள் பிரிய வேண்டும்.

இதுவரை எந்த தேர்தலிலும் திமுக 25 சதவீத வாக்குக்களை தாண்டியதில்லை என்பதை மனதில் கொண்டால், திமுகவின் இந்த நிலைக்கான காரணம் புரியும்.

மிக சமீபத்திய தேர்தலான 2014 தேர்தலை எடுத்துகொள்வோம். இந்த தேர்தலில் அதிமுக பணத்தை வாரி இறைத்து ஒரு குறிக்கோளுடன் இறங்கியது. அதாவது 40 இடங்களையும் கைப்பற்றினால், தொங்கு பாராளுமன்றம் அமையும்போது ஜெயலலிதா பிரதமராக ஆகலாம் என்ற குறிக்கோளுடன் இறங்கியது. அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது. சுமார் 44 சதவீத வாக்குகளை பெற்று 37 இடங்களை கைப்பற்றியது. இதில் ஆச்சரியமான விஷயம் தேமுதிக, பாமக, மதிமுக, பாஜக கூட்டணி சுமார் 18 சதவீத வாக்குக்களை பெற்றது ஒரு ஆச்சரியமான விஷயம் என்றாலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவித்த திமுக தனது 25 சதவீத வாக்குக்களை இழக்காமல் இருந்ததுதான் பெரும் ஆச்சரியம். இந்த தேர்தலில் பாஜக 5.5 சதவீத வாக்குக்களை பெற்று மூன்றாம் இடத்தை கைப்பற்றியது. இந்த தேர்தலில் முதலாவதாக அதிமுக 44.3 சதவீதமும், திமுக 23.6 சதவீதமும் பாஜக 5.5 சதவீத வாக்குக்களும் பெற்றன. இதன் பின்னரே தேமுதிக பெற்ற 5.1 சதவீதம், பாமக பெற்ற 4.4 சதவீதம் வருகின்றன. அதன் பின்னரே திமுக உதவியில் காங்கிரஸ் பெற்ற 4.3 சதவீதம் வருகிறது

தமிழ்நாட்டில் இன்று லெட்டர் பேட் கட்சியாக ஆகியிருக்கும் காங்கிரசுக்கு ஏன் 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது என்பதற்கு என்னிடம் விடை இல்லை. இந்த 10 தொகுதிகளில் நிச்சயம் 9 தொகுதிகளில் அதிமுக-பாஜக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும் என்று கண்ணை மூடிகொண்டு சொல்லலாம். கன்னியாகுமரி மட்டுமே என்னை பொறுத்தமட்டில் சிக்கலான தொகுதி. அங்கு மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் வெற்றி பெறவே பெறாது என்று அனைத்து ஊடகங்களும் பிரச்சாரம் செய்யும் பாஜகவுக்கு குறைந்தது 10 சதவீத வாக்குகள் உண்டு என்பது என் உறுதியான எண்ணம். பெரும்பாலான பாஜக அனுதாபிகள், பெரும்பாலான காலங்களில் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள். ஜெயலலிதா இருந்த வரைக்கும் திமுகவை எதிர்த்து வாக்களிக்க அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அவர்கள் தங்கள் வாக்குக்களை ஜெயலலிதாவுக்கு அளிக்கும்போது மிகவும் வலுவாக திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கலாம் என்று தெரியும். இதனால், பெரும் பாஜக ஆதரவாளரான சோ போன்றவர்கள் கூட அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லியிருக்கிறார்கள். மிகவும் கடுமையான பாஜக அனுதாபிகளே பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அப்படி வாக்களித்தும் பாஜக 2.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரைக்கும் தமிழகத்தில் தனியாக நின்று வாக்குக்களை பெற்றிருக்கிறது. ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க, திமுக எதிர்ப்பு ஒன்றே காரணமாக இருக்கும். ஆனால், அதிமுக இரண்டாக உடைந்திருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்கள் நேரடியாகவே பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள். ஆனால் அப்படி 10 சதவீத வாக்குக்களை பாஜக பெற்று அதற்கு பயனில்லை. ஆகவேதான் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்றார்கள்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக தன்னை வெகு எளிதில் நிறுத்திகொண்டுள்ளவர் டிடிவி தினகரன். பல இடங்களில் முக்கியமாக அவருடைய ஜாதி ஆதரவு உள்ள இடங்களில் அவருக்கு நிச்சயம் பலத்த ஆதரவு இருக்கிறது. ஆனால், தஞ்சாவூர் போன்ற இடங்களில் கூட முக்குலத்தோருக்கு பெரும்பான்மை இல்லை என்பதே உண்மை. அதிமுக வெறுமே முக்குலத்தோர் கட்சி மட்டுமே அல்ல என்பதும் உண்மை. ஆகவே தஞ்சாவூர் போன்ற இடங்களில் அவர் முக்குலத்தோர் வாக்குக்களை பிரித்தாலும், மற்ற ஜாதி அதிமுக வாக்குக்கள் பெருவாரியாக இரட்டை இலைக்குத்தான் போகும் என்பது திண்ணம். அதனால்தான் ஆர்.கே நகரில் ஜெயலலிதா இல்லாத அதிமுக, தன் வாக்குக்களை ஓரளவுக்கு இழந்தாலும் இரண்டாவதாக வந்து மானத்தை காத்துகொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமம் கிராமமாக கால் பதித்திருக்கும் கட்சிகள் இவை

  1. அதிமுக
  2. திமுக,
  3. வடக்கு மாவட்டங்களில் பாமக
  4. விசிக
  5. பாஜக

இந்த ஐந்து கட்சிகள் மட்டுமே தமிழகம் முழுவதும் ஓரளவுக்கு வீச்சு கொண்டவை. தமிழ்நாட்டில் அனைத்து ஊடகங்களும் பாஜக எதிர்ப்பு லாவணி பாடினாலும், பாஜக இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதும் உண்மை. இந்த வாக்குகள் என்றுமே திமுகவுக்கு போகாது.

தமிழ்நாட்டில் அதிமுக வாக்குக்கள் 30 சதவீதம் என்று எடுத்துகொள்ளலாம். அதிலிருந்து அதிக பட்சம் 10 சதவீத வாக்குக்களை டிடிவி தினகரன் பிரிப்பார் என்று கருதுகிறேன். ஒரு சில தொகுதிகளில் அதிகம் இருக்கலாம். ஆனால், ஆவரேஜாக 10 சதமே அதிகம்.
பாமகவுக்கு என்று 5 சதவீத வாக்குகள் உண்டு. பாஜகவுக்கு என்று குறைந்தது 5 சதவீத வாக்குகள் உண்டு. தேமுதிகவுக்கு என்று இருந்த 10 சதவீத வாக்குக்கள் இன்று குறைந்து 3 சதவீத வாக்குகளாக ஆகியிருக்கும். இவற்றை கூட்டினால், 33 சதவீத வாக்குக்கள் என்று கருதலாம்.

திமுகவுக்கு இருக்கும் 25 சதவீத வாக்குகளும், லெட்டர் பேட் கட்சிகளின் வாக்குகளையும் கூட்டினால், 30 சதவீதமே வரும்.

ஆர்,கே நகரில் டிடிவி தினகரன் பெற்ற வாக்குக்கள் திமுகவின் வாக்குக்கள் என்று கருத இடம் உண்டு. டிடிவி தினகரன் திமுக வாக்குக்களை பிரித்தால், திமுகவின் வாக்குக்கள் இன்னும் குறையும்.

அது நடக்க சாத்தியமில்லை என்று கருத முடியாது. ஏனெனில், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் பாஜகவின் வாக்குகள் சிபிஎம் கட்சி வாக்குகளிடமிருந்தே வந்திருக்கின்றன. சிபிஎம் கட்சி வாக்குகள் எப்படி பாஜகவுக்கு போகும் என்றுதான் நாம் பொதுவாக கேட்போம். ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆகவே திமுக வாக்குக்கள் சிதற வாய்ப்புகள் உண்டு.

அதிமுக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-பாமக கூட்டணி ஒரு மிக வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை.

இவர்கள் ஒத்த கருத்து கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்காகவே பெரும் வெற்றியை இந்த கூட்டணி பெறும். வடக்கு மாவட்டங்களில் பாமகவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக பெறும் வெற்றி பெறும். தெற்கில் பரவலாக இருக்கும் தேவேந்திர குல வெள்ளாளர்கள் இந்த கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அப்படியிருக்கும்போது இந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.


Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்தமிழ் நுட்பம் – Episode 9 – கால் செண்டர்கள் -Call center and Marketing Bots use case Bots use