தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்

This entry is part 20 of 44 in the series 30 அக்டோபர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் விளையாட்டானது தமிழக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இணைந்ததாக விளங்குகின்றது. பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மகளிர் விளையாட்டுக்கள் குறித்த செய்திகள் பல தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுக்களின் வகைகள்
விளையாட்டை பால்(sex) அடிப்படையில் பாகுபடுத்தலாம். அவையாவன, 1. ஆடவர் விளையாட்டு, 2. மகளிர் விளையாட்டு, 3. சிறுவர் விளையாட்டு, 4. சிறுமியர் விளையாட்டு என்பனவாகும். சிறுகுழந்தைகளுக்கு ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களைக் கற்றுக் கொள்ளும் பொருட்டு எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் பல உள்ளன. இவை சிறுவர், சிறமியர் இருவருக்கும் பொதுவானவையாகும்.
மகளிர் விளையாட்டுக்கள்
தாயம், பள்ளாங்குழி, தட்டாங்கல், பந்தாடுதல், கழங்காடுதல், ஊசலாடல், ஓரையாடல், வண்டலிழைத்தல் பாவையாடல் ஆகியவை மகளிர் விளையாட்டுக்களாகும்.
தாயம்
மகளிர் விளையாடும் இவ்விளையாட்டினைத் தாயம் என்றும், விளையாடுவதற்கு வரையப்படும் கட்டத்தினைத் தாயக்கட்டம் என்றும் கூறுவர். இவ்விளையாட்டைப் புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன கட்டை இவற்றைக் கொண்டும் ஆடுவர். இக்கட்டைகளுக்குப் பாய்ச்சிகை, பாய்ச்சிக்கட்டை, தாயக்கட்டை என்ற பெயர்கள் மக்களிடையே வழங்கப்படுகின்றன.
இத்தாயத்தைக் கவராட்டம், சூதாட்டம் என்ற வேறு பெயர்களிலும் மக்கள் வழங்குவது நோக்கத்தக்கது. இவ்விளையாட்டை மகளிர் மட்டுமல்லாது ஆடவர்களும் விளையாடுவர்.
இத் தாய விளையாட்டில் நான்கு கட்டத் தாயம், எட்டுக் கட்டத்தாயம், பத்துக் கட்டத்தாயம் எனப் பலவகையுண்டு. இவ்விளையாட்டைக் குறைந்தது இருவர் சேர்ந்து விளையாடுவர். இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விளையாட்டினை கௌரவர்களுக்காகச் சகுனியும், பாண்டவர்களுள் ஒருவனான தருமபுத்திரனும் விளையாடினர். அதில் தருமன் தோற்று தம்பியருடனும், மனைவியுடனும் காட்டிற்குச் சென்று துன்புற நேர்ந்தது. விராட நகரத்தில் மறைந்து வாழ்ந்தபோது தருமனும் விராடனும் இத்தாய விளையாட்டை விளையாடியதாகவும் மகாபாரதத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் நளன் இவ்விளையாட்டை விளையாடி புட்கரனிடம் தோல்வியடைந்து தமயந்தியுடன் துன்புற நேர்ந்தது. பின்னர் அயோத்தி மன்னன் ருதுபர்ணணிடம் நளன் இவ்விளையாட்டைக் கற்றுக்கொண்டு மீண்டும் புட்கரனோடு விளையாடி வெற்றிபெறுகிறான்.
சிவபுராணத்தில் சிவனும் உமையும் இத்தாய விளையாட்டை விளையாட அதற்குப் பிரமன் நடுவராக இருந்ததாகக் குறிப்பு காணப்படுகிறது.
பள்ளாங்குழி
இவ்விளையாட்டைப் பண்ணைக்குழி, பண்ணாங்குழி என்றும் மக்கள் வழங்குகின்றனர். தரையில் பள்ளந்தோண்டி விளையாடப்படுவதால் இதற்குப் பள்ளாங்குழி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். பல் போன்று சிறிய குழிகளை உடையதால் இதனைப் பல்லாங்குழி என்றும் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.
நிலத்தில் குழிகள் தோண்டிப் பள்ளாங்குழி ஆடுவது வரலாற்றுக் காலத்திலற்கு முன்பிருந்தே கிராமங்களில் நடைபெற்று வருவது நோக்கத்தக்கது. ஆப்பிரிக்க நீக்ரோ மக்களின் தேசிய விளையாட்டாக இப்பள்ளாங்குழி விளையாட்டை மானிடவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். வெஸ்ட் இண்டீஸ், டச்சு கயானாவில் வாழும் பழங்குடி மக்கள் இரவில் இவ்விளையாட்டை விளையாடுவதில்லை.
பெண்கள் குழி பறித்துக் காண்களைப் போட்டு விளையாடுவதால் இவ்விளையாட்டுப் பள்ளாங்குழி எனப் பெயர் பெற்றது இவ்விளையாட்டினை அனைத்து இன மக்களும் விரும்பி விளையாடி வருகின்றனர்.
தட்டாங்கல்
பெண்கள் சிறிய உருண்டைக் கற்களைச் சேகரித்து அந்தக் கற்களில் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அக்கல்லானது கீழே விழுவதற்கு முன்னர் கையால் தரையில் தட்டிக் கலலைப் பிடிக்கும் விளையாட்டைத் தடடாங்கல் விளையாட்டு என்று கூறுவர். இவ்விளையாட்டிற்கும் கழங்காடுதலுக்கும் தொடர்பு உண்டு. இவ்விளையாட்டை ஏழுகல் கொண்டு ஆடுவதால் ஏழாங்கல் என்றும் குறிப்பிடுவர். இது அம்மானை விளைாட்டு என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருவம்மானை இவ்விளையாட்டை அடியொற்றிப் பாடப்பட்ட பாடலாகும். இவ்விளையாட்டை மகளிர் இருவர் சேர்ந்து விளையாடுவர். கல்லை மேலே தூக்கி யெறிந்து விளையாடும் பெண் கேள்வி ஒன்றைக் கேட்க அதற்கு மற்றொரு பெண் விடையளிப்பாள். இவ்வாறு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வினாவை வினவி விடையளித்து விளையாடுவர்.
பந்தாடுதல்
நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை குறிப்பிடகின்றது. இவ்விளையாட்டினை,
‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால
தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை
வான்தோய் மாடத்து வரிப்பந்தசைஇ’’
எனப் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.
சீதை தன் தோழியுடன் மேல் மாடத்தில் பந்தாடியதை கம்பராமாயணம் காட்சிப்படுத்துகின்றது. திருக்குற்றாலக் குறவஞ்சியானது,
‘‘பந்தடித்தனளே வசந்தவல்லி பந்தடித்தனளே’’
என்று வசந்தவல்லியானவள் பந்தடித்து விளையாடியதை எடுத்துரைக்கின்றது.
கழங்காடுதல்
மகளிர் விளையாட்டுக்களில் கழங்கு என்பதும் ஒன்றாகும். திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து விளையாடியதனை,
‘‘மகளிர்…………
முத்தவார் மணல் பொற்கழங்காடும்’’
என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்பு,
‘‘செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்’’
எனப் பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது.
ஊசலாட்டம்
மரத்தில் கிளையில் கயிற்றினை ஊசலாகக் கட்டி அதிலமர்ந்து ஆடி மகிழ்தல் பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,
‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’
என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் ஊசற்பருவம் என்ற பருவம் இடம்பெற்றிருப்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.
ஓரையாடுதல்
ஆமை, நண்டு ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து விளையாடுவது ஓரையாடுதல் என்ற விளையாட்டாகும். இவ்விளையாட்டை அலவனாட்டல் என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. இவ்விளையாட்டினைப் பற்றிய குறிப்பு,
‘‘தாதிற் செய்த தண்பனிப்பாலைவ
காலை வருந்தும் கையா றோம்பென
ஓரையாயம் கூறக் கேட்டும்’’ (குறுந்., 48)
‘‘ஓரையாயத் தொண்டொடி மகளிர்’’ (புறம்.,176)
எனக் குறுந்தொகை, புறநானூறு ஆகிய பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வண்டலிழைத்தல்
பண்டலிழைத்தல் என்பது ஒரு வகை விளையாட்டாகும். மணலைக் நீள வாக்கில் குவித்து அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைத்து அதனை மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மணலை மூடி அதனுள் அவ்விதை இருப்பின் அதனை எடுப்பர். அவ்வாறு எடுத்துவிட்டால் எடுத்தவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அதனைப் போன்று எடுக்கவில்லை எனில் வண்டலிழைத்தவர் வெற்றி பெற்றவராவார்.
மணலில் புங்க மரத்தில் விதைகளை வைத்து வண்டலிழைத்துத் தன் தோழியுடன் விளையாடிய தலைவி தன் தாய் அழைக்கவும் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறாள். அவ்விதை முளைத்து மரமாகிறது. பின்னொருநாளில் தலைவன் அம்மரத்தின் அருகில் அவளை அணைக்க முயலுகின்றபோது தலைவி எனது தங்கை முன்பு இவ்வாறு செய்யலாகாது என்று கூறி தலைவனை விளக்குகிறாள்.
தலைவன் புரியாது தலைவியைப் பார்த்து எங்கே உனது தங்கை இருக்கிறாள்? எனக் கேட்கின்றான். அதற்குத் தலைவி தலைவனைப் பார்த்து முன்னர் நடந்தவற்றைக் கூறுகிறாள். தலைவன் வியந்து போகின்றான். இவ்வாறு மரத்தையும் உறவுமுறையுடன் பார்க்கும் தமிழரின் உயரிய பண்பாடு பற்றிய குறிப்பும், மகளிர் விளையாட்டான வண்டலிழைத்தல் பற்றிய குறிப்பும் நற்றிணையில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இவ்விளையாட்டை, ‘‘கிச்சுக் கிச்சுத் தாம்பளம்’’ என்று கிராமப்புறங்களில் மக்கள் வழங்குவர். இவ்விளையாட்டை,
‘‘கிச்சுக் கிச்சுத் தாம்பளம், கிய்யா கிய்யாத் தாம்பாளம்
ஓட்டை முத்தை வைச்சுக்கிட்டு நல்ல முத்தைத் தா’’
என்று கூறி மணலை இழைத்து விளையாடுவர்.
பாவையாடல்
மணலால் பாவை(பொம்மை) செய்து அதற்குப் பூச்சூட்டி மகளிர் விளையாடுவர். இதனைப் பாவையாடல், பாவை விளையாட்டு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய விளையாட்டை அம்பாவாடல் என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவ்விளையாட்டைப் பற்றி,
‘‘வாலிழை மடமங்கையர்
வரிமணல் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து’’ (புறம்.,11)
எனப் புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஐங்குறுநூறு இவ்விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்கள் இவ்விளையாட்டுடன் இணைந்த பக்தி இலக்கியங்களாக மிளிர்கின்றன.
தமிழகத்தில் விளையாடப்பட்ட இவ்விளையாட்டுக்கள் மகளிரின் மன ஒருமைப்பாட்டுக்காவும், விரைந்து செயல்பம் மனவெழுச்சி, கவனக் குவிவு போன்ற தூண்டல்களை ஊக்குவிக்கும் வகையிலும மக்களால் விளையாடப்பட்டன. எண்கள், எழுத்துக்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் காரணிகளாகவும் இம்மகளிர்விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. இவை உளவியல் சார்ந்த மனமாற்றங்களை ஏற்படுத்துவனவாகவும் விளங்கின எனலாம்.

Series Navigationஎது உயர்ந்தது?மழை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *