தாம்பத்யம்

 

 

எனக்கும் அவளுக்குமான

கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது

எங்களின் மண நாளிலிருந்து……

 

ஒருவரை நோக்கி ஒருவர்

இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக

முறுவல்களுடனும் முத்தங்களுடனும்…..

 

பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும்

பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு….

 

ஒருவரை நோக்கி ஒருவர்

நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது;

ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி

இழுவையை தொடர்கிறோம்…..

கை தட்டி ஆரவாரித்தும்

கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை

உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்….

 

மையக் கோடு மறைந்தாயிற்று

இழுக்கும் கயிறும் இற்றுக் கொண்டிருக்கிறது;

இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்

கால்களும் தளர்ந்து போயின…..

 

இருந்தும் இழுவையின் பிடி மட்டும்

இன்னும் இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..

 

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு

வெகுதூரம் வந்து விட்டோம்

இலக்குகள் எதுவுமின்றி

பழக்கத்தால் தொடர்கிறோம்;

வெறும் பாவணைகளிலும்…….!

சோ.சுப்புராஜ்

Series Navigation