தாஜ்மஹால் டு பிருந்தாவன்

author
0 minutes, 49 seconds Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சரோஜ் நீடின்பன்

 

சந்தீப்  முகர்ஜி  என் நண்பன்.  கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன்   உத்திரப்ரதேசத்திலுள்ள  இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இளம்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தான். நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பணிபுரியும் இடத்தினருகிலேயே ஊருக்குள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நானும் அவனும் வசித்து வந்தோம். பக்கத்து வீட்டிலிருந்த குடும்பத்தினரிடம் காலையும் இரவும் எங்கள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டோம்.

 

சுமாரான சம்பளம். பேச்சிலர் வாழ்க்கை. கவலையின்றி இருந்தோம். இந்த கால இளைஞர்களைப் போல் சனிக்கிழமை வந்ததும் ‘மச்சி, ஓபன் த பாட்டல்’ என்று குதூகலிக்கும் பழக்கம் எங்களுக்கு இருந்ததில்லை.  ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊர்க்கோடியில் இருந்த பாலாஜி மந்திருக்குச் சென்று விடுவோம். ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிவோரும், ஊர் மக்களும் குடும்பத்துடன் வருவார்கள். ரொம்ப கலர்புல்லாக  இருக்கும். நான் தமிழ்க் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருப்பேன், அவன் பெங்காலியினருடன் பேசுவான். வீட்டைவிட்டு வெகுதொலைவில் வாழும்போது நம் மொழி தெரிந்தவருடன் பேசும் சுகமே அலாதி தான். இருட்டும்போது லைப்ரரியன் சரோஜாசீனிவாசன் மாமி வீட்டிற்கு, அவருடைய மூன்று  மகன்களுடன் போய், சுவையான பில்ட்டர் காபி சாப்பிட்டுவிட்டு  வீடு திரும்புவோம்.  ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ள பரேய்லி நகரத்திற்கு, காலையிலேயே கிளம்பிப் போய்விடுவோம். ஷாப்பிங் செய்து விட்டு, 2  இந்தி சினிமா படங்கள் பார்த்துவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு ஆட்டோரிக்க்ஷாவில் வீடு திரும்புவோம்.  இது தான் எங்கள் ரொட்டீன்.

 

நாங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசிக்கொண்டதால், அவன் தமிழ்  கற்றுக்கொள்ளவோ, நான் பெங்காலி தெரிந்துகொள்ளவோ  முயலவில்லை. சந்தீப் நல்ல பையன். அவன் பெங்காலி என்பது அவனைப் பார்த்தாலே தெரிந்துவிடும். அவன் ஆங்கிலமும், இந்தியும் பேசும் ஸ்டைல், மூக்குக் கண்ணாடியை அடிக்கடித் துடைத்துப் போட்டுக்கொள்ளும் ஸ்டைல், லீவு நாட்களில் அவன் அணிந்துகொள்ளும் வேட்டியின் நுனியை ஜிப்பாவின் ஒரு சைடு பாக்கெட்டில் சொருகிக் கொள்ளும் ஸ்டைல், எல்லாம் டிபிகல் பெங்காலி. அவன் நல்ல மூடில் இருக்கும் போது, பாடும் ரவீந்திர சங்கீத் நன்றாக இருக்கும்.  ஆனால் எல்லா பாடல்களும் ஒரே ராகத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றும்.  நானும் குளிக்கும்போது சத்தமாக டி.எம்.எஸ் பாடல்களைப் பாடுவேன்.  ‘ஹரே பந்து, ஷாந்த் ஹோஜாவ்’ என்று என்னைக் கேலி செய்வான். நான் அவனை ‘நண்பா’என்று அழைப்பேன். அவன் என்னை  ‘பந்து’ என்று கூப்பிடுவான்.

 

சந்தீப் நல்ல உயரமாக சிவப்பாக அழகாக இருப்பான்.  இளம்பெண்கள் இவனை  ஆர்வமுடன் பார்ப்பார்கள்.  வலியவந்தும் பேசுவார்கள்.  ஆனால் சந்தீப் அவர்களிடம் கண்ணியத்துடன் எட்ட இருந்தே பேசுவான், பழகுவான். ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் சில பெங்காலி விஞ்ஞானிகள் அவனைத் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தும் இவன் போகவில்லை.  காரணம் கேட்டதற்கு, ‘அவங்க பொண்ணுக்கு நான் மாப்பிள்ளையா சரிப்படுவேனான்னு விசாரிக்கக் கூப்பிடறாங்க. என் குடும்பம், ஜாதகம் பத்தியெல்லாம் கேக்கறாங்க, பந்து’ என்றான்.  ‘அதனாலென்ன, மைக்ரோ பயோலஜி டிபார்ட்மெண்ட் ஹெட் சட்டர்ஜி சாரோட பெண் அபர்ணா அழகா இருக்கா.  அவளும் உன்னை சைட் அடிக்கறான்னு தோணுது, ஓகே சொல்றது தானே’ என்றேன்.  என்னை அடிக்க வந்தான்.  ‘சீ, அதெல்லாம் பாவம்.  நம்ம அப்பா அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு நம்பள படிக்க வெச்சாங்க. எங்கப்பா என் படிப்புக்காக 4 ஏக்கர் நிலத்தை வித்தார்.  அவங்க பார்த்து ஏற்பாடு செய்யற பெண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். எனக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பார்க்கணும்னு அவங்களுக்குத் தெரியும்’ என்றான். ‘உன் பெற்றோர் ரொம்பப் பெருமைப் படுவாங்க நண்பா. உன் மனசுக்கேத்த மாதிரி நல்ல மனைவி அமைவாள்’ என்று மனதார வாழ்த்தினேன்.

