தளை

கு. அழகர்சாமி

பட்டாம் பூச்சி படபடத்து வரும்-

பக்கம் நெருங்கி ஆச்சரியமாய்ப் பார்க்கும் அதை.

ஏன்

தலை

கீழாய்த்

தொங்கிட்டிருக்கே?

என் தலைவிதி!

பறக்கலாமே!

அது என்னால முடியாது.

வெளவால் பறக்கலியா?

வெளவாலுக்கு ரெண்டு றெக்கைகள்;

ஒனக்கு மூணு றெக்கை இருக்கே;

இன்னும் வேகமா பறக்கலாமில்லையா.

றெக்கை மாதிரி இருக்கு; றெக்கை இல்லியே.

ஏன்?

றெக்கன்னா காத்துல அடிச்சு பறக்கனுமே.

அடிச்சுப் பற; றெக்க முளச்சிடும்.

போயிடு போயிடு.

ஏன் பயப்படற.

அவன் வர்றான்.

என்ன செய்வான் அவன்?

என்

உயிர எடுப்பான்.

எப்படி?

ஒரு ஸ்விட்ச போடுவான்;

அப்படியே நான் சுத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

எங்க பறக்கறது?

ஏன் பதறுற?

நான் ஓய்வெடுக்கும் போது

வா.

எப்ப ஓய்வெடுப்பே?

தெரியாது.

தெரியாதா?

நேரங் காலமில்ல; அவன்

எப்ப  ஸ்விட்ச அழுத்துவான்

எப்ப  ஸ்விட்ச தளர்த்துவான்- தெரியாது.

கடகடவென்று மின் விசிறி தன் கதியில் சுழலும்.

பறக்கிறியே இருக்கிற இடத்திலேயே

பட்டாம் பூச்சி பார்த்து பரவசமாகும்.

இல்ல-

பம்பரம் குத்துறேன்  பார்க்காத காத்துல.

பறந்துட்டு வந்துறேன் அப்படியே.

பறந்து வருதலா, சுழன்று தொங்கிட்டிருக்கேன்.

இல்ல, தளையறுத்துப் பற.

தளையறுத்துப் பறக்கிறேன்னு

தொப்புன்னு கீழே விழுந்திட்டா?

தைரியமே ஜெயம்.

பயமாயிருக்கே

ஒன் பயத்தால  சுத்துற நீ; அவன் பயத்தால இல்ல.

பாவமா இல்லையா பார்த்தா என்னை?

ஒனக்கு ஒன் மேல பரிதாபம்.

கீழ விழுந்து செத்துட்டா?

“விதானத்து செக்கு மாடா சுத்துறதற்கு

விழுந்து சாவது மேல்.

போ, போ, தல சுத்துது.

சிறகடித்துப் போய் பட்டாம் பூச்சி தன்

சக பட்டாம் பூச்சியிடம் மூச்சிரைக்க சொல்லும்:

‘ஒரு விநோதப் பட்டாம் பூச்சி!

இருக்கிற இடத்திலே பறக்காமல் பறக்குது பாவம்!

கு. அழகர்சாமி

Series Navigationதமிழ் நாட்டில் இத்தனை மாவட்டங்கள் தேவையா ?