தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 10 in the series 17 ஏப்ரல் 2016
                   Parameswara

1. பரமேஸ்வரன்.

சிங்கப்பூரின்  வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப்  போற்றப்படுகிறார்.
அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு  உதவிச்  செயலாளராகப் பணியாற்றினார்.
1811ல் ஜாவா தீவிலிருந்த டச்சு காலனிமீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றினார். அவரையே அந்தக் காலனிக்கு ( இன்றைய ஜாக்கர்த்தா ) ஆளுநராக நியமணம் செய்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஐரோப்பாவில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டபின் புதிய ஒப்பந்தத்தின்படி கைப்பற்றப்பட்ட டச்சு காலனி திரும்ப டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து திரும்பிய ரேபிள்ஸ் மீண்டும் சுமத்திரா தீவிலுள்ள பென்கூலன்  என்னும் பிரிட்டிஷ் காலனிக்கு ஆளுநராக நியமனம் பெற்றார். அங்கிருந்தபோது  அவர் கம்பெனியின் வாணிபத்தை மேலும் விருத்தி செய்ய வேறு நல்ல துறைமுகம் தேவை என்பதை உணர்ந்தார். மேலிடத்தின் சம்மதத்துடன் புதிய இடம் தேடும் முயற்சியை மேற்கொண்டார்.
கப்பல் படையுடன் புறப்பட்டு தேடியபோதுதான் சிங்கப்பூர் தீவு தென்பட்டது. அடர்ந்த காடுகளுடன் காணப்பட்ட அந்தத் தீவை  நல்ல துறைமுகமாக மாற்றலாம் என்று அவர் எண்ணினார். தீவின் தென் பகுதியில் குடியிருப்புகளைக் கண்டு அங்கு இறங்கினார். அவர் இறங்கிய நாள் ஜனவரி 28, 1819. அந்த இடம் சிங்கப்பூர் நதி கடலுடன் கலக்குமிடம். அதன் கரையோரத்தில் சில குடிசைகள் இருந்தன. அங்கு குடியிருந்தவர்கள் மலாய்க்காரர்கள்.அவர்களுக்கு ” தெமெங்க்காங் ” என்ற தலைவர்  இருந்தார். அவர்தான் ஜொகூர் சுல்தானின் பிரதிநிதி.அவரிடம் பேசி அந்த இடத்தை வாங்க வேண்டும் என்று கேட்டார். ஜனவரி 30 அன்று அவர்கள் இருவரும் ஒரு தற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டனர். அப்போதே ஆங்கிலேயரின் ” யூனியன் ஜேக் ” கொடி அங்கு ஏற்றப்பட்டது! அதைத் தொடர்ந்து பெப்ருவரி 6 அன்று சுல்த்தான் ஹுசேன், தெமெங்காங், ரேபிள்ஸ் ஆகியோர் நிரந்தர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அன்றே சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாகிவிட்டது

Raffles1

          இது சிங்கப்பூரை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த வரலாறு.
          அனால் சிங்கப்பூருக்கு இன்னொரு வரலாறும் உள்ளது. அது அதற்கு சிங்கப்பூர் என்ற பெயர் வந்த வரலாறு. சிங்கப்பூர் என்பது தமிழ்ப் பெயர். சிங்கத்தின் ஊர் சிங்கப்பூர். அறுபது வருடங்களுக்கு முன் நான் சிங்கப்பூரில் ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது அப்படித்தான் எண்ணினேன். அப்போது சரித்திரப் பாடத்தில் சிங்கப்பூரைக் கண்டுபிடித்தவர் பரமேஸ்வரன் என்ற இந்து இளவரசர்  என்றுதான் சொல்லித்தந்தார்கள்.அவர் அண்டை நாடான இந்தோனேசியாவின்  சுமத்திரா தீவிலுள்ள பெலம்பாங் என்ற நகரிலிருந்து ஓர்  இளவரசியுடன் தப்பித்து கப்பல் மூலம் ஓடிவந்தபோது அடர்ந்த காடு உள்ள தீவைக் கண்டனர்.அப்போது அங்கே ஒரு சிங்கம் நின்று கர்ஜிக்கிறது. அதைப் பார்த்த பரமேஸ்வரன் தன் பரிவாரங்களைப் பார்த்து, ” இந்த இடம் வீரம் மிக்கது. அதனால் இந்த இடத்துக்கு சிங்கப்பூர் என்று பெயர் சூட்டுகிறேன்! ” என்று கூறுகிறார் .இதை எப்படி இவ்வாறு தெளிவாகக் கூறுகிறேன் என்றால் அப்போது பள்ளியில் அரங்கேற்றம் செய்த ஒரு நாடகத்தில் நான்தான் பரமேஸ்வரனாக நடித்தேன்! அதற்குக் காரணம் எங்கள் வகுப்பில் நான் ஒருவனே தமிழன். மற்ற அனைவரும் சீனர்கள். ஆதலால் என் வகுப்பு ஆசிரியர் டான் என்பவர் நான்தான் பரமேஸ்வரன் பாத்திரத்துக்குப் பொருத்தமானவன் என்று கூறியது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.
          அப்போது நான் மிகவும் பெருமைப் பட்டேன். சிங்கப்பூருக்கு பெயர் சூட்டியவர் ஒரு தமிழ் இளவரசர் என்று நான் நம்பியதால்.ஆனால் இப்போது சரித்திரத்தைப் படிக்கும்போது பரமேஸ்வரன் என்பவர்  ஸ்ரீ விஜய இளவரசர் என்று தெரிகிறது. அப்படியெனில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் இந்து மதத்தினரிடம் இருந்திருக்கவேண்டும்.அவர்கள் பேசிய மொழி தமிழும் சமஸ்கிருதமாகவும் இருந்திருக்கவேண்டும். சிங்கப்பூர் என்பதற்கு விஷ்ணுவின் நகரம் என்றும் பொருள் ஒன்று உள்ளது.
ஸ்ரீ விஜயம் எப்படி உருவானது என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் கி.மு. 200 ஆம் ஆண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்துள்ளது. அதனால்தான் அவை அனைத்தும் கிழக்கு இந்தியத் தீவுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் பெலம்பாங் என்ற தலைநகரைக்கொண்டு  தென்கிழக்கு நாடுகளையெல்லாம் தன வசம் வைத்திருந்தது. சீனாவிலிருந்து தமிழகம் வரை வர்த்தகம் செய்துள்ளது. இராஜ ராஜ சோழன் ஸ்ரீ விஜய மன்னனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் இராஜேந்திரச் சோழன் பெரிய கடற்படையுடன் சென்று ஸ்ரீ விஜத்தை வீழ்த்தி அதன் மன்னனையும் சிறை பிடித்துள்ளார். அதற்குக் காரணம் அப்போது கம்போடியாவை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஜெயவர்மன் இராஜேந்திரச் சோழரின் உதவியை நாடியதே. அதன்பின்பு சோழ மன்னர்களான முதலாம் குலோத்துங்க சோழனும், இரண்டாம் இராஜராஜ சோழனும் ஸ்ரீ விஜயத்தை ஆண்டுள்ளனர். இது வரலாறு.ஸ்ரீ விஜயத்தின் ஆட்சியின்போது சமஸ்கிருதம் வழக்கில் இருந்துள்ளதெனில் அதற்கு முன்பே இந்தியர்கள் சுமத்ரா ஜாவா தீவுகளுக்கு வந்து ஆண்டுள்ளனர் என்பது புலப்படுகிறது. அவர்கள் மூலமே சமஸ்கிருதம் வழக்கில் வந்துள்ளது எனலாம்.
          எது எப்படியோ. பரமேஸ்வரன் ஒரு இந்து இளவரசர்தான். அவர் தமிழராக இல்லாவிட்டாலும் நிச்சயமாக அவர்  இந்தியர்களின் வம்சாவழியில் வந்தவன்தான் என்பது நிச்சயம். ஆதலால் சிங்கப்பூருக்குப் பெயரிட்டவர்  ஓர்  இந்து இளவரசர்  என்று நாம் பெருமை கொள்ளலாம் .
          ரேபிள்ஸ் முதல் முதலாக காலடி வைத்த இடத்தில் அவருக்கு கம்பீரமான ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.அதன் பின்பக்கம் விக்டோரியா நினைவு மண்டபமும் சிங்கப்பூர் பாராளுமன்றமும் உள்ளது. பரமேஸ்வரனின் நினைவாக அவருக்கு ஒரு சமாதிதான் கேனிங் கோட்டையில் உள்ளது.
          நான் மலை ஐந்து மணிக்கெல்லாம் ஹை ஸ்ட்ரீட் சென்று வழக்கமாக நிற்கும் இடத்தில் காத்திருந்தேன். சரியாக ஐந்து மணிக்கு லதா பணியிடத்திலிருந்து வெளியே வந்தாள். நான் நிற்கும் இடம் நோக்கி வந்தபோது என்னைக் கண்டாள். வியப்பால் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள்! ஐந்து வருடங்கள் கழித்து பார்க்கிறாள்.அது நான்தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லைதான்.
          கைப் பிடித்துக்கொண்டோம்.
          ” நீங்களா? எப்போ வந்தீர்கள்? “ஆச்சரியத்துடன் கேட்டாள். அவளுடைய கண்கள் கலங்கின.
          ” நேற்றுதான். திடீர்ப் பயணம்.அதான் தெரிவிக்கவில்லை. நேரில் வந்து அதிர்ச்சி தரலாம் என்றிருந்தேன்..” நான் சமாளித்தேன்.
          ” என்னை மறந்துவிட்டீர்கள்தானே? ” குறும்புடன் கேட்டாள்.
          ” மறப்பதா? அது எப்படி முடியும்? பதினைந்து வருடக் காதலி அல்லவா நீ ?” என்றேன்.
          ” ஆமாம். அப்படித்தான் சொல்வீர்கள் .கடிதம் மட்டும் போடமாட்டீர்கள்…அப்படித்தானே? ” கிண்டலாகக் கேட்டாள்.
          ” இப்போ எங்காவது தனிமையான இடத்துக்குப் போவோம். ” அர்த்தத்துடன் அவளைப் பார்த்தேன்.
          ” நாம் ஒரு நல்ல இடம் போவோம். ” என்றவாறே ஒரு டாக்சியை நிறுத்தினாள்.அதில் ஏறி அமர்ந்தோம்.
          ” டிரைவர் ஆச்ச்ர்டு ரோடு போகணும் .” அந்த சீன ஓட்டுனரிடம் கூறினாள் .
          டாக்சி புறப்பட்டது.
Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *