வேர் மறந்த தளிர்கள் – 29

This entry is part 19 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013
29  தெய்வத்தாய்
             ஒரு நல்ல நாளாப் பாருங்க போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம். பெண் பிடிச்சிருந்த அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடிச்சிடுங்க!” மிகுந்த நம்பிக்கையோடு கூறுகிறான் பார்த்திபன்.அவன் கூறியதைக் கேட்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.!
          இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் வகுத்த வழியை மனிதன் மாற்ற இயலுமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் கோமகன் வழிக்காட்டுதலில் பார்த்திபன் தன் குடும்பத்தோடு பெண் பார்க்கச் செல்கிறான்!
             வாழ்க்கையில் முதன் முதலாக ஓர் அனாதை இல்லத்திற்குச் செல்கிறான்! அதிலும் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக் குடும்பத்தோடுச் செல்வது பதற்றமாக இருந்தாலும், எல்லாரும் செய்வது போல் உற்றார் உறவினரோடு போகாமல் பெண் பார்க்கப் பெற்றோருடனும், நண்பர்களுடனும் புடைச் சூழச்செல்வது அவனுக்குப் பெருமையாக இருந்தது!
            தான் செய்த தவற்றுக்குப் பிராய்ச்சித்தமாக அனாதை இல்லத்தில் பெண் எடுப்பது மகிழ்வதாகக் கூறிக்கொள்கிறான்! அந்தப் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்றபோது,இல்லத்தை நிர்வகிக்கும்அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ரீத்தாவும் மாறனும்  வருகை புரிந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர்! இல்லத்தைச்சேர்ந்த பெரியோர்கள் சிலரும் அங்கிருந்தனர். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் போன்று அவர்கள் இனிமையாகப் பழகுகிறார்கள். கோமகன் எல்லா ஏற்பாடுகளையும் முறையாகச் செய்திருந்ததால் தடுமாற்றம் ஏதுமின்றி பெண் பார்க்கும் படலம் சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகிறது!
            ஏற்கனவே,புகைப்படம் கொடுத்திருந்ததால் பார்த்திபனுக்கோ அவனது பெற்றோருக்கோ பெண்ணை அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமம் இல்லாமல் போய்விட்டது. இருபத்துமூன்று வயதே நிரம்பப் பெற்ற மணப்பெண்ணின் பெயர் தமிழரசி. அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். எஸ்.பி.எம். வரையில் கல்வியைப் பெற்றிருக்கும் அவள் தனியார் நிறுவனம் ஒன்றில் கணினித்துறையில்  வேலை செய்கிறாள். கைநிறையச்  சம்பாதிக்கிறாள்!
              ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் யதார்த்தமான முறையில் உடை அணிந்து,மாப்பிள்ளைக்குக் தேநீர் வழங்க அன்னநடைப் பயின்று வருகிறாள்! தேநீர் மற்றும் பலகாரங்களை மாப்பிளைக்குக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்கிறாள்! அவள் தோழி அங்கு வந்த அனைவருக்கும் தேநீர், பலகாரங்களை வழங்குகிறாள்! கொடுக்கப் பட்டத் தேநீரை அனைவரும் சுவைத்து மகிழ்கிறார்கள்!
              அதேவேளையில்  பெண்ணிடம்,பார்த்திபன் பெற்றோர் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்! அவர்களின் முகங்களில் தவழ்ந்த புன்னகை மலர்களைக் காணும் போது அவர்களுக்குப் பெண்ணைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது!
               சிவந்த மேனியும் கனக்கச்சிதமான உடல் வாகுவையும் கொண்ட தமிழரசியை மணந்து கொள்ள முழுச்சம்மதம் தெரிவிக்கிறான் பார்த்திபன்! சொந்தத்தில் பார்த்திருந்தால்கூட இப்படியொரு பெண் அமைந்திருக்க முடியுமா? என்ற வியப்புக் கிடையே அம்பிகை முழுச்சம்மதம் தெரிவிக்கிறார்.
               கணவர் தினகரனுக்கு மட்டுமென்ன? பார்த்தவுடனே அவருக்கும் பெண்ணை மிகவும் பிடித்து விடுகிறது! மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வழி என்பதை உணர்கிறார்.பார்த்திபனுக்குகாகவே பிறந்தவள் தமிழரசிதான் என்ற உண்மையை அவரது மனம் ஏற்றுக் கொள்கிறது!
              எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. பெண்ணுக்கும் மணமகனைப் பிடித்துவிட்டது! மகன் விரும்பியது போலவே ஒரு நல்ல நாளாகப் பார்த்து அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்வதென அங்குக் கூடியிருந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். தேவை இல்லாதப் பேச்சுக்கு இடம் இல்லாமல் விரைவிலேயே  சம்பந்தம் பேசி முடிக்கின்றனர்.
              திருமணத்திற்குரிய நாளும் அன்றே குறிக்கப்படுவது இல்லத்தினை நிர்வகிக்கும் அம்மையாருக்கு ஆச்சரியமாகப் போய்விடுகிறது! திருமணத்தைத் தமிழரசி தங்கியிருந்த இல்லத்திலேயே சிறப்பான வகையில் நடத்த வேண்டும் என்று பார்த்திபன் கூற அங்குக் கூடியிருந்த அனைவரும் ஒப்புதல் அளிக்கின்றனர்! மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறி அனைவரும் விடைப் பெற்றுச் செல்கின்றனர்.
              அடுத்த சில வாரங்களில் திருமண ஏற்பாடுகள் மளமளவென நடைபெறுகின்றன.கோமகன் பார்த்திபனுடன் கூடவே இருந்து அனைத்துத்திருமணஏற்பாடுகளையும்முன்னின்ற செய்கிறான்.கோமகனின் உதவி பார்த்திபனுக்குப் பேருதவியாக இருக்கிறது!
            பெற்றோருடன் சென்ற பார்த்திபன் திருமண அழைப்பிதழை மிகவும் நெருங்கிய உறவினர்கள் சிலருக்கும்,தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள்,பெரியோர்கள்ஆகியஅனைவருக்கும்அழைப்புகொடுக்கின்றா.
            அந்த இல்லத்தில் இருக்கும் திருமண மண்டபம் நிறைந்து காணப்படுகிறது.இருநூறு பேர் அமரக்கூடியச் சிறிய மண்டபமாக இருந்தாலும் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.அந்த இல்லத்தின் தொண்டூழியர்கள் வரவேற்பைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்கின்றனர்.
             இல்லத்தின்  காப்பாளர்கள்,  வட்டாரச்  சமூகப்  பிரமுகர்கள்,        அரசியல் தலைவர்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பார்த்திபன் தமிழரசி ஆகியோரிடையே திருமணம் எந்தவிதச் சிக்கலுமின்றி இனிதாய்  நடைபெறுகிறது!
           இல்லத்தில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறியோர்,பெரியோர்,முதியோர் அனைவருக்கும் விலையுயர்ந்த பரிசுகளும் ஆடைகளும் மணமக்கள் தங்களின் திருமணப் பரிசாக வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.சுவை மிகுந்த உணவுகள் வகைகள் விருந்தில் படைக்கப்படுகின்றன.வருகை தந்த அனைவரும் திருமணவிருந்தை மகிழ்ச்சியுடன் உண்டு மகிழும் காட்சியைக் கண்டு மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். இருப்பவர்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழும் உள்ளம் பேருள்ளம் என்பதை அறிந்த பார்த்திபனின் பெற்றோர் தன் மகனின் தயாள குணத்தை எண்ணி வியக்கின்றனர்.இந்த இளம் வயதிலேயே பார்த்திபன் ஏழைகளின் துயரம் அறிந்து உதவும் மனதை எண்ணி பெருமையடைகின்றனர் பெற்றோர்.
                            30 ஆயிரங் காலத்துப் பயிர்
            தன்னைப் பெற்று வளர்த்த  பெற்றோர், ரீத்தாஅம்மையார், மாறன் மற்றும் பெரியோர்கள் பலரின் கால்களில் விழுந்து  புதுமணத்தம்பதியினர் ஆசிபெறுகின்றனர்.திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்திச் செல்கின்றனர்.
            திருமணத்தை முன்னிட்டுப் பார்த்திபன், ‘ரீத்தா அனாதை’ இல்லத்திற்கு ரிங்கிட் மலேசியா ஐயாயிரத்தை அன்பளிப்பாக புதுமணத் தம்பதியினர் இருவரும் ஒருசேர ரீத்தா அம்மையாரிடம் வழங்கிய போது அவர் ஆச்சரியப் பட்டுப் போகிறார்.
          மேலும்,திருமணத்திற்குப் பிறகும் அனாதை இல்லத்திற்குத் தங்களின் சேவைத் தொடரும் என்ற  இனிய செய்தியை அம்மையாரிடம் கூறிய போது மகிழ்ச்சிப் பெருக்கால் புதுமணத் தம்பதியினர் இருவரையும் கட்டியணைத்து முத்தமழைப் பொழிகின்றனர்!
             பெற்றோர் இருவரும் மகனின் அன்புள்ளத்தை எண்ணி வியந்து போகின்றனர்.கூடி நின்றவர்கள் ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்தி நிற்கின்றனர்!
           அந்த அனாதை இல்லத்தை நிமிர்ந்து பார்க்கிறான் பார்த்திபன்,அருகில் ரீத்தா அம்மையாரைச் சுற்றி குழந்தைகள் சூழ்ந்து நிற்கின்றனர்.அந்தக் குழந்தைகளின் அன்புப்பிடியில் அவர் தன்னை மறந்து நிற்கின்றார்.தான் பெற்றெடுக்காத அந்தப் பிஞ்சி உள்ளங்களுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் கூறும் அவர் தெய்வமல்லவா?
          தனக்கும் குழந்தை பிறக்கும்.இறைவன் தந்த பரிசை இமைப்பொழுதும் பிரியாமல்,அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்ப்பேன்! கண்ணை இமை காப்பது போல் காப்பேன்.
         என் அன்பைக் கொட்டி வளர்ப்பேன்! ஒரு போதும் தன் பெற்றோர் அன்பைத் தராமல்,நோகடித்ததால் அன்பைத் தேடிச் சென்ற போது,தவறான நண்பர்களின் சேர்கையால்,தீய பழக்கத்திற்கு ஆளாகி ஒரு போதைப் பித்தனாக மானமிழந்து,மரியாதைக்கெட்டு,   போலீஸ்காரர்
களின் துப்பாக்கிச் சூடுபட்டு அதிர்ஸ்டவசமாக உயிர்தப்பி,சிறைவாசம் அனுபவித்தக் கொடுமைகள் நிச்சயமாக  உயிரினும் மேலான என் குழந்தைக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்!
“பார்த்திபன்…..! ஏன்பா மகிழ்சியான இந்த நேரத்தில கண் கலங்கிற?” அம்மாதான் கண்களில் திரண்டு நின்ற கண்ணீரைச் சட்டென்று யாருக்கும் தெரியாமல் தன் சேலைத் தலைப்பால் துடைக்கிறார். மணப்பெண்ணாக அருகில் நின்றுக் கொண்டிருந்த தமிழரசிக்கு ஒன்றும் விளங்காமல் பார்த்திபனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
      ஒருவேளை, முதலிரவின் போது தமிழரசி கேள்வி கேட்டால், தன்னைப் பெரிதும் பாதித்த அந்த விசியத்தை  புது மனைவியிடம் பார்த்திபன் கூறுவானோ என்னவோ?
          மனிதன் எப்படி எப்படியெல்லாமோ வாழநினைக்கிறான். ஆனால், நம்மைப் படைத்த இறைவன், இப்படித்தான் வாழவேண்டு என்று
நியதியை ஒவ்வொரு மனிதனுக்கும் நீதியாக அமைத்துக் கொடுக்கிறான்!  இன்னாருக்கு இப்படிதான் வாழ்வு அமையும் என்பது ஆண்டவன் கட்டளை. இறைவன் கொடுத்ததை மனிதன் தடுக்க முடியாது! இதை உணர்ந்து நடக்கும் மனிதன் எந்நாளும் மகிழ்வுடன் வாழ்கிறான்!
         இதோ, ஆண்டவன் ஆசியுடன் புதுவாழ்வை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிவிட்ட  அன்பு மகன் பார்த்திபன்  மருமகள் தமிழரசி ஆகியோரைப் பெற்றோர் தினகரன் அம்பிகை தம்பதியினர் பூரிப்புடன் பார்க்கின்றனர்!
         அவர்கள் மட்டுமா பூரிப்புடன் இருக்கின்றனர்? புதுமணத் தம்பதியினரை வாழ்த்த வந்த அணைத்து நல்லுள்ளங்களின் முகங்களிலும் பூரிப்பு நிறைந்து காணப்படுகிறது!
           பார்த்திபன் புத்துணர்ச்சியோடு தன் புது மனைவியின் கரங்களை இனிதாகப் பற்றியவாறு வானமே எல்லையாக வாழ்ந்து காட்ட பவிசுடன் நடந்து செல்கிறான்!
           தங்கள் உதிரத்தில் உதித்த மகன், இல்லறத்தில் நல்லறம் காண இறைவனின் ஆசிக்காகப் பெற்றோர் தங்களின் இருகரங்களையும் கூப்பி  இறைவனிடம் மனதார இறைஞ்சுகின்றனர். அப்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பி வழிகிறது!                                                                           
                                            

முற்றியது   

Series Navigationபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *