தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று

This entry is part 3 of 27 in the series 30 ஜூன் 2013

கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதி ராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் நிகழ்ந்திருக்க வேண்டும். இங்கு வரலாறு தலைகீழாகவே நம் முன் விரிந்து கொண்டு இருக்கிறது. நம் வளர்ச்சியின் உடன் நிகழும் இயல்புக்கு மாறாக, அபத்தமான செயற்கையை முதலில் வரிந்து கட்டிக்கொண்டு வளர்த்துவிட்டு பின் இயல்புக்கு படிப்படியாக ரொம்பவும் தட்டுத் தடுமாறி திரும்புவது நமக்கு பெரிய பிரயாசையான காரியமாகிக்கொண்டிருக்கிறது.

முதலில் பைத்தியமாகவே பிறந்து வளர்ந்து பெரியவனாகி அந்த வளர்ச்சியில் பெருமைப்பட்டு தம்பட்டமடித்துக்க்கொண்டிருந்த வேளையில் ஒரு சிலருக்கு, ஆமாம், ஏழுகோடி தமிழரில் ஒரு சிலருக்குத் தான், இது சரியில்லையே என்று தோன்றி இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சி செய்துகொண்டிருக் கிறோம். ரொம்ப வருஷங்களாகக் கற்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் சுலபமாக நம்மை விட்டு விலகுவதில்லை. இதற்கே தடைகள் நிறைய. திடீரென்று குத்தாட்டம் ஒரு நாள் தமிழ்ப்பட  திராபைக் குவியல்களில் ஒன்றை வெற்றைப் படமாக்கி விடவே, எல்லாரும் “ஒரு குத்தாட்டத்தையும் எங்கியாவது சேத்துக்குங்க,” என்று சொல்ல ஆரம்பித்து அது மரபாகிவிட்டது. “அது எப்படிங்க, ஒரு குத்தாட்டமாச்சும் இல்லாட்டி, நல்லாவா இருக்குங்க? முமைத்கானை வேறே முதல்லேயே புக் பண்ணி வேறே வச்சிருக்கு, என்பதும் எங்கும் கேட்கப்படும் டயலாக் ஆயிருக்கு. இந்தக் கோட்டையை உடைத்துக்கொண்டு உள்ளே போவது கஷ்டம் தான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று சொல்லிக் களம் புகுந்துள்ள சீனிவாசன், முயற்சி செய்துள்ளார். அவரை அறியாத தடுமாற்றங்களும் தொடர்கின்றன. இதைத்தான் நான் தென்மேற்குப் பருவக்காற்று பற்றிச்சொல்ல விரும்பும் செய்தி

முதல் தடவையாக ஒரு கதை முழுதும்,அதுவும் கிராமத்துக் கதை தான், கிராமத்து மக்கள் தான், கிராமத்து வாழ்க்கை தான், பின்னால் தான் தமிழ் சினிமாக் கதையை கிராம்த்து மக்கள் நடிக்கத் தொடங்குகிறார்கள். இது கிராமம் போல உருவாககப் பட்ட கிராமம் இல்லை. பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு ஒரு உலகநாயகனை கிராமத்துக்கு இறக்குமதி அவனுக்கு கொஞ்சம் டீஸண்டான கோவணத்தைக் கட்டி, சப்பாணி என்று பெயர் வைக்கவில்லை. உலக நாயகனும் தான் சப்பாணி தான் என்று சொல்ல ஒரு மாதிரியான பேச்சு பாவனையை கற்பித்துகொண்டு உலக நாயகன் பட்டத்தை நோக்கி பயணிக்கவில்லை. புதுமைப் பித்தனின் ஒரு கதை, “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” ரொம்பவும் புகழ் பெற்ற அவர் பெயர் சொல்லும் கதை. பேசப்பட்ட கதை. ஆனால் இன்றைய தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியுமோ என்னவோ. அதில் சித்த மருத்துவ தீபிகையோ என்னவோ ஒன்றை நடத்தும் கந்தசாமிப் பிள்ளையின் முன் சிவனும் பார்வதியும் தீடீர் என்று தோன்றி தரிசனம் தருவார்கள். கந்தசாமிப் பிள்ளை அரண்டு, “யோவ் யாருய்யா நீ பிச்சைக்காரனா, பாம்பாட்டியா? என்று கூச்சலிட, பரம சிவம் தான் பார்வதி சமேதரராக வந்திருப்பதாக, அவரை அமைதிப் படுத்த,  கந்த சாமிப்பிள்ளை பரமசிவனுக்கும் பார்வதிக்கும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுவார்: “ ஏன்யா நீ பரவசிவனாவே இருக்கட்டும். அதுக்காக இப்படியா புலித்தோலை இடுப்பிலே கட்டிக்கிட்டுத் திரிவே. புலித்தோல் டிஸைன்லே பட்டு வேட்டி கட்டீட்டு வரணும். பாம்பத் தூக்கி தோள்லே போட்டு வரியே, உனக்கு புத்தி இருக்கா. இது குழந்தைகள் நடமாடற இடம். பாம்பு மாதிரி ரப்பர் லே செஞ்சு தோள்லே போட்டுட்டுவரணும்யா, முதல்லே இந்த இடத்தைக் காலி பண்ணு? என்று விரட்டுவார்.

இது தான் தமிழ் சினிமாவின் மூல மந்திரம். அது மாதிரி வேறொன்று தான் வேண்டுமே ஒழிய அதுவே ஆக இருக்கக் கூடாது. தமிழ் சினிமாவில் கிராமத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் பாரதி ராஜா சென்னையிலிருந்து வடிவுக்கரசியையும், ராதிகாவையும் சத்யராஜையும் இறக்குமதி செய்வார். கிராமத்து முகம் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராது. பாக்கும்படியா லக்ஷணமா மேக்கப் போட்டுத் தான் கிராமத்து வாசியாக்கணும். சீனுவாசனின் தென்மேற்குப் பருவக் காற்று படத்தில் காணும் முகங்கள் எல்லாம் சாதாரண கிராமத்து முகங்கள். குஜராத்திலிருந்து இறக்குமதி முகம் ஒன்று கூட கிடையாது. இப்படியான ஒரு பாதை மாற்றத்துக்கும் புதிய முயற்சிக்கும் நிறைய தைரியம் வேண்டும்.

ஆனால் கிராமத்தை ஏன் அதன் இயற்கைத் தோற்றத்தில் காட்ட பயப்பட வேண்டும்? முதன் முறையாக வெற்று நிலமாக அடிவானம் வரை சிவந்த மண் பரந்து விரிந்து கிடக்கும், ஏதோ கருவேல மரம் போல படர்ந்து விரிந்த கிளைகள் கொண்ட இரண்டு மரங்கள், மிக அழகான காட்சி. அது அந்த கிராமத்தின் நிஜம். பாவனையாக செட் அப் பண்ணியது அல்ல. அந்த கிராமத்து மக்களும் நிஜங்கள். அனேக பல காட்சிகளை முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் பார்க்கிறேன். ஆட்டு மந்தைகள் ஓட்டிச்செலப்படுவது, இரவுநேரத்தில் கொட்டு மழையில் கிடை புகுந்து ஆடுகள் களவாடப்படுவது, ஒரு குடும்பமே ஒட்டு மொத்தமாக மிக ஒற்றுமையாக களவு, கொலையில் ஈடுபட்டிட்டிருப்பது, அந்தக் குடும்பத்துப் பெண் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுவதும், பள்ளிக்கூடம் வந்ததும் சைக்கிளைத் தூக்கி சுவருக்கு அப்பால் உள்ளே வீசுவதும் எல்லாம் எனக்கு மிக ரம்மியமான காட்சிகள். முதல் தடவையாக ஒரு கிராமத்துக் கதை கிராமத்து மக்கள் என்று நம்பும்படியான, வேஷம் தரிக்காதவர்களால் நிகழப் பார்க்கிறேன். நிஜமான கிராமியகாட்சிகளை நான் பழைய படங்களில், தியாக பூமி, சிவகவி, போன்ற படங்களில் பார்த்திருக்கிறேன்.  அதன் பிறகு கிராமப் பின்னணி இருந்த போதிலும் நடிகர்கள் தமிழ் சினிமா காட்சிகளைத் தான் நடித்துப் பார்த்திருக்கிறேன். உதாரணம் சுப்பிரமணிய புரம்.

