தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு

Spread the love

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை

அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி)

இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும்.

வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திரட்டிகள் உதவுகின்றன.

வலைப்பூக்கள் என்பன தனிநபரின் கருத்துகளைப் பதிவிக்கும் தளமாகும். இத்தளத்தில் உள்ள செய்திகளை பலரும் அறியச் செய்வதற்கு ஒரு முயற்சி திரட்டி என்ற அமைப்பாகும். பிளாக்கர் தளம் பல ஆங்கில வலைப்பூக்களை அவற்றின் செய்திகளை அறிவிக்கின்றது. இதுபோன்று தமிழ் வலைப்பூக்களின் செய்திகளை அறிவிப்பதற்காக அமைக்கப்படுவது திரட்டி ஆகும். பிளாக் அக்ரிகேட்டர் என்ற ஆங்கிலச் சொல்லிற்குத் திரட்டி என்ற தமிழ்ச்சொல்லை இணையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். குறைந்த அளவு மூன்று பதிவுகளைப் பதிந்தபின்பே திரட்டிகளில் இணைந்து கொள்ள இயலும் என்பது அடிப்படை நியதியாகும். செய்தியின் தலைப்பு செய்தி வெளியிடப்பெற்ற நாள்- நேரம் செய்தியை அனுப்பியவர் பெயர் பார்த்தவர்களின் எண்ணிக்கை போன்றன திரட்டிகளில் தரப்பெறுகின்றன. தலைப்புச் செய்திகள் போன்று அமையும் இத்தலைப்புகளைச் சொடுக்கினால் இச்செய்தியை அளித்த வலைப்பூவின் தொடுப்பு கிடைத்துவிடும். அதனைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடலாம்..

தமிழ் வலைப்பூக்களின் திரட்டிகள் பிரபலமான நிலையியல் பத்திற்கும் மேல் உள்ளன. தமிழ்மணம் திரட்டி இண்ட்லி தமிழ்வெளி மக்கள் நம்குரல் தமிழ்பெஸ்ட் தமிழ் நண்பர்கள் உலவு பதிவர் யாழ்தேவி போன்ற பல திரட்டிகள் தற்போது வலைப்பூக்கள் செய்திகளைத் தருவனவாக உள்ளன. இத்திரட்டிகளில் இருவகை உண்டு. ஒன்று தானாகத் திரட்டிக் கொள்ளும் திரட்டிகள். மற்றொன்று பதிவு செய்தபின் செய்திகளைக் காட்டும் திரட்டிகள்.

தானாகத் திரட்டும் திரட்டிகள் தம் திரட்டி முகவரியை வலைப்பூத்தளத்தில் இணைக்க உரிமை அளிக்கின்றன. இவ்வாறு இணைத்தபின் புதிய வலைப்பூ பதிவுகள் தானாக திரட்டியின் முன் பக்கத்தில் தெரிய ஆரம்பிக்கும்.

அவ்வப்பொழுது இடுகைகளை இணைத்தபின் அதனை அப்போதைக்கப்போது பதியச்செய்து வெளிப்படுத்துவன அடுத்தநிலையாகும். இந்நிலையில் இருந்து எல்லா திரட்டிகளும் தற்போது மேம்பட்டுவிட்டன.

இவ்விரு நிலைகளிலும் பதிவுகளை இணைக்கச் செய்யும் வழிமுறைகளும் சில திரட்டிகளில் உள்ளன. இவ்வகைப்பட்ட திரட்டிகளின் பங்கும் பணிகளும் பற்றி இக்கட்டுரை மதிப்பீடு செய்கின்றது.

தமிழ்மணம்- திரட்டி

தமிழ்த்திரட்டிகளில் முன்னோடியானதும் அதிக வாய்ப்புகளை அளிப்பதும் பரிசுகளை விருதுகளை அளிப்பதும் இத்திரட்டியாகும். இத்திரட்டியில் இணைய முதலில் வலைப்பூவினைப் பதிந்து கொள்ளவேண்டும். பதிந்தபின் தமிழ்மணத்தில் இருந்து பதியப்பட்ட தகவல் வந்ததும் பதிவுகள் இணைய ஆரம்பிக்கும்.

தமிழ்மணத்தில் இதுவரை இடம்பெற்றுள்ள மொத்த பதிவுகள் 11413(8.9.2013 அன்று நிலவரப்படி) ஆகும். ஒருநாளில் சராசரியாக 196 இடுகைகள் இத்திரட்டி வழி வெளியிடப்பெறுகின்றன. பின்னூட்டங்கள் சராசரியாக 830 என்ற அளவில் இடப்பெறுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் தமிழ்மணம்திரட்டியின் வலிமையை எடுத்துரைப்பனவாகும்.

தமிழ்மணம் திரட்டியில் முகப்பு இடுகைகள் பதிவுகள் ம திரட்டி குறிச்சொற்கள் வாசகர் பரிந்துரை சூடான இடுகைகள் திரைமணம் ஈழம் சினிமா இசை நகைச்சுவை அரசியல் அனுபவம் புனைவுகள் சமையல் நிகழ்வுகள் பொருளாதாரம் தொழில்நுட்பம் என்ற பல தலைப்புகளில் இடுகைகள் தொகுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு இடுகைக்கும் அதன் தலைப்பு முக்கிய அடையாளமாகும். கவர்ச்சிகரமான தலைப்புகள் நிறைய வாசகர்களைக் கவர்கின்றன. எழுதியவர் பெயர் நாள் நேரம் போன்ற தகவல்கள் முன்பகுதியிலும் பின்பகுதியில் அதனை அச்செடுக்கும் வசதியும் மென்நூலாக்கும் வசதியும் மேலதிக வசதிகளும் வலைப்பூவின் தகவல்களும் அளிக்கப்பெறுகின்றன. இவை அனைத்தும் தருவதன் வாயிலாக இணையும் வலைப்பூவின் அறிமுகம் அனைவரையும் எவ்வழியிலாவது சென்றடைவதற்கு வாய்ப்பாக உள்ளது. தற்போது குறிச்சொற்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

தமிழ்மணத்தின் வாயிலாகப் பெறப்படும் செய்திகளில் பல கவர்ச்சிகரமான தலைப்புகளைக் கொண்டிருந்தாலும் அவற்றில் உள்ள செய்திகள் பொருத்தமானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டியுள்ளது.

இண்ட்லி

இலங்கையை அடிப்படையாக வைத்துத் தொகுக்கப்பெறும் திரட்டியாக இன்ட்லி விளங்குகின்றது. இதன் பெயர் தற்போது மாற்றப்பெற்றுள்ளது இதனுள் இலங்கை செய்திகள் சினிமா தொழில்நுட்பம் படைப்புகள் நகைச்சுவை போன்ற தலைப்புகளில் வலைப்பூச்செய்திகள் தொகுத்தும் பகுத்தும்அளிக்கப்பெறுகின்றன. இதனுள் படங்களுக்குக்கென்றுத் தனிப்பட்ட இழை உள்ளது. இணையத்தில் உள்ள தமிழ் தொடர்பான பக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும்தளம் என்ற வாசகத்தைத் தலைமைத் தொடராகக் கொண்டு இது இயங்குகின்றது. இதனுள் தமிழ் திரையிசைப்பாடல்களும் சில காணொளிகளும் இணைக்கப்பெற்றுள்ளன. இதனுள் இணைக்கப்படும் செய்திகளின் தளத்திள் முகவரி தரப்பெறுவது குறிக்கத்தக்கது. மேலும் இத்தகவல்களை நேரடியாக யார்வேண்டுமானாலும் முகநூல் வழியாக இணைக்கும் வழிவகையும் உண்டு. இதனோடு இக்கருத்து தெரிவிக்கப்பட்டு எத்தனை மணிநேரம் ஆனது என்பதும் குறிக்கப்படுகிறது. மறுமொழி பரிந்துரை முதலிய தகவல்களும் தரப்பெறுகின்றன. இருப்பினும் இத்தளத்தினை நடத்துபவர் பற்றிய செய்திகள் அளிக்கப்பெறுவது அவர் சார்ந்த அரசியலை அறியஉதவும்.

திரட்டி

இது பாண்டிச்சேரியை மையமாக வைத்துத் தொடங்கபெற்ற திரட்டி என்றாலும் பின்னாளில் உலகு தழுவிய திரட்டியாக உருவெடுத்துள்ளது திரு வெங்கடேசன் என்ற ஊக்கம் மிக்க இளைஞரின் உழைப்பால் உருவான திரட்டி இதுவாகும். வாழ்த்தலாம் வாங்க புதுச்சேரி செய்திகள் மருத்துவச் செய்திகள் முதலியன தனி இணைப்புகளாக இதனுள் இடம்பெறுகின்றன. இதனுள் பதிவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. செய்திக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது.மேலும் கவர்ச்சிகரமான செய்திகள் வாசிக்கப்பெற்று அதில் சாதி மத இனச் சிக்கல்கள் இல்லாதவை மட்டும்வெளியிட அனுமதிக்கப்படுகின்றன. அவ்வப்போது இதனுள் பதிவுகளைப் பார்வையிடுவதில் சிக்கல் எழுகின்றன. இவற்றைச் சரிசெய்து கொள்ள இதன் அமைப்பாளர்கள் முன்வரவேண்டும்.

வலைப்பூக்கள்

அதிகமான அளவில் பகுப்புகளைக் கொண்ட திரட்டி இதுவாகும். இசை நடனம் இலக்கியம் காவியம்நாடகம் திரைஉலகம் கதை தொடர்கதை கவிதை கட்டுரை அரசியல் செய்திகள் தகவல் களஞ்சியம் பங்குச்சந்தை காதல் கல்வி ஆன்மீகம் மருத்துவம் உடற்பயிற்சி ஜோதிடம் அழகுக்குறிப்புகள் சமையல் மகளிர்மட்டும் நகைச்சுவை விளையாட்டு அறிவியல் புகைப்படம் வீடியோ ஓவியம் சிற்பம் வாழ்த்துகள் குட்டீஸ் கார்னர் பொழுதுபோக்கு தொழில் தொழில்நுட்பம் கணினி உலகம் மற்றவை என்று பல பிரிவுகளில் இதனுள் செய்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் இதனில் இந்நாளில் வந்த இடுகைகளின் தரவரிசையும் தரப்படுகிறது. மேலும் ஒவ்வொரு இடுகைக்கும் ஓட்டு கணக்கெடுப்பு நடக்கிறது. வலைப்பதிவரின் முகவரி வலைப்பதிவின் முகவரி வகைமை குறிச்சொற்கள் விவாதம் நண்பர்களுக்குச் சொல்ல என்று பல இணைப்புகள் இதனில் உள்ளன. இருப்பினும் இதனிலும் இதை நடத்துபவர் பற்றிய குறிப்புகள் இல்லை.

பதிவர்

செய்திகள் தொழில் நுட்பம் பொழுதுபோக்கு படைப்புகள் பயனுள்ளவை என்ற பகுப்புகளில் இத்திரட்டி தகவல்களைத் திரட்டுகின்றது. என்றாலும் பொதுவாக அனைத்துப் பதிவுகளும் தெரியும் நிலையில் இதன் முதல் பக்கம் அமைந்துள்ளது. புதிய பதிவுகள் என்ற தனித்தொடுப்பும் மின்னஞ்சலில் பெற என்ற தொடுப்பும் காணப்படுகிறது. இதிலும் அமைப்பாளர்கள் யார் என்ற விபரம் இணைக்கப்படவில்லை.

தமிழ்வெளி

தமிழ்வெளி திரட்டி பத்திரிக்கையாளர்களின் அனுபவம் கொண்டுத் திரட்டப்படும் திரட்டி ஆகும். இலங்கையில் இருந்து வெளியான சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கே அவர்களின் வழிகாட்டுதல்படி இயங்கும் இத்தளம் ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல் தருகின்றது. பெரியார் பொள்ளாச்சி நசன் தேவநேயப்பாவாணர் போன்றோரின் கருத்துகள் அடங்கிய தளங்களுக்குச் செல்ல இது தொடுப்புகளைக் கொண்டிருக்கிறது. இத்திரட்டி சிங்கப்பூர் வலைப்பதிவர்களுடன் இணைந்து மணற்கேணி என்ற தலைப்பில் வலைப்பதிவர்களான போட்டிகளை நடத்திப் பரிசளித்து பரிசளித்த பதிவுகளை நூலாக்கித் தருகின்ற அமைப்பாக விளங்குகின்றது

இதன் முதல் பக்கத்தில் சூடான பதிவுகள் என்று தற்போதைய மூன்று நாட்களில் வெளியான பதிவுகளை அறிவிக்கின்றன. அரசியல் விடுதலையும் கருத்துச் சுதந்திரமும் மிக்க திரட்டியாக இதனை இதன் அமைப்பாளர்கள் கொண்டுசெலுத்தி வருகின்றனர். இதனுள் குறிச்சொல் துரத்தல் என்ற புதுவகைத் தொகுப்பு பின்பற்றப்படுகிறது. இக்குறிச்சொல் துரத்தல் காரணமாக ஒரு குறிச்சொல்லின் அடிப்படையில் வந்த பதிவுகளின் செய்திகள் அனைத்தையும் விடாமல் படிக்க இயலும். எல்லாம் ஓரிடத்தில் என்பது இத்தளத்தின் குறிக்கோளாக விளங்குகின்றது. டிவிட்டர் முகநூல் போன்றவற்றில் தொடுப்புகளை அளிக்கும் வசதியும் இதனுள் உள்ளது. முக்கியமான தற்போதைய நிகழ்வுகள் குறித்த பதிவுகள் தனித்த நிறத்தில் இதனுள் காட்டப்படுகின்றன.

தமிழ் 10

மிக அதிகமான தகவல்களைத் தருகிற திரட்டி இதுவாகும். இதன் வழியாக இணைய வானொலி இணைய தொலைக்காட்சி நூலகம் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள இயலும். தமிழில் வெளிவரும் இணையங்களை இணைக்க ஒரு இணைப்புப்பாலம் என்ற தலைப்புடன் இந்தத் தளம் இயங்குகின்றது. செய்திகள் ஈழம் பாடல் பொது படங்கள் அரசியல் போன்ற பல தலைப்புகளில் இணையப் பதிவுகள் இங்குத் திரட்டப்படுகின்றன. வாசகர்களுக்கு ஓட்டளிக்கும் வசதி இதனுள்ளும் உண்டு. அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவுகள் முன்னணியில் இருக்கும். குப்பை எனக் குறிக்கப்பட்டவை ஒதுக்கப்பெறும்.

இ தமிழ் . நெட்

இத்திரட்டியில் இயங்குமுறைகள் அறிவிப்புகள் ஆகியன ஆங்கிலத்தில் தரப்பெற்றுள்ளன. தமிழ்ப்பதிவுகளை இணைப்பதற்கான திரட்டியாக இது விளங்குகின்றது. ஈழம்செய்திகள் காணொளி எனப் பல பக்கங்கள் இதனுள் உள்ளன.

ஒன் இண்டியா

இது ஒரு தேசிய திரட்டியாக விளங்குகின்றது. இந்திய மொழிகள் அனைத்திலும் செய்திகளைத் தரும் இத்தளம் குறிக்கத்தக்க செய்திகளை அளிப்பதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுள் பதிவுகளின் தொகுப்புகளும் காணப்படுகின்றன. இருப்பினும் செய்திகளுக்கு அளிக்கப்பெறும் முக்கியத்துவம் தனிநபர் பதிவுகளுக்கு இல்லை.

யாழ் தேவி

நாடுகளின் அடிப்படையில் வலைப்பூப் பதிவுகளை இணைக்கும் திரட்டியாக இது உள்ளது. இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்பூர் அவுஸ்திரேலியா பிரான்ஸ் ஜெர்மனி என்று பல நாடுகளுக்கான தனிதனிப் பதிவுத் தொகுப்புகளை இத்தளம் உருவாக்கியுள்ளது. கதைகவிதை கட்டுரை அனுபவம் நகைச்சுவை போன்ற பல பிரிவுகளும் இதனில் உண்டு. பகிரப்பட்டவை பதியப்பட்டவை என்ற இரு அடிப்படையில் இதன் வலைப்பூ செய்திகள் தொகுக்கப்படுகின்றன.

இத்தளத்தில் குறிக்கத்தக்க மாற்றம் என்பது இதனில் இடப்படும் இடுகையைச் சொடுக்கினால் தகவல் உள்ள வலைப்பூ பக்கத்திற்கு தனித் தொடுப்பு தராமல் யாழ் தேவி தளத்தின் பக்கத்திலேயே அந்த வலைப்பூவைக் காண்பிப்பது என்ற நிலை பின்பற்றப்படுகிறது.

தேன்கூடு

மறைந்த சாகரன் அவர்கள் முயற்சியால் தொடங்கப்பெற்ற இத்திரட்டி அவர் இறப்பிற்குப் பின்பு செயலிழந்தது. ஆனால் முன்னோடி திரட்டிகளில் இது ஒன்றாக செயல்பட்டு வந்தது.அவர் இறப்பிற்குப் பின்பு சில அன்பர்களால் மீண்டும் மீட்டு எடுக்கப்பெற்று இப்போது செயலாற்றி வருகின்றது. இதனிலும் அமைப்பாளர்கள் பற்றிய குறிப்பு இல்லை. சிறு சிறு படங்களுடன் இதனில் பதிவுகள் இணைக்கப் பெற்றிருப்பதால் அழகாக உள்ளது. இதிலும் பல பிரிவுகளில் பதிவுகள் தொகுக்கப் பெற்றுள்ளன.

இவ்வகைகளில் திரட்டிகள் செயல்பட்டு தமிழ் வலைப்பூக்களைப் பரவலாக்கி வருகின்றன. இவற்றை ஆராய்ந்ததன் அடிப்படையில் சிலமதிப்பீடுகளைப் பெற முடிகின்றது. அவை பின்வருமாறு.

திரட்டிகளின் செயல்முறைகளில் இன்னும் வளமை தேவைப்படுகின்றது. குறிப்பாக திரட்டிகளின் முகவரி அமைப்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக இன்னும் வலிமையுடையதாக திரட்டிகளை மாற்றியமைக்க இயலும்.

பதிவர்களுக்கான போட்டிகள் அவ்வப்போது அறிவிக்கப்படுவது தமிழ்ப் பதிவுகள் வளர வழிசெய்யும். தமிழ்மணம் தமிழ்வெளி போன்றவற்றின் இந்நடைமுறை மற்ற திரட்டிகளிலும் செய்யப்படவேண்டும்.

பதிவர்கள் அனைத்துத் திரட்டிகளிலும் தம் பதிவுகளை இணைத்து வைத்திருப்பதன் காரணமாக ஒரு திரட்டியில் வந்த அதே பதிவு அடுத்த திரட்டியிலும் காட்சிப்படும்போது சலிப்பு தோன்றுகிறது. எனவே பதிவர்கள் ஒரு திரட்டியில் அளித்துவிட்ட செய்தியை மற்றவற்றில் தராமல் காக்க திரட்டிகள் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஒரு பொருள் குறித்த திரட்டிகளை ஆவணப்படுத்தி மென் நூலாக ஆக்க வேண்டும்.

திரட்டிகளின் செயல்பாடுகளினால் தமிழ் வலைப்பூக்கள் பரவலாக்கம் பெறுகின்றன. அவற்றின் பணநோக்கமில்லாத பணி தமிழ் வளர்க்கும் பணியாகும்.


M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigation’பிறர் தர வாரா..?’மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்