தேமல்கள்

Spread the love

 

லாவண்யா சத்யநாதன்

விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும்

அப்பிராணியான ஒருவன்

மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று

ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில்  

அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும்

தகரக்கூரையும் மண்சுவரும்

போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன.

இத்தனை பெரிய பூமியில் தனக்கு

ஏன் ஒரு நிரந்தர வசிப்பிடமில்லையென்ற

கேள்வி அவனுடைய முகமானது.

சாணேறி முழம் சறுக்கும் இருமைத் துயரை

அகோரிகளும் அம்மணர்களும் ஆசீர்வதித்தளித்த

அபினில் அவன் சில நாட்கள் மறந்திருந்தான். .

உடலெனும் ரசாயனக்கூட்டில் பசிக்கடவுள் எழுந்தருள

பரிதி எழுவது  முதல் பரிதி மறைவதுவரை

வயலிலும் ஆலையிலும் அவன் வேர்வையாய் கரைந்தான்..

ஊதியம் உழைப்புக்கேற்றதாயில்லை. உயிர்வாழப்

போதுமானதாயில்லை. இந்த அவதியிலிருந்து எப்படி மீள்வது

என்ற சிந்தனைகள் அவன் உடலெங்கும் தேமல்களாய் படர்ந்தன.

கங்கா ஸ்நாநனங்களில் தேமல்கள் மறையவில்லை.

பின்னிரவொன்றில் அடிமைச்சந்தையில் விடுதலைவென்ற

டொனால்டைப் போலொருவன் மலைகளிலிருந்து வந்தான்.

தேமல்கள் மறைய நான் சொல்லும் கதையைக் கேளென்று

 

ரோம் நகரத்து ராட்சதனின் கதையைச் சொல்லத் துவங்கினான்.

—-லாவண்யா சத்யநாதன்.

Series Navigationசித்தரும் ராவணனும்ஒரு வழிப்பாதை