 

அடுத்த மாதம் அவனை  ஊருக்கு வரச்சொல்லி அவன் பெற்றோரிடமிருந்து கடிதம் வந்தது.  ஒரு வாரம் விடுமுறைக்கு எழுதிக் கொடுத்துவிட்டு சந்தீப் அவன் சொந்த ஊரான சிங்குருக்குச் சென்றான்.  வாரக் கடைசியில், சிங்குரிலிருந்து எங்கள் ஆபீசுக்கு ட்ரங்கால் போட்டு என்னைப் பேச அழைத்தான். அவனுக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து இருப்பதாகவும், கல்யாணத்தை உடனே நடத்த இருப்பதாகவும், விடுமுறையை இன்னும் 2 வாரங்கள் நீட்டிக்கும்படி எங்கள் நிலைய இயக்குனருக்கு தந்தி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தான்.  ‘பெண்ணைப்  பார்த்தாயா? எப்படி இருக்கிறாள், என்ன படித்திருக்கிறாள்?’ என்று கேட்டேன்.  ‘நான் இன்னும் பெண்ணை பார்க்கலை. அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு.  சுசித்ரா லிடரேச்சர் கிராஜுவெட்டாம்.  அடுத்த வாரம் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க. நாளைக்கு தான் மந்திர்லே அவளைப் பார்ப்பேன்’ என்றான்.  ‘சந்தீப், கலயாணம் ஆனதும் உன்  மனைவியைக் கூட்டிட்டு வருவியா?’    என்று கேட்டேன்.  ‘ஆமாம் பந்து, என் பேரென்ட்ஸும் கூட வருவாங்க.  வேறே வீடு பார்த்து  செட்டப் பண்ணலாமுன்னு சொல்றாங்க’ என்றான்.  ‘வேண்டாம்  சந்தீப், நீ வேற வீடு தேடிப் போகவேண்டாம் . நான் ஒரு பிஜி அகாமடேஷன் பார்த்துக்கறேன்.  நீ இந்த வீட்டிலேயே உன் பேமிலி செட்டப் பண்ணிக்கோ. டோன்ட்வொரி நண்பா.  எப்போ வருவேன்னு தெரியப் படுத்து, நான் வீட்டை சுத்தம் செய்து ரெடியா வைக்கிறேன்’ என்றேன்.  ‘ரொம்ப  தேங்க்ஸ் பந்து; என்றான்.  ‘ஆமாம், கல்யாணத்திற்கு எங்களை எல்லாம் இன்வைட் பண்ணமாட்டியா சந்தீப்?’ என்று கேட்டேன்.   ‘இங்கே எங்க கிராமத்திலே தான் கல்யாணம் நடக்கும்.  தங்கும் வசதி அவ்ளோ போதாது.  நாங்கள் இஜ்ஜத்நகர் வந்ததும் எல்லாரையும் கூப்பிட்டு சின்னதா பார்ட்டி குடுத்தடலாம்னு அப்பா சொன்னார்’ என்றான்.  ‘சரி, அப்படியே செய்யலாம்.  எனக்கும் இப்போ லீவு கிடைக்குமான்னு தெரியலே,எனிவே, ஆல் தி பெஸ்ட் பார் யுவர் ஹாப்பி வெட்டிங் நண்பா’ என்றேன்.

 

கல்யாணத்தை முடித்துக் கொண்டு சந்தீப் அவன் மனைவி மற்றும் பெற்றோருடன் நிறைய சாமான்களுடன் ஊருக்கு  வந்தான்.  தன் மனைவியையும், பெற்றோர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். பெரிய கண்கள், அகன்ற நெற்றி, அழுத்தமான தாடை, சிரித்த முகத்துடன் சுசித்ரா அழகாக இருந்தாள்.  சந்தீப்புக்கு பொருத்தமாக இருந்தாள்.  பரேய்லி ரயில் நிலையத்திலிருந்து அவர்களை வேன் ஒன்றில் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.  வீடு சுத்தமாக வைத்திருந்ததைப் பார்த்து எனக்கு தேங்க்ஸ் சொன்னான் சந்தீப்.

பக்கத்து  வீட்டிலிருந்து டீ வந்தது.  அதை வாங்கி அனைவருக்கும் கொடுத்து விட்டு, சுசித்ரா மட்டும் சாப்பிடாமல் இருந்தாள்.  டீ காபி எதுவும் சாப்பிட மாட்டாளாம்.  பால் மட்டும் தான் குடிப்பாளாம்,  சந்தீப்பின் அம்மா சொன்னார். நான் பக்கத்து வீட்டுக்குப் போய்க்கேட்டு பால் வாங்கி வந்து கொடுத்தேன். பிறகு, அவர்கள் கொண்டுவந்திருந்த மூட்டைகளை  எல்லாம் பிரித்து அடுக்கினோம்.  சுசித்ராவும் சந்தீப்பின் அம்மாவும், சமையலறையில் பொருட்களை அடுக்கி வைத்தார்கள். நான் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, என்  பிஜி அறைக்குச் சென்று குளித்து  விட்டு வேலைக்குச் சென்றேன்.

 

 

மாலையில் சந்தீப் வீட்டிற்குச் சென்றேன்.  எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  ‘சந்தீப், அவர்களை  பாலாஜி மந்திருக்குக் கூட்டிப்போயேன்’ என்றேன்.  ‘பாலாஜி  மந்திரா? எங்கே இருக்கு’ என்று ஆர்வமுடன் கேட்டாள் சுசித்ரா.  ‘ஊர்க்கோடியில் இருக்கிறது, வாங்க  மெதுவா நடந்து போகலாம்’ என்று அழைத்துப் போனேன்.  கோவிலைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே நுழைந்து ஒவ்வொரு சன்னிதியிலும் சமஸ்க்ருத ஸ்லோகங்களைச் சொல்லிக் கும்பிட்டாள் சுசித்ரா. கிருஷ்ணர் விக்ரஹத்தின் முன் அமர்ந்து கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்தாள்.  சந்தீப்பின் பெற்றோர் தங்கள் மருமகளின் கடவுள் பக்தியைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

நான்  சந்தீப்பிடம், நம்மோடு வேலை செய்பவர்களெல்லாம், எப்போ பார்ட்டினு கேட்கிறார்கள், உனக்கு ஏதோ ப்ரெசென்ட் பண்ணனுமாம், நீ  தான் வந்து அவங்களுக்கு சொல்லணும்’ என்றேன். நம்ம நிலையத்திலிருக்கும் ஹால்லேயே பார்ட்டி வைச்சிக்கலாம். வரும்  சண்டே லஞ்சுக்கு வரச் சொல்லலாம்’ என்றான்.  பிறகு அவனைத் தனியே அழைத்துப் போய், ‘ஹேய் , பர்ஸ்ட் நைட் எப்படி இருந்துச்சு?’ என்றேன். ‘ஷட் அப்,  கோவில்லே பேசற பேச்சா இது’ என்று  கோபித்தான். ‘ என்னாச்சு நண்பா,   எல்லாம் ஓகே தானே?’ என்றேன். ‘நான் சென்ஸ், என்ன கேட்கறதுன்னு வெவஸ்தையே இல்லையா.  தட்ஸ் மை பிரைவேட் மேட்டர்’ என்றான்.  நான் சற்று எல்லை மீறி விட்டேனோ என்று நினைத்து அமைதியாகிவி ட்டேன்.

