தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை

Spread the love


ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

” பட்டாம்பூச்சிகளின் சாபம் ” என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் திருச்சிக் கவிஞரின் கவிதைகள் அழகான மொழி நடையில் அமைந்தவை. இவரது கவிதைகள் பற்றி
இவர் தன் முன்னுரையில் தரும் விளக்கம் ஒன்றைக் காணலாம். ” வெளிப்புற அத்துகளால் உந்தப்பட்ட சமூகம் ஒன்றில் துடிக்கும் கட்டுப்படாத பிரக்ஞை ஒன்று தன்
உணர்வுகளாலேயே எப்படி வன்மையாய்த் தாக்கப்படுகிறது என்பதன் மொழிக் குறியீடாகவும் உள்ளன என் கவிதைகள் ” மேலும் ” உணர்வின் புறச்சுற்றுக் சுவர்களில்
மோதி , சிதைந்து என்னைக் குதறிப் போடும் மனநிலையை மொழி பெயர்க்கும் தளம் கவிதை “என்கிறார். இன்னொரு கணம் என்ற கவிதை…..
நாம் சந்திக்க முடியாத கணங்களை
அப்படியே விட்டு விடுவோம்
யாருமற்ற வெளிகளை
இப்படியே நிரப்பிக்கொள்வோம்
நம்மால் கடக்க முடியாத் தூரங்களை
காற்றுக்கு விட்டுத்தருவோம்

இந்தக் கண்ணீரின் வலியை
இப்படியே வடித்து விடுவோம்

ஓட்டையாயினும்
ஒரு கோப்பைக்குள் வழிவோம்

கூடுதல்களும்
குறைதல்களுமற்ற
இன்னொரு கணம்
நமக்கு கிடைக்கவே போவதில்லை

கோப்பை தொடர்பான படிமம் பதுமையானது. நிறைவேறாத காதலைக் குறியீட்டால் உணர்த்துவது. “யாருமற்ற வெளிகளை இப்படியே நிரப்பிக்கொள்வோம் ” என்பது
அசாதாரணமான சிந்தனை. மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு காத்திரமான கவிதை உருவாகியுள்ளது. முதிர்ச்சியும் தேர்ந்த வெளிப்பாடும் சேர்ந்து அசலான கவிதையை நம்
முன் வைக்கிறது.

“நெஞ்சுக் குழி ” என்ற கவிதையும் காதலின் குழைவை ஆத்மார்த்தமாகச் சொல்லி மகிழ்விக்கிறது
யாதொன்றுமில்லை சொல்வதற்கு என்று
சொல்லிவிட முடியவில்லை
பிரிவுகள் நிறைந்த
எந்தப் பயணத்திலும்

என்பது தொடக்கம். அடுத்த பத்தியில் எளிமையும் நேர்மையும் கவி மொழியில் நம்மைக் கவர்கின்றன.

விடை பெற்றுக் கொண்ட
சிறிது கணம் கடந்தே
ஞாபகத்திற்கு வரும்
மறந்து போனவைகளின்
கடைசி ரேகைகள்

“கடைசி ரேகைகள் ” என்பது நயமான வெளிப்பாடு. “ரேகைகள் ” என்ற சொல் நினைவுகள் என்ற சொல்லுக்குக் குறியீடாக அமைந்துள்ளது.
நீண்ட பயணத்திற்காய்
ஆனந்த விகடனும்
மினரல் வாட்டரும் வாங்கி வந்த
உன் கைகளைப் பற்றிக் கொண்டு
வெகு நேரம் பேசிய பின்பு
இம்முறையும் நிகழ்ந்தது
ஞாபகம் வராதவைகளின் ஞாபகம்

கவிதையின் ஒவ்வொரு வரியும் கவிதைத் தலைப்பை நோக்கிக் குவிகிறது. “உன் கைகளைப் பற்றிக் கொண்டு ” என்பதில் அக்காட்சி கண் முன் விரிகிறது. காதல் நெருக்கம்
பளிச்சிடுகிறது.

