தேச விரோதத்திற்குப் பயன்படும் கருத்துச் சுதந்திரம்

பி.ஆர்.ஹரன்

padmavati-postersபாலிவுட் (Bollywood) என்று அழைக்கப்படும் ஹிந்தித் திரையுலகில் சஞ்ஜய் லீலா பன்ஸாலி பிரபலமான இயக்குனர்களுள் ஒருவர். இவர் சமீபத்தில் “பத்மாவதி” என்கிற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 1ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், அந்தத் திரைப்படத்தில் பத்மாவதி என்கிற சரித்திரப் புகழ் பெற்ற, உயிரைவிட மானத்தைப் பெரிதாக மதித்து அதைக் காப்பாற்றிக்கொள்ளத் தீயில் விழுந்து உயிர் தியாகம் செய்துகொண்ட, வீரப்பெண்மணியான பத்மாவதியின் குணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியவே, நாடெங்கும், குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில், அந்தத் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொடூரமான முகலாய மன்னனான அலாவுத்தீன் கில்ஜியை பத்மாவதி காதலிப்பது போலவும், இருவரும் சேர்ந்து காதல் காட்சிகளில் நடிப்பது போலவும், அலாவுத்தீன் கில்ஜியின் படையினரிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ள, ராணி பத்மினியுடன் சேர்ந்து தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட பெண்மணிகளின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும் படத்தில் காட்டப்படுவதாகத் தகவல்கள் வரவே, பல்வேறு அமைப்புகள் அத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் இரு மாநிலங்களிலும் அரசுகள் தடைவிதித்து விட்டன. மற்ற மாநிலங்களிலும் கோரிக்கை பலமாக எழுந்த வண்ணம் உள்ளது. உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப் மாநில முதல்வர்களும், சில மத்திய அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் எதிர்ப்புகள் கடுமையாக இருந்துகொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தங்களை முற்போக்கு அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ளும் எழுத்தாளர்களும், திரையுலகத்தினரும், ஊடகவியலாளர்களும் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரைப்படத்திற்குத் தடை கோருவது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்படுகின்ற சவாலாகும் என்றும், அவ்வாறு தடை கோருவது ஜனநாயகத்துக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

இதனிடையே சஞ்ஜய் லீலா பன்ஸாலி, திரைப்படத்தில் எந்தவிதமான கொச்சைப்படுத்துதலும் இல்லை என்றும் பத்மாவதியை நல்லவிதமாகவே காட்சிப்படுத்தியிருப்பதாகவும், ராஜபுத்திர வம்சத்தினரை அவமதிக்கும் விதமாக எந்தக் காட்சியும் இல்லை எனவும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கைத் துறை இன்னும் சான்றிதழ் வழங்காத நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு மட்டும் பன்ஸாலி திரைப்படத்தைப் பிரத்யேகமாகக் காண்பித்துள்ளார். திரைப்படத்தைக் கண்டுகளித்த அவர்கள், அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் கவனத்திற்குச் சென்றது. அதனையடுத்து பா.ஜ.க உறுப்பினர் அனுராக் தாக்கூர் தலைமையிலான 30 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழுவினர் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலிக்கும், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பாரசூன் ஜோஷிக்கும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர். அதையடுத்து பன்சாலி, ஜோஷி, மற்றும் மத்திய அரசின் தகவல் மற்றம் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உண்மையா கற்பனையா?