 

பார்ட்டி நன்றாக நடந்தது.  சந்தீப் எல்லோரிடமும் சுசித்ராவையும் அவன் பெற்றோரையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.  சுசித்ராவும் அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகினாள்.  சந்திப்பும் சுசித்ராவும் பொருத்தமான ஜோடி தான் என்று விருந்துக்கு வந்த அனைவரும் பாராட்டினார்கள்.

 

சந்தீப்புக்கு இன்னும் ஒரு வாரம் விடுமுறை பாக்கி இருந்தது. திங்களன்று எனக்கு வேலை அதிகமாக இருந்தது.  மறுநாள் மாலையில் அவன் வீட்டிற்குச் சென்றபோது, அவன் ஜுரத்துடன் படுத்திருந்தான்.  முகம் சிவந்திருந்தது.  என்னாச்சு, சந்தீப்?’ என்றேன்.  ‘லைட்டா பீவர் இருக்கு.  ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்’ என்றான்.  போன வாரம் கூட இப்படித்தான், கல்யாணம் ஆன மறுநாளே ஜுரம் வந்து படுத்துட்டான். ரெண்டு நாள்லே சுமாராச்சி. இப்போ மறுபடியும் பீவர் வந்திருக்கு’ என்றார் அவனுடைய அப்பா’.  ‘வா , டாக்டரிடம் போகலாம்’ என்று கூப்பிட்டேன்.   ‘வேண்டாம், ஊர்லே டாக்டர் கொடுத்த மருந்து இருக்கு, போட்டுக்கிட்டேன், சரியாயிடும்’என்றான்.  சுசித்ரா அவனுக்கு மருந்து கொடுத்து நன்றாகப் பார்த்துக் கொள்வதாக அவனுடைய  அம்மா சொன்னார்.  மறுநாள் புதனன்று அவர்கள் ஊருக்குத் திரும்புவதாகவும், சந்தீப்பும் சுசித்ராவும் வெள்ளியன்று ஆக்ராவில் தாஜ் மஹால் பார்க்கப் போவதாகவும் சொல்லிவிட்டு, அவர்கள் திரும்ப வந்ததும் என்னை அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி, சந்தீப்பின் அப்பா கேட்டுக் கொண்டார். ‘ஆஹா, ஹனிமூனுக்கு தாஜ்மஹாலா,  நடத்து நண்பா’ என்றேன், சந்தீப்பைப் பார்த்து.  அவன் வெட்கத்துடன் சிரித்தான்.

 

புதனன்று  அவன் பெற்றோரை ஊருக்கு அனுப்பிவிட்டு,  வெள்ளியன்று ரயிலில் சுசித்ராவை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக ஆக்ராவுக்குப் பயணமானான் சந்தீப்.  ‘என்ஜாய்’என்று சொல்லி வழி அனுப்பி வைத்தேன்.

 

அடுத்த திங்களன்று காலையில் ரிசர்ச் லேபில் வேலை செய்துகொண்டிருந்த எனக்கு ட்ரங்கால் வந்திருப்பதாக தகவல் வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தபடியே ஆபீசுக்குப் போய் போனை எடுத்துப் பேசினேன். ‘பந்து, சுசித்ராவைக் காணவில்லை’ என்று கதறினான் சந்தீப். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.  ‘என்ன, காணலியா!  என்னய்யா சொல்றே,  விளையாடாதே, எங்கிருந்து பேசறே?’ என்று கேட்டேன்.  ‘நான்  பிருந்தாவனத்திலிருந்து பேசறேன்.  சனிக்கிழமை ராத்திரி இங்கு வந்தோம்.  இங்கு ஒரு லாட்ஜிலெதான் தங்கி இருந்தோம். நேற்று காலையிலிருந்து சுசித்ராவைக் காணலே.  நேற்று நான் தூங்கிட்டிருந்தபோது எதிரிலிருக்கும் ரங்கஜி மந்திர் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாள்.  திரும்பி வரவே இல்லை. இங்கே எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்துட்டேன்.  எனக்கு பயமாயிருக்கு, பந்து.  போலீஸ்டேஷன்லே  கம்ப்ளைண்ட் குடுக்கணும், பணம் போதாது.   பாங்க்லே இருந்து பணம் டிரா பண்ணிக்கிட்டு நீ உடனே இங்க வரமுடியுமா, பந்து, ப்ளீஸ்” என்று அழுகுரலில் கேட்டான்.  ‘இப்பவே  கிளம்பி வரேன்.  அங்கே தான் எங்கேயாவது வழி தெரியாமல் போயிருப்பாள். நீ கவலைப் படாதே. நான் ராத்திரிக்குள்ளே ரயிலோ, பஸ்ஸோ பிடிச்சி வந்துடறேன்.  உன் லாட்ஜ் விலாசம் சொல்லு’ என்று கேட்டுக் குறித்துக் கொண்டேன்.

 

சந்தீப்புக்கு உடல் நலம் சரியில்லாததால் அவன் உதவிக்காக லீவு வேண்டும் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, பேங்க் சென்று பணம் எடுத்துக் கொண்டு பரேய்லி ரயில் நிலையத்திற்கு விரைந்தேன்.  மதுரா செல்ல நின்றிருந்த, கூட்டம் நிரம்பி வழிந்த ரயிலில், ஜெனெரல் கம்பார்ட்மெண்டில் இருக்கைகளுக்கு நடுவே தரையில் அமர்ந்து பயணம் செய்தேன்.  மதுராவிலிருந்து பஸ் பிடித்து பிருந்தாவன் சென்று அந்த லாட்ஜ் அறையின் கதவைத் திறந்த போது, அழுது  சிவந்த முகத்துடன்,  சந்தீப் கட்டிலில் படுத்திருந்தான். அவனருகில் உட்கார்ந்து ‘என்ன நடந்தது? என்று கேட்டேன்.   எழுந்து என் தோளில் சாய்ந்து விம்மி விம்மி அழுதான்.  அவன் முதுகைத் தடவி ஆசுவாசப் படுத்தினேன்.  அவன் உடம்பு கொதித்தது.  நாங்கள் ஒன்றாக இருந்த 2 வருடங்களில் ஒரு நாள் கூட அவன் ஜுரம் என்று படுத்ததில்லை.

