Posted in

திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

This entry is part 7 of 24 in the series 25 அக்டோபர் 2015

R.Mariappanஇரா.மாரியப்பன்

 

உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி, நாகரிகம், பண்பாடுகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்ந்த காலங்களையும் அறுதியிட்டுக் கூறுவதென்பதும் அவ்வளவு எளிதன்று. உலகின் முதன்மாந்தனாக விளங்கியவன் தமிழன். அவன் படைத்துப் பயன்படுத்திய மொழியே உலகின் முதல் தாய்மொழி எனப்பாவாணர் உள்ளிட்ட பலரும் குறிப்பிடுகின்றனர். அத்தகைய தொன்மைவாய்ந்த தமிழில் தோன்றிய ஓர் ஒப்பற்றநூல்தான் உலகப்பொதுமறையாக விளங்குகிறது. அதில், மனிதன் வாழ்வாங்கு வாழத்தேவையான அனைத்துக்கூறுகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பட்டியலிட்டுக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய வாழ்வியற்கூறுகளை நாம் எந்த அளவிற்கு மேற்கொண்டு பயனடைந்துள்ளோம் என்பதைத் தன்மதிப்பீடு (சுய பரிசோதனை) செய்துகொள்ளவே இவ்வாய்வுக் கட்டுரை.

மனம் – பெயர் – பொருள் விளக்கம் :

மனம் என்னும்சொல் ‘மன்னுதல்’ என்னும் சொல்லின் அடியாகப்பிறந்தது. அதாவது, ஆன்மாவில் நிலைபெற்று விளங்குவது. “மனம் என்பது பார்வை, கேட்டல், நுகர்தல், பேசுதல், உணர்தல் என்ற ஐம்புல நுகர்வுகளுடன் சிந்தனை என்ற பகுதியுள் அடங்கிய ஒருவகை நரப்பச்செயல்பாடு”( மனம் ஓர் ஆய்வு – கு.வை.இளங்கோவன்,ப.124) மனிதவாழ்விற்கு அடிப்படையாக இருப்பதோடன்றி, மனிதனையே இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலே மனம். (தமிழர் கண்ட மனம் – கரு.நாகராசன், ப,105) மனம் ஆன்மாவில் நுட்பமாகக் கலந்திருப்பது, பொறிபுலன்களின் துணையோடு இயங்குவது.

எண்ணங்கள் :

‘மனம்போல வாழ்வு’ என்பது நமது முன்னோர் கண்ட பொன்மொழி. மனம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும், தீயது நினைத்தால் தீயது நடக்கும். நினைத்தல் என்பது சூழலின் தூண்டல்களால் அமைகின்றன. தூண்டல்கள் அகத்தூண்டல், புறத்தூண்டல் என இரண்டு வகைப்படும். இதனைக் கருத்திற் கொண்டுதான் மகாத்மா காந்தியடிகள் தனது அலுவலகத்தில், தனது கைகளால் கண்களையும், காதுகளையும், வாயையும் பொத்திக்கொண்டிருக்கும் மூன்று பொம்மைகளை வைத்திருந்தார் என்பர்.

“பொறிபுலன்களால் தூண்டப்பட்டு நாடிநரம்புகளின்வழி மூளைக்குச்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதன்பின் மூளையோடு தொடர்புடைய மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் வலுப்பெறும் நிலையில் செயல்களாக வடிவெடுக்கின்றன. எண்ணங்களின் கூட்டுத்தொகுப்பு ஆசையாகவும், உழைப்பாகவும் மாறி மேதை – தலைவன் என்று ஒளிருவதை உலகில் காண்கிறோம், அத்தகையோரால் உலக சரித்திரமே எழுதப்படுகிறது. ஆம்! எண்ணங்கள் உலகை ஆள்கின்றன” (எண்ணங்கள், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி – ப.25) எந்த அளவிற்கு எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றோமோ அந்த அளவிற்கு அவை வெற்றிகளைத்தருகின்றன. இதனை,

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின்       (குறள், 666)

 

என்ற குறளில் வான்புகழ்வள்ளுவர் வகுத்துரைத்துள்ளார்.

– 2 –

மனநல விழிப்புணர்வு :

உலகில் தோன்றிய உயிர்களை நமது முன்னோர்கள் அறிவின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்தியுள்ளனர். இதனை, ‘ஆறறிவதுவே அவற்றொடு மனனே (தொல்.1526), மக்கள் தாமே ஆறறி வினவே , பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ (தொல்.1532) எனவரும் தொல்காப்பிய நூற்பாக்கள்வழி அறியலாம். இதில் தொல்காப்பியர் மனத்தை ஆறாவது அறிவாகக் கருதியுள்ளார். இதிலிருந்து ‘மனம்’ பெற்றவனே மனிதன் என்பது தெளிவாகின்றதல்லவா? எனவே, ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டபடி மனிதன் மட்டுமே மாற்றத்திற்கு உட்பட்டவன். மனிதன், மாற்றம் என்றபெயரில் ஐம்பூதங்களையும் ஆட்டிப்படைக்க ஆசைப்படுகிறான். முடிந்தவரை வெற்றியும் அடைந்துள்ளான். ஆனால் அவனது ஆன்மாவிற்குள் ஒன்றி அவனை ஆட்டிப்படைக்கும் மனத்தைமட்டும் அவனால் கண்டறிந்து அடக்கியாள முடியவில்லை. தவிக்கிறான், துடிக்கிறான், அலைகிறான், முடிவில் நோய்வாய்ப்பட்டுச் செத்துமடிகிறான். எந்தவொரு உயிருக்கும் கிடைக்காத இந்த அற்புதமான மனத்தோடுகூடிய உடலை வீணே பாழ்படுத்துகிறான்.

உடலில் தோன்றும் நோய்களைவிட மனதில் தோன்றும் நோய்களே மிகவும் ஆபத்தானவை. காரணம், உடலின் ஓர் உறுப்பில் நோய்வந்தால் அந்த உறுப்புமட்டும் பாதிப்படையும். உதாரணத்திற்கு, கண்ணில் ஏதேனும் குறையேற்பட்டால் கண்ணில் மட்டுமே வலிவரும். ஆனால் மனதில் ஏதேனும் குறையேற்பட்டால் அது உடலின் பலபகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனதில் ஏற்படும் குறைகள் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணரவேண்டும்.

மனநோய் என்றால் என்ன?

தனிமையில் தானாகப்பேசிக்கொள்வது, சிலநேரங்களில் காரணம் தெரியாமல் வருத்தப்படுவது, எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆள நினைப்பது, பிறரைத்துன்புறுத்தித் தான் இன்புறுவது, அடிக்கடி அதீதக்கற்பனை செய்து தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் வருத்திக்கொள்வது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது, தாழ்வுமனப்பான்மை கொள்வது என்பனபோன்ற நடத்தைகளே மனநோயின் அறிகுறிகளாகும்.

மனமும் சூழலும் :

மனம் இயல்பாகவே குற்றமுடையது; இருள்சேர் இருவினையும் சேரும் தன்மை கொண்டது; அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்றும், தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது என்றும் குறிப்பிட்டுள்ளார். மனம் எப்போதும் பள்ளத்தை நோக்கிப்பாய்ந்தோடும் நீரைப்போல கீழானவற்றை நோக்கியே செல்லும் தன்மை உடையது. அதற்குக்காரணம் உணர்ச்சியின் துணையோடு செல்லவிரும்புவதே. அப்படிப்பட்ட மனத்தை அறிவின்வழி செலுத்த வேண்டும். நம் மனதில் அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே பெரும்போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவற்றையே சூழ்நிலை என்கிறோம். மனம் அறிவின் துணைகொண்டு துலங்கலை ஏற்படுத்தும்போது நன்மையும், உணர்ச்சியின் துணைகொண்டு துலங்களை ஏற்படுத்தும்போது தீமையும் ஏற்படுகின்றன.

