தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?

முகிலன்

rmukilan1968@gmail.com

 

 

 

இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத் துறைகளில் மிகவும் மோசமான சூழ்நிலைகளே நிலவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசின் பல்வேறு துறைகளிலும் சீரற்ற கருவிகளைக் கொடுத்தே ஊழியர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படுமாறு வற்புறுத்துகின்றனர். சான்றாக அரசுப்போக்குவரத்துக் கழகங்களை எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு மேலான வாகனங்களை வைத்துக்கொண்டு, அவற்றையும் சரிவரப் பராமரிக்காமல் கால அட்டவணைகளைக் கண்மூடித்தனமாக அமைத்துக்கொண்டு செயல்படத் தூண்டுகின்றனர். அதனால் ஏற்படும் விபத்துகள் ஏராளம். எங்கு பார்த்தாலும் அரசுப்பேருந்து மோதி விபத்து என்றுதான் செய்திகளில் பார்க்கின்றோம். இந்த நிலைகளுக்குக் காரணம் அதிகாரிகள் என்றுதான் மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையான காரணகர்த்தா அரசியல் வாதிகள் என்றுதான் கூறவேண்டும். எவ்வாறென்றால், நான் நேர்மையானவன், எந்தத்தவறும் செய்யமாட்டேன், மக்களின் சேவகனாக இருப்பேன் என்று அரசுத்துறைகளில் பொறுப்பேற்கும் எப்படிப்பட்ட அதிகாரிகளையும் அரசியல்வாதிகள் தங்களது பதவி, பணம் மற்றும் அடியாட்கள் பலத்தினால் தங்களுக்கு அடிமைகளாக்கி விடுகின்றனர். காலப்போக்கில் அவர்களும் லஞ்சம், ஊழல் போன்ற காரியங்களில் தாராளமாகி விடுகின்றனர். மக்கள் மத்தியில் நேரடியாகத் தவறு செய்பவர்கள் அரசு அதிகாரிகளே என்பதால், அவர்களே ரகசியக் கேமராக்களில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படித்தான் நமது நாட்டின் நீர் வளங்களும், கனிம வளங்களும் இவர்களால் சுரண்டப்படுகின்றன என அறிதல் வேண்டும். இதே நிலைகள்தாம் கல்வித்துறையிலும் காணப்படுகின்றன.

அதாவது, எட்டாம் வகுப்புவரை அடிப்படைக் கல்வியைச் சரிவர அடையாத மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயத் தேர்ச்சியாலும், ஊடகங்களின் தூண்டுதலால் மதுப்பழக்கம் உள்ளிட்ட பல தவறான பழக்கங்களாலும், அரசின் சலுகைகள் என்ற கொடிய நோயினாலும் சின்னாபின்னமாகச் சிதைந்து கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திலே முழுத்தேர்ச்சி என்ற உற்பத்தியை மக்களும் துறை அமைச்சர்களும் எதிர்பார்க்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி என்பது ஆசிரியர், பெற்றோர், மாணவர் என்ற மூவருடைய ஒத்துழைப்பினால் உருவாக்கப்படுவது என்பதை ஏன் இவர்களால் உணரமுடியவில்லை? இதில் எட்டாம் வகுப்புவரை மேற்கொள்ளப்பட்ட கட்டாயத் தேர்ச்சியானால் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்த ஒருசில மாநில அரசுகள் அந்தக்கொள்கையைக் கைவிட்டுவிட்டன. ஆனால் நமது தமிழக அரசுமட்டும் முதலைப்பிடிபோல் பிடித்துக்கொண்டிருப்பதன் நோக்கம்தான் ஒன்றும் புரியவில்லை.

இந்த லட்சணத்தில் ஆசி(றி)ரியர்களுக்குள் போட்டி பொறாமைகள் வேறு. இதன் விளைவாக, ஒரு ஆசிரியர் தனது எதிரி என்று நினைக்கின்ற இன்னொரு ஆசிரியருக்கு எதிராக மாணவர்களையோ பெற்றோர்களையோ தூண்டிவிட்டுப் பழிவாங்கும் படலங்களும் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் ஈடுபடும் ஒருசில ஆசிரியர்களை மனதில் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களே இப்படித்தான் என்று நினைக்கும் அளவிற்கு ஊடகங்களும் மக்களும் சித்தரிப்பதாலும் மாணவ சமுதாயம் கைமீறிப் போகின்றதென்பதை எத்தனைபேர் உணர்வார்கள்? ஒருசில பெரியவர்கள் பொறுப்பில்லாமல் தவறு செய்கின்றபோது மற்றவர்கள் அவற்றைப் பிள்ளைகளுக்கு மத்தியில் பேசுதல் கூடாது. இந்த உளவியல் சிந்தனையோடுதான் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

மாணவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது, அவர்களிடம் மனம்நோக நடந்துகொள்ளக்கூடாது, அன்பாலே அவர்களைத் திருத்தவேண்டும் என்றுகூறும் மெத்தப்படித்த மேதாவிகளிடம் நான் ஒன்று கேட்கின்றேன், அன்பால் யாரையும் திருத்திவிடலாம் என்றால் காவல்நிலையங்கள் சிறைக்கூடங்கள் எதற்கு? இவர்களது பரிந்துரைகளையெல்லாம் பயன்படுத்தியதன் விளைவு ஆசிரியர்கள் பயமின்றி வகுப்பறைகளுக்குள் செல்லமுடியவில்லை. பெண் ஆசிரியர்களைக் கேட்கவேண்டியதேயில்லை.

 

 

 

 

 

கட்டுப்படுத்த வேண்டியவர்களின் கைகளைக் கட்டிப்போட்டதன் விளைவு வகுப்பறைக் கூடங்கள் வன்முறைகளின் விளைநிலங்களாக விளங்குவது எல்லோரும் அறிந்த ஒன்று. அமெரிக்காவில் ஒரு பள்ளியில் ஆசிரியையின் கண்ணெதிரிலேயே வகுப்பறையிலேயே ஒரு மாணவியை சக மாணவர் பாலியல் பலாத்காரம் செய்த செய்தி ஊடகங்களில் வெளியானது பலரும் அறிந்ததே! இதுபோன்ற வன்மங்கள் நமது நாட்டிலும் அரங்கேறாது என்பது என்ன நிச்சயம்? பல மாணவர்கள் பலகாரணங்களால் மனநோயாளிகளாகத் திரிகின்றார்கள் என்பதை அறிந்த கல்வித்துறை மாவட்டம்தோறும் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்யும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முழுத்தேர்ச்சி என்பது  . . . ?

தனியார் கல்வி நிறுவனங்களில் முழுத்தேர்ச்சியைப்பெற 11 – ஆவது வகுப்புப் பாடங்களைக் கற்பிக்காமலேயே 12- ஆவது வகுப்புப் பாடங்களை இரண்டு ஆண்டுகளாக உருப்போட வைக்கின்றார்கள். அதையும் சரிவரப்பயன்படுத்தாத மாணவர்களைத் தேர்ச்சியடையச் செய்வதற்காக அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் குறுக்குவழிகள்தான் எத்தனை எத்தனை? இப்படிச் செயல்படும் நிறுவனங்களின் பித்தலாட்டங்களையெல்லாம் மறந்துவிட்டு நீங்களும் முழுத்தேர்ச்சியைக் கொண்டுவாருங்கள் என்று ஆசிரியர்களை நெருக்குவது எந்தவிதத்தில் நியாயம்? முழுத்தேர்ச்சிக்காகக் கல்வித்துறை அமைச்சர்கள் உயரதிகாரிகளைத் திட்ட, அவர்கள் அதேவேகத்தை தங்களுக்குக்கீழ் உள்ள அதிகாரிகளிடம் காட்ட இப்படியே இது மாணவர்கள்வரை வருகிறது. ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னும் சட்டங்களால் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையிலுள்ள ஆசிரியர்கள் அந்த வேகத்தை மாணவர்களிடம் காட்டமுடியாமல் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். இந்தநிலையில்தான் ஆசிரியர்களும் அதிகாரிகளும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். இது முற்றிலும் உண்மை. துறை அமைச்சர்களால் ஏற்படும் இம்மாதிரியான செயல்கள் கல்வித்துறையில் மட்டுமல்ல, அரசின் பல துறைகளிலும் உண்டாக்கப்படுகின்றன. சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் செய்தியே இதற்குப் போதுமானதொரு சான்றாகும். இந்த நிலையில்தான் தேர்வு முடிவுகளுக்கு மாணவர்கள் பயந்த காலம்போய் ஆசிரியர்கள் பயப்படும் காலம் இன்று வந்துள்ளது. காரணம், ஒரு மாணவன் தேர்வில் தோல்வியுற்றானென்றால் அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்தான் காரணம் என்று ஆசிரியர்களையல்லவா நிற்கவைத்துக் கேள்விகள் கேட்கின்றனர். தோல்வியுற்ற மாணவர்களோ யாருக்குவந்த துன்பமோ என்பதுபோல் பொறுப்பில்லாமல் திரிகின்றனர். இவ்வாறு தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா? இதனால் சாதித்ததுதான் என்ன? யோசித்துப்பாருங்கள்!

வியாபார நோக்கில் தனியார் நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் மாணவர்களால் மத்திய அளவிலான போட்டிகளிலோ, செயல்முறைப் பணிகளிலோ சிறப்பாக வெற்றிபெற முடிகின்றதா? இல்லையே! ஏன்? இதைக் கொஞ்சமாவது பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்கின்றார்களா? திரைப்பட இயக்குநர் திரு சமுத்திரக்கனி அவர்கள் எடுத்த ‘அப்பா’ திரைப்படங்கள் போன்று எத்தனை எடுத்து விளக்கினாலும் பெற்றோர் ஏன் உணர மறுக்கின்றார்கள்? எனவே, பெற்றோர் “பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போலவும் அதேநேரத்தில் ஒருசில கட்டுப்பாட்டுகளுடன் வளர்க்க வேண்டும். அதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் சரியான நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன். வீட்டிற்கு அடங்காதது பள்ளியில் அடங்கும் என்பார்கள். அதனைப்புரிந்து நடந்துகொள்ளவேண்டும். கோழி மிதித்துக் குஞ்சு முடமாகாது. அரசியல் வாதிகள் கோடி கோடியாகக் கொள்ளையடித்துவிட்டு அவர்களது பரம்பரையை எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள். நாம்தான் துன்ப்பப்பட்டுக் கொண்டே இருப்போம். இந்த நிலை நீடிப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே மாபெரும் கேடாகும்.

இன்றைய மாணவர்கள் கல்வியில்தான் இவ்வாறு என்றால், ஒழுக்கத்திலாவது சிறந்திருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. எதற்கெடுத்தாலும் பெற்றோர்களை மதிக்காமல் எடுதெறிந்து பேசுகின்றனர். இவ்வளவு சீரழிவுகளும் இந்த இருபது ஆண்டுகளுக்குள்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது என்றே நினைக்கின்றேன். மேலும், இக்கருத்துகளெல்லாம் எனது தனிப்பட்ட கருத்தாகக் கருதாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்தாகக் கொண்டு செயல்பட வேண்டுகிறேன். இதில் ஏதும் கருத்துமாறுபாடுகள் இருப்பின் பணிவன்போடு ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்பதையும் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Series Navigationஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்