தைராய்டு ஹார்மோன் குறைபாடு

டாக்டர் ஜி. ஜான்சன்

தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளன. இவை குறைவுபட்டலோ அதிகம் கூடிவிட்டாலோ பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன.
தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத காரணத்தால் உண்டாகும் குறைபாட்டை ” ஹைப்போதைராய்டு ” ( Hypothyroid ) என்கிறோம். இதனால் உண்டாகும் நோயை ” ஹைப்போதைராய்டிசம் ” ( Hypothyroidism ) என்று அழைக்கிறோம்.

இது எதனால் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம்.முதலாவதாக தைராய்டு சுரப்பியின் செயலிழப்பு. இதை பிரைமரி ஹைப்போதைராய்டிசம் ( Primary Hypothyroidism ) என்கிறோம். இது சுரப்பியில் உள்ள அடிப்படைக் கோளாறு. அடுத்தது மூளையில் உள்ள பிட்யூட்டரி அல்லது ஹைப்போதலாமஸ் சுரப்பிகளில் குறைபாடுகள் காரணமாக உண்டாகும் தைராய்டு குறைபாடு. இதை செகண்டரி ஹைப்போதைராய்டிசம் ( Secondary Hypothyroidism ) என்கிறோம்.

அறிகுறிகள்
இவ்வாறு தைராய்டு ஹார்மோன் குறைந்தால் அதனால் பல்வேறு அறிகுறிகள் தோன்றாலாம். அவை .வருமாறு:
* சோர்வு
* உலர்ந்த தோல் அல்லது ரோமம்.
* குளிரைத் தாங்கமுடியாத நிலை
* கவனக்குறைவு
* குறைவான நினைவாற்றல்
* மலச்சிக்கல்
* உடல் பருமன் கூடுதல்
* பசியின்மை
* மூச்சுத்திணறல்
* குரலில் மாற்றம்
* தசை இறுக்கமும் வலியும்
* அதிகமான இரத்தப்போக்கு
* கழுத்துப்பகுதியில் வீக்கம்
இவை தவிர மருத்துவர் பரிசோதனையின்போது பின்வரும் குறைபாடுகளைக் கண்டறிவார்.
* ஒருவித களை இல்லாத உணர்ச்சியற்ற முக அமைப்பு
* தலையில் குறைவான ரோமம்.
* கண்களைச் சுற்றிலும் வீக்கம்.
* பெரிய நாக்கு
* மாவு போன்ற மிருதுவான குளிர்ந்த தோல்
* இருதய வீக்கம்.

பரிசோதனைகள்

* இரத்தப் பரிசோதனை – இதில் T4 என்ற ஹார்மோன் அளவு குறைந்து காணப்படும். அத்துடன் TSH எனும் ஹார்மோன் அளவு உயர்ந்து காணப்படும்.கொலஸ்டரால் கொழுப்பு வகை உயர்ந்து காணப்படும். இரத்த சோகையும் இருக்கலாம்.
* ஈ. சி. ஜி. பரிசோதனை- இதில் மாற்றங்கள் தெரியவரும். இதயத் துடிப்பு குறைந்து காணப்படும்.

சிகிச்சை முறைகள்

குறைவுபட்டுள்ள தைராய்டு ஹார்மோனை மாத்திரைகள் மூலம் நிவர்த்திசெய்வதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். வயதைப் பொறுத்து தைராய்டு ஹார்மோன் மாத்திரைகள் தரப்படும். கருவுற்றுருக்கும் பெண்களுக்கு அதற்கேற்ப கூடிய அளவில் மாத்திரை தேவைப்படும். இல்லையேல் குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடலாம்.

( முடிந்தது )

Series Navigationதொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்சிருஷ்டி