தூமலர் தூவித்தொழு

 

நா. வெங்கடேசன்
பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா 
 
பூஜை முடிந்தவுடன் “புஷ்பம் எங்கே?”
புஷ்பம் போடவேண்டுமென்றாய்.
மந்திர புஷ்பம் ஓதியாயிற்று.
“நான் புஷ்பம் போட வேண்டும்” என்றாய்
மந்திர புஷ்பம் ஓதினவுடன்.
நீர் புஷ்பம் ஓர் உயிர் புஷ்பம்
அது ஜீவ புஷ்பம்.
 
தாகமெடுத்தவனுக்கு தண்ணீர் புஷ்பம்,
பசித்தவனுக்கு பக்ஷண பலகார விருந்து புஷ்பம்,
காமித்தவனுக்கு கலவி புஷ்பம்,
நொண்டிக்கு நடை புஷ்பம்.
நோயுற்றவனுக்கு சிகிச்சையும் மருந்தும் புஷ்பம்,
கவிஞனுக்கு காவிய புஷ்பம்,
வரியவனுக்கு கொடை புஷ்பம்,
வருத்துபவனுக்கு கருணை புஷ்பம்,
சத்வகுண புஷ்பங்கள்,
தண்ணீர் புஷ்பங்கள் –
ஜீவ புஷ்பங்கள்
தத்தளிக்கும்
பிறவிப் பெருங்கடலில்.
 
இறையின் பேரருள்
இஜ்ஜீவ புஷ்பம்,
அபிமான “நான்” புஷ்பம்.
அக்கினி புஷ்பம் ஓர் அஹிம்சை புஷ்பம்.
அக்கினியின் மூலம் ஜீவன்
ஜீவனின் மூலம் அக்கினி.
காற்று புஷ்பம் பிராண புஷ்பம்,
கடயோக புஷ்பம்,
கள்ளப் புலனொடுக்க புஷ்பம்.
பிராணனே ஜீவன் – ஜீவனே பிராணன்.
கதிரவ புஷ்பம் 
எவ்வுயிரிடத்தும்
எக்காரணமுமின்றி
சொரியும் 
பெருங்கருணை புஷ்பம்,
ஞாலம் வாழ்வது ஞாயிறின்
தன்னலமில்லா
தனிப் பெருங்கருணை.
விவஸ்வான் மனு ஜீவனின் மூலம்,
காஶ்யபர் ஞாயிறின் மூலம்.
சந்திர புஷ்பம் – சந்திரசேகரர் பொறுத்ததால்.
பொறையுடைமை புஷ்பம் சந்திர புஷ்பம்.
மனதால் மனிதன், மனமே அம்புலி.
மனமே ஜீவன் – ஜீவனே மதி.
உடு புஷ்பம் ஒப்பிலா சாந்தி புஷ்பம்.
ஜீவனின் மூலம் தாரகை – 
என்றும் குன்றா ஆத்ம சாந்தி.
தாரகையின் மூலம் பிராணன்.
முகில் புஷ்பம் முனைந்த தவ புஷ்பம்.
ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய்
நல்லோர் தவமாய் நயத்தலால்.
அன்னமயமான ஜீவனின் 
மூலம் முகில்.
வாசனைகளே முகில்.
வாசனை விதைகளை 
சுமக்கும் ஜீவ புஷ்பம்
கவனக்குறைவினால்.
முகிலின் மூலம் ஜீவ சிருஷ்டி.
ஆண்டு புஷ்பம் ஆத்ம-தியான புஷ்பம்.
கால உத்பத்தி ஜீவனால்.
ஜீவ-அகந்தை
கால வெளியில்
பழுத்து விடுபடும்
ஆத்ம சாதனையால்.
 
ஜீவனின் இடராழி 
நீங்குகவேயென்று 
வேதம் – 
பறிக்காமல்,
தொடுக்காமல் 
சூட்டிய சொன்மாலை.
ஞானச்சுடர் விளக்கேற்றும்
ஞானப்பா
இம்மந்திர புஷ்பம்.
 
மலர்ந்து விரிந்து
உணர்வேயான
ஜீவபுஷ்பம் 
நீந்தும்
பிறவிப் பெருங்கடல் –
நிவேதனப் படகால்,
ஆத்மநிவேதனப்
படகால்.
ஆத்ம ஸமர்ப்பணம் –
சரணாகதி புஷ்பம்.
 
இவ்வஷ்ட புஷ்பங்களால்
விகசித்து
ஜ்வளித்துக்
காய்த்துப்
பழுக்குது
ஜீவ புஷ்பம்.
 
பேதித்துப் புஷ்பங்களை
போஷித்துப்
பக்குவமாக்கி
இறை பதத்தில்
சேர்த்தப்
பிரகிருதிப்
பெய்வளைதன்
பாதத் திறம்
போற்றி! போற்றி!
 
மரத்திலோ, கொடியிலோ,
செடியிலோ, புதரிலோ
பூக்கா இப்புஷ்பங்கள்.
தேவலோக பாரிஜாதமும்
ஈடாகா இவைகளுக்கு.
இறையனார்க்கு
நயந்து நல்கிவிடு
“நான்” புஷ்பம்.
மோன மலர்த்தூவி
தன்னிலே தானாய்
ரமித்து,
தனித்துத்
தணி.
கிட்டும் பரமோனம்.
கமழும்
ஆத்ம பரிமளம்.
 
 
Series Navigationஒரு கதை ஒரு கருத்து – அசோகமித்திரனின்  குருவிக்கூடு