திரை ஓசை டமால் டுமீல்

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்

 

damaal-dumeel-posters-stills-006வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர்  ஸ்ரி பாராட்டுக்குரியவர்.

ஒரு திரில்லருக்குத் தேவையான நறுக் எடிட்டிங் ( பரமேஷ் கிருஷ்ணா ), துல்லிய ஒளிப்பதிவு ( எட்வின் சகாய் ), தடதடக்கும் பின்னணி இசை ( தமன் ), துருத்திக் கொண்டு தெரியாத இயல்பான செட்டிங்ஸ் ( ஆறுச்சாமி ), 120 நிமிடங்களில் படத்தை நகர்த்தும் திரைக்கதை என எல்லாம் சேர்ந்து, இந்தப் படத்தை கவனிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

படத்தின் ஒரே குறை, அதிகம் அறியப்படாத நாயகன் வைபவ். பல காட்சிகளில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், அவர் சோர்ந்து, பார்வையாளனையும் சோர்வடைய வைக்கிறார். கதை நாயகி ரம்யா நம்பீசன், கண்ணியமாக, கலர் உடைகளில் வலம் வருகிறார். அவருக்கான தீனி இதில் இல்லை. ஆனாலும், வந்தவரையில் சோடையில்லை. காமெடி தாதாக்களாக வரும் கோட்டா சீனிவாச ராவும் ஷாயாஜி ஷிண்டேயும் பேசியே கொல்கிறார்கள். ஷாயாஜியை பாரதி மன்னிப்பாராக!

தமன் பாடல்களில் வெரைட்டி காட்டியிருக்கிறார். அறிமுக பார்ட்டி பாடலான “ சகா சகா ஓடுடா” இளமைத் துள்ளல். மேல்நாட்டு இசைக்கருவிகளுடன் ஒலிக்கும் சோகப்பாடல் “போகாதே” , முன்வரிசைகளுக்காக “ டமால் டுமீல் “ என்கிற குத்துப் பாட்டு. வெல்டன்.

எண் சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்ட மணிகண்டன் ( வைபவ் ) தன் பெயரையே ‘ மனி ’ கண்டன் என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்கு சோசியப் பைத்தியம். துப்பாக்கி சத்தத்தையே ரிங் டோனாக வைத்திருக்கும் வித்தியாச பிறவி அவன். தினமும் காலையில் அவனுக்கு வரும் முதல் அலைபேசி அழைப்பே ‘ அன்றைய நாள் எப்படி இருக்கும் ‘ என்கிற சோசியக் கணிப்புதான். மென்பொருள்  நிறுவனத்தில் வேலை. ஊரில் சொந்த வீடு. கல்யாணத்திற்கு காத்திருக்கும் தங்கை. அவளுடைய மாப்பிள்ளை வீட்டின் எதிர்பார்ப்பு (அறுபது சவரன். அட்டகாசமான ஒரு பைக் ), அவனை உயிராகக் காதலிக்கும் மீரா (ரம்யா  நம்பீசன்). லட்சியங்களுக்காக மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கும் அவனது வாழ்வில், இடியாக வருகிறது, வேலை ரத்து உத்திரவு. தற்கொலை எண்ணங்களுடன் தவிக்கும் அவனுக்கு, எதிர்பாராமல் வாசலில் வந்து விழுகிறது பெட்டி நிறைய பணம். மொத்தமாக ஐந்து கோடி. அத்தனையும் சலவை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் தாள்கள். நெருக்கும் தங்கையின் கல்யாணச் செலவு. வேலையின்மை. வாழ்வை நிறைவாக்க கடவுள் கொடுத்த பரிசு என பல எண்ணச் சுழல்களில் சிக்கி, அவன் அதை தனதாக்கிக் கொள்ள நினைக்கும் போது, பணத்தைக் கொடுத்தனுப்பிய இளவரசு அண்ணாச்சியும் ( கோட்டா சீனிவாச ராவ் ), பெற வேண்டிய  காமாட்சி சுந்தரமும் ( ஷாயாஜி ஷிண்டே ) தன் ஆட்களோடு அவனை வளைக்கிறார்கள். எதிர்பாராமல் அவனது தங்குமிடத்தில்  நான்கு பேர் இறந்து, அவர்களது சடலங்கள் அவனைச் சுற்றிக் கிடக்கின்றன. மணி என்னவானான்? பெட்டியில் இருந்த ‘மனி’ அவனுக்குச் சொந்தமானதா? மீராவின் காதல் நிறைவேறியதா? எனக் கொஞ்சம் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். பரவாயில்லை பார்க்கலாம் ரகம் தான் இந்தப் படம்.

கவனத்துடன் அடுத்த படத்தையும், அதற்கான நடிகர்களையும் தேர்ந்தெடுத்தால், பிழைத்துக் கொள்வார் ஷங்கரின் சிஷ்யனான இந்த புது இயக்குனர்.

0

 

திரை ஓசை : வெங்காய வெடி

 

ரசிகன் குமுறல் : அழகுப் பொண்ணு ரம்யாவை வச்சிக்கிட்டு ஒரு டூயட் கூட இல்லைன்னா எப்படி மச்சான்?

0

Series Navigation