திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4

புதியமாதவி

 

அத்தியாயம் 4

 

தந்தை பெரியாரின் காலத்தில் திராவிட இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைதலை   மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம். இது திராவிட இயக்கத்தின் நான்காவது  கட்டம். அரசு, அதிகாரமையம்  என்ற பாதையை  நோக்கிய பயணம்.

அண்ணாவின் பேச்சும், எழுத்தும்  அறிவுத்திறனும் இயக்கத்தை நடத்திய விதமும்போற்றுதலுக்குரியவை.

இக்காலக்கட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக வேத இந்தியா முன்னிறுத்தப்பட்டது. அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக வேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியவேதம் இந்தவகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டார்.

தமிழனின் சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில் ஒரு புரட்சியை மிக எளிதாக ஏற்படுத்தினார்.

 

இது எப்படி சாத்தியப்பட்டது என்றால் அண்ணாவின் திமுக காலத்திற்கு முந்திய ஆதிதிராவிடர் எழுச்சியும்  உரிமைப்போராட்டங்களும் அக்காலத்தில் நீதிக்கட்சி வழங்கிய கல்விச்சலுகைகளும் பெரியாரின் திராவிடர் இயக்கம் ஏற்படுத்திய தாக்கங்களும் கிராமப்புற இளைஞர்களிடம் ஏற்கனவே மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. கிராமப்புறங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களாக இருந்த அக்கால இளைஞர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் இவர்கள் எழுதியவையும் இவர்கள் மேற்கோள் காட்டிய செய்திகளும்தான்.

இக்கிராமப்புற இளைஞர்களை  சொந்த ஊரில் நிலவுடமை சமூகமாக இருக்கும் ஆதிக்கச்சாதியினர் மதித்ததில்லை. பணிபுரியும் இடத்திலும் இவர்களுக்கு மரியாதை இல்லை. இப்படியாக தமிழ்மொழிக் கற்ற இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் பேசப்பட்ட தமிழின் பெருமையும் தமிழரின் பொற்காலமும் இவர்களை அந்த பெருமையின் அடையாளமாக உணரச் செய்தது.

கனவிலும் கிராமப்புறத்தில் தலைமைத்துவ இடத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் இருந்த இவ்விளைஞர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம் கிராமத்தில் தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.

 

இக்காலக்கட்டத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் ஜேக்கப் பாண்டியன் அவர்கள் கிராமங்களில் 60க்குப்பின் ஏற்பட்ட இம்மாற்றத்தில் தலைமைத்துவ இடத்திற்கு ஆதிக்கச்சாதியைச் சார்ந்த இளைஞரும் அவருக்கு ஆதரவாக பிற சாதி இளைஞர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார்.

 

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட கலைஞர், எம்ஜிஆர் காலம் அதிகாரமையத்தை முழுமையாக எட்டிய ஒரு காலக்கட்டம். இந்தக் காலக்கட்டத்தை எட்டியப்பின் இயக்கங்கள் சரிவை நோக்கிப்போகின்றன என்ற பொதுவிதிக்கு திராவிட இயக்கமும் விதிவிலக்காக இல்லை.

 

Series Navigation