மேலும் சிலர், “பத்மாவதி என்னும் பாத்திரமே கற்பனைப்படைப்புதான், அது உண்மையான வரலாற்றில் இல்லை, எனவே திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அபத்தம்” என்கிற கருத்தையும் முன்வைக்கின்றனர். ஆயினும், திரைப்படத்திற்கு எதிரான தடைகோரும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

(இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, வரலாற்று ஆதாரங்கள் எதுவும் உள்ளனவா என்று தேட முனைந்தபோது, மதிப்பிற்குரிய மூத்த பத்திரிகையாளரும் வரலாற்று ஆராய்சியாளருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி பின்வரும் தகவல்களைத் தந்தார்)

• இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி “பத்மாவதி” என்று அழைக்கப்பட்டாலும், அவர் உண்மையில் பத்மாவதியா இல்லை பத்மினியா என்கிற குழப்பம் ராஜஸ்தான் வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

• ஆங்கிலேய ஆராய்ச்சியாளரும், கிழக்கு இந்திய கம்பெனி ராணுவத்தில் பணிபுரிந்தவருமான கர்னல் ஜேம்ஸ் டாட் (Colonel James Tod – 1782-1835) தன்னுடைய ராஜஸ்தான் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் பத்மாவதியை “பத்மினி” என்கிறார். ராணா ரத்தன் சிங்கை “பீம்சிங்” என்கிறார். 1540ம் ஆண்டு மாலிக் முகம்மது என்பவர் எழுதியுள்ள காதலைப் பற்றிய நூலில் “பத்மாவதி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

• பத்மாவதி ராணாவின் மனைவியா அல்லது மகளா என்கிற குழப்பமும் இருந்துள்ளது. 16ம் நூற்றாண்டில் முகம்மது காசிம் பெரிஷ்டா என்பவர் எழுதிய Rise of Mohammedan Power in India என்கிற நூலில் ராணாவின் மகள் மீது அல்லாவுத்தீன் கில்ஜி ஆசைக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

• ஜேம்ஸ் டாட், பத்மினி தன் தோழிகள் பரிவாரம் என்கிற போர்வையில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களைக் கொண்டு சென்று கில்ஜியின் சிறைப்பிடிப்பிலிருந்து தன் கணவன் பீம்சிங்கை மீட்டுக் கொண்டுவந்தாள் என்கிறார். முகம்மது காசிம் பெரிஷ்டா, கதாநாயகி தன் தந்தை ராணாவை மீட்டாள் என்கிறார்.

• 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபுல் ஃபாசல் என்கிற ஆசிரியர் இதே கதையை பரம்பரையாக வந்துள்ள பேச்சுவழிக்கதைகளைக் கொண்டு எழுதியுள்ளதாக கூறியுள்ளார். ஜேம்ஸ் டாட் அவர்களும், கிராமியப் பாடல்கள், நாடகங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.

• மிகவும் பிரபலமான வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான ஆர்.சி.மஜும்தார் தன்னுடைய Delhi Sultanate என்கிற நூலில், பத்மாவதியின் கதைக்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை என்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், உண்மையான வரலாற்றைச் சொல்வதிலோ, திரையில் காட்சிப்படுத்துவதிலோ எந்தப் பிரச்சனையுமல்ல. சொல்லபோனால் வரலாற்று உண்மைகளை மக்களிடம் விரைந்து கொண்டு செல்ல ஊடகங்களும், திரைப்படங்களும் பெரிதும் பயன்படும். உதாரணத்திற்கு, அமரர் கல்கி போன்ற நாவலாசிரியர்களும், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டியக் கட்டபொம்மன், ராஜராஜ சோழன் போன்ற திரைப்படங்களையும் சொல்லலாம். அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்கிற வரலாற்றுப் புதினத்தை எடுத்துக்கொண்டால், சிவகாமி என்கிற காதாபாத்திரம் உண்மையானது அல்ல, அது ஒரு கற்பனைக் கதாபாத்திரம். ஆனால் அந்தப் படைப்பினால் பல்லவரின் வரலாறோ, நரசிம்மவர்மரின் பாத்திரமோ எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. அதே போலத்தான் கப்பலோட்டியத் தமிழன் இன்ன பிற படங்களும். விடுதலைப் போராட்ட வரலாறோ அல்லது அவர்களுடைய பாத்திரப் படைப்புகளோ எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகவில்லை.

ஆனால், உண்மையான வரலாற்றையும், பாத்திரங்களின் குணாம்சத்தையும் கெடுக்காமல் சொல்ல வேண்டும். அதற்குத்தான் கருத்துச் சுதந்திரம் பயன்பட வேண்டும். அதை விடுத்து வரலாற்றைத் திரித்தும், பாத்திரங்களைக் கொச்சைப்படுத்தியும் சொன்னால். அதைக் கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு உண்மையான வரலாற்றைத் திரிப்பதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.

ராஜஸ்தான் வரலாற்றில் முகலாயப் படையெடுப்பாளர்களுக்குப் பணிய வெறுத்து, தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ள, ராஜபுத்திரப் பெண்கள் ‘ஜோஹர்’ என்கிற, தீயில் தங்களையே ஆகுதியாக ஆக்கிக்கொள்ளும் செயலில் ஈடுபட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது, நடந்த உண்மை. பத்மாவதி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் கூட, ஜோஹர் என்கிற ஒரு மாபெரும் தியாக வரலாறு கற்பனையாகிவிடாது. அது ஒரு உன்னதமான உண்மை. அதைக் கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையோ சுதந்திரமோ கிடையாது. அதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது. அதோடு மட்டுமல்லாமல் மிகவும் கொடூரமான, கோவில்களை அழித்து, ஹிந்துக்களைக் கொன்று குவித்த, ஹிந்துப் பெண்களைக் கற்பழித்த அலாவுத்தீன் கில்ஜியை ஒரு வரலாற்று நாயகன் போல, காதல் தலைவன் போலச் சித்தரித்திருப்பதும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

மேலும் கிறிஸ்தவத்தின் உண்மையான வரலாறையோ, மேரியின் உண்மையான பாத்திரப் படைப்பையோ, அல்லது, இஸ்லாமின் உண்மையான வரலாற்றையோ, உண்மையான முகம்மது மற்றும் ஆயிஷா பாத்திரங்களின் படைப்பையோ இவர்களால் திரைப்படங்கள் எடுக்க முடியுமா? அவர்களின் வரலாற்றைத் திரித்துக் கொச்சைப்படுத்த வேண்டாம். அவர்களின் உண்மையான சரித்திரத்தை இவர்கள் காட்டுவார்களா? காட்டத்தான் முடியுமா? அவ்வாறு உண்மைகளைக் காட்டித் தங்கள் கருத்துச் சுதந்திரத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவார்களா?

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ வரலாற்றில் உள்ள உண்மைகளைச் சொல்லவே அஞ்சுகின்ற இந்த முற்போக்குக் கும்பல், ஹிந்து தர்மம் என்று வருகின்ற போது மட்டும், வரலாற்றைத் திரித்தும், வரலாற்றுப் பாத்திரங்களைக் கொச்சைப்படுத்தியும் காட்டிவிட்டு, அதற்குக் கருத்து உரிமையும், சுதந்திரமும் கோருவது அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன?

கருத்துச் சுதந்திரமா?

இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை நாம் இரண்டு விஷயங்களைக் கவனம் கொள்ள வேண்டும். ஒன்று, கருத்துச் சுதந்திரம். மற்றொன்று திரைத்துறையினரின் நடத்தை.

நமது அரசியல் சாஸனத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைப் பாதுகாக்கும் க்ஷரத்து 19, அந்தக் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக அளிக்கவில்லை. அளிக்கப்பட்டிருக்கும் கருத்துச் சுதந்திரமானது, நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதிக்காமல் இருக்க வேண்டும்; நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்; வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கும்படியாக இருக்கக்கூடாது; சட்ட ஒழுங்குக்கோ பொது நலனுக்கோ கேடு விளைவிக்கக் கூடாது; நீதிமன்ற அவமதிப்பாகவோ, அவதூறாகவோ, குற்றத்தைத் தூண்டும் விதத்திலோ இருக்கக்கூடாது என்று 19வது க்ஷரத்து தெளிவாகக் கூறுகிறது.

பத்மாவதி திரைப்படம் வெளியாகும் முன்பே இவ்வளவு எதிர்ப்பு இருக்கின்றது எனும்போது, வெளியான பிறகு சட்டம் ஒழுங்குக் கடுமையாகப் பாதிக்கப்படும், பொதுநலனுக்கும் கேடு உண்டாகும் என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் விதமாகவும் உள்ளதாக நம்பப்படுகின்றது. பத்மாவதி என்கிற பாத்திரப்படைப்பு கற்பனை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, நூற்றாண்டுகளாக அந்தப் பாத்திரத்தின் மீது பொது மக்களிடையே ஒரு மாபெரும் நம்பிக்கையும் போற்றித்துதிக்கும் மனப்பாங்கும் உண்டாகிவிட்டது. அந்த மனவுணர்வுக்கு யாராக இருந்தாலும் மதிப்பு அளித்தே ஆகவேண்டும். அவ்வுணர்வைப் புண்படுத்தும் விதமாக பேசவோ, எழுதவோ, காட்சிப்படுத்தவோ செய்வது கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகக் கையாளுவதாகும்.

உதாரணத்திற்கு, தமிழகம் தெய்வமெனப் போற்றும் சிலப்பதிகாரக் கதாநாயகி கண்ணகி தன் கணவன் கோவலனைக் காப்பாற்ற பாண்டிய அரசுனுக்கு இசைந்து கொடுத்தாள் என்கிற தொனியில் திரைப்படம் எடுத்தால், விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் அப்படத்திற்குத் தடை கோரிப் பெரும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கும். தமிழர்கள் கண்ணகியைப் போற்றுவதைப் போலத்தான் ராஜபுத்திரர்கள் பத்மாவதியைப் போற்றுகிறார்கள். அந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திரைத்துறையினரின் நடத்தை

இரண்டாவதாக, திரைத்துறையினர் நடத்தையைக் கடந்த ஆண்டுகளில் கூர்ந்து பார்த்தோமானால், பத்மாவதி திரைப்படத்தை ஒழுங்காகத் தயாரித்திருப்பார்கள் என்கிற நம்பிக்கை வராமல் இருப்பதில் வியப்பில்லை. திரைத்துறை வரலாற்றில் இம்மாதிரியாக சரித்திரத்தைத் திரித்து, ஹிந்து மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, ஹிந்துக் கடவுளர்களை அசிங்கப்படுத்தும் விதமாக, திரைப்படங்கள் எடுத்து வெளியிடுவது தொடர்ந்து நடந்தே வருகின்றது. இந்தப் போக்கு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

• Oh My God என்கிற திரைப்படத்தில், கங்கை நீரையும், அமர்நாத் யாத்திரையையும், ஹிந்து சன்னியாசிகளையும் கொச்சைப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

• Mickey Virus என்கிற திரைப்படத்தில் சிவபெருமான் அரைகுறை ஆடைகளுடன் உள்ள வெளிநாட்டுப் பெண்மணியுடன் அருவருக்கத்தக்க நடனம் ஆடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

• Bhool Bhulaiyya என்கிற படத்தில் ஹிந்து சாதுக்களையும் சன்னியாசிகளையும் அவமதித்துக் கொச்சைப்படுத்திக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

• Haidar என்கிற படத்தில் காஷ்மீர் அனந்த்நாக் என்னுமிடத்தில் உள்ள சூரியன் ஆலயத்தை சாத்தானின் ஆலயமாகக் காட்சிப்படுத்தி, அதன் அருகில் சாத்தான் நடனம் ஆடுவதாகவும் காட்டப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் இந்திய ராணுவத்தையும் அவமானப்படுத்தியிருந்தார்கள்.

• PK என்கிற ஆமிர்கான் நடித்த படம் முழுவதும் ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்து ஆன்மிகப் பாரம்பரியத்தையும் அசிங்கப்படுத்தும் விதமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹிந்து தர்மத்தைக் கேவலப்படுத்தும் திரைப்படங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் ஆதரவு தெரிவிக்கும் திரைத்துறையினரும், அறிவு ஜீவிகளும், முற்போக்கு நபர்களும், ஊடகவியலாளர்களும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் உண்மைகளைச் சொல்லும் திரைப்படங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கும் இரட்டை நிலைப்பாடுகள் தான்.

• Da Vinci Code (டாவின்ஸி கோட்) என்கிற திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியபோது, இன்று பத்மாவதிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் யாரும் வாயைத் திறக்காமல் மௌனம் சாதித்தனர்.

• Sins என்கிற 2005-ஆம் ஆண்டு திரைப்படம் கிறிஸ்தவ பாதிரி ஒருவரின் பாபகாரியங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது பத்மாவதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரும் அந்தத் தடைக்கு எதிராகக் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் குரல் எழுப்பவில்லை.

• Inshallaah Football என்கிற திரைப்படம் காஷ்மீர் தீவிரவாதத்தினால் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் காட்டியது. அது தடை செய்யப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி யாரும் வாயைத் திறக்கவில்லை.

• Kissa Kursi Ka என்கிற திரைப்படம் நெருக்கடி நிலை காலகட்டத்தில் இந்திய அரசியல் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் அரசின் எதிர்கட்சித் தலைவர்கள் சந்தித்தப் பிரச்சனைகளைக் காட்சிப்படுத்தியது. காங்கிரஸ் அரசு அத்திரைப்படத்தைத் தடை செய்தது. காங்கிரஸ் கட்சியினர் திரைப்படத்தின் வீடியோ காஸட்டுகளையும், திரைச்சுருள்களையும் கைப்பற்றி எரித்து அழித்தனர். இப்போது பத்மாவதிக்கு ஆதரவாகப் பொங்கும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது கருத்துச் சுதந்திரத்தை மதிக்காமல் இருந்தது ஏன்?

• விஸ்வரூபம் திரைப்படத்தை எடுத்த கமலஹாசனுக்கு 24 முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி, அவர் இந்த நாட்டை விட்டே போய் விடுகிறேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விவகாரம் போனது. கடுமையான வன்முறையில் இறங்கின அவ்வமைப்புகள். இப்போது பத்மாவதி படத்துக்கு ஆதரவாகக் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும் கமலஹாசன், அப்போது இஸ்லாமிய அமைப்புகளுக்கு அடிபணிந்து பல காட்சிகளை நீக்கிப் பின்னர் திரையிட்டார்.

• “பிதாவினும் புத்திரனும்” என்கிற மலையாளப் படம் கிறிஸ்தவ கன்னியாஸ்த்ரீகள் இருவரைப் பற்றிப் பேசுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்திற்குத் தணிக்கைத் துறையினரால் சான்றிதழ் தரப்படவில்லை. ஆனால், பத்மாவதிக்கு ஆதரவாகப் பேசும் யாரும் இந்தப் படத்திற்கு ஆதரவாக வாயைத் திறக்கவில்லை!

ஆகவே, திரைத்துறையினரும், அறிவு ஜிவிகளும், ஊடகவியலாளர்களும் ஹிந்து தர்மத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கு ஆதரவாகவும் தான் இயங்குகிறார்கள் என்பது தெளிவு.

அழுகின்ற குழந்தைக்குத்தான் பாலா?

இவ்விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமும் உள்ளது. அதை அலசுவதற்கு முன்னால் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

• ஜனவரி 2015-ல் பாரிஸ் நகரில் Charlie Hebdo (சார்லீ ஹெப்தோ) என்கிற பத்திரிகையில், வெளியிடப்பட்ட கேலிச் சித்திரங்கள் தங்களைப் புண்படுத்திவிட்டதாகச் சொல்லி இஸ்லாமியத் தீவிரவாதிகள் அந்தப் பத்திரிகை ஆசிரியர் முதற்கொண்டு 12 பேர்களைச் சுட்டுக் கொன்றனர். சார்லீ ஹெப்தோ பத்திரிகையின் புகைப்படத்தைத் தங்கள் ஜனவரி 18, 2015 இதழில் வெளியிட்டதற்காக ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் பொது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

• அதே போல “முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படத்தை இந்தியாவில் தடை செய்த பிறகும், அதற்கு எதிராக தமிழகத்து முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்கள் போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையை நான்கு நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்க முற்பட்டனர். தூதரகத்தின் மீது கற்களையும் இரும்புத் தடுப்புகளையும் வீசியெறிந்தனர்.

• விஸ்வரூபம் திரைப்படத்திலும் காட்டப்பட்டது என்னவோ தாலிபான் பயங்கரவாதம் தான். ஆனால் தமிழக முஸ்லிம் அமைப்புகள் உலகறிந்த அந்தப் பயங்கரவாதத்தைக் கூடக் காட்டக்கூடாது என்றும், அப்படி ஒரு பயங்கரவாத அமைப்பே இல்லையென்கிற அளவுக்கும் தங்கள் போராட்டங்களை நடத்தின. தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெனுலாபுதீன், தாங்கள் ‘ரோஜா’ திரைப்படச் சர்ச்சையின் போது படத்தின் இயக்குனர் மணிரத்னம் வீட்டில் குண்டுகள் வீசியதாகவும், அதே போல கமலஹாசன் வீட்டிலும் வீசுவோம் என்றும், மணிரத்னம் வீட்டில் வெடிக்காமல் போன குண்டுகள் கமலஹாசன் வீட்டில் கண்டிப்பாக வெடிக்கும் என்றும் கூறி கமலஹாசனைப் பணிய வைத்ததாகக் கர்வத்துடன் தங்களுடைய பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்தினார்.

• செப்டம்பர் 2008-ல் தினமலர் (வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம்) பதிப்புகளில், இலவச இணைப்பாக வெளியிடப்படும் கம்ப்யூட்டர் மலரில் வரையப்பட்ட ஒரு முகம்மது நபி கார்டூன் படம் (டென்மார்க் பத்திரிகையில் வெளியிடப்பட்டு பெரும் பிரச்சனை ஏற்பட்டு உலகின் கவனத்தைக் கவர்ந்த விஷயம்) வந்தது என்று வேலூர் தினமலர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமிழகத்தின் பல நகரங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலை போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. படத்தை வரைந்த கார்டூனிஸ்ட் உயிருக்குத் தப்பித் தலைமறைவானார். பின்னர் முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டது தினமலர் நிர்வாகம்.

மேற்கண்ட சம்பவங்களில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வன்முறைக்கும் மிரட்டலுக்கும்தான் திரைத்துறையினரும், ஊடகத்துறையினரும் பணிகின்றனர்; பணிந்து தங்கள் கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்க விடுகின்றனர் என்கிற உண்மைதான்.

அதாவது சார்லீ ஹெப்தோ என்கிற பிரான்சு நாட்டுப் பத்திரிகையில் வெளிவந்த கேலிச் சித்தரங்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தி, 12 பத்திரிகையாளர்களைச் சுட்டுக் கொன்றனர் என்கிற செய்தியை வெளியிடும்போது, அந்தப் பத்திரிக்கையின் படத்தைக் கூட அச்சில் சேர்க்க முடியாத அளவுக்குத்தான் இவர்களுடைய கருத்துச் சுதந்திரம் உள்ளது. உலகறிந்த உண்மையான தாலிபான் பயங்கரவாதத்தைத் திரைப்படத்தில் காண்பிக்க முடியாத அளவுக்கு இவர்களுடைய கருத்துச் சுதந்திரம் உள்ளது. தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு பத்திரிகையில், எங்கோ உலகின் மூலையில் உள்ள டென்மார்க் பத்திரிகையில் வெளியான படத்தின் சாயலில் ஒரு படத்தைப் போட்டதற்கு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இவர்களின் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதாவது, கருத்துச் சுதந்திரத்தை மதிக்காமல், தங்களின் மதவுணர்வு பாதிக்கப்படுவதாகக் கூறி வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டால், தங்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்கவிட்டு அடிபணிவார்கள்.

ஆனால் ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும் கருத்துச் சுதந்திரம் என்று தங்கள் வாயைக் கிழிப்பார்கள். ஏனென்றால் ஹிந்துப்பெரும்பாமையினர் சட்டத்தை மீறிப் போராட்டங்களிலோ வன்முறையிலோ ஈடுபடுவதில்லை. உதாரணமாக எம்.எஃப்.ஹுசைன் என்கிற முஸ்லிம் ஓவியர் ஹிந்துக் கடவுள்களை அசிங்கமாக மிகவும் கேவலாமகச் சித்தரித்துப் பல படங்கள் வரைந்தார். அவர் வரைந்த படங்களைப் பல பத்திரிகைகள் பலமுறை வெளியிட்டன. அப்போது ஹிந்து அமைப்புகள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் நடத்தியபோது, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று கூக்குரலிட்டன இதே ஊடகங்கள்.

அதாவது, இஸ்லாமிய கிறிஸ்தவ சமுதாயத்தினரின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களின் மிரட்டல் போராட்டங்களுக்குப் பணிந்தும் அடங்கிப்போகும் ஊடகங்களும் திரைத்துறையினரும் முற்போக்கு அறிவு ஜீவிகளும் தான், ஹிந்து அமைப்புகளை இப்படியான ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளனர். மிரட்டல் போராட்டங்களுக்குத் தொடர்ந்து இவர்கள் அடிபணிவதையும், உண்மையைச் சொல்லக்கூட இவர்கள் அஞ்சுவதையும் பார்க்கும் ஹிந்து அமைப்புகள் போராட்டங்களும் மிரட்டல்களும் தான் தங்களுக்குமான வழி என்று எண்ணுவதில் வியப்பில்லை. அப்படியான ஒரு நிலைப்பாட்டை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ளக் காரணம் ஊடகங்களும் திரைத்துறையினரும் தான்.

மேலும், திரைத்துறை அன்னிய சக்திகளின் கரங்களில் கட்டுண்டு கிடப்பதாயும், அவர்களின் கட்டளைக்கு ஏற்ப திரைத்துறையினர் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகள் பாலிவுட் திரையுலகையும், கிறிஸ்தவ NGOக்கள் தென்னிந்தியத் திரையுலகையும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்து வருவதும் கண்கூடாகத் தெரிந்த உண்மைகள். இந்த மாதிரியான உண்மைகளால், பத்மவாதி திரைப்படத்தின் மேலும், அதன் தயாரிப்பாளர்கள் மேலும் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

தேசத்தின் பாரம்பரியத்தை மதித்து நடக்கவேண்டும்

மேலும், பத்மாவதி திரைப்படத்தைப் பொருத்தவரை மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

பெருமை வாய்ந்த பாரத தேசம் அந்நியப் படையெடுப்புகளால் பட்ட அல்லல்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆக்கிரமிப்பும், அழிவும், அடிமை வாழ்வும் ஓராண்டல்ல, ஈராண்டுகள் அல்ல; குறைந்த பட்சம் ஓராயிரம் ஆண்டுகள்!

மகோன்னதமான கலாச்சாரத்தின் சின்னங்களான ஆலயங்கள் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்டன; ஆலயங்களில் குடிகொண்டிருந்த தெய்வங்கள் அசிங்கப்படுத்தப்பட்டன. எதிர்த்து நின்ற அரச வம்சங்கள் பலமுறை அழிக்கப்பட்டன. அவர்களின் அரண்மனைகளும், கோட்டைக் கொத்தளங்களும் சூரையாடப்பட்டு அழிக்கப்பட்டன. மஹாராணிகள் முதல் சாதாரண பெண்மணிகள் வரை கோடிக்கணக்கானவர்கள் கற்பழிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். பிஞ்சுக் குழந்தைகள் கூடக் கொல்லப்பட்டனர். இந்த தேசத்தின் வற்றாத செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

இஸ்லாமியப் படையெடுப்பாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவப் படையெடுப்பாக இருந்தாலும் சரி, அவர்களின் ஆக்கிரமிப்பும், அழிப்பும் ஆதாரங்களுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்த கலைஞன் எவனும், தான் பிறந்த மண்ணின் வரலாற்று நாயகர்களையும் நாயகிகளையும் அவமானப்படுத்தியோ, அசிங்கப்படுத்தியோ படைப்புகளை அளிக்கமாட்டான்.

தன் தாய்நாட்டின் மீது பக்தியும் பற்றும் கொண்ட, தன் தாய்நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்த எந்தவொரு கலைஞனும் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில், தன் தாய்நாட்டையே அவமதிக்கமாட்டான். அவ்வாறு அவமதிப்பவன் இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாகத்தான் இருப்பான்.

ராணி பத்மாவதி, வரலாற்றுப் பெண்மணியா அல்லது கற்பனைக் கதாபாத்திரமா என்பது இங்கே பிரச்சனை அல்ல! அவள் இந்நாட்டு மக்கள் மனதில் எப்பேர்பட்ட இடத்தைப் பெற்றிருக்கிறாள் என்பது தான் அனைவரும் கவனிக்க வேண்டிய அம்சம். அவளுடைய சரிதம் என்ன மாதிரியான கலாச்சார மாண்பை இங்கே பிரதிபலிக்கிறது என்பது தான் அனைவரும் நோக்க வேண்டிய விஷயம். அப்படிச் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், எந்தவொரு தேசப்பற்று மிக்க கலைஞனும் அந்த தேவியைப் போற்றும் விதத்திலேயே தன் படைப்பை உருவாக்கியிருப்பான்.

பன்ஸாலி தன்னுடைய பத்மாவதி திரைப்படத்தை அவ்வாறு உருவாக்கியிருக்கும் பட்சத்தில், ராஜபுத்திர சமூகத்தின் பிரதினிதிகளை அழைத்து அவர்களுக்குக் காட்சிப்படுத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருப்பார். ஆனால், தேர்ந்தெடுத்த சில ஊடகப் பிரதினிதிகளுக்கு மட்டும் காட்சிப்படுத்திப் பிரச்சனையைப் பெரிதாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.

தன்னுடைய வியாபார நோக்கத்தை முன்வைத்து மக்களின் உணர்வுகளையும் இந்த தேசத்தின் பண்பாட்டையும் கொச்சைப் படுத்துகிறார் பன்ஸாலி. அவருடைய அசிங்கமான வியாபாரத்துக்குத் துணை போகின்றது ஒரு அறிவுஜீவிக் கூட்டம்.

கருத்துச் சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல என்கிற உண்மை, தங்களை அறிவு ஜீவிகளாகவும் முற்போக்குகளாகவும் காட்டிக்கொள்பவர்களுக்குத் தெரியாததல்ல. கடந்த பல ஆண்டுகளாகக் குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருக்கின்ற இந்த ஹிந்து சமுதாயம் எப்போதும் குனிந்துகொண்டே இருக்கும் என்கிற அபரிமிதமான நம்பிக்கையினால் தான் அவர்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

அந்த மாதிரியான மோசடிப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, அந்தப் படைப்பாளிகளுக்கு ஆதரவு தரும் அறிவுஜீவி, முற்போக்குக் கூட்டமாக இருந்தாலும் சரி, அவர்கள் இனியாவது ஒன்றைத் தெரிந்துகொள்வது நல்லது. இந்த தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம் குனிந்து கொண்டு குத்துக்களை வாங்கும் காலம் மலையேறிவிட்டது.

இனிவரும் காலங்களில் எதிர்வினைக் கடுமையாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். மாறிவரும் காலப்போக்கை அனுசரித்துத் தங்கள் மனப்போக்கையும் செயல்பாட்டையும் மாற்றிக்கொள்வது, கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இந்த தேசத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப் படுத்துபவர்களுக்கு நன்மை பயக்கும்.

Series Navigationபாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்