தினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.

ஒரு முடிவிற்கு வந்தாயிற்று, இனி மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று. என் தனித்துவத்தை நானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்க, என்னை நான் வடிவமைத்துக் கொள்வதில் என் நண்பர்கள் பெரும்பங்கு உதவி வருவதை அனுபவத்தில் கண்டேன். தாழ்வு மனப்பான்மையில் இருந்து நான் வெளி வரவும். சமூகத்தில் நான் முக்கிய பங்கு வகிப்பதையும் அவர்கள் விரும்பு கிறார்கள்.

உன் பாதம் கல்லில் இடராதபடி அவர்கள் தாங்கிக்கொண்டு போவார்கள் என்று ஒரு வேத வசனம் உண்டு. வேதத்தை எழுதும் போது அது அதன் அதிகாரத்தையும் வசனத்தின் எண்ணிக்கையையும் குறிப்பிட வேண்டும். எனக்கு அந்த வாக்கியத்தை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. நான் வேதாகமம் படித்து வெகுநாட்கள் ஆயிற்று.

எனதாகிக் கொண்டிருக்கும் வாழ்வியல் அனுபவத்தில் எத்தனை தேவ தூதர்கள் என் பாதம் கல்லில் இடராதபடி தாங்கிக்கொண்டு செல்வதை நடைமுறையில் காண்கிறேன் நான்.

பேருந்து நெருக்கடிகளிடையே என் மூன்றுச் சக்கர வாகனத்தைக் காக்கவென அநேக தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு. சில நேரம் பல பிள்ளையார்களும் வருவதுண்டு துணைக்கென்று. நண்பர் ஒருவர் இயேசுக் கிறிஸ்துவிடம் கனிந்து மனதுருகி பிரார்த்தனை செய் என்றார். இங்கு பிரார்த்திக்க என்ன இருக்கிறது? கடவுளோடு கோபித்துக் கொண்ட நாட்கள் பல உண்டு. அது மழலைப் பருவத்தின் நிகழ்வுகள். பிணக்கு என்று சொல்லிக் கொள்ளலாம். பிரியமாய் சிணுங்கி தன் உரிமையைக் கேட்கும் குழந்தையைப் போல, அதனால் ஏற்பட்ட உண்ணா விரதங்கள். அழுகைகள். இது வேண்டும் என்றோ அது வேண்டாம் என்றோ எதையும் எண்ணிக் கொள்ளவில்லை. அல்லது எனக்கு அறிமுகப்படுத்தப் பட்ட கடவுளிடம், இதை எனக்கு தந்தால் உன்னை நேசிப்பேன், வணங்குவேன் என்ற நிபந்தனைகளும் இல்லை.

நான் உன்னை வணங்க வேண்டிய அவசியமில்லை. பிரார்த்திக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்குத் தேவையானதை நீ செய்து தரக் கடமைப் பட்டிருக்கிறாய். ஏனென்றால் உன்னால் நான் படைக்கப்பட்டிருக்கிறேன்.

எதற்காக படைக்கப்பட்டேன் என்று எப்போதாவது எண்ணிய துண்டு. இந்த பிறப்பை ஒரு அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கும் இல்லை எனக்கு. ஒரு மனிதனின் சிந்தனைத் திறன் பாதிக்காத வரை அந்த மனிதனால் எதையும் செய்ய முடியும், அவன் ஊனமாய் இருந்தாலும், செவிடு, குருடு என்று எப்படி இருந்தாலும்.

ஆனாலும் ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது அவர்கள் பெற்றோர் தரும் ஊக்கத்திலேயே இருக்கிறது. என் பெற்றோர் எனக்குச் செய்த மாபெரும் உதவி என்னை “ஒர்த் டிரஸ்டில்” கொண்டு போய்ச் சேர்த்ததுதான். அங்கு தான் என்னால் இயலும் என்ற வாசகம் கற்பிக்கப்பட்டது.

“ஸார் என்னால பெருக்க முடியாது.”

ஒரு ஸ்டிக் இப்படி தூர வச்சுடு, ஒரு கைல தொடப்பத்தை இப்படி பிடிக்கனும், இப்ப பெருக்கு என்று சொன்ன கருணாநிதி சாரை மறந்துவிட முடியாது.

புற்களைப் பிடுங்கு என்று கொண்டு போய் புல் பிடுங்க விட்டதையும். சிறு சிறு வேலைகளைச் செய்ய ஊக்கப்படுத்தி யதையும் மறக்க முடியாது.

நான் முதல் முறை தாவணி அணிந்த போது ஒரு பெண் மணி கூறினார் நான் அலி போல் இருப்பதாக! அதன் பிறகு நான் தவணி அணிவதை விட்டு விட்டேன். ஆனால் நான் ஒர்த் டிரஸ் போன பிறகு ஒரு முறைத் தாவணி உடுத்திக் கொள்ள நேர்ந்தது. அந்த சமயம் வத்சலா மேடம் வந்து சொன்னாங்க. “தமிழ் நீ ஒரு தேவதை போல இருக்க! இரு சைட்ல ஒரு ரோஜா வச்சா நல்லா இருக்கும்,” என்று ரோஜாவையும் வைத்துவிட்டது ஒரு மாபெரும் நினைத்து மகிழும் நெகிழ்வு.

தினம் என் பயணங்கள் எழுதத் துவங்கியது என்னை போல் இயலாமையின் வாழ்வனுபத்தில் இருந்து வெளி வர முயற்சி செய்பவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்பதற்காக தான்.

22.08.2014 அன்றைய பயணம் ஒரு வித்தியாசமானது. இதயத் துடிப்பு புத்தகத்தை அனைவருக்கும் அனுப்ப வேண்டும் என்று அஞ்சலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன். துக்காப் பேட்டையில் 7 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்று கூறியதின் பேரில் செங்கம் அஞ்சலகத்தை நோக்கி எனதான பயணம்.

வழியில் தமிழ்ச்செல்வி என்று யாரோ அழைத்தார்கள். என்னைப் பெயர் சொல்லி அழைப்பவர்கள் அலுவலக உடன் பணியாளர்கள் தவிர்த்து, மிகக்குறைவு. பெரும்பாலும் மேடம் என்றோ அல்லது அக்கா, அல்லது அம்மா என்றோ அழைப்பவர்கள்தான் அதிகம். இந்த தமிழ்ச்செல்வி என்ற பெயர் அழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன் பின் தெரியாத ஒருவர் என் பெயர் சொல்லி அழைக்கிறார். நான் விழிகளைச் சுருக்கி என்ன என்பது போல் பார்த்தேன்.

உங்க இதயத்துடிப்பு புத்தகம் பார்த்தேன். அதில தமிழ்ச்செல்வி கார்னர் என்று ஒரு பக்கம் இருந்தது. நல்லா எழுதியிருக்கீங்க அடுத்த வாரத்துல கவிதை அரங்கம் ஒண்ணு வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். நீங்களும் வாங்க! அதோ அவங்களும் நல்லா கவிதை எழுதுவாங்க என்று அருகில் இருந்த பெண்மணியையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

சமூகத்தில் நம்முடைய அந்தஸ்து என்பது நம்முடைய செயல்களின் மூலமே கொடுக்கப்படுகிறது. எதையும் செய்யாமல் சமூகம் என்னை மதிக்க வில்லை என்பதோ என்னை மூலையில் முடக்கி விட்டது என்பதோ பைத்தியக் கராத்தனம் என்று உணரச் செய்தது இப்பயணம்.

[தொடரும்]

+++++++++++++++++++++++

Series Navigationக.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014