தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

 

பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப்  புலனாகிறது.

 

உலக நடப்புகள்  நன்மை தீமை, முரண்பாடு மற்றும் நேர்மைச் செயல்களின் தொகுதியே!   இங்கு குறைபடுதலோ, அல்லது கூப்பாடு போடுதலோ, கண்டனங்களைத் தெரிவித்தலோ தேவையற்ற ஒன்று.

ஒரு துருத்தியில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் கூழாங்கற்களைச் சேமித்தால், அங்கு கூழாங்கற்கள் மட்டுமே நிரம்பிகிடக்கும், அது போலவே பத்திரிக்கைகளில் நிரம்பி வழியும், கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்திகளும், எங்கெங்கோ சிதறிக் கிடப்பனவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது உலகம் முழுவதும் பெரும்பாலும் கொடூரர்களால் நிரம்பி வழிவது போல ஒரு பொய்த் தோற்றத்தை நமக்குக் காண்பிக்கின்றன.

 

ஒரு மாத இதழில் நான் படித்த செய்தி இது:

 

2009 -லிருந்து 2013 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 38,868!

 

2013-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12, 363!

 

2013-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் கிட்டத்தட்ட ஆயிரம்! இவற்றில் 18 வயதுக்குக் கீழேயான சிறுமிகள் 65 சதவீதம்!

 

நாடு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலுவையில் இருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல்!

 

இப்படித் தொடர்கிற அந்த கோரச் செய்தி, பாதுகாப்பற்ற இடங்களாக ரெயில்வே பிளாட்பாரங்கள், பேருந்து நிலையங்கள், பாழடைந்த கட்டிடங்கள், மற்றும் காவல் நிலையங்களைப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைத் தளங்களாக சித்தரிக்கிறது.

 

அடுத்த படியாக பாலியல் வன்மக் கொடூரர்கள் வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு அருகிலும் இருக்கிறார்கள் என்றும் அச்செய்தி அதிர்ச்சி, அச்சமூட்டுகிறது.

 

இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து உலகம் கொடூரமானது என்று ஏன் சித்தரித்துக் கொண்டிருக்கிறோம் ?   ஏன் ஒரு பொய்த் தோற்றத்தை உருவாகிக் கொண்டிருக்கிறோம் ?

 

பெண்கள் இப்போது தைரியத்துடன் இருக்கிறார்கள். சாராயக் கேசில் பிடிபட்ட பெண் ஒருத்தியை ஏட்டு, கெட்ட வார்த்தையில் திட்டிவிட, அந்த பெண் நீதிபதியிடம் பயமில்லாமல் சொல்கிறாள்,  அந்த ஏட்டு கெட்ட வார்த்தையில் அவளைத் திட்டுகிறார் என்று;  ஏட்டும் அந்த பெண்ணிடம் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பும் கேட்கிறார்.  ஆச்சரியமாக இல்லையா ?

 

குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுக்கும் அதிகாரம் தனி நபருக்கில்லை என்று அறிவுறுத்துகிறார்  அந்த நீதிபதி. தன்னைக் காதலித்து ஏமாற்ற எண்ணியவனைத் தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்கிறாள் அந்த பெண்.  அந்த ஆணின் பிடி அப்போது அவள் கையில்.  சிலர் அழுது புலம்ப, சில பெண்களோ தனக்கானதைத் துணிச்சலாய்ப் போராடிப் பெற்றுக் கொள்கிறார்கள்.

 

ஆண்களைக் கொடூரர்கள் என்று குறைகூறிக் கொண்டு ஆண்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அனுதினம் வாழ வேண்டியுள்ளது ! ஆண்களைக் குற்றம் சாட்டிக்கொண்டு ஆண்களோடுதான் குடும்பம் நடத்துகிறோம்.  ஒரு பெண் ஆணுக்கான வளாகவும், ஒரு ஆண் பெண்ணுக்கான வனாகவும் தான் உலகில் வாழ்ந்தாக வேண்டும்.  இது தான் இயற்கை நியதி.  ஆனால் இப்படி எப்போதும் நடப்பதில்லை !

 

கொடூரர்களை மட்டும் எடுத்துக்காட்டத் துணியும் எந்த பத்திரிக்கையும் ஏன் நல்லவர்களை எடுத்துக் காட்ட முயல்வ தில்லை ?  ஏனென்றால் அவர்கள் எண்ணிக்கையில் அநேகராக இருக்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள் தனிச்சிறப்பு பெற்றவர்கள் அல்லர் என்ற வகையில் எண்ணிக்கையில் குறைவான கயவர்களை மட்டும் பத்திரிக்கைகள் தம் இலாப நோக்கிற்காகப் போட்டுப் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

பேஸ்புக்கில் ஒரு நண்பர் பதிவிட்ட புகைப்படத்தைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.

 

தகப்பனோடு ஒன்றிக் கொள்ளும் மழலையின் மென்மை உணர்வு, தந்தை மகளுக்கான பாசப் பிணைப்பு.

 

இது போன்ற பாசத் தகப்பன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்தக் கொடூர உலகில்.  உலகம் மிக அழகாக படைக்கப் பட்டுள்ளது !  அது பலருக்குத் தெரிவதில்லை ! அதை நரகமாக்குவது நம்மில் சிலரே !  அதன் போக்கில் அது சில சமயம் மிக ரம்மியமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது.  ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடக்கும் குற்றங்களை மிகைப்படுத்தி அதன் அழகு தோற்றத்தைக் குலைத்துக் கொள்ள வேண்டாம்.

 

[தொடரும்]

Series Navigation