தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்

 
தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும்.

இப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.

 

இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட இந்தியாவில் இப்படி எத்தகைய மக்கள் எழுச்சி நடந்தாலும் அதை விமர்சனம் செய்வதும், நையாண்டி செய்வ துமே தமிழகத்தில் சில சமூகப் பிரக்ஞையாளர்கள்/போராளிகளின் வழக்கமாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

 

தில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களைக்

கற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா? இந்த தேசிய ஊடகங் கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல் லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவிலேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக்கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம்வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே.  அப்படிச் செய்யாதது ஏன்? தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணியொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்துவ தில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனையோ அடித் தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.

 

கொடூரமான  விதத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் – நிர்பயா, என்றும் தாமினி என்றும் ப்ரேவ் ஹார்ட் என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவள்; உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே – அந்தப் பெண் குறித்து அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அளவுக்குக் கண்டனத்திற்குரியவையோ அதேயளவு கண்டனத்திற்குரியவை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக் காகக் குரல் கொடுப்பவர்களைக் கொச்சைப்படுத்துவதாய் ‘மற்ற அநீதிகளுக்கு அவர்கள் குரல் கொடுத்தார்களா’, என்று விமர்சனம் செய்து மட்டம் தட்டுவதும். இப்படி எதிர்விமர்சனம் செய்வது சுலபம். அப்படிச் செய்பவர்கள் ஒன்று சேர்ந்து அநீதிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் எதிர்ப்பியக்கங்களையும் கட்டமைக்கலாம்; அப்படித் தாங்கள் கட்டமைக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் வருவதில்லை யென்றால் அதற்கான காரணங்களை பரிசீலனை செய்துபார்க்க முன்வரலாம்.

 

பிறகு, தில்லிப் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுபைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும்       [பெண்ணின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற்காக எங்கள் குடும்பம் பல நாட்கள் வெறும் உருளைக்கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறது என்று அந்த மாணவியின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்], தில்லியில் ஒரே அறை கொண்ட குடியிருப்பில் அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்ததும், தன்னுடைய படிப்புச்செலவுகும் குடும்பச் செலவுக்குமாய் அந்த மாணவி ஓய்வுநேரங்களில் ‘ட்யூஷன்’ எடுத்துவந்ததும் தெரியவந்தது. உடனே அகில உலக அறிவுஜீவியாகக் கொண்டாடப்படும் அருந்ததி ராய் ‘தில்லிப் பேருந்தில் அந்தக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் தில்லியில் அத்தனை பெரிய கொந்தளிப்பு எழக் காரணம். இதுவே, இராணுவத்தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் அத்துமீறல்களுக்கு இவர்கள் இப்படி எதிர்ப்பு காட்டுவதில்லையே’ என்று கருத்துரைத்தார். முதலில், இராணுவத் தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் கொந்தளிப்பதில்லை என்பது தவறு. வெவ்வேறு விதங்களில் மக்களின் கொந்தளிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. அதேபோல், சீருடையணிந்த காவல்துறை. ராணுவத்தில் பணிபுரியும் அத்தனை பேரும் பெண்களை வன்கொடுமை செய்பவர்கள் என்று பொதுப்படையாகப் பழித்தலும் த்வறு. முன்பு இத்தகைய மக்கள் எழுச்சி இயக்கங்கள் கட்டமைக்கப்படவில்லையே என்று விமர்சிக்கும் சமூகப் பிரக்ஞையாளர்கள் அதைக் காரணமாகக் காட்டி இப்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கொச்சைப்படுத் துவது எந்தவகையில் நியாயம்? குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா? அவர்கள் பெண்களைக் கேவலப்படுத்தி னால் அது பரவாயில்லையா? இதை குடிசைவாழ் பகுதி மக்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தில்லி பேருந்துக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிசைவாழ் பகுதி மக்களில் விதிவிலக்குகள் மட்டுமே என்பதை நாம் மறந்து விடலாகாது.

 

அடித்தட்டு மக்களுக்கு இந்தச் சமூகத்தில் நீடிக்கும் அவலநிலைமைகளை எடுத்துரைத்து அவற்றால் அவர்கள் உளவியல் ரீதியில் அடையும் பாதிப்புகளை அகல்விரிவாய் பேசவேண்டியதும், அலசியாராய வேண்டியதும் கண்டிப்பாக அவசியம். அதற்காக, மேற்கண்டவிதமான வாதத்தை, அதுவும் ஒரு கொடூர நிகழ்வை அறிவுபூர்வமாக அலசுவதான பாவத்தில் முன்வைப்பது height of insensitivity, to say the least.