 

 

சந்தீப்பும் சுசித்ராவும் வெள்ளிகிழமை மாலையில் ஆக்ராவுக்குப் போய்ச் சேர்ந்து ஒரு  லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டார்களாம்.  அன்றிரவு பௌர்ணமி நிலவில் தாஜ் மஹாலைச் சுற்றிப் பார்த்து போட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டார்களாம்.  இரவு அறையில் தங்கிவிட்டு, மறுநாள் மதுராவிற்கு பஸ்ஸில் சென்று, அங்கிருந்த கோவில்களுக்கெல்லாம் போனார்களாம்.  கடைவீதிக்குக் கூப்பிட்டால், வேண்டாம், பிருந்தாவன் போகலாம் என்று சுசித்ரா சொன்னாளாம்.  உடனே பஸ் பிடித்து ரங்கஜி மந்திருக்கு எதிரில் இருந்த அந்த லாட்ஜுக்கு வந்து அறை எடுத்து இரவு தங்கினார்களாம்.  சந்தீப்புக்கு ஜுரம் வந்துவிட்டதால், அவனுக்கு மாத்திரையும் பாலும் கொடுத்துவிட்டு, சுசித்ரா ஒரு பெட்ஷீட் விரித்துத் தரையில் படுத்துக் கொண்டாளாம். நேற்று ,ஞாயிறன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு ,தூங்கிக் கொண்டிருந்த சந்தீப்பை எழுப்பி எதிரிலிருக்கும் ரங்கஜி மந்திருக்குப் போய்வருகிறேன் போனவள் தான், திரும்பி வரவே இல்லையாம்.

 

சந்தீப் 9 மணி வாக்கில் எழுந்து தயாராகி ,சுசித்ராவைத் தேடி ரங்கஜி மந்திருக்குப் போய்ப் பார்த்தானாம் . அவள் அங்கு இல்லை . பிறகு பக்கத்திலிருக்கும் சின்னச்சின்ன கோயில்களிலெல்லாம் நுழைந்து பார்த்தானாம் . அவளைக் காணவில்லை . மீண்டும் லாட்ஜுக்கு   வந்து விசாரித்ததில் அவள் திரும்பவில்லை என்று சொல்லவே , அறைச் சாவியை அவர்களிடம் கொடுத்துவிட்டு , மீண்டும் வெளியில் வந்து ஒவ்வொரு  கோயிலாகத் தேடிவிட்டு, ரங்கஜி மந்திருக்கு மறுபடி சென்று மாலை வரைத் தேடினானாம் .  அவளைத் தொலைத்து விட்டோம் என்று இடிந்துபோய் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், ஜுரமும் அதிகமாக, ஒரு மாத்திரையும் பாலும் சாப்பிட்டு விட்டு அசதி மேலிட அறைக்குப்போய்க் கட்டிலில் படுத்தானாம் . இரவெல்லாம் தன்வயமிழந்து தூங்கி விட்டு, இன்று காலை எழுந்து முதல் காரியமாக எனக்கு ட்ரங்கால் செய்தானாம் .

 

தாஜ்மஹாலில் எடுத்த போட்டோவைக் காட்டினான் .  கருப்பு வெள்ளை போட்டோ.  அதில் இருவரும் தாஜ்மஹால் முன்னால் நின்று சகஜமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

‘சந்தீப், சுசித்ரா வெளியில் போனப்போ என்ன சொல்லிவிட்டுப் போனாள்? பை ஏதாவது எடுத்துப்  போனாளா? என்று கேட்டேன்.  ‘நான் தூங்கிட்டிருந்தேன், சரியா பார்க்கலை.  அவள் கிட்டே பணம் இருக்கான்னு கூடத் தெரியலே.  நகைக்காக  அவளை யாரும் ஏதாவது பண்ணி இருப்பாங்களா?’ என்று  கேட்டுவிட்டு அழுதான்.  ‘சரி, ரொம்ப ராத்திரி ஆயிடுச்சி.  நாளைக் காலையில் மறுபடியும் தேடிட்டு, கிடைக்கலேன்னா, போலீஸ் கிட்டே போகலாம். இப்போ நீ படுத்து ரெஸ்ட் ஏடு’ என்றேன்.  தூக்கம் வரவில்லை.  அடிக்கடி எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.  ‘சந்தீப், பேசாம படு, அப்ப தான் நாளைக்கு சுற்றித் திரியமுடியும்’, என்றேன்.

காலையிலேயே  எழுந்து விட்டோம்.  குளித்துவிட்டு ஒரு ஆட்டோரிக்க்ஷா பேசிக்கொண்டு ஒரு கோயில் விடாமல், ஒரு தெரு விடாமல் தேடிப் பார்த்தோம் .  ஆயிரக்கணக்கான முகங்களை ஏறிட்டு நோக்கினோம்.  அவள் முகம் தென்படவில்லை.  மதியம் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு கடைத்தெருவில் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு வேளை, என்னைப் பிடிக்கலைன்னு ஊருக்குப் போயிருப்பாளோ? அவள் ஊருக்கு ட்ரங்கால் போட்டுப் பார்க்கலாமா’ என்றான் சந்தீப்.  எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘டே என்னடா சொல்றே? உங்களுக்குள்ளே எதனா சண்டை வந்திச்சா ?’ என்று  கேட்டேன்.  இல்லையில்லை, சண்டையெல்லாம் இல்லை, ஆனா அவளுக்கு  எதிலும் இண்டரெஸ்ட் இல்லாத மாதிரி எனக்குத் தோணுச்சு’ என்று பட்டும் படாமலும் சொன்னான்.

 

அவனை இழுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பி, ‘ஹேய் மரியாதையா என்ன நடந்துச்சுன்னு மறைக்காமல் சொல்’ என்று சத்தமாகக் கேட்டேன்.  ‘நிஜமாகவே சண்டை  எதுவும் இல்லை பந்து, கல்யாணம் ஆனதிலிருந்தே அவள் என்னிடம் அதிகம் பேசலை. எதிலும் அவளுக்கு இண்டரெஸ்ட் இல்லை.  நாங்கள் அன்யோன்யமாக இல்லை. நான் அவளைத் தொடுவதை அவள் விரும்பவில்லை.  மீறிச் சேர்ந்தால், அவள் உடம்பு கொதிக்கும், எனக்கு ஜுரம் வந்துடும்’ என்று தலை குனிந்த படியே சொன்னான்.  அவனுக்கு கல்யாணத்திற்குப் பிறகு அடிக்கடி ஜுரம் வருவதற்கானக் காரணம் புரிந்தது.   ‘அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா,  வேறு யாரையாவது அவள் விரும்பினாளா, நீங்க இங்கே வந்தபிறகு அவள் யாரிடமாவது பேசினாளா?’ என்று கேட்டேன்.  ‘சீச்சீ, அப்படியெல்லாம் இல்லை. ஆக்ராவிலிருந்து அவள் அம்மாவுடன் தான் பேசினாள். அவள் வழி தெரியாமல் தான் எங்காவாது போயிருப்பாள்’ என்றான்.

 

 

சுசித்ராவின் பை அறையின் மூலையில் இருந்தது.  அதை எடுத்து சந்தீப்பிடம் கொடுத்துப் பிரித்துப் பார்க்கச் சொன்னேன். அவளுடைய துணிகளும், காணிக்கை முடிச்சு போன்ற ஒரு மஞ்சள் துணி முடிச்சும் இருந்தது.   அதை அவிழ்த்துப் பார்த்தால், அதில் அவளுடைய தங்க வளையல்கள், மோதிரம், காதணிகள் மற்றும் கருப்பு மணி தாலியும் இருந்தன. ‘என்னடா இது, நகை போட்டுக்காமலா இருந்தாள், இந்த 3 நாட்களும்?’ என்றேன்.  ‘போட்டுட்டுதான் இருந்தாள், இப்போ ஏன் கழட்டி வச்சிட்டு போனாள்?’ என்று என்னிடம் திருப்பிக் கேட்டான்.  ‘அவளிடம் பணம் இருந்ததா?’ என்றேன்.  ‘நூறு ரூபாய் வரை வைத்திருந்தாள்.  எதுவும் வாங்கித் தரட்டுமா என்று கேட்டதற்கு, வேண்டாம் என்று சொன்னாள், அவளாக எதுவும் வாங்கிக் கொள்ளவுமில்லை’ என்றான்.

‘இந்த லாட்ஜுக்கு எப்படி வந்தீர்கள், ரிக்ஷாக்காரன் அழைத்து வந்தானா?’  என்று கேட்டேன்.  ‘இல்லை, சுசித்ரா தான் ரங்கஜி  மந்திருக்கு எதிரில் இருக்கும்  லாட்ஜுக்குப்   போகலாம்’ என்று ரிக்ஷாக்கரனிடம் சொன்னாள்.  அவள் சின்ன வயதில், அவளுடைய பெற்றோருடன் இங்கு வந்து தங்கினார்களாம்’ என்றான்.  பையிலோ, அறையிலோ எதாவது கடிதம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். இல்லை. எனக்கு ஏனோ சுசித்ரா மீது சந்தேகம் தட்டியது. அந்த கோணத்தில் பேசினால், சந்தீப்  இன்னும் உடைந்து போவான்.  என்ன செய்வது என்று யோசித்தேன்.

 

பிறகு அவனிடம், ‘சந்தீப், எனக்கென்னவோ, சுசித்ரா காணாமல் போன மாதிரி தோன்றவில்லை.  யாரோ அவளைக் கூட்டிப்போய் இருக்கவேண்டும், அல்லது அவள் எங்காவது மயங்கி விழுந்தோ, அடிபட்டோ ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும், அல்லது அவளே  எங்காவது போய்  இருக்கவேண்டும்.  போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கணும், அவளுடைய பெற்றோருக்கும் தகவலைத் தெரியப் படுத்தணும்.  எழுந்திரு போகலாம்’ என்று அவனை எழுப்பினேன்.  ‘அய்யோ, அவங்க வீட்லே தெரிஞ்சா பயப்படுவாங்களே, என்னைத் திட்டுவாங்களே’ என்றான்.  ‘அவள் போய் 2 நாட்களாகப் போகிறது, அவள் காணமல் போன விஷயத்தை இன்னும் சொல்லாமல் இருந்தால் தான் தப்பு.  வா போகலாம்’ என்று சொல்லி லாட்ஜை விட்டுக் கிளம்பினோம்.

 

நேராகப் போலீஸ்டேஷன் போய், தாஜ் மஹாலில் எடுத்த போட்டோவைக் காட்டி, நடந்த விவரங்களைச் சொல்லி சுசித்ராவைக் காணவில்லை என்று சொன்னேன். சந்தீப் அமைதியாக என் பக்கத்தில் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான்.  போலீஸ் காரர் எங்களைப் பற்றி விசாரித்தார்.  என் ஆராய்ச்சி நிலைய ஐடி கார்டைக் காண்பித்தேன்.  அவர் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துப் போனார்.  அவரிடம் மீண்டும் விஷயத்தைச் சொன்னேன்.  அவர் சந்தீப்பை சந்தேகத்துடன் பார்த்தார்.  ‘ஹனிமூனுக்கு வந்துட்டு, பொண்டாட்டியை தொலைச்சுட்டேன்னு இங்க வந்து கம்ப்ளைன்ட் பண்றே, வெக்கமா இல்லை, அவ எவனோடாவது ஓடிப்போனாளா அல்லது நீயே அவளைக் கொன்னுட்டு இங்க வந்து நடிக்கிறியா’ என்று சத்தம் போட்டார்.  சந்தீப் அவமானத்தில் உடைந்து அழுதான்.  நான் மீண்டும் என் ஐடி கார்டை அவரிடம் காட்டி நாங்கள் அப்படிப் பட்டவர்களில்லை, என்று சொல்லி உதவும்படி கெஞ்சினேன். அவர் சற்று தணிந்து, ‘எங்கெல்லாம் தேடிப் பார்த்தீங்க? என்று கேட்டார்.  சொன்னேன். ‘ஆஸ்பத்திரி, பிராத்தல்லாம் போய்ப்பார்தீங்களா? என்றார்.  இல்லை என்று தலையாட்டினோம். சந்தீப் முகத்தை மூடிக் கொண்டான். ‘செலவாகும், ஜீப்பில் ஏறுங்க’ என்றார். ஜீப்பில் ஏறும்போது அவரிடம் ஒரு ரூபாய்க் கட்டு ஒன்றைக் கொடுத்தேன். (மக்களே, 1979ல் நூறு ருபாய் என்பது, இன்றைய மதிப்பில் 20,000 ரூபாய்கள்).

 

கான்ஸ்டபிள்  ஒருவரைக் கூட அழைத்துக்கொண்டு கிளம்பினார். பிருந்தாவனத்திலிருந்த 4 ஆஸ்பத்திரிகளில் சுசித்ராவின் போட்டோவைக் காட்டி விசாரித்தார். அந்த மாதிரி யாரும் கடந்த 2,3 நாட்களாக அட்மிட் ஆகவில்லை என்று சொன்னார்கள்.  வேறு இரண்டு போலீஸ் டேஷனுக்குச் சென்று விவரத்தைச் சொல்லி விசாரித்தார்.  பிறகு ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்துக்குப் போய், ஜீப்பை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.  அந்த வீட்டில் அளவுக்கதிகமான மேக்கப்புடன் அலங்கோலமான ஆடைகளுடன் பல இளம்பெண்கள் இருந்தனர். எங்களைப் பார்த்துச் சிரித்தனர்.  இன்ஸ்பெக்டர் அருகில் வந்து ஒரு பெண் அவர் கையைப் பிடித்து இழுத்தாள். அவளை உதறிவிட்டு, அங்கிருந்த ஒரு தடித்த வயதான பெண்ணிடம், சுசித்ராவின் படத்தைக் காட்டி ஏதோ கேட்டார். அவள் இல்லவேயில்லை, என்று தலையாட்டினாள்.  பிறகு யாரோ வேறு 4 பெண்களை வரவழைத்து ‘இவர்கள் தான் சமீபத்தில் வந்தவர்கள்’ என்றாள்.  ‘இவளைப் பற்றி எதாவது தெரிந்தால் எனக்கு சொல்லி அனுப்பணும் ‘ என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.  புனிதமான பிருந்தாவனத்தில் பாவமான இந்தத் தொழில் செய்யும் பெண்களைப் பார்க்க மனது வேதனையாக இருந்தது.  அதே மாதிரி இன்னும் 2 வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார்.  சந்தீப் உள்ளே வர மறுத்துவிட்டான்.  சுசித்ரா அங்கும் இல்லை. ‘ஒரு வேளை, மதுரா, ஆக்ரான்னு கைமாற்றி  இந்நேரம் டில்லிக்குக் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாம்’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘அய்யோ, அந்த மாதிரியெல்லாம் ஆகியிருக்காது’ என்று தலையில் அடித்துக் கொண்டான் சந்தீப்.

 

அவனை சமாதானப் படுத்திவிட்டு, எதுக்கும் சுசித்ராவின் பெற்றோருக்கு   விஷயத்தை சொல்லிவிடலாம்’ என்றேன்.  இன்ஸ்பெக்டரும், ‘ஆமாம், ஒரு வேளை  அந்தப்  பெண் ஊருக்குப் போயிருந்தால்? வாங்க, ட்ரங்கால் போட்டுக் கேட்கலாம்’ என்று ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போனார். சந்தீப் முதலில் அவன் பெற்றோருக்கு ட்ரங்கால் செய்தான். பேச முடியாமல் தொண்டை அடைத்தது.  அவனிடமிருந்து போனை வாங்கி  ‘அங்கிள், சந்தீப்பின் ப்ரெண்ட் பேசுகிறேன். சுசித்ராவைக் காணவில்லை.  போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறோம், நீங்கள் சுசித்ராவின்   பெற்றோர்களையும்   அழைத்துக் கொண்டு பிருந்தாவனுக்கு வாருங்கள்.  சந்தீப்புக்கு உடம்பு சுகமில்லை. சீக்கிரம்  புறப்பட்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, சுசித்ரா வீட்டுக்கு ட்ரங்கால் செய்தேன். சுசித்ராவின் அப்பா லைனில் வந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு, ‘சுசித்ரா உங்களிடம் சமீபத்தில் போனில் பேசினார்களா’ என்று கேட்டேன்.  ‘வெள்ளிக்கிழமை ஆக்ரா போய்ச் சேர்ந்த விஷயம் சொன்னாள்.  பிறகு ஞாயிறன்று காலையில் அவள் அம்மாவுடன் பேசினாள்.  நான் நல்லா இருக்கேன், என்னைப் பற்றிக் கவலைப் படாதீங்க, நீங்களெல்லாம் நல்ல இருங்கன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டாளாம்.  என்னாச்சு, சந்தீப் எங்கே? அவங்க இன்னும் பரேலிக்கு வரலியா?’ என்று கேட்டார். ‘அங்கிள், சந்தீப் இங்கே பிருந்தாவன்லே இருக்கான்.  ஆக்ராவீருந்து மதுரா வந்து, பிறகு பிருந்தாவனுக்கு சுசித்ரா போகணும்னு சொன்னதாலே, சனிக்கிழமை இரவு இங்கு அழைத்து வந்திருக்கிறான்.  ஞாயிறு காலை லாட்ஜிலிருந்து சந்தீப் தூங்கிக் கொண்டிருக்கும்போது கோவிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவங்க திரும்பி வரவே இல்லை.  ஆனால் உங்களுக்கு ட்ரங்கால் போட்டு பேசி இருக்காங்க.  நாங்க இங்கே 3 நாட்களாக அவங்களைத் தேடிட்டிருக்கோம்.  நீங்க உடனே இங்கே கிளம்பி வாங்க . நாங்க போலீஸ்லே கம்ப்ளைன்ட் குடுத்திருக்கோம்’ என்று சொன்னேன்.  அவர் பெருத்த குரலில் பெங்காலியில் கத்தினார்.  சந்தீப்பைத் திட்டுகிறார் என்பது புரிந்தது.  பிருந்தாவன் லாட்ஜ் விலாசத்தை சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

 

இன்ஸ்பெக்டரிடம், ‘சார், சுசித்ரா அவங்க ஊருக்குப் போகலை, ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவள் அம்மாவோடு ட்ரங்கால் போட்டுப் பேசி இருக்கிறாள்.  நகையெல்லாம் முடிச்சி போட்டு ரூமில் வச்சிட்டு போயிருக்கா.  அதனால், அவள் யார் கூடவும் போயிருக்க மாட்டாள், இங்கியே எங்கோதான் இருக்கணும்னு நெனைக்கிறேன், சார்.  அவங்க வீட்டிலிருந்து பேரெண்ட்ஸ் வராங்க.  நாளைக்கு மதியத்திற்குள் வந்திடுவாங்க.  அதுவரைக்கும், மறுபடியும் நாங்க அவளைத் தேடிப் பார்க்கிறோம்.  எதாவது செய்தி கிடைச்சா, எங்களுக்கு சொல்லுங்க சார்.  நாங்க அதே லாட்ஜிலே தான் தங்கி இருப்போம்’ என்று சொல்லிவிட்டு சந்தீப்பை அழைத்துக்கொண்டு லாட்ஜுக்குத் திரும்பினேன்.  ‘இங்கே நிறைய ஆசிரமங்கள் இருக்கின்றன.  அங்கெல்லாம் பாருங்கள்’ என்றார் இன்ஸ்பெக்டர்.  எனக்குப் பசித்தது.  சந்தீப்பை சாப்பிட அழைத்தேன்.  வரவில்லை.  நான் 2 சப்பாத்தி குருமா சாப்பிட்டுவிட்டு, பிளாஸ்கில் பால் வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தேன்.  சந்தீப் குப்புறப் படுத்து அழுதுகொண்டிருந்தான். மாத்திரையும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன்.  சுசித்ரா அவள் அம்மாவிடம் சொன்னதை அவனிடம்  சொல்லி, ‘இந்த கல்யாணத்தில் அவளுக்கு இஷ்டமில்லைன்னு உன்கிட்டே சுசித்ரா சொன்னாளா? என்று கேட்டேன்.  அவன் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்தான்.  சிறிது நேரம் படுக்கையில் சாய்ந்து ஓய்வெடுத்தேன்.

 

மாலையில் அவனையும் அழைத்துக் கொண்டு ஆசிரமங்களில் தேடினோம்.  பிருந்தாவன் ஆசிரமங்களிலும், தெருக்களிலும் விதவைப் பெண்கள் கூட்டம் கூட்டமாக  இருந்தார்கள்.  வயதான விதவைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். மிகவும் பரிதாபமாக இருந்தது. பிறகு லாட்ஜுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, சுசித்ரா எங்கே மாயமாக மறைந்து போயிருப்பாள் என்று யோசித்துக்கொண்டே அசதியில் உறங்கிப் போனேன்.

 

காலையில் எழுந்து மீண்டும் போலீஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டரிடம் ஏதாவது விவரம் தெரிந்ததா என்று விசாரித்தோம். அவர், ‘இன்னும் இல்லை.  அந்த பெண்ணின் பெற்றோரை விசாரிக்கணும்.   அவங்க வந்துட்டாங்களா? என்று கேட்டார்.  ‘இன்று மதியத்திற்குள் வந்துடுவாங்க சார்’ என்று சொல்லிவிட்டு லாட்ஜுக்கு வந்து அவர்களுக்காகக் காத்திருந்தோம்.  சுசித்ராவின் பெற்றோரும், சந்தீப்பின் பெற்றோரும் பதைபதைப்புடன் வந்து சேர்ந்தார்கள்.  சந்தீப் அவன் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதான்.  சுசித்ராவின் அப்பா அவனிடம் சத்தம் போடுவார் என்று எதிர்பார்த்தேன்.  அவர் அமைதியாக இருந்தார்.

நடந்ததையெல்லாம் மீண்டும் அவர்களுக்கு விலாவரியாக சொல்லிவிட்டு, சுசித்ராவின் அப்பாவிடம், ‘உங்கள் பெண் பிருந்தாவனுக்கு வரவேண்டும் என்று பிடிவாதமாக சந்தீப்பை அழைத்து வந்து, மறுநாள் காலையில், நகைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு,   அவன் தூங்கும்போது வெளியில் போயிருக்கிறாள்.  பிருந்தாவனில்  அவளுக்குத் தெரிந்த இடம் அல்லது தெரிந்த நபர் யாராவது இருக்கிறார்களா?  இதை நீங்க தான் சொல்லணும்.  அங்கே போய்த் தேடலாம், இல்லையென்றால் இன்ஸ்பெக்டரிடம் போய்ப் பேசலாம்.  அவர் உங்களை போலீஸ்டேஷனுக்குக் கூட்டி  வரச் சொன்னார்’ என்றேன்.  அவர், ‘ராமகிருஷ்ணா மடத்திலும், இஸ்கான் கோவிலிலும் பார்த்தீர்களா?’ என்று கேட்டார்.  ‘இல்லை, அவள் ரங்கஜி மந்திர் போவதாகச் சொல்லிவிட்டுத்தான் போனாள்.  நாங்கள் மற்ற கோவில்களிலெல்லாம் தேடினோம்.  உங்களிடம் ட்ரங்கால்  பேசும்போது இதைச் சொல்லவில்லையே?’ என்றேன்.

 

அனைவரும் கிளம்பி ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று விசாரித்தோம்.  பிறகு ஊருக்குத் தொலைவில் புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த இஸ்கான் கிருஷ்ண மந்திருக்குச் சென்று, ஒரு பூஜாரியிடம் சுசித்ராவின் போட்டோவைக் காட்டிக் கேட்டோம். அவர், ‘கிருஷ்ண ப்ரேமி, அதோ’ என்று கைகாட்டினார். உள்ளே  இருந்த பூஜை மண்டபத்தில், கிருஷ்ண விக்ரஹத்தின் முன் பஜனை செய்து கொண்டிருந்த கூட்டத்தின் நடுவில்,  தலையை மொட்டை அடித்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து காவி உடையில்  ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருந்தாள் சுசித்ரா!

 

ஓரமாக நின்று அவளைப் பார்த்த நாங்கள் அனைவரும் சிலைகளானோம்.  சந்தீப் நிற்க முடியாமல் கீழே சரிந்தான்.  அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டேன்.  அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டுபோய் சுசித்ராவின் அம்மா அவளைக் கையைப் பிடித்து இழுத்து வந்தார்.  எங்களைப் பார்த்ததும் ஒன்றுமே நடக்காதது போல்  சகஜமாகச் சிரித்தாள்.

 

எல்லோரும் அவளைப் பலவித கேள்விகள் கேட்டதற்குப் பதறாமல் அவள் சொன்ன பதில், ‘எனக்குப் பிடித்த இடத்திற்கு நான் வந்து  சேர்ந்துவிட்டேன்.  பிருந்தாவனக் கிருஷ்ணனுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன். இந்த ஊரிலிருக்கும் விதவைகளுக்கு என்னாலான சேவை செய்யப் போகிறேன்.  என் வயது, உடம்பு இதெல்லாம் என் ஆத்மாவைக் கட்டுப் படுத்தாது.  நான் அக்னி.  என் உடம்பை யாரவது தொட்டால், என் அனல் அவர்களைத் தகித்துவிடும்.  சந்தீப்புக்குத் தெரியுமே.  நீங்கள் எல்லோரும் திரும்பிப் போய்விடுங்கள்.  நான் இந்த இடத்தை விட்டு வரமாட்டேன்’ என்று தீர்க்கமான குரலில் சொன்னாள். ‘கல்யாணத்திற்கு முன்பாகவே இதை சொல்லி இருந்தால், சந்தீப்புக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காதே’ என்றேன். ‘இதோ, என் பெற்றோரைக் கேளுங்கள்.  என் சின்ன வயதிலிருந்தே நான் சொல்லி வந்தேன். எனக்கு இந்த நிலையாத வாழ்க்கை உறவுகள் வேண்டாமென்று.  பாவம், அவருடைய கர்மபலன்.  அவர் இதை சந்திக்க வேண்டியதாயிற்று.  அவர் வேறு திருமணம்  செய்துகொண்டு சுகமாக இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டுத்  திரும்பிப்போய் பஜனையில்   கலந்து கொண்டாள். பெற்றோர்கள் கண் கலங்கி  நின்று கொண்டிருந்தனர்.

 

நான் மட்டும் அங்கிருந்து போலீஸ்டேஷனுக்கு  வந்து இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைச் சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு இஸ்கான் கோவிலுக்கு வந்தேன்.  சுசித்ராவை அழைத்துப் போக உதவ  வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.  அவர் அந்தக் கோவில் தலைமைப் பூஜாரியிடம் பேசினார். பிறகு தலையாட்டியபடியே எங்களிடம் வந்து, ‘அந்த பொண்ணு டிகிரி சர்டிபிகேட்டை குடுத்து  இங்கே வாலண்டியரா வேலைக்கு சேர்ந்திருக்கு. இங்கே தான் தீட்ஷை வாங்கி ‘கிருஷ்ண ப்ரேமின்னு பெயர் வெச்சிக்கிட்டிருக்கு.  மேஜர் பொண்ணு விரும்பி சேர்ந்திருக்கு. இந்த இஸ்கான் பெரிய இடம்.  இவங்களுக்கு எதிரா யாரும் ஒண்ணும் செய்ய முடியாது’ என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிப் போய்விட்டார்.

 

நான் சுசித்ராவின் அப்பாவைக் கோபத்துடன் பார்த்தேன்.  அவர் சந்தீப்பின் கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘சுசித்ரா சின்ன வயதில், என் பெரியப்பாவின் பெண்ணான அவளுடைய அத்தையிடம் நெருக்கமாக இருந்தாள். அவள் கணவனை இழந்ததும் எங்களுடன் தான் தங்கி இருந்தாள். ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சேவை செய்து  கொண்டிருந்தாள்.  அப்போது பூஜைகளுக்கு  சுசித்ராவையும் அழைத்துப் போவாள்.  ஒருமுறை கல்கத்தாவில் இஸ்கான் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கும் அழைத்துப் போனாள். பிறகு சுசித்ராவின் அத்தை இஸ்கானில் சேர்ந்து அங்கேயே தங்கி விட்டாள். அவளுடன் பழகியதால், சுசித்ரா கிருஷ்ண பக்தியில் மூழ்கிப்  போனாள். அத்தையைப் போன்ற விதவைப் பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.  நாங்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.  கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தோம்.  உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இப்படியொரு கஷ்டத்தைக்  கொடுத்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும்.  சுசித்ராவின் தங்கை சுஷ்மிதாவை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.  இதையே எங்கள் பிராயச்சித்தமாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கெஞ்சினார்.

 

சந்தீப் அவரிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அருகிலிருந்த குழாயில் முகத்தை அலம்பிக் கொண்டான்.  சுசித்ராவின் பெற்றோரிடம் வந்து, ‘நாங்கள் ஊருக்குக்  கிளம்புகிறோம்.  உங்கள் மேல் எனக்குக்  கோபமில்லை. சுசித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம்.  அவள் விரும்பியபடியே  இருக்கட்டும்.  இந்தச் சின்ன வயதில் யாருக்கு வரும், இந்த மனோ திடமும், மனத் தெளிவும்’, என்று சொல்லிவிட்டு, அவன் பெற்றோரையும், என்னையும் அழைத்துக் கொண்டு லாட்ஜுக்கு வந்தான்.

 

அறையைக் காலி செய்துவிட்டு மதுராவுக்கு வந்து ரயில் பிடித்து பரேய்லிக்குப்  பயணமானோம்.  வழியில் யாரும் சந்தீப்பிடம் பேசவில்லை.  அவன் முகம் தெளிவடைந்து இருந்தது. அவனுடைய அப்பா ஏதோ பேச வாயெடுத்தபோது, அவரை சைகையாலேயே அமைதியாக இருக்கச் சொன்னான். இஜ்ஜத்நகர் சேர்ந்து அவர்களை வீட்டில் விட்டுவிட்டு என் அறைக்குச் சென்று விட்டேன்.

 

மறுநாள் காலை, ஆராய்ச்சி நிலையத்திற்கு சந்தீப் வந்தான். ராஜினாமாக் கடிதம் எழுதிக் கொடுத்தான்.  என்னிடம் வந்து, ‘நான் வீட்டைக் காலி செய்து கொண்டு ஊருக்குப் போகிறேன்.  வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்வேன்.  மறுபடியும் எப்பவாவது சந்திப்போம். உன் எல்லா உதவிகளுக்கும் நன்றி’ என்று சொல்லிவிட்டு தன் பெற்றோருடன் ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டான்.  நான் ரயில் நிலையம்வரை வருவதைக் கூட மறுத்து விட்டான்.

 

மீண்டும் சந்தீப்பை நான் பார்க்கவில்லை. அவனுக்கு அனுப்பிய கடிதத்திற்கும் பதில் போடவில்லை. அவன் கௌஹாத்தியில் இருக்கும் இன்னொரு ஆராய்ச்சி நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தது தெரியும்.  அவன் பெற்றோரிடம் பேசியபோது, அவன் மீண்டும் கல்யாணம் செய்துகொள்ள மறுத்துவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.  நான் இதே ஆராய்ச்சி நிலையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, டைரக்டர் பதவியிலிருந்து, இன்று ஓய்வு பெறுகிறேன். இந்த ஊரை விட்டு சொந்த ஊருக்குக் கிளம்புகிறேன், சந்தீப் சுசித்ராவின் தாஜ்மஹால் டு பிருந்தாவன் நினைவுகளைச் சுமந்தபடி.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *