தேவதை

Spread the love

அமாவாசைக்கு அடுத்த நாள்
காலை
செடிகள் எதிலும் ஒரு
மொட்டும் மிஞ்சவில்லை
தெருவெங்கும் மொட்டுக்கள்
இறைந்து கிடந்தன

முற்றத்தில் திண்ணையில்
கொடியில் காய்ந்து
கொண்டிருந்த சேலைகளும்
தாவணிகளும் வெவ்வேறு
வீட்டுக்கு இடம் மாறி இருந்தன

உயரமான மரத்தில் சிறுவன்
ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம்
குளக்கரையில் கிடந்தது
ஒரு வெள்ளை மேகம் வானவில்லின் ஒரு
துண்டை மறைத்தும் காட்டியும்
மகிழ்ந்து கொண்டிருந்தது

அம்மன் கழுத்தில் நகைகள்
இருக்க பூ மாலைகளை
மட்டும் காணவில்லை
கோயிலின் பிற சன்னிதிகள்
பூட்டியே இருந்தன

அனைவரும் கூடி
குழப்பமாய் உரையாடும் போது
விழிகளில் பார்வை இல்லாத ஒரு
சிறுமி நேற்று தேவதைகள் வந்தார்கள்
என் கண்ணுக்குத் தென்பட்டார்கள்
என்றாள்

சிலர் சிரிக்க சிலர் ஏச
அவள் உறுதியாய்க் கூறினாள்
வந்த நேரம் வரை எனக்குப் பார்வை
தந்தார்கள்
அவர்களுடன் ஒரு அன்னமும் வந்தது
அது உதிர்த்த சிறகுகளைப்
பாருங்கள் என நீண்ட
வெள்ளை இறகுகளைக் காட்டினாள்

ஒருவன் அவளைத் தேடி வந்து
மணம் முடித்த போது அவனும் சொன்னான்
அன்னம் தான் தூது வந்தது

Series Navigationசூர்ப்பனகை கர்வபங்கம் – தோற்பாவைக் கூத்துவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31