தென்மேற்குப் பருவக்காற்று கதை பெரும்பாலும், கிராமத்தில் நிகழக் கூடிய கதை தான். கணவனை இழந்த பெண் தன் மகனை ரொம்ப செல்லத்தோடு தான் வளர்க்கிறாள். கிராமத்தில் தத்தாரியாகத் திரிகிறவன். அவனுக்கு ஒரு தோழன். அவனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாகத் தான் இருக்கிறது. அந்தக் காட்சிகள் எல்லாம் நன்றாகத் தான் எடுக்கப் பட்டுள்ளன. ஒரு நாள் இரவு கிடையைத் திறந்து ஆடுகளைத் திருட வந்த ஒரு திருட்டுக் குடும்பத்தில் ஒரு இளம் பெண்ணை மாத்திரம் அந்த இருட்டிலும் அடையாளம் காண்கிறாம் முருகையன். முகம் தானே. நம்பி வைக்கலாம். போலீஸ் அழைத்துவரப்பட்டு தேடுகிறார்கள், ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு அண்டை பட்டி தொட்டியாக. இதெல்லாம் ஆண்டிபட்டிக்கு அக்கம் பக்கம் என்று தெரிகிறது, பஸ்கள், கடைத்தெரு போர்டுகள், பள்ளிக்கூடம் எல்லாம் சொல்கின்றன. திருடிய குடும்பம் எது என்று பெண்ணைப் பார்த்து அடையாளம் தெரிந்தும் இவன் அந்தப் பெண்ணின் மேல் இருக்கும் ஈர்ப்பால் விட்டு விடுகிறான். கடைசியில் அந்தப் பெண்ணின் அண்ணனும் அவன் குடும்பமும் அகப்பட்டுக்கொண்டு சிறையில் அடைக்கப் படுகிறார்கள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் மறுபடியும் தொழிலைத் தொடங்கலாம். காட்டிக்கொடுத்தவர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

இதெல்லாம் சரி. கிராமத்து இளம் வயதினருக்கு காதல் வராதா? வரும். ஆனால் வீராயி புள்ளே முருகையன் அந்தப் பொண்ணு பின்னாலே சுத்தித் திரியமாட்டானா? திரிவான் தான். ஆனால் திருட்டுத் தனமாக கிராமத்தில் இது நடப்பது, இந்தப் படத்தில் நடப்பது போல நடக்காது. முருகையனும் அந்தப் பொண்ணும் பக்கத்து ஆண்டிபட்டிலே நிறைய தமிழ் சினிமா பார்த்தவர்கள் போல இருக்கு. ஆக, இது தமிழ் சினிமாக் காதலை ஒட்டி அந்தச் சரக்கில் கொஞ்சம் தாராளமாவே தண்ணி ஊத்தி கலக்கிய சரக்கு. தமிழ் சினிமா சரக்கு தான். கிராமத்து நடப்பதைக் காட்டியிருந்தால் அதன் இயற்கை அழகும் தமிழ் திரைக்குப் புதியதாகவும் ஏன், கவித்வமாகக் கூட இருந்திருக்கும். ஆனால் குத்தாட்டமும், நாட்டுப் பாடல் என்று சொல்லிச் செய்யும் விரசமும் இல்லாவிட்டால் நம்ம ரசிகர்களுக்கு இது காதலாக்கும் என்பது புரியாது.

ஒரு மாதிரிக்கு சொல்லலாமா? அனேகமாக ம்ருணால் சென்னின் ஆகாஷ் குஸும் என்று நினைக்கிறேன். படத்தின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? ஒரே ஒரு காட்சியைச் சொன்னால் இயக்குனரையும் அவர் சினிமாவையும்  சொன்னதாகிவிடும். ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள் என்று சத்தம் போட்டு முகத்தை பிசைந்து கொண்டு சொன்னால், அந்தக்கால தமிழ் சினிமா புரட்சியைச் சொல்லியாச்சு, நடிகர் திலகத்தைச் சொல்லியாச்சு, திரைக்காவியம் படைத்து புரட்சி செய்த முத்தமிழ் காவலரையும் சொல்லியாச்சு இல்லியா, அந்த மாதிரி. இதுவும் 45 வருஷப் பழசு.  ஆற்றை ஒட்டிய புல் தரையில் காதல் வசப்பட்ட ஒரு பெண்ணும், இளைஞனும். ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய சலன ஒலியும் அவ்வப்போது பூச்சிகளோ பறவைகளோ கீச்சொலி. அதைத் தவிர அமைதி தான். பெண் புல்தரையில் காலை நீட்டி உட்கார்ந்து பக்கத்தில் ஆகாயத்தை நோக்கி மல்லாக்கப் படுத்து ஒரு காலை மடக்கி இன்னொரு கால்மேல் போட்டு புல்லைக் கடித்த வாறு இருப்பவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பார்வையில் ஏக்கமும், இயலாமையின் தவிப்பும். கனமும் இறுக்கமுமான கணங்கள். மல்லாக்கப் படுத்திருந்தவன் திடீரென்று எழுந்து உட்கார்ந்து அவளை நோக்கி “சொன்னியா, கேட்டியா?” என்று கேட்கிறான். அவள் சற்று நிதானித்து, மெல்ல சன்ன குரலில் “நா” (இல்லை) என்கிறாள். அந்தச் சூழலும் அதன் அமைதி, இறுக்கம், அவ்விருவரின் மனநிலை அவ்வளவும் அனேகமாக ஒரு மூன்று நிமிடத்தில் மிக அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டு விடுகிறது.  இந்தக் கலை நுட்பம், சினிமா பற்றிய தெரிவு, அன்றாட வாழ்க்கையின் சித்திரம், எப்படி எப்போது நமக்கு சித்திக்கும் என்பது தெரியவில்லை.

நமக்கு எல்லாமே இரைச்சலிடும் நாடகபாணியும், கூத்தாட்டமும், ஒன்றுக்குப் பத்து தடவை திரும்பத் திரும்பச் சொல்லி பதிய வைத்தலும் தான்.

வீராயி தன் மகனுக்கு இன்னொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயப் படுத்துகிறாள். அந்தக் காட்சிகள் எல்லாம் நம் தமிழ் சினிமா மரபுக்கு அன்னியமானவை. மிக எளிதாக, இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டவை. இதில் யாரும் ஹன்சிகா மொட்வானி இல்லை. சாதாரண தோற்றம் கொண்ட கிராமத்து இளம் பெண் தான். வீராயிக்கு தன் மகன் விரும்பும் பெண் திருட்டுக் குடும்பத்துப் பெண் என்று தெரிந்ததும் சொல்கிறாள். டே அது களவாணிப் பய குடும்பம்டா. அதைக் கட்டினா, நிம்மதியைக் கெடுத்துடுவாங்கடா” என்று சொல்கிறாள். இதெல்லாம் சரி. இதில் எல்லாம் ஏதும் பெரிய ட்ராமா நடப்பதில்லை. ஆனால் சுருதி கெடுவதுக்கு உதாரணம் வேண்டுமானால்,  வீராயிடம் சென்று அவள் முன் நின்று ஒரு முதியவள் சொல்கிறாள் “ அவன் இஷ்டத்துக்கு அந்தப் பொண்ணைக் கட்டிக்கொடுத்துடேன். அவங்க சந்தோஷமா இருக்கட்டுமே? என்பாள். சரி. ஆனால் இதை அவள் தானிருக்குமிடத்தில் இருந்துகொண்டே, வெத்திலை இடிக்கிறாளோ, இல்லை, ஏதும் புடைத்துக்கொண்டு இருக்கிறாளோ, இல்லை வீடு பெருக்குகிறாளோ, செய்துகொண்டே சொல்லவேண்டியது தானே. நாடக மேடையில் முன்னால் வந்து நின்று வசனம் பேசுவது போல், ஏன் செய்ய வேண்டும். இப்படி சின்ன சின்ன விஷயங்கள் திருத்தப்பட்டிருக்கக் கூடியது இருக்கத் தான் செய்கின்றன. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள் தான். முருகையனே சொல்கிறான். ”நீ நல்ல பொண்ணு தான். ஆனா எனக்கு அவ கிட்டதானே பிரியம்” என்றோ ஏதோ சொல்கிறான். அந்தப்பொண்ணும் ஒரு நாள் வீராயி வீட்டுக்கு வெளியே வந்து, தன் அண்ணன்கள் ”கொலை செஞ்சுபுடுவாங்க, அவரு நல்லா இருக்கணும், நீங்கள் எல்லாம் உயிரோடு இருக்கணும்,அது தான் வேணும் எனக்கு” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். இந்த இடத்தில் வீராயி அவளைக் கூப்பிட்டு அவளை ஏற்றுக்கொள்கிறாள். இந்த இடமும் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வீராயியாக சரண்யா மிக நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் பேச்சும், முக பாவமும், குரலும், தமிழ் சினிமா மரபை நடிப்பை முற்றாக ஒதுக்கியது. வெகு இயல்பானது. அலட்டிக்கொள்ளாதது. முந்திய தலைமுறை நடிகைகள் செய்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு சரண்யாவுக்குக் கிடைத்த வாய்ப்பு வரவே இல்லை.

ஆனால் அண்ணன் கொலை செய்ய வந்துவிடுகிறான். தன் தங்கை வீராயி வீட்டுக்குப் போய்விட்டது தெரிந்து. அவர்கள் வயக்காட்டுக்கு ஓடி வருகிறார்கள், அண்ணனும் அவன் கூட்டாளி ஒருத்தனும்.  வீராயியை வயிற்றில் குத்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். வீராயி தன்னோடு ஆடு மேய்க்கும் நொண்டியிடம் வீட்டுக்குப் போய் முருகையனிடம் செய்தி சொல்ல அனுப்புகிறாள்.

இது வரைக்கும் சரி. இதற்குப் பிறகு தமிழ் சினிமா கலாசாரம் படத்தின் மிச்சக் கதைக்கும் காட்சிகளுக்கும் பொறுப் பேற்றுக் கொள்கிறது. முன்னால் ஆங்காங்கே சில காட்சிகளில் தென் பட்டது இப்போது மிச்சப் படம் முழுதையும் அவலமாக்கிவிடுகிறது.

வயிற்றில் குத்துப் பட்டு இருக்கும் வீராயி, நொண்டியின் தலையில் சுற்றியிருக்கும் துணியால் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தூரத்தில் வரவிருக்கும் பஸ்ஸைப் பிடிக்கப் போகிறாள். பஸ்ஸும் படத் தயாரிப்பாளர் சொன்னபடி அந்த சமயத்தில் வருகிறது வயிற்றில் குத்துப் பட்டு இருக்கும் வீராயி பஸ்ஸில் ஏறி, டவுனில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். அங்கு அவளுக்கு சிகித்சை தரப்படுகிறது. முருகையனும் அவன் காதலி பிச்சிப் புள்ளேயும் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் .வீராயி முருகையனிடம் அவளைக் கைவிட்டுடாதேடா என்று சொல்லி முடித்ததும் டைரக்டர் சொல்படி தலை சாய்க்கிறாள். அந்தக் கால முற்போக்கு கதைகளிலும், சம்பிரதாயப் படங்களிலும் ஒரு ஒளி மிகு எதிர்காலத்தைக் காட்டி, என்ன கஷ்டங்கள் இருந்தாலும், எதுவும் ட்ராஜெடியில் முடியக் கூடாது, பாட்டாளி மக்கள் துயரங்கள் ஒழிந்து சமுதாயப் புரட்சி ஏற்பட்டு, சோஷலிஸ சமுதாயம் மலரும் என்ற நம்பிக்கை ஊட்டுவது எழுத்தாளர்களின், கலைஞர்களின் சமுதாய பொறுப்பாக்கும், அதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்று அறிவுரை கூறுவார்கள் அல்லவா? ஆக, எல்லாம் மங்கலகரமாக முடியவேண்டும் என்று சொல்லும் நம் சம்பிரதாயங்களும், புதிதாக வந்த சோஷலிஸ யதார்த்தமும் ஒரே குரலில் இதை வலியுறுத்துவதால், நம் சீனுவாசனும் வீராயி தன் மகன் ஆஸ்பத்திரிக்கு வரும் வரை உயிரைக் காப்பாற்றி வைத்துக் கொண்டு அவளைக் காப்பாத்துடாப்பா கைவிட்டுவிடாதே என்று சொல்லி அதுக்கு மேலும் தாமதிக்காமல் உயிரை விட்டு சமுதாயப் பொறுப்புணர்வைக் கட்டிக்காக்க, முருகையனும் அடுத்த காட்சியில் ஒரு குடிசையில் இல்லை, காங்கிரீட் வீட்டில், ஒரு வேளை அந்த ஏரியா சமத்துவ புரமாகவும் இருக்கலாம்,  தன் தாயின் பெயர் சூட்ட ஒரு பெண்குழந்தை பெற்று, அப்போதானே பாட்டி பெயரைச் சூட்ட முடியும்? சுகமே வாழ்கிறார்கள்.

முதலில் வீராயி எப்படிய்யா நடந்து பஸ்ஸில் ஏறுகிறாள்? அந்த கண்டக்டர் முதலில் அவளை ஏற்றுவானா?, ஏற்றினால் போலீஸ் ஸ்டேஷனில் இறக்கு வானா? இல்லை பஸ் ஸ்டாண்டுக்குப் போவானா? ஆஸ்பத்திரியில் அவள் எப்படி அட்மிட் ஆனாள், அங்கு டாக்டர் முதலில் இது கிரிமினல் கேஸ் என்று போலீஸைக் கூப்பிட்டு வாக்குமூலம் வாங்குவானா இல்லை சிகித்சை செய்வானா,? சீனுவாசன் முதலில் ஒரு சாதாரண கிராமத்துப்பெண் குத்துக் காயத்தோடு இருப்பவளோ என்னவோ, சென்னை ஜெனரல் ஹாஸ்பிடலில் வெளியே நிற்கும் தர்வானைத் தாண்டி உள்ளே நுழைந்து பார்க்கட்டும் அப்புறம் வார்டில் டாக்டர் இருக்காரா இல்லையா என்பதைப் பார்க்கட்டும். மற்ற கதையெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

பெரிய அரசியல் வாதிகள் முதல் மந்திரி கலைஞர் வரை பெரிய பிரமுகர்கள் தொடர்பும் நல்ல சம்பாத்தியமும் கொண்ட சமுத்திரம், ”பணத்தை முதலில் வை பின்னால் சிகித்சை பற்றி பேசலாம்,” என்று சொன்ன ஹாஸ்பிடலில் சிகித்சை பெறாமலேயே இறந்தார்.  வாசலில் நிற்கிறவனுக்குக் கொடுக்க காசில்லாமல் ஆஸ்பத்திரி வாசலிலே ப்ளாட்ஃபாரத்திலேயே குழந்தையைப் பிரசவித்த கேஸ் பத்திரிகைகளில் அல்லோலப் பட்டது. இது தமிழ் நாடு. தமிழ் வாழ்க்கை

இவ்வளவு தூரம் தமிழ் கிராமத்து வாழ்க்கையின் ஒரு அன்றாட கதையைக் காட்சிப்படுத்தியவர், வீராயி கத்திக் குத்து பட்டதும் ஏன் தமிழ் சினிமாவின் அபத்தங்கள் நிறைந்த பாதைக்கு வழி தவறித் திரும்பினார்?.

அப்படித் தமிழ் சினிமாத்தனமான திருப்பங்கள் கொடுத்து என்ன வெற்றி அடைந்து விட்டார்.? அவர் படம் விருதுகள் பெற்றது படத்தின் இறுதிக் காட்சிகளுக்கா, இல்லை முக்காலே மூணுவீசம் முன் பகுதிக்கா? நம்மூர் வழக்கு ஒன்று உண்டு இப்போது உண்டோ என்னவோ தெரியாது. “செய்யறதையெல்லாம் செஞ்சிட்டு கடசீலே கழுநீர் பானையிலே கைவைச்ச மாதிரி ஆய்ப்போச்சு.

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9வறுமை
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *