திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே

 

சிறகு இரவிச்சந்திரன்

 

மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால் ‘ நீ எங்கே என் அன்பே ‘ என்கிற பழைய கள் புதிய மொந்தையில்..

இந்தியில் ஹிட்டடித்த ‘ கஹானி’ கதையை, தெலுங்குக்கு மாற்றி, தமிழிலும் வெளியிட்டு, அதில் அனாவசிய மாற்றங்கள் செய்து, கொட்டாவி விட வைத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா. அதிக பில்ட் அப்புடன் வரும்  நயன்தாரா, எதையும் சாதிக்கவில்லை என்பது உச்ச கட்ட சோகம். இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் மரகதமணியின் இசையில் சுவேதா மேனன் பாடியிருக்கும் “ இதோ இதோ உன் வானம் “. நெரிசலான மார்க்கெட் பகுதியில் நயன்தாரவை நடக்க விட்டு, அதை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் விஜய்.சி.குமார் பாராட்டப்பட வேண்டியவர். படம் நெடுக ஓளிக்கலவைகள் உன்னதமாக இருக்கின்றன. சபாஷ்!

“ போலீஸ் ஸ்டேசனுக்குள்ளே வந்தா, பயம் வரக்கூடாது.. நம்பிக்கை வரணும் “ பளிச்சென்று மனதில் நிற்கும் ஒரே வசனம்.

ஹைதராபாத்திலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு வரும் கணவன் அஜய்யை பதினைந்து நாட்களாகக் காணவில்லை என்று அவனைத் தேடி வருகிறாள் அவனது காதல் மனைவி அனாமிகா ( நயன்தாரா ) காவல் துறையின் அலட்சியத்தால், அவளே கணவனைத் தேடும் பணியை கையிலெடுக்கிறாள். அவளூக்கு உதவ முன் வருகிறான் இளம் காவல் அதிகாரி பார்த்தசாரதி ( வைபவ் ). கணவன் தங்கியிருந்த கேலக்சி  விடுதியில், அவன் தங்கிய அறை எண் 207ல் தங்குகிறாள் அனாமிகா. சாரதி காரோட்ட, ஊரெங்கும் அஜய்யைத் தேடி அலைகிறாள். இன்னொரு பக்கம் உளவுத்துறை அதிகாரி அம்ஜத்கான் ( பசுபதி ) காற்றாடி திருவிழாவின் போது, குண்டு வைத்து, பல பேரின் உயிரைக் கொன்று, தலைமறைவாகிவிட்ட தீவிரவாதி மிலின்த் தாம்ஜியைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் தேடும் தீவிரவாதியும் அஜய் போலவே இருக்கிறான். கணவனைப் பற்றி தகவல் தர முன்வரும் நபர்கள், மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட சுண்டெலி போல அனாமிகா தவிக்கிறாள். பல ரகசியங்கள் அடங்கிய கணிப்பொறியின் பதிவு டிஸ்க் அவளிருக்கும் அறையிலிருந்து கிடைக்கிறது. அதில் பல அதிர வைக்கும் உண்மைகள். அதைக் கைப்பற்ற துடிக்கும் உள்துறை அமைச்சர் ஆதிகேசவன் (  நரேஷ் ), அஜய்யை அனாமிகாவிடம் ஒப்படைத்து டிஸ்கை திரும்பப் பெறுகிறார். ஆனால் உண்மையிலேயே அதில் ரகசியங்கள் இருந்த்தா? அஜய் தீவிரவாதியா?  நல்லவனா? என 138 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

திரை ஆளுமை கொஞ்சமும் குறையாமல்  நயன்தாரா வலம் வருகிறார். அவரை முன் வைத்து எடுக்கப்பட்ட படம், சரியான தீனியை அவருக்குப் போடவில்லை என்பது தான் இந்தப்படத்தின் பலவீனம். இந்தியில் வித்யா பாலனை கர்ப்பிணி பெண்ணாகக் காட்டி, கொஞ்சம் பரிதாபத்தை வரவழைத்தார்கள். இதில் நயன் செதுக்கப்பட்ட சிலையாக வலம் வருகிறார். கவர்ச்சி மேலோங்கி, பரிதாபம் பணால் ! வைபவ், நயன் பக்கத்தில் இருக்கும் சந்தோஷத்திலிருந்து மீளாமல், படம் முழுக்க வருகிறார். பசுபதியின் அலட்டலெல்லாம் அடங்கிப் போன ஊளைபோல் இருக்கிறது. எல்லாமே தெலுங்கு முகங்கள் என்பதால், ரசிகன் மனம் படத்துடன் ஒன்ற மறுக்கிறது.

அடிக்கடி ஜன்னல் வழியாக துர்க்கை சிலையைக் காட்டுகிறார்கள். நல்ல வேளை சூலத்தை வைத்து கதையை முடிக்கவில்லை.

0

 

திரை ஓசை : கேவல்

 

ரசிகன் குமுறல் : நயனுக்கு ஒரு  அசத்தல் ஆட்டம்  போட்டிருந்தா கூட, கொடுத்த காசுக்கு பஞ்சமில்லாம போயிருக்கும்.. இல்லியா பிரதர்?

 

0

Series Navigation