 

 

 

– 3 –

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மரபின் அடிப்படையில் ஏற்படும் தாக்கங்களைவிடவும் சூழ்நிலையின் அடிப்படையில் ஏற்படும் தாக்கங்களே வலிமை படைத்தனவாக அமைகின்றன. இதனையே வள்ளுவர் இனநலம் என்றுகூறி, மனநலத்தைவிடவும் இனநலமே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். (குறள்கள், 457,458 மற்றும் 459) நமது முன்னோர்களும் பன்றியோடு சேர்ந்த பசுங்கன்றும் மலம்தின்னும் என்றார்கள். எனவே, நமது சூழலும் நன்றாக அமையவேண்டும்.

தீ நட்பில் வீழாதிருக்க :

மனித வாழ்க்கையில் எந்தவொரு நாகரிகம் பண்பாடானாலும் ஏதாவதொரு பயன் கருதித்தான் தோன்றியிருக்க முடியும். நட்பும் அப்படித்தான். உதாரணத்திற்கு ஒருவர் தான்சந்திக்கும் மற்றொருவரோடு எதனால் நட்புகொள்கிறார்? ஏதோ ஒருவிதத்திலாவது தனது கருத்தோடு மற்றவருடைய கருத்து ஒன்றி இருப்பதால்தானே? முற்றிலும் வேறுபட்ட கருத்துடையவரோடு எவராலும் நட்புகொள்ளமுடியுமா? எனவே நட்புகொள்வதற்கும் காரணங்கள் உண்டு. அவை பயன்கருதியதாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது; அதையும் கடந்து அன்பின்வழிப்படவேண்டும் என்பதே பெருநாவலரின் பேரவா. மேலும் சமுதாய அமைப்பில் கூட்டாக வாழும் மனிதனுக்கு நட்புதான் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை நட்புகுறித்து ஐந்து அதிகாரங்களில் விரிவாகப்பேசியுள்ளார். நட்பு அன்புவயப்பட்டதாயினும் ஆராயப்பட வேண்டிய தொன்று. ஆபத்துக்காலத்தில் உதவுவதே உண்மையான நட்பு. அது முகம்நக நட்பதன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது. அதுவே நீடித்துநிலைக்கும். உயிரைவிட மேலான மானத்தைக் காப்பது நட்பு என்பதை,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.         (குறள், 788)

என்று உவமை கூறி விளக்கியுள்ளார் வள்ளுவர்.

இழிந்த தன்மை உடையவர்களோடு கொள்கின்ற நட்பினால் அடையும் நன்மையைவிடப் பகைவர்களால் ஏற்படும் நன்மை பத்துக்கோடி ஆகும். இதனை, நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். (குறள், 817) என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஆராயாமல் கொள்கின்ற கூடாநட்பு, தீ நட்புகளெல்லாம் சாகும்வரை நம்மைவிட்டு அகலாது. உதாரணத்திற்கு, ஒருவன் சிறுவயதில் தீய எண்ணங்கொண்டவனோடு நட்புகொண்டுவிட்டு, காலம், இடம் போன்ற சூழல்களால் பிரிந்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். பல ஆண்டுகள் கழித்து அவனைச் சந்திக்க வாய்ப்புகிடைத்தாலோ அல்லது முன்பு பழகியவன் கைபேசியின் தொடர்பெண் கிடைத்தாலோ தீயவன் தனது கீழ்த்தரமான சிந்தனையினால் அவனிடமிருந்து ஏதேனும் நன்மைபெறத்தீமை செய்வான். அச்செயல் மீண்டும் மீண்டும் நிகழும்போது பழகியவன் மனதளவில் பாதிப்படைவான். அதனால் நோய்கள் உருவாக, வேறுவழியின்றித் தனது வாழ்கையை முடித்துக்கொள்ளும் நிலைக்குக்கூடப் போய்விடுவான். இவுண்மையை, இன்றைய நாளில் வெளியாகும் ஊடகச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, வான்புகழ் வள்ளுவர் காட்டும் வழியைச் சரிவரக்கற்று,

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு                   (குறள், 783)

என்றநிலையில் நட்புகொண்டு வாழ்வோம்.

– 4 –

மதுப்பழக்கத்தில் ஆட்படாதிருக்கவும், மீளவும் :

இன்றைய நாளில் மதுவிற்கு அடிமையாவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். அவற்றுள் சில. வாழ்க்கையில் ஏற்படும் தாங்கமுடியாத துன்பங்களை மறப்பதற்காக, விருந்துகளில் நண்பர்களோடு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக மற்றும் திரைப்படங்களில் தனக்குப்பிடித்த நடிகர்கள் செய்வதுபோல் தானும் செய்யவேண்டும் என்பதற்காக எனக்கூறலாம். இவற்றிலும் சுருக்கமாகச்சொன்னால் பெரும்பாலும் நட்புவட்டாரங்களால்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். எனவே நட்பு மேற்குறித்தவாறு மிகக்கவனமாக மேற்கொள்ளவேண்டிய ஒன்று என்பதை உணரவேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஆளுமைத்திறனை வளர்த்துக்கொண்டு, என்னதான் மற்றவர்கள் தன்னை மதுப்பழக்கத்தில் ஈடுபடுத்தத் தூண்டினாலும்,

குற்றமே காக்கப் பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை.                 (குறள், 434)

என்பதை உணர்ந்து மனக்கட்டுப்பாட்டோடு வாழப் பழகிக்கொள்ளவேண்டும். மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பணத்தைக்கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்குபவர்கள். அவர்களைத் திருத்தமுயல்வது ஆழமான தண்ணீருக்குள் மூழ்கிக் குளிப்பவனைத் தீப்பந்தத்தால் சுடமுயல்வதை ஒக்கும். (குறள், 929) அதனால்தான் வள்ளுவர் குடிகாரர்களை,

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பர் கள்ளுண் பவர்         (குறள், 926)

என்று கடுமையாகக் கடிந்துரைக்கிறார். ‘மதுப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற’ என்று பலரும் விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள், மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி 4 D முறையில் திருத்தலாம் என்கிறார்கள். முதலாவது D என்பது Delay. அதாவது மது குடிக்கவேண்டுமென்ற நினைப்புவரும்போது தள்ளிப்போடுவது. இரண்டாவது D என்பது Distract அதாவது எண்ணங்களை மடைமாற்றம் செய்வது. மூன்றாவது D என்பது Drink Water தண்ணீர் குடித்து மறக்கடிப்பது. நான்காவது D என்பது Deep Breath மூச்சை ஆழமாக இழுத்துவிடுதல். இந்த வழிமுறை பலன்தரக்கூடியது என்றாலும் குடிகாரர்கள் அவர்களாக உணர்ந்தாலன்றி திருத்தமுடியாது என்பதே உண்மை.

இதனை உணர்ந்தே வள்ளுவர்,

கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்,

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு         (குறள், 930).

என்று வழிகாட்டுகின்றார். அதாவது மதுகுடிப்பவன் குடிக்காதபோது மதுகுடித்த வேறொருவனின் தள்ளாட்டம் தடுமாற்றங்களைக்கண்டு மனமாற்றம் அடையலாம் என்கிறார்.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன், தன்சக மாணவர்கள் மதுகுடித்துவிட்டுத் தங்குமறையில் அடித்த கூத்துக்களைத் தன்னுடைய கைபேசியில் ஒளிஒலிப்படமாக எடுத்ததை என்னிடம் காட்டினான்.

 

 

– 5 –

அதில் மதுகுடித்த நான்குபேர்களுள் அதிகமாக மதுகுடித்து தன்னிலை இழந்து வாந்தியெடுத்து அதில் புரண்டுகொண்டிருந்த ஒருவன்மீது, சிறிதளவு மதுகுடித்த ஒருவன் எச்சிலைக் காறித்துப்புகிறான்; தன்மீது எச்சிலைத் துப்புகிறான் என்பதை உணர்ந்து எழமுயற்சி செய்கிறான். முடியவில்லை. கண்ணீர்விட்டு அழுகிறான். பிறகு ஒருசில மணிநேரங்கழிந்து சுயநினைவு வந்தபின், அந்த ஒளிஒலிக்காட்சியை வாந்தியெடுத்துக் கிடந்தவனிடம் படமெடுத்தவன் மீண்டும் மீண்டும் காட்டி உணர்த்த, அவன் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாக அறிந்தேன்.

இந்த நிகழ்ச்சி வள்ளுவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டுகின்றார் என்பதை உணர்த்துகின்றதல்லவா? எனவே, மதுவிற்கு அடிமையாகின்றவர்களை மீட்க இன்றைய நாளில் கிடைக்கும் நவீன மின்னணுக் கருவிகளைக்கொண்டு மதுகுடிக்காதவர்கள், மதுகுடித்தவர்களுடைய உண்மை நிலையைப் படம்பிடித்துக் காட்டித் திருத்த முயன்றால் நல்லபலன் கிட்டும் என்பது உறுதி.

பழிவாங்கும் இழிசெயலிலிருந்து மீள :

ஒருவர் ஒருவரிடம் அறிந்தோ அறியாமலோ தவறுசெய்துவிட்டால் கொஞ்சம்கூடப் பொறுமையில்லாமல் பதிலுக்குப்பதில் பழிவாங்கியே தீரவேண்டும் என்று திரிவது மிகக்கேவலமான செயல். இந்தப்பழக்கம் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் உருவாகிவிடுகின்றது. ஆம்! ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கல்தடுக்கிக்கீழே விழுந்து அழுதால், பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்த, இந்தக்கல்தானே உன்னைத்தடுக்கிவிட்டது என்றுகூறி அந்தக்கல்லை அடிப்பதுபோல் பாவனை செய்கின்றனர். குழந்தையும் அழுகையை நிறுத்த முயற்சி செய்கின்றது. இவ்வாறு குழந்தைப்பருவத்திலிருந்தே வளர்க்கப்படும் பழக்கத்தை எப்படி விடமுடியும்? போதாக்குறைக்கு திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களிலும் பழிவாங்கும் காட்சிகளே தாராளமாகக் காட்டப்படுகின்றன. இந்த இழிந்த போக்கினால்தான் இன்றைய சமுதாயத்தில் பலரும் பழிவாங்கும் உணர்வுகளால் நிம்மதியாக வாழமுடியவில்லை என்பது கண்கூடு. பழிவாங்கும் உணர்வு பொறாமையின் காரணமாகவே உருவாகின்றது. இதனைத்தான் தெய்வப்புலவர் ‘அழுக்காறாமை’ என்கிறார்.

பொறாமை கொள்பவன், மனவலிமை இல்லாதவன்; உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுபவன், முற்றிலும் சொல்வேறு செயல்வேறு என்று இருப்பவன்; தன்னுடைய இழிந்த எண்ணம் நிறைவேறுவதற்காக எந்தவொரு கீழ்த்தரமான நிலைக்கும் செல்பவன்; அப்படிப்பட்டவனைத்தான் பொய்யில்புலவர் ஒருபாவி என்கிறார். அவன் உடுப்பதும் உண்பதும் இன்றிக்கெடுவான். ஒருவேளை அவன் முன்வினையின் காரணமாகச் செல்வந்தனாக இருந்தாலும் அது பலராலும் யோசித்துப்பார்க்கும் நிலையாக அமையும்.(குறள், 169)

சரி, நாம் பொறாமைப்படாமல் இருந்தாலும் மற்றவர்கள் நம்மைப் பொறாமையின் காரணமாகவோ பிறிதொரு காரணத்திற்காகவோ நாம் உழைத்து ஈட்டிய செல்வத்தைக் கவர்ந்துகொண்டு நம்மை அழும்படி செய்தால் நாம் என்ன செய்வது? நம்மைத்துன்புறுத்தியவனை நாம் தண்டிக்காமல் விடுவதா? என்று

 

 

 

– 6 –

கேட்கலாம். அவ்வாறு பதிலுக்குப்பதில் என்று செயல்படும்போது மேலும் மேலும் பல தீயவினைகளைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். அப்படியென்றால், இவ்வாறான சூழ்நிலைகளில் எவ்வாறு மனவமைதி பெறுவது? அதற்குத்தான் வள்ளுவர் அருளிய, ,

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.                   (குறள், 659)

என்னும் அருமருந்தான குறள் இருக்கின்றதே! போதாதா? ஒருவன் உன்னை அழும்படிச்செய்து கவர்ந்த பொருளானது, கவர்ந்தவனை அழும்படிச் செய்து, அவனைவிட்டு நீங்கிவிடும், நீ அவனுக்குப் பதில் தீங்குசெய்யாமலிருக்கும் நிலையில் அந்த இழப்பானது பிற்காலத்தில் உனக்கு நன்மையைத்தரும். இவ்வற்புதமான குறளை அருளிய வள்ளுவர் எவ்வளவு சிறந்த மனநல மருத்துவராக விளங்குகிறார் என்பதை உணரவேண்டும். அதாவது, எந்தவொரு குற்றவாளியையும் அவனது போக்கிலேயே சென்று திருத்தினால்தான் திருத்தமுடியும் என்பதை உணர்ந்து, உன்னை அழச்செய்தவன் விரைவில் அவன்கவர்ந்த பொருளை இழந்து துன்புறுவான் என்று குறிப்பிடுகிறார். இந்த உத்தி பழிவாங்கும் உணர்வைத் தூண்டுவதுபோல் தூண்டி, நம்மை நன்னெறிப்படுத்துவதாகும். இவ்வினிய பொய்யாமொழிப் புலவரை எவ்வாறு போற்றிப்புகழ்வது?

சினம் தவிர்க்க :

அழுக்காறு தோன்றுவதற்குக் காரணமாக விளங்குவதே சினம்தான். சினம் கொள்பவரைமட்டும் அழிக்காமல் அவரைச்சார்ந்தவரையும் சேர்த்து அழித்துவிடும் தன்மையது. எங்கும் எதிலும் பரபரப்பான இன்றைய சூழலில் எதற்கெடுத்தாலும் மனிதனுக்குச் சினம் வந்துவிடுகின்றது. காரணம் பொறுமையின்மை. பொறுமை இருந்தால் புரிதல் உருவாகும். ஒருவர் நாம் விரும்பியவாறு செயல்பட வில்லையென்றால் சினம்கொள்கிறோம். சினம், மேலும் மேலும் பகையை வளர்க்கும்; அமைதியைக் குலைக்கும்; மனமகிழ்ச்சியைக்கெடுக்கும்; சினம் கொண்டவரைக் கொல்லவும் செய்யும். இப்படிப்பட்ட சினத்தை எவ்வாறு தடுப்பது என்பதற்கு வள்ளுவர் காட்டும் வழியைப்பாருங்கள்!

இன்றைய உலகம் எதிலும் கைமேல்பலன் கிட்டவேண்டுமென்று எதிர்பார்க்கின்ற தன்மை உடையது. அப்படி எதிர்பார்ப்பவர் மனநிலையைப் புரிந்துகொண்ட வள்ளுவர் அவர்கள் வழியிலேயே சென்று திருத்தமுயல்வதை உற்றுக் கவனிக்கவேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் என்னால் கோபத்தை விடமுடியாது என்று சொல்பவரைப்பார்த்து வள்ளுவர் கேட்கின்றார், “உனது மகிழ்ச்சியையும், அமைதியையும், உடல்நலத்தையும் கெடுக்கும் பகைவனை உனதுவீட்டில்வைத்து வளர்ப்பாயா? வளர்க்கமாட்டாயல்லவா? அப்படிப்பட்ட நீ, பகைவனைவிட மோசமான நாசத்தைச்செய்யும் சினத்தை ஏன் உனது மனதிற்குள் வளர்க்கிறாய்” (குறள், 304) என்று பயன்பாட்டு நோக்கில் நமது சிந்தனையைத் தூண்டுகிறார். மேலும், இன்னொரு விதத்திலும் சினத்திலிருந்து நம்மை மீட்க வள்ளுவர் மேற்கொள்ளும் உத்தியை அறிவோமா?

 

 

 

– 7 –

நம்மைவிட வலிமைபடைத்த ஒருவர்முன் நம் கோபத்தைக் காட்டமுடியுமா? முடியாது. அதனால் மனதிற்குள் அடக்கிவைத்து வேதனைப்படுகிறோம். அடுத்து அந்தக்கோபத்தை நம்மைச்சார்ந்தவர்களிடம் காட்டுகின்றோம். இவ்வாறு அடிக்கடி கோபப்படும்போது இரத்த அழுத்தம் உள்ளிட்ட கொடிய நோய்கள் நமக்குப்பரிசாகக் கிடைக்கின்றன. இது தேவைதானா? நினைத்துப்பாருங்கள்! எனவே,

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.       (குறள், 250)

என்று வான்பரிதி வள்ளுவர் காட்டும் வழியைப்பின்பற்றி அன்போடு அமைதியாக வாழலாமே! ஒருமுறை இரண்டுமுறை முயற்சிசெய்தால்மட்டும் சினத்தைக் காத்துவிடமுடியாது. சர்க்கரை போன்ற கொடிய நோய்கள் வந்தால் உயிருள்ளவரை மாத்திரை சாப்பிடுகின்றோமல்லவா? அதுபோல் கோபம் வரும்போதெல்லாம் நம்மைவிட வலியவரிடத்தில் நாம் எப்படி அடங்கிப்போவோம் என்பதை நினைத்து நினைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தவேண்டும். உடனடியாகக் கோபத்தை விட்டுவிட முடியாது, நோய்க்குத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்வதுபோல் தொடர்ந்து முயன்று நோய்களுக்கு விடைகொடுக்கலாமே!

துன்பங்கண்டு துவளாதிருக்க :

திருக்குறளில் வாழ்வின் அனைத்துக்கூறுகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், பயனில சொல்லாமை, அறிவுடைமை, தெரிந்து வினையாடல், இடுக்கண் அழியாமை, வினைத்திட்பம், வினைசெயல்வகை என்பன சில. ‘ஊழையும் உப்பக்கம் காணலாம்’ என்று கூறிய வள்ளுவர் ‘ஊழிற்பெருவலி யாவுள’ என்ற வினாவையும் ஏன் கேட்கின்றார் என்று நினைத்துப் பார்க்கவேண்டும்.

உலகில் அல்லவர் வாழ நல்லவர் வாடும்நிலை இருக்கின்றதல்லவா? அப்படிப்பட்ட நிலையில் நல்லவர்கள் சலிப்பின்காரணமாகத் தடுமாற்றம்கொண்டு, அறத்திலிருந்து திறம்பிவிட வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அவாவின் காரணமாகவே வள்ளுவர் ஊழையும் அமைத்துள்ளார் எனக் கருதவேண்டும். தாங்கமுடியாத துன்பத்தால் தற்கொலை செய்துகொள்ள முயல்வோரை மீட்கும் அருமருந்தாக ‘ஊழ்’ என்னும் அதிகாரம் விளங்குகிறது.

இல்லறவின்பம் இனிதாய் அமைய :

உலகப்பொதுமறை எனப்பலராலும் போற்றப்படும் தமிழ்மறையில் வள்ளுவர், ஒருவன் அறத்தின்வழி பொருளை ஈட்டி, இன்பத்தைத் துய்க்கவேண்டும் என்கின்றார். இல்லறத்தில் ஈடுபட்டு அதற்கான கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவனே மனிதனாகப் போற்றப்படுவான்.

சமுதாயத்தில் எங்கு பார்ப்பினும் முறையற்ற பாலியல் வன்மங்கள் தினம்தினம் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்த இழிநிலைகளுக்கான காரணங்கள் என்ன என்றால், “இப்படிப்பட்ட வன்ம உறவுகள் தழைத்தோங்க சமூக வலைத்தளங்களும், செல்ஃபோன்களும், நவீன வாழ்க்கைமுறையும் ஏதுவாக இருக்கின்றன. இன்றைய நுகர்வுக்கலாச்சாரத்தில் கைக்குக் கிடைத்தபொருள் கொஞ்சகாலத்திலேயே அலுத்துப்போய் அடுத்தபொருளுக்கு ஆசைப்படும் அவலநிலை நிலவுகிறது” (உளவியல் உங்களுக்காக, ப.12)

 

 

– 8 –

‘இல்லறம்’ மனிதன் பக்குவம் அடைவதற்கான மிகச்சிறந்த பல்கலைக்கழகம். திருமணம், இரண்டு ஆன்மாக்களின் வாழ்க்கை ஒப்பந்தம். இதில் இணையும் இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். இருவருக்குமிடையே எந்தவொரு ஒளிவுமறைவும் இருத்தல்கூடாது. இதனைக் கருத்திற்கொண்டுதான்

உடம்பொடு உயிரிடை அன்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு        (குறள், 1122)

என்றார் வள்ளுவப்பெருந்தகை. புரிந்துகொள்ளுதலும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்க்கையின் இன்றியமையாத பண்புகள். இதனைக் கருத்திற்கொண்டே நமது முன்னோர் ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்றனர்.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரச்சூழலில் இல்லற இன்பத்தில் சலிப்படையாமல் இருக்கவேண்டுமானால் அன்பும், பொறையும், புரிதலும் வாழ்க்கையில் தவழவேண்டும். உடலின்பத்தைத் தருவதுதான் இந்தவாழ்க்கை என்று கருதாமல் உள்ளக்களிப்பையும் வழங்குவது என்று உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் குடும்பவாழ்க்கையில் நமது அறியாமையாலோ பிறரது தூண்டுதலாலோ சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. அந்த நேரங்களில் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருத்தல்வேண்டும்; அப்போதுதான் அன்பு பெருகும்; அதனால் நேற்று உணர்ந்த அன்பு இன்று அதிகரிப்பதை உணரலாம். அன்பின் தன்மைக்கேற்பவே இன்பமும் வேறுபடும். இப்படி நாளுக்குநாள் புதிது புதிதான அன்புவயப்பட்ட இன்பம் பெருகும். இந்த உளவியல் நுட்பத்தையே,