 

இத்தகைய எதிர்ப்பியக்கங்களை மட்டந்தட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று middle class mentality [ மத்திய தர வர்க்க மனோபாவம்] என்று முத்திரை குத்துவது. இந்த அடைமொழி இலக்கற்றவர்கள், இறுதிவரை ஒரு போராட் டத்தை நடத்தத் திராணியில்லாதவர்கள், ஒரு பிரச்னையை நுனிப்புல் மேய்வ தாய் அணுகுபவர்கள், முற்போக்குச் சிந்தனையற்றவர்கள், உணர்ச்சி வேகத் தில் சில வீரவசனங்களை முழங்குபவர்கள், பயந்தாங்கொள்ளிகள், சொரணை யற்றவர்கள், சுயநலவாதிகள், ஏட்டுச்சுரைக்காய்கள் என மிகப் பல எதிர்மறைப் பொருள்களை உள்ளடக்கியதாய் பயன்படுத்தப்பட்டுவரும் சொற்றொடர். அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மட்டந்தட்ட இந்த அடை மொழியைத் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்த இயக்கக் கூட்டங்களை நேரில் சென்று பார்த்தவர்கள் அங்கே அடித்தட்டு மக்கள் உட்பட பலதரப் பினரும் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.

 

எனில், தாங்கள் இழுத்த இழுப்புக்கு மந்தைத்தனமாக வராமல் கேள்விகேட்கத் தெரிந்தவர்களும், மாற்றுக்கருத்துகளை முன்வைக்கக்கூடியவர்களும் மத்திய தர வர்க்க மனோபாவக்காரர்களாய் மதிப்பழிக்கப்படுகிறார்கள் என்பதே பல நேரங்களில் நடப்புண்மையாக இருக்கிறது.

 

இது கூட்டணி அரசுகளின் காலம். இரு துருவங்களாக இயங்கிவருபவர்கள் கூட ஒரு common minimum programme–ன் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய காலகட்டத்தின் தேவையாகியிருக்கிறது. சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், தமிழகச் சூழலில் சமூகச் சீர்கேடுகள் சார்ந்த எதிர்ப்பியக்கங்களை பல தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டமைப்பது ஏன் சாத்தியமாக வில்லை? இதற்கு middle class mentality தான் காரணம் என்று சொல்லி விடுவதோ, அல்லது, படித்த வர்க்கம் இங்கே சொரணையற்று இருக்கிறது என்று சொல்லிவிடுவதோ சுலபம். ஆனால், அதுவா உண்மை?

 

ஒரு குறிப்பிட்ட சமூகச் சீர்கேடு தொடர்பாய் எதிர்ப்பியக்கங்களைக் கட்டுபவர் களில் பெரும்பாலோர் package deal என்பதாய் பல்வேறு விஷயங்கள் தொடர் பான அவர்களுடைய கருத்துகள், நிலைப்பாடுகள் எல்லாவற்றிற்கும் ‘கட்டாய ஆதரவு’ திரட்டும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக்கையில் செய்து கையெழுத்திடும்படி கோரப்படுகிறது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.

 

இன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெயரால் புறமொதுக்கிவிடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது. சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயிருந்த போது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கியவாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த  இலக்கியவாதிகளும், அவரு டைய கருத்துகளை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக்காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு  குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக்கறை கிடையாது என்று ஒரே போடாகப்போட்டு, எழுத்தை தவமாகக்கொண்டு வறுமையில் உழன்றவர்களை யெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளிவிட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முதலில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் அக்கறை யின்றி போயே போய்விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றனவே!

 

இது ஒரு அனுபவமென்றால் வேறு சில கூட்டங்களுக்கு சமூகப் பொறுப் போடும், அக்கறையோடும் மூன்று பேருந்துகள் மாறி [தமிழகப் பேருந்துகளில் பயணமாவோர் சம்பளமில்லாத தாற்காலிக உதவி நடத்துனர்களாகக் கட்டாயம் பணியாற்றியே தீரவேண்டும். ஒரு கையால் அலைபேசியில் பேசிக்கொண்டே மறு கையால் நாணயத்தை நீட்டுபவர்களிடம் பவ்யமாக அதை வாங்கி, பத்து கரங்கள் வழியாக அது பத்திரமாகக் கடத்தப்பட்டு நடத்துனரைச் சென்றடைந்து பின் அந்த அதி மெல்லிய துண்டுக் காகிதம் – டிக்கெட் எனப்படுவது – பறந்துவிடாமல், நழுவிவிடாமல், அதேவிதமாய் நம் கையை அடைய, அதீதப் பதற்றத்தோடு அதை வாங்கி, இன்னும் அலைபேசியில் மும்முரமாய் அளவ ளாவிக்கொண்டிருப்பவரிடம் ஒப்படைக்கும்போது மிகவும் பலவீனமாக உணரும் மனது] சென்றடைந்தால் ‘மேல் சாதியினர்’, ஆதிக்க சாதியினர்’ என்று எல்லாப் பிரச்னைக்கும் இப்படிச் சாடுவதே ‘சகல ரோக நிவாரணி’ என்ற கண்ணோட் டத்தைக் கொண்ட ’நட்சத்திரப் பேச்சாளர்கள்’, காரிலும் விமானத்திலும் விழா அரங்கிற்கு வருகைதந்திருப்பவர்கள் மேடையில் முழங்கிக்கொண்டிருப்பார்கள். மேலும், கூட்டத்தில் ‘நட்சத்திரப் பேச்சாளர்கள்’ முன்வைக்கும் கருத்துகள், தீர்மானங்களில் ஏதேனும் ஒன்றோடு நாம் முரண்பட்டாலும் கூட ஆதிக்க வாதிகள், பழமைவாதிகள், அடிப்படைவாதிகள், சமூகப்பிரக்ஞையற்றவர்கள்,  போன்ற  முத்திரைகள் சரமாரியாக நம்மீது குத்தப்பட்டுவிடும். இந்தப் போக்கின் காரணமாகவே ’கூட்டங்களுக்குப் போகாமலிருந்துவிடுவதே மேல் என்று ‘மத்திய தர மனோபாவக்காரர்கள்’ பலருக்குத் தோன்றிவிடுகிறது.

 

இப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி தில்லியில் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். குழந்தையின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, சிறிய புட்டி என்று செருகப்பட்டு, அவள் கழுத்து நெரிக்கப்பட்டு 40 மணிநேரங்கல் சோறு, தண்ணியில்லாமல் துடித்துக்கிடந்திருக்கிறாள் சிறுமி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறாள். இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டி ருப்பவர்கள் இருபது இருபத்திரண்டு வயதான இளைஞர்கள். அந்தச் சிறுமிக்காக தில்லியில் மீண்டும் மக்கள் திரண்டெழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டி ருக்கிறார்கள். பிரதமர், சோனியா காந்தி வீடுகள் முற்றுகையிடப்பட்டிருக் கின்றன. காவல்துறையினரின் தடுப்புகளையும், தடியடிகளையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.

 

‘இதற்கு முன் எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்தபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று இப்பொழுதும் சில சமூகப் பிரக்ஞையாளர்கள் தமிழ் மண்ணிலும், பிறவேறு நிலங்களிலும் கூட அறிவுபூர்வமாகக் கேள்வியெழுப்பக் கூடும். May be, with the best of intentions or may be with some hidden agenda. எப்படியாயினும், பாலியல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…

 

சமீபத்தில் நடந்தேறியுள்ள ஆய்வொன்றின்படி  ’சிறுவர்-சிறுமியரு’க்கான காப்ப கங்கள் பலவற்றில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் வாடிக்கையாக, அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள  காப்பகம் ஒன்றில் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு தனக்கிழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசுவதையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசையின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சி ஒளிபரப்பியது. ஒவ்வொரு காப்பகத்திலும் அவசியமாக இருக்கவேண்டிய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற  ‘கண்காணிப்புக் குழு’ அறவேயில்லாத நிலையை அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சமீபத்தில் CNN-IBN செய்தி அலை வரிசையில் தில்லியில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் ‘வளரிளம் பருவத்தினரையும் சரி, வளர்ந்த ஆண்களையும் சரி, இத்தகைய கொடூரச் சிந்தனைகளை யும் செயல்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதில் சின்னத்திரை, வெள்ளித் திரைகள் முன்வைக்கும் பெண் பிம்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பங்கேற்ற உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தது கவனத்திற்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ஊடகவியலாரை அங்கிருந்த ஒரு பள்ளிப் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கொச்சையாக கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் ஒளிபரப்பட்டது. இதிலிருந்து, பள்ளிகளில் பெண் குறித்த, நல்லொழுக்கம் குறித்த விழிப்புணர்வும், நுண்ணுணர்வும் மாணவர்களிடையெ பரவலாக்கப்படப் போதுமான கவனமும், முயற்சிகளும் கல்விக்கூடங்களில் மேற்கொள்ளப்படு கின்றனவா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

 

பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம். அவ்வாறே அரசியல் சார், சமூகம் சார் சீர்கேடுகளும். இந்நிலையில், இவற்றைக் கண்டித்து உருவாகும் எதிர்ப்பியக்கங்களை அக்கறையோடல் லாமல், எள்ளிநகையாடுவதாய், மதிப்பழிப்பதாய் விமர்சனம் செய்வதைக் காட்டிலும், இவற்றை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தில்லியில் நடந்த வன்கொடுமை போன்ற சமூகச் சீர்கேடுகளை வேரறுப்பதற்கான வழிவகைகளை முனைப்போடு கண்டறிந்து prevention is better than cure என்ற அளவில், இனி இத்தகைய வன்கொடுமைகள் நடவாதிருக்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்பத் தேவையான அணுகுமுறைகளைக் கைக்கொள்வதே ஏற்புடையது; இன்றியமையாதது.

0

Series Navigationஅப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!