யாருக்குத் தெரியும்
நாங்கு பேர் சுமந்து செல்கையிலும்
புதைந்து கிடக்கலாம் நெஞ்சுக் குழிக்குள்
வெகு நாளாயச் சொல்ல நினைத்த
ஏதாவதொன்று

எளிய அழகான கவிதையைப் படித்து ரசித்த நிறைவு
யாதொரு இரக்கமுமற்று
நீண்டு கிடக்கின்றன
நமக்கிடையிலான தூரங்கள்

இரக்கமுமற்று என்ற சொல் காதல் துயரத்தை ஆழ்ப்படுத்திக்காட்டுகிறது.

இப்போதும்
உன்னிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன்
முடிச்சவிழாத
வெட்கத்தையும்
தொலை பேசியுள் சிக்கிய
உன் புன்னகைகளையும்

என்ற முத்தாய்ப்பு அழகியல் இனிமையை கவிதையில் பாய்ச்சுகிறது. ” ஒரு நிமிடம் ” வாழ்க்கை யதார்த்தத்தைக் காட்டும் கவிதை. குடிகார அப்பா , சோரம் போன
பெண் , காப்பி அடிக்கும் மாணவன் , பேனா இரவல் வங்கிய நபர் , பயண நேரத்தில் தினசரி இரவல் வாங்கிய பக்கத்து இருக்கைக்காரர் இதில் பேசப்படுகிறர்கள்.

.

இப்போதும் உன்னிடமிருந்து ” என்ற கவிதையில் சொற்கள் துள்ளாட்டம் போடுகின்றன.

வார்த்தைளாலான ஒரு விழாவைக்
கொண்டாடும்படிச் செய்து விட்டது
குளிரும் வெயிலுமற்ற இக்கணம்

கவிதையின் ஆரம்பமே களை கட்டிவிட்டது

“ஒரு நிமிடம் ” , வாழ்க்கை யதார்த்தத்தைக் காட்டும் கவிதை. குடிகார அப்பா, ஸோரம் போகும் பெண்., காப்பி அடிக்கும் மாணவன், பேனா இரவல் வாங்கிய நபர் ,
பயண நேரத்தில் தினசரியை இரவல் வாங்கிய இருக்கைக்காரர் இதில் பேசப்படுகிறார்கள்.
சொற்களின் அடர்த்தியில் அழகாகச் சிறைப்பட்டு நிற்கிறது ஒரு கவிதை ” ஒரு முறை ப்ளீஸ் “என்ற தலைப்பில்…
ஒரே ஒரு முறை ப்ளீஸ்
என்று கெஞ்சப்படும்
எந்த ஒரே ஒரு முறையும்
ஒரே முறையில்
முடிந்து விடுவதில்லை
ஒவ்வொரு முறையும்
இக் கவிதைக்கான படத்தைப் பார்க்கும் போது கவிதைக் கரு “முத்தம் ” என்று அறிய முடிகிறது. ஆனால் கவிதைக்கரு பொதுமைப்பட்டுப் போவதால் அர்த்த தளங்கள்
பலவாகின்றன.

மழையைப் பற்றி ஒரு புதிய சிந்தனையை ” மழை ” என்ற கவிதையில் முன்வைக்கிறார் தமிழ்தாசன்

மேலே இருக்கும் வரை
மேகமாகி விடுகிறாய்
கீழே விழுந்தவுடன்
நீராகி விடுகிறாய்
ஒற்றைத் துளி
பயணத்தில்தான்
நீ
மழையாகவே இருக்கிறாய்

பொதுவாக , தமிழ்தாசன் கவிதைகளில் சொல்லாட்சி முதலிடம் வகிக்கிறது.இது அமைவது அரிது.புதிய சிந்தனைகளுக்குப் பஞ்சமில்லை. காதலின் புதிய நிறங்களைக்
காட்டியுள்ளார். வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது !
.
.

Series Navigationஇராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வைமறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்