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு         (குறள், 1110)

என்ற குறளில் செந்நாப்போதார் தெள்ளிதின் விளக்கியுள்ளார். கோடானுகோடி மக்கள் தோன்றும் இவ்வுலகில் உண்மையான அன்பின் செவ்வியை உணர்ந்தவர்கள் ஒருசிலர்தானாம்.(குறள், 1289)

நிறைவுரை :

கல்வி, பிற உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக்காட்டும் ஓர் அற்புதமான கருவி. அது என்றும் அழிவில்லாதது. அப்படிப்பட்ட கல்வியை வளர்ப்பன நல்ல நூல்கள். குறிக்கோள்மிக்க வாழ்க்கையை உணர்த்தி மனத்தின் குற்றத்தைப்போக்கும் வலிமை நூல்களுக்கு உண்டு. இதனைப் பவணந்தியார் ‘மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு’ என்பார். அறிவுரை கூறுவதென்றால் எவருக்கும் பிடிக்காது. ஆனால் வள்ளுவர் கூறிய அறிவுரையோ உலகில் பல்லோராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றது. காரணம், அதில் இலக்கிய நயங்களும், எவருக்கு எதை எப்படிக் கூறவேண்டுமென்ற உளவியல் திறன்களும் நிறைந்துள்ளன. இவ்வாறான ஒப்பற்ற நூலை வழங்கிய திருவள்ளுவர் நூல்வடிவில் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். அவரைத் துணையாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ முயல்வோம்!

 

கட்டுரையாக்கம்

 

கவிஞர், சித்தாந்த ரத்தினம்.

இரா.மாரியப்பன்,

 

Series Navigationவெட்டுங்கடா கிடாவைஆதாரம்

20 thoughts on “திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

  1. அன்புசால் கெழுதகை அறிஞர் மாரியப்பன் எழுதிய கட்டுரை
    மிக்க அருமை.படிக்கும் போதும்-படித்தபின்பும் உள்ளார்ந்த உண்மையை புலப்படுத்திய பாங்கு பாராட்டக்கூடியது…வாழ்த்துக்கள்
    இது….தொடரவும்….ஆசை.

  2. ஆசிாியர்- கவிஞர், சித்தாந்த ரத்தினம்.
    இரா.மாரியப்பன் அவர்கள் கட்டுரையை விஞ்ஞான நெறியில் நின்றும் மெய்ஞ்ஞான நெறியில் நின்றும் செதுக்கியுள்ளார். மனம் என்னும் சொல்லாராய்ச்சி செறிவாக அமைந்துள்ளது.நிறைவாகவும் உள்ளது.செழுமையான செந்தமிழ் மொழிநடை நுண்ணிய ஆய்வுரை எளிய நடையில் உள்ளது அருமையிலும் அருமை.தொடர்ந்து இத்துறையில் ஆழங்காண வேண்டுகிறேன்.வாழ்க வளர்க.

  3. வள்ளுவரை மனநல மருத்துவராக இனங்கண்டு காட்டியிருக்கும் திரு.மாரியப்பன் கருத்துக்கள் ஏற்புடையனவே.’ எல்லாப் பொருளும் இதன்பால் உள ‘ என்பது மிகையாயினும்,பல்வேறு நோக்கு நிலைகளில் காண வாய்ப்பான இலக்கியம் திருக்குறள்.

  4. திருக்குறள் ஒரு நீதிநூல் மட்டுமே. மனப்பிணிகளை நீக்கும் நிவாரணியன்று. விட்டால் அவருக்குக் கோயில் கட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே!

    நீங்கள் எழுதிய பல கருத்துக்களுக்கு மாற்று எழுதலாம். விரிவஞ்சி ஒன்றேயொன்று மட்டும் பேசலாம். கள்ளுண்ணாமை.

    வள்ளுவர் எவரோ நமக்குத் தெரியாது. அவரைச்சமணரென்பார். வைணவரென்பார், சைவரென்பார். எப்படியாக அவரிருந்தாலும், என்னவோ இந்தப் புலாலுண்ணாமை, கள்ளுண்ணாமை இவைகளைக்கண்டு அவர் அளவுக்கதிகமாக எரிந்துவிழுந்துவிடுவதிலிருந்து எனக்குப்படுவது: வள்ளுவர் தனக்குத்தானே ஓருலகத்தை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்துவிட்டார்.

    கள் என்பது தமிழரின் பானம். தமிழர்கள் ஊனகரே பெரும்பான்மை. அன்றும் இன்றும்.
    கள் உடலுக்கு நல்லதே. கள் எனபது இயற்கைப்பானம்.
    புலால் உண்ணுதல் கெடுதி என்றால் தமிழர் என்றவினம் என்றோ காணாமல் போயிருக்கும்.

    இவையிரண்டும் அன்றாடம் உடல் உழைப்பால் வாழ்வோருக்கு ஆதாயங்கள்.

    அன்றாடம் வாழும் இவ்வுழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைக்கண்டு நகையாடுகிறார் அல்லது அவர்களைப்பற்றி எவ்வுணர்வும் அற்ற மேட்டுக்குடி ஆசாமிதான் இவர். அரசன் எப்படி வாழவேண்டும். என்ன செய்யவேண்டுமென்று அறிவுரைகள் சொன்ன வள்ளுவர் தம் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மயிலாப்பூர் சேரிக்குச் சென்று பார்த்திருந்தால், இந்தக்கள்ளூண்ணாமை, புலால் உண்ணாமை அதிகாரங்களை எழுத மனசாட்சியை அடகு வைத்திருக்கமாட்டார். மேட்டுக்குடி வர்க்கத்திடம்தான் அடகு வைத்துவிட்டார்.

    கள்ளோ, புலாலோ, அல்லது அமிர்தமோ, அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்று வள்ளுவரை விட நன்கு ஆழ்ந்து சிந்தித்த உணர்வு மிக்க தமிழர்கள் சொல்லி வைத்தார்கள். கூடவே கூடாதென்று சொல்லவேயில்லை.

    உங்கள் மாணாக்கர் குடியில் விழுந்ததற்கு அவன் வாழும் இன்றைய சமூகம்தான் காரணம். அதைத்திருத்த வள்ளுவரின் பாடல்கள் முடியுமென்றால், டாஸ்மார்க்கை மூட வேண்டிய அவசியமில்லை. வள்ளுவர் குறளைப்படித்துவிட்டு கூட்டம் குறையக்குறைய டாஸ்மார்க் கடைகளில் ஈயாடும்.

    உங்கள் மாணவன் கதைகூட காணொளியால் முடிந்ததேவொழிய வள்ளுவரால் இல்லை. காணொளி ஒரு உளவியல் உபாயம் என்றறிக. உளவியல் நன்கு வளர்ந்த ஒரு விஞ்ஞான வகைகளில் ஒன்று. தமிழகத்தில் இன்னும் வளரவில்லை.

  5. நண்பன் இரா.மாரியப்பன் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு பிஎஸ் என்பவர் எரிச்சலுடன் ஆரம்பித்து சமாளித்து முடித்துள்ளார்.
    இலட்சியங்கள் எப்போதுமே முழுமை பெறுவதில்லை. எண்ணுவதில் நல்ல எண்ணம் இருப்பதே நல்லது. நம்மால் பின்பற்ற முடியாததற்கு வள்ளுவன் மேல் ‘ வள்’ என விழவேண்டாம் பி எஸ் அவர்களே..
    வேண்டியன ‘கொள்க’ … வேண்டாதன ‘கொல்க’…
    மாரியப்பன் பணி வெல்க.. மேலும் எழுதிச் செல்க…

  6. நண்பன் இரா.மாரியப்பன் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு பிஎஸ் என்பவர் எரிச்சலுடன் ஆரம்பித்து சமாளித்து முடித்துள்ளார்.
    இலட்சியங்கள் எப்போதுமே முழுமை பெறுவதில்லை. எண்ணுவதில் நல்ல எண்ணம் இருப்பதே நல்லது. நம்மால் பின்பற்ற முடியாததற்கு வள்ளுவன் மேல் ‘ வள்’ என விழவேண்டாம் பி எஸ் அவர்களே..
    வேண்டியன ‘கொள்க’ … வேண்டாதன ‘கொல்க’…
    மாரியப்பன் பணி வெல்க.. மேலும் எழுதிச் செல்க…

  7. மதத்தவர்கள் சொல்வது: கீதையைப் படித்துவிட்டால் நல்லவனாவான்; விவிலியத்தைப் படித்துவிட்டால் வாழ்க்கை மாறி நல்லவனாகிவிடுவான். குரானைப் படித்துவிட்டால் எவருமே கெட்டவராக முடியாது. இவை உண்மையென்றால், இன்று நாட்டில் எல்லாருமே நல்லவராகி விடுவர். சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் தேவையில்லை. உண்மையா? பொய்.. எனவே புழல் சிறை நிரம்பிவழிகிறது. எந்தச்சாமியாரும் எந்த மதமும் எந்த மதநூலும் மனிதனை மாற்ற முடியாது,. மனிதனும் மனோ வக்கிரங்களும் சேர்ந்தே இருப்பது. எனவேதான் சொன்னார் அரபியர்: Trust in God. But tie up your caravan. ஒட்டகங்கள் ஓடிப்போய்விடும்வே கட்டாமல் வெறும் குரானை மட்டும் படித்துவிட்டால் என்று பொருள். எனவேதான் பாடினார் நம்மவூர் ஆள்: திருடனா பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் போட்டுத் தடுத்துக்கொண்டே இருக்கணும். இங்கே வள்ளுவரின் நிலையென்ன? வெறும் நூல்தாள்கள். படியுங்கள் மேடையில் பேசுங்கள் கைதட்டல்கள் பெறுங்கள். அதற்கு மேல் ஒன்றும் நகராது.

    ஒரு நூலில் வலிமை ஓரளவுக்குத்தான். அதுகூட மதநூலுக்கே உண்டு. அந்நூல் என்னை மாற்றியது என்பவர் சொற்ப மனிதர்களே.

    இலக்கிய நூல்கள் இருந்த இடத்திலேயே இருப்பன‌. இலக்கியம் என்று சொல்லப்படும் நீதிநூல்கள் தமிழில் கொஞ்சமா நஞசமா? என்ன இலாபம்? திருக்குறளைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரே அந்நூலில் சொன்னபடி வாழவே முடியாது. ஆத்திச்சூடி சரியில்லை; அதாவது அதில் சொல்லியபடி வாழ்ந்தால் மொட்டைபோட்டு காதுகுத்திவிடுவார்கள் என்று பயந்த பாரதியார் தன்க்குப்பிடித்தவண்ணம் புதிய ஆத்திச்சூடியே எழுதிக்கொண்டார்..

    இலக்கியத்தையும் தமிழையும் வைத்து தொழில் செய்து வாழ்வோர் அதைப்பெருமையாகச் சொல்லித்தான் தீரவேண்டும். தங்கள் கடைச்சரக்கை எவராயினும் குறைத்துச்சொல்வரா? எனவே பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் திண்ணையில் அழகாக பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகிறார்கள்.

    திருக்குறள் நல்ல நீதிநூல். ஆனால் மனப்பிணி போக்கும் நூல் என்பதெல்லாம் ஓவர். மண்ப்பிணி போக்க மனநல மருத்துவரிடம் போங்கள். திருக்குறளே போதுமென்பது செல்ஃப் மெடிகேஷன். ஆபத்தில் முடியும். எத்தனை பைத்தியக்காரர்கள், அல்லது அயோக்கியன்கள் திருக்குறல் என்ற மாத்திரையை விழுங்கி பிணி நீங்கப்பெற்றார்கல் என்று சொல்ல முடியுமா?

    இப்படி திருக்குறள் மனப்பிணியை போக்குமென்பதும், சிட்டுக்குருவி லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டால் பிள்ளைப் பேறு அடையலாமென்பதும் ஒன்றே. ஏமாற்று வேலை. அங்கே பாமரரை ஏமாற்றுகிறார்; இங்கே படித்தவரை ஏமாற்ற முயல்கிறார்.

    துணிவுடன் சிந்திப்போருக்குத்தான் என் எழுத்துக்கள். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பவர் தயவுசெய்து என்னைப்படிக்க வேண்டாம்.

  8. //துணிவுடன் சிந்திப்போருக்குத்தான் என் எழுத்துக்கள். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பவர் தயவுசெய்து என்னைப்படிக்க வேண்டாம்.//

    திரு.BS. அவர்களே! நம்ம அய்யன் வள்ளுவருக்கு ஏராளமான பட்டங்கள் கொடுத்து விட்டார்கள்.”மன நல மருத்துவர்” (சைக்கிரியாடிஸ்ட் ) பட்டம்தான் பாக்கி இருந்தது.அதையும் கவிஞர்.சித்தாந்த ரத்தினம்.இரா.மாரியப்பன் கொடுத்து விட்டார்.இதை விமர்சித்ததால்,நண்பரைக் காக்க முனைவர்.சு.மாதவன் களத்தில் இறங்கியிருக்கிறார்.இவர் நோக்கம் நண்பரை காப்பாற்றி கண்ணியப்படுத்தவேண்டும் என்பதுதானே தவிர .வான் புகழ் வள்ளுவரைப் பற்றிய கவலையல்ல….

    //இப்படி திருக்குறள் மனப்பிணியை போக்குமென்பதும், சிட்டுக்குருவி லேகியத்தைச் சாப்பிட்டுவிட்டால் பிள்ளைப் பேறு அடையலாமென்பதும் ஒன்றே. ஏமாற்று வேலை. அங்கே பாமரரை ஏமாற்றுகிறார்; இங்கே படித்தவரை ஏமாற்ற முயல்கிறார்.//

    நீங்கள் சொன்னது போல் அய்யன் வள்ளுவன், வாழ்க்கைக்கு பயன்படுவதை விட இங்கு”வயித்துப் பொழப்புக்கே” பயன்படுகிறார்.தமிழ் மக்கள் தங்கள் வாழ்வியலில் வள்ளுவனைக் கை விட்டாலும்,வள்ளுவன் தமிழாசிரியர்களைக் கைவிடவில்லை வாழவைக்கிறான்.அந்த நன்றிக்கடனுக்கு புதுப் புது பட்டங்கள் கொடுக்கத்தான் செய்வார்கள்.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.

