தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்

Spread the love

தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘
சிறகு இரவிச்சந்திரன்.
நான்கு ஆண்டுகளாக, குறும்படங்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில், செயல்பட்டு வருகிறது அருணின் ‘தமிழ் ஸ்டூடியோ “ ஆகஸ்டு 15 அன்று, வருடா வருடம் சிறந்த குறும்பட இயக்குனர் ஒருவருக்கு விருதும், பணமும், பாராட்டுப்பத்திரமும் கொடுத்துக் கவுரவிப்பதைத் தன் கடமையாக எண்ணி செயல்படும் அமைப்பு இது. இதோடு ‘படிமை ‘ என்றொரு திரைப்படப் பயிற்சிக் கூடமும் நடத்துகிறது.
2012 க்கான விருதைப் பெற்றவர் அம்சன் குமார். இயற்பெயர் சேதுக்குமார். 1952ல் திருச்சியில் பிறந்து, பள்ளி, கல்லூரி நாட்களிலேயே இலக்கியம் பால் நாட்டம் கொண்டு, நண்பர்களுடன், கணையாழி, ஞானரதம் பத்திரிக்கைகளில் வந்த கதைகளைப் பற்றி விவாதம் நடத்தியவர். அவரே ஆசிரியராகக் கொண்டு நடத்திய பத்திரிக்கையான ‘இன்று’ வில் கதைகள் பல எழுதியவர். திருச்சி பிலிம் போரம் என்ற அமைப்பைத் தொடங்கி, உலகத் திரைப்படங்களைத், திருச்சி மக்களுக்கு, வெளிச்சம் போட்டுக் காட்டியவர். வாழ்வாதாரத்திற்காக சென்ட்ரல் வங்கியில் சேர்ந்து, கோவைக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் ‘தர்ஷணா ‘ பிலிம் சொசைட்டி’ ஆரம்பித்து தன் வேட்கையைத் தொடர்ந்தவர். தற்போது இருப்பது சென்னையில்.
1980ல் அவரது முதல் நூல் ‘ எழுத்தும் பிரக்ஞை ‘ 1990ல் இரண்டாவது நூல் ‘சினிமா ரசனை ‘ முதல் பதிப்பு விற்றுப்போய், அடுத்த பதிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது இது. படிக்கிற காலத்திலேயே, அசோகமித்திரனால் ஈர்க்கப்பட்ட இவர், அவரை ஆவணப் படமாகவும் எடுத்திருக்கிறார். கி.ராஜநாராயணனின் “ கிடை “ குறுநாவல் இவரால் ‘ ஒருத்தி ‘ என எடுக்கப்பட்டு இன்றளவும் பாராட்டுகளை அள்ளுகிறது. வரவேற்பு பெற்ற அவரது இன்னொரு குறும்படம் ‘ பாரதி ‘.
பாலு மகேந்திரா தலைமையில், இயக்குனர்கள் வசந்த், பாலாஜி சக்திவேல், டிராட்ஸ்கி மருது, ‘ காட்சிப்பிழை ‘ ஆசிரியர் சுபகுணராஜன் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. அரங்கு நிறைந்த விழா, இனிதே முடிந்தது.
பாலு மகேந்திராவின் பேச்சுதான் ஹைலைட்.
“ இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உறவு இருந்தே ஆக வேண்டும். என்னுடைய படங்களில் ‘ ஏதாவது ‘ இருந்தால், அது இலக்கியத்தின் காரணமாகத்தான். A good cinema should be like a mother’s meal. ஒரு தாயின் சாப்பாடு, மகன் வயிற்றைக் கெடுக்காத அளவிற்கு, கனிவோடும் கவனத்தோடும் செய்யப்படும். அதேபோல் பாக்கறவன் மனசைக் கெடுக்காத சினிமா, நல்ல சினிமா. மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை உசுப்பி விடாமல் இருக்க வேண்டும் நல்ல சினிமா “
அம்சன் குமார் தன் ஏற்புரையில்: “ நான் 20 வருஷமா குறும்படம் எடுத்திட்டிருக்கேன். விருது வாங்கறது சந்தோஷம் தான். ஆனாலும் இதப் புதுசா வர்றவங்களுக்கு கொடுங்க.. அப்போதான் இன்னும் நல்லா பண்ணுவாங்க “ என்றார்.
பொதுவாக இலக்கியவாதிகளுக்கும், குறும்படக்காரர்களுக்கும் வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்காது. அம்சன்குமாரின் மனைவி தாராவும், மகனும் அவருடன் சேர்ந்தே பயணிப்பது ஒரு ஆரோக்கிய சூழல்.
0
கொசுறு
அரங்கின் உள்ளே, அறிவை நிரப்பும் விசயங்களாக இருந்த போதிலும், அதற்கு முன்னே, வெளியே, சுடசுட வெங்காய வடையும், ( உப்பு போட மறந்த ) சட்னியும் கொடுத்து அசத்தி விட்டார் அருண். அதற்கு ஈடு கட்டுவது போல், உப்பும் காரமுமாக இருந்தது அவர் பேச்சு.
கல்லூரிக் காலத்தில், லிபர்டி தியேட்டரில் படம் பார்க்க, மாம்பலத்திலிருந்து நடந்தே போகும் எங்கள் கோஷ்டி. அப்போது, வடக்கு உஸ்மான் சாலையில், ஹோட்டல் கங்காவின் ரவா தோசையும், வெங்காய சட்னியும் எங்களின் தவிர்க்க முடியாத மெனு. எம்.எம். பிரிவியூ தியேட்டர் வாட்ச்மேன் சொன்னார்: “ இன்னும் இருக்குதுங்க கங்கா” எதுவும் மாறவில்லை கங்காவில்.. பேர் ராசி போலிருக்கிறது. ஒரே வித்தியாசம்: அன்று முப்பது பைசா.. இன்று முப்பத்தி மூன்று ரூபாய். எனக்கு அதிஷ்டமில்லை. எனக்கு கிடைத்தது புதீனா சட்னிதான்.
0

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்