  9. // உலகப்பொதுமறை எனப்பலராலும் போற்றப்படும் தமிழ்மறையில் வள்ளுவர், …..//

    திருக்குறளை அனைவரும் உலகப்பொது மறை என்று கூறுகிறார்கள்.இது வள்ளுவர் வாழ்ந்த காலங்களில் சரியாக இருக்கலாம்.அன்று உலகம் மிகக் குறுகியது.வீடும்,நாடுமே உலகம்.ஆப்ரிக்கா சஹாரா பாலைவனத்தில் வாழும் மக்களைப்பற்றியும்,ஆர்ட்டிக் பனிப்பாலையில் வசிக்கும் எஸ்கிமோக்கள் பற்றியும் வள்ளுவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    அப்படி அறிந்திருந்தால் புலால் உண்ணாமையைப்பற்றி அவர் எழுதியிருக்க மாட்டார்.வள்ளுவன் எழுத்து, அவன் வாழ்ந்த காலத்து மக்களின் வாழ்க்கை தன்மையைப் மனதில் நிறுத்தியே எழுதப்பட்டது.அந்த எழுத்து விவசாயமற்ற பனிப்பாலை,அனல்பாலை வாழ் மனிதர்களுக்கு பொருத்தமில்லாதது.ஆகவே “உலகப்பொதுமறை” என்று சிறப்பித்துக் கூறுவது பொதுவான தன்மைக்கேயன்றி நிகழ்வான நிஜத்தன்மைக்கல்ல.

  10. //அவன் வாழ்ந்த காலத்து மக்களின் வாழ்க்கை தன்மையைப் மனதில் நிறுத்தியே எழுதப்பட்டது.//

    இதுகூட ஏற்புடைத்தா எனபதும் ஐயமே. அவர் வாழ்ந்த காலத்து மக்கள் ஊனகரல்ல; கள்ளுட்கொள்ளாதவரவரல்ல என்றல்லவா வருகின்றன?

    இருப்பினும் புலாலை வெறுத்து, கள்ளைக் கடிந்து பாமரமக்களின் வாழ்க்கையையே வெறுத்த ஆள் எவராக இருக்க முடியும்? கண்டிப்பாக மேட்டுக்குடி ஆசாமியாகத்தான் இருக்க முடியும்! அதாவது இன்று சொல்லப்படும் ஐவரி டவர் வாழ்க்கை வாழ்ந்தவராகத்தான் இருக்க முடியும்! அரசனைப்பற்றியும் அரண்மனை வாழ்க்கை பற்றியும் அலாதியாகவும் ஆர்பாட்டமாகவும் எழுதியவருக்கு, அவர் காலத்து பாமர மக்கள் வாழ்க்கையைப்பற்றி ஒரு வரி சொல்ல நேரமில்லை போலும் எனக்குத் தெரிந்தவரை இல்லை.

    இந்த லட்சணத்தில் மறைமலை, வள்ளுவர் மயிலாப்பூர் தலித்துச்சேரியில் பிறந்தவர்; இவரின் தங்கையே அவ்வையென்றும் எழுதுகிறார். ஜாதிப்பிணக்குகள் என்ற நூலில். அப்படியென்றால், அக்காலத்து தலித்துக்கள் பீஃப் சாப்பிடமாட்டார்கள் என்று பொருள். இக்காலத்தில்தான் கெட்டுப்போய்விட்டார்கள். கொடுமையடா சாமி! புலாலை வெறுப்பவர் எப்படி தலித்து ஆகப்பிறந்திருக்க முடியும்? ஒன்று, சமணராக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வைதீகப்பிராமணராக இருந்திருக்கவேண்டும் (அக்காலத்தில் அவர்கள் புலாலுண்ணவில்லை என்று நம்பி இப்படிச் சொல்கிறேன்) என் ஊகங்கள் உட்டான்ஸ் எனவர்கள் இவரின் அதீதிய வெறுப்புக்கு என்னதான் காரணம் என்று சொல்லிவிடுங்கள். ஓவரா தண்ணி போட்டுவிட்டு தெருவில் மல்லாந்து கிடக்காதே. வெள்ளைக்காரனப்போல ஜென்டிலா கொஞ்சம் சப்பி சப்பிக் குடித்திவுட்டு பால் ரூம் டான்ஸ் ஆடிவிட்டு வீட்டுக்குப்போ என்றிருந்தால் நம்புவேன். அப்படி சொல்லவில்லையே? கடுமையாக அல்லவா தாக்குகிறார்?

    உலகப்பொதுமறை என்பதைவிட தமிழரின் இன்றைய பொதுமறை என்பது ஓரளவுக்குச் சரி. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்ளும்போது, இவரின் நீதிகள், தமிழ் இசுலாமியருக்கும், தமிழ் கிருத்துவருக்கும், இந்துவுக்கும் நாத்திகருக்கும் ஏற்புடைத்தே எனலாம்.

    ஆனால், அந்தோ! அதற்கும் வேட்டுவைத்துவிட்டார்கள் நம் மேட்டுக்குடி கூட்டம். அமெரிக்காவில் திருக்குறள் மறையோதுகிறார்களாம். பெருமையாக இணைததள்மொன்றில் பேசிக்கொள்கிறார்கள் திருக்குறள் தில்லித்தமிழ்ச்சங்கத்தில் ஞாயிறுதோறும் காலை திருக்குற்ள் பாராயாணம் பண்ணுகிறார்கள். மதுரையில் திருவாசகத்தோடு சேர்த்து திருக்குறளையும் ஓதுகிறார்களாம். நாளை தமிழ்க்குழந்தை, தமிழிந்து நூலகள் எவை என்ற கேள்விக்கு, திருவாசகம், தேவாரம், திருக்குறள் என்று பதிலெழுதும்.

    ஆக, கடைசியில் பொதுத்தமிழன் அனாதையாக தெருவில் விடப்படுகிறான். கிருத்துவ தமிழரும் இசுலாமியத்தமிழரும் என்ன செய்வார்கள்? நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தையும் திருவாசகத்தையுமா படிக்க முடியும்? ஒரே ஒரு நூலாக மிஞ்சிய தமிழ் நூலை கபளீகரம் செய்துவிட்டார்கள்.

    தமிழனை ஒன்று சேர்க்க ஒன்றுமே இல்லை. Sorry Tamil man I am very sorry for you ! You can read Shakespeare without any problem!

  11. திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர் என்று திரு.இரா.மாரியப்பன் அவர்கள் இந்த நீண்ட கட்டுரையைப் படைத்துள்ளார். அது குறித்து நண்பர் ஷாலி அவர்களும், திரு BS அவர்களும் சிறப்பாகவே பின்னூட்டம் எழுதியுள்ளனர். என் பங்குக்கு நானும் இதைக் கூற விரும்புகிறேன். என்னைப்பொருத்தவரை நான் கற்பனை செய்துள்ள வள்ளுவர் இவர்தான்.
    !. கடவுள் வாழ்த்தைப் பார்க்குங்கால் வள்ளுவரை ஒரு பகுத்தறிவாளராகக் காண்கிறேன். அவர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் கொள்கையுடையவர்போல் தோன்றுகிறார். எந்த ஒரு கடவுளின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாததே அதற்குச் சான்று.
    2. வள்ளுவர் ஓர் அறிவியலாளர். கடவுள் வாழ்த்துக்குப் பிறகு அவர் வானின் சிறப்பு ( மழை ) கூறியுள்ளார்.
    3. அடுத்ததாக அவர் முற்றும் துறந்த முனிவர்களைப் புகழ்ந்து கூறுகிறார். இதை வைத்து அவரை ஒரு முனிவராகவும் நாம் கருதலாம். அவர் ஒரு சாதாரண முனிவராக இல்லாமல் நன்கு கற்ற அறிவார்த்த தமிழ் முனிவராக எனக்கு காட்சி தருகிறார்.
    இந்த மூன்று பண்புகளும் கொண்ட வள்ளுவரை ஒரு ஞானியாகவும் நான் ஏற்றுக்கொள்கிறேன். வாழ்கையை வாழ்ந்துபார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை முழுதுமாக உணர்ந்த அறிஞராக அவர் திகழ்ந்துள்ளார். அவருக்கு வாழ்க்கையின் எல்லா கூறுகளைப் பற்றியும் கூறும் ஆற்றல் இருந்துள்ளது.அவருக்கு எந்த கடவுளும் வந்து முதல் அடி எடுத்துத் தரவில்லை. அவர் நாவில் எந்தக் கடவுளும் வந்து எழுதவும் இல்லை.
    வள்ளுவர் ஒரு பச்சைத் தமிழர். திராவிடர். ஆனால் அவர் பாமரத் தமிழர் அல்லர் . கற்றுணர்ந்த தமிழ்ப புலவர். அவர் அரசர்களிடம் அவர்களைப் புகழ்ந்து கவிபாடி பாரிசில் வாங்கும் சாதாரண புலவர் அல்ல. அவர் தமிழ் மக்களுக்கு என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய நீதி நெறிகளைக் கூற வந்த தெய்வப் புலவர். தெய்வப் புலவர் என்றால் கடவுள் அவரை அவதாரப் புருஷராக அனுப்பிவைக்கவில்லை. தமது தமிழ்ப் புலமையுடன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தி அவர் 1330 குறள்களையும் வெண்பா வடிவில் அழகியல் நடையில் இரசித்து எழுதியுள்ளார். இதை எந்த சாதாரணத் தமிழனாலும் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கதொன்றாகும். அவர் காலத்தில் அவர் ஒரு மாபெரும் கவியாகத்தான் திகழ்ந்திருக்கவேண்டும். அவருக்கு ஈடு இணையாக வேறொரு கவிஞரோ புலவரோ அறிஞரோ இருந்திருக்க வாய்ப்பில்லை.
    வள்ளுவர் ஒரு சாதாரண கிராமத்திலும் பிறந்திருக்கலாம் அல்லது நகர்ப்புறத்திலும் பிறந்திருக்கலாம். ஆனால் அது முக்கியமில்லை. அவர் தமிழனாகப் பிறந்துள்ளார். அதுதான் முக்கியம். அதுதான் தமிழர்களான நமக்கு பெருமையும் சிறப்புமாகும். அவருடைய பிறப்பைவிட அவருடைய கல்வியும் அறிவுத்திறனும் நம்மையெல்லாம் வியக்கவைக்கிறது. நம்மை மட்டுமல்ல திருக்குறளை முதன்முதலாகக் கண்ட மேல்நாட்டு மிஷனரிகளை உண்மையில் வியக்கவைத்தது. அவர்கள் உடனே ஆங்கிலத்திலும் அவர்கள் மொழியிலும் அதை மொழிபெயர்த்து திருக்குறளை உலகறியச் செய்துவிட்டனர்! இது நமக்கெல்லாம் கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம்!
    வள்ளுவர் எதை விட்டுச்சென்றார்? அவர் தொடாத பொருளும் உண்டோ? அவருடைய காலத்தில் ( சுமார் 2500 வருடங்களுக்கு முன் ) அவர் இவ்வளவு கூறியுள்ளதே பெரும் இமாலயச் சாதனை. அவர் இல்லறம் பற்றியும் கூறுவார். துறவறம் பற்றியும் கூறுவார். அவர் அரசு பற்றியும் கூறுவார். வணிகம் பற்றியும் பேசுவார். அவர் காதல் பற்றியும் பேசுவார். அதில் ஊடுதல் பற்றியும் கூறுவார். கூடுதல் பற்றியும் கூறுவார். அது மாதிரிதான் குடிப்பது பற்றியும் கூறியுள்ளார் .புலால் உண்பது பற்றியும் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் எல்லா தமிழரும்தான் புலால் உண்டு கள் குடித்து மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர். வாளும் வேலும் ஏந்தி நேருக்குநேர் எதிரியை சந்தித்து போரிட்ட அன்றைய தமிழ் வீரர்கள் கள்ளும் கறியும் இல்லாமலா போர்க்களம் சென்றிருப்பார்கள்? இதை அறியாதவரா நம் வள்ளுவர்? அவற்றில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமென்றே எச்சரிக்கையாக ஏன் எழுதியிருக்கக்கூடாது?
    ஆகவே வள்ளுவர் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான தமிழ்ப் புலவர். திருக்குறளே நம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி நூல்! நாம் மத வேறுபாடின்றி திருக்குறளைப் படித்து அதைப் பின்பற்ற முயல்வோம்…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. வள்ளுவரைப் பற்றி நீங்கள் கொண்ட முடிவுகள் அனைவருக்குமே ஏற்புடைத்து. ஆனால் அவர் கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை அதிகாரங்கள் மொடாக்குடியர்களையும் அளவுக்கதிகமாக மாமிச உணவைத் தின்று கொழுப்போருக்குமே சொல்லப்பட்டவை எனபது ஏற்கமுடியாதவை. காரணம். அவ்வதிகாரங்கள் இவ்விரு வழக்கங்களை பொதுவாகக் கண்டிப்பவை. அவர் எவருக்குமே ரிலாக்சேஷன் கொடுக்கவில்லை. நீங்கள்தான் கொடுக்கிறீர்கள். உங்களூக்கு பெரிய மனசு சார். கொடுத்திருந்தால் அவரின் வழக்கு தோல்வியில் முடியும். அவரின் வழக்கு என்ன?: கள்ளுண்ணுதல், புலாலுட்கொளல் கொடிய பாவங்களாம்.

      வெண்பா என்றெழதியிருக்கிறீர்கள்: வெண்பா நான்கடி யாப்பு. குறள் ஈரடி யாப்பு. வெண்பா யாப்பு கடினம். குறள் யாப்பு இலகு. இதற்காக வள்ளுவரைப் பாட்டுக்கட்டத் தெரியாதவர் என்று சொல்லவில்லை. மாறாக, அவர் நீதிகளைச் சொல்ல எழுதப்புகுந்தார். அந்நீதிகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டுமென்று விரும்பினார். நறுக்கென குத்தினால்தான் தமிழன் கொஞ்சமாக திரும்பிப்படுப்பான் எனத்தெரிந்தவர் இவர். பின்னாளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் உருப்படுவான் என நினைத்தவர் பெரியார். எப்படிச்சொன்னாலும் தமிழன் திருந்தப்போவதில்லை என்பது என் கட்சி. இதுவே நான் ஏற்கனவே எழுதிய பின்னூட்டங்களின் மையக்கருத்து. மன்னிக்கவும்.

      எனவே ஈற்றடி குறளையே தேர்ந்தெடுத்து எழுதினார். Brevity is the soul of wit என்று சொன்னவர் செகப்பிரியர். இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்தவர் வள்ளுவர்.

      1. தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. கைபேசியில் தொடர்பு கொண்டால் நன்றெனக் கருதுகிறேன்.

  12. Mr.R.Mariappan written article is very nice. His reference with thirukkural and the given message is good. Its essential for the society. Keep it up and long live.

  13. ஐயா வணக்கம் தங்கள் கட்டுரையை படித்தேன் வள்ளுவன் வழி நின்று நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளேர்கள் தங்கள் பணி தொடர் என் வாழ்த்துக்கள்

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *