தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

டாக்டர் ஜி. ஜான்சன்

145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது.
வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள் அடங்குவர். அதுபோன்றே சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தாதியரும், தாதியர் பயிற்சி மாணவிகளும் இருந்தனர். இவர்கள் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினர்.
எனக்கு அவர்கள்போன்று பொங்கல் தினத்தைக் கொண்டாடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதை நான் தனிப்படட முறையில் தமிழ் மாணவ மனைவிகளிடம் வெளிப்படுத்தியபோது அவர்கள் அனைவருமே ஆர்வத்துடன் அதை வரவேற்றனர். பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒரு நாடகமும் அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தொம். செயல் திட்டங்கள் பற்றி பேசி பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படடன. நான் விழாக்குழுத் தலைவராகச் செயல்பட்டேன். அத்துடன் நாடகத்தை அரங்கேற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டேன். விழாவிற்கு டாக்டர் ஃபென் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்தோம். அவர் அறுவைச் சிகிசசை நிபுணர். தமிழர். ( பின்னாளில் கல்லூரி முதல்வர் ஆனவர் )
என்னுடைய நூல்கள் சேகரிப்பில் அண்ணாவின், ” வண்டிக்காரன் மகன் ” இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் வரும் சம்பவங்கள் அனைத்தையுமே மேடையில் நடிக்கலாம். நான் அதை மீண்டும் ஒருமுறைப் படித்தேன். அப்போது அதிலுள்ள கதாபாத்திரங்களைக் குறித்துக்கொண்டேன். பின்பு அதை நாடகமாக எழுதி காட்சிகள் அமைத்தேன். அதன்பின்பு வசனங்கள் எழுதினேன்.
மாணவர் மாணவிகளில் யாரும் நடித்துப் பழக்கம் இல்லாதவர்கள். இருந்தாலும் நான் பாத்திரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்டவர்களைக் குறித்துக்கொண்டேன். அவர்களிடம் அணுகியபோது பலர் நடிப்பு வராது என்று பின்வாங்கினர். சிலர் கூச்சப்பட்டனர். மாணவர்களே அப்படியெனில் மாணவிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆகவே நாடகத்தில் ஒரு பெண் பாத்திரம் மட்டும் போதும் என்று முடிவு செய்தேன்.
நாடகத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். வண்டிக்காரன்.அவனின் மகன். அவனின் காதலி. இவர்களுக்குதான் வசனங்கள் அதிகம். இந்த மூவரும் வசனங்களை மனப்பாடம் செய்வதோடு சரியாகவும் உச்சரித்து உரக்கப் பேசவேண்டும். மற்றவர்கள் துணைப் பாத்திரங்கள். மொத்தம் பத்து பாத்திரங்களை வைத்து பத்து காட்சிகளில் நாடகத்தை அமைத்தேன்.
அதிக வசனங்கள் உள்ள வண்டிக்காரன் பாத்திரத்தை நானே எடுத்துக்கொண்டேன். எனக்கு மகனாக நடிக்க யார் பொருத்தமாக இருக்கமுடியும் என்று யோசித்ததில், எனக்கு இரண்டு வருடம் சீனியர் மாணவர் பானர்ஜி மிகவும் பொருத்தமானவராகத் தெரிந்தார். அவர் ஆம்பூரைச் சேந்தவர். நன்றாகத் தமிழ் பேசுவார்.சற்று குள்ளமாகவும் சிவப்பாகவும் இருப்பார். அவரிடம் சொன்னபோது அவர் தயக்கம் கூறாமல் உடன் சம்மதித்துவிட்டார். அடுத்து அவருக்குப் பொருத்தமான ஒரு காதலியைத் தேந்தெடுக்கவேண்டும். எனக்கு என் வகுப்பு மாணவி சூரியபிரபாவை நடிக்கவைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவள் மாநிறத்தில் ஒல்லியான தோற்றமுடையவள். அவளும் நன்றாகத் தமிழ் பேசுவாள்.அவளை அணுகினேன். முதலில் கொஞ்சம் தயங்கினாள். பின் சரி என்றுவிட்டாள். மற்ற நடிகர்களின் தேர்வு மிகவும் சுலபமானது. டேவிட் ராஜன், சுந்தர்ராஜன், ஜேம்ஸ் ஜவகர் போன்றவர்களைப் பயன்படுத்திக்கொண்டேன்.
வசனங்கள் எழுதி முடித்ததும் அவற்றை நடிகர்களிடம் தந்து மனப்பாடம் செய்யக் கொடுத்தேன்.
நண்பர் செல்வராஜிடம் பேசி அவருடைய உதவியுடன் உள்ளூர் நாடகக் குழுவுடன் தொடர்பு கொண்டு ஒப்பனை, மேடையில் காட்சி அமைப்புகளுக்கு ஏற்பாடு செய்தொம். அவர்கள் அதற்கு ஒரு தொகை சொன்னார்கள். என்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் முன்பணமாகக் கொடுத்து அவர்களை நிச்சயம் செய்துகொண்டேன்.
பொங்கல் விழாவாகக் கொண்டாட நாங்கள் முடிவு செய்ததால், பொங்கல் பற்றிய ஒரு சிறப்புரை, பரதநாட்டியம், குழு நடனம், நாடகம், இரவு விருந்து என்று திட்டமிட்டிருந்தோம். நடனங்களை ஜுனியர் மாணவிகள் தயார் செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
விழா ஜனவரி பதினான்காம் தேதி தைத் திங்கள் முதல் நாளான பொங்கல் தினத்தன்று நடைபெறும் என்றும் இரு விடுதிகளிலும் விளம்பரம் செய்தொம்.
விழாவுக்கு நன்கொடை வசூல் செய்வதென்றும் முடிவெடுத்தோம். அதற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கோஷி சம்மதம் தெரிவித்ததோடு, கல்லூரியின் சார்பில் ஒரு தொகையையும் தந்தார். நாங்கள் தமிழ் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் பொதுவிலும் வசூல் செய்வதென்று முடிவெடுத்தோம்.
மாணவர் மாணவிகளிடம் வசூலித்த நன்கொடை குறைவுதான். தமிழ் விரிவுரையாளர்களிடமும், பேராசிரியர்களிடமும் அணுகியபோது ஒரு கணிசமான தொகை கிடைத்தது.
நாடக ஒத்திகையை அரங்க மேடையில் இரவில் மேற்கொண்டோம். நான்தான் நாடகத்தை இயக்கினேன்.அது நன்றாக வளர்ந்தது.எல்லாருமே நன்றாக வசனத்தை மனப்பாடம் செய்திருந்தனர்.
தமிழ் மாணவ மாணவிகள் உற்சாகமாக ஒத்துழைத்தனர். கல்லூரியில் கொண்டாடப்போகும் முதல் பொங்கல் விழா. இதை தமிழர் திருநாளாகவும் தமிழ்ப் புத்தாண்டாகவும் நாங்கள் கொண்டாடப் போகிறோம். மாணவர்கள் அனைவரும் விழாவுக்கு வெட்டி சட்டையுடனும், மாணவிகள் சேலையுடனும் வருவதென்று முடிவெடுத்தோம். நான் வேலூர் சென்று பட்டு வேட்டியும் தோளில் போடும் பட்டு தூண்டும் வாங்கிக்கொண்டேன். அதையே நாடகத்தில் அணிந்துகொள்ளவும் முடிவு செய்தேன்.
தைத் திங்கள் முதல் நாள். விழாவிற்கான கடைசி ஏற்பாடுகளில் ஈடுபட்டேன். மேடையின் ஒரு மூலையில் கரும்புகள் கட்டி பொங்கல் பானை வைத்து அலங்காரம் செய்தோம்.உள்ளூர் நாடகக் குழவைச் சேர்ந்தவர்கள் நான்கு மணிக்கே வந்து வண்ணத்தில் வீடு, வீட்டுக் கூடம், தெரு , பூங்கா ,போன்ற காட்சிகள் கொண்ட பெரிய படுத்தாக்களை மேடையில் ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டித் .தொங்கவிட்டனர்.காட்சிக்குக் காட்சி அவை மாற்றப்படும். காட்சிகளின்போது மேடையில் வைக்கப்படும் பொருள்களை பின்பக்கத்தில் வரிசைப் படுத்தி வைத்துக்கொண்டோம்.
மேடையின் கீழ் சுழலும் வண்ண விளக்குகள் கொண்ட கருவி வைக்கப்பட்டது.
மாலை ஐந்து மணிக்கே ஒப்பனைக் கலைஞர்கள் வந்துவிட்டனர். நடிகர்கள் ஒவ்வொருவராக ஒப்பனை செய்துகொண்டனர்.என்னுடைய முறுக்கு மீசை வண்டிக்காரனுக்கு ஏற்றதாக அமைந்துவிட்டது!
மாலை ஆறரை மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழ் வாழ்த்து பாடினோம். டாக்டர் ஃபென் அவர்களுக்கு மலர் மாலை அணிந்து வரவேற்றோம். நான் பொங்கல் தினத்தின் சிறப்புகள் பற்றி சுருக்கமாக உரையாற்றினேன். தொடந்து பெண்களின் குழு நடனங்களும் பரதநாட்டியமும் எல்லாரையும் கவர்ந்தது. திரைக்குப் பின்னால் நாடகத்தின் முதல் காட்சிக்கு ஏற்பாடுகள் நடந்தன.
திரை மூடியதும் நான் திரைக்குப் பின்னால் சென்று நாடகத்தை இயக்கத் தயாரானேன்.
நான் மேடையில் இருந்த பட்டு வேட்டியுடன் தோளில் துண்டு போட்டுக்கொடேன். மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டேன்! முகத்தை வண்டிக்காரன் போன்று பொறுப்புள்ளவனாக மாற்றிக்கொண்டேன்.
வண்டிக்காரனின் மகனாக நடிக்கும் பானர்ஜி கிராமத்து மைனர்போன்று பேண்ட் சட்டை அணிந்து கழுத்தில் மைனர் சங்கிலி அணிந்துகொண்டார்.
அனைவருமே நன்றாக நடித்தோம். மாணவ மாணவிகள் கை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
அதில் ஒரு காட்சியில் வண்டிக்காரனுக்கும் அவனின் மகனுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடக்கும். அப்போது ஆத்திரமடைந்த அப்பா மகனை ஓங்கி அறைந்துவிடுவான். அதை நடித்தபோது பானர்ஜியும் நானும் உணர்ச்சிவசப்பட்டு அந்த பாத்திரங்களாகவே மாறிவிட்டோம். அதனால் அவரை உண்மையிலேயே ஓங்கி அறைந்துவிட்டேன். அப்போது அவர் அந்த வலியை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
விழா முடிந்து விருந்து உண்ணும் வேளையில் அவர் உணவுத் தட்டுடன் என்னருகில் வந்து அமர்ந்தவர்,, ” ஒத்திகைப் பார்த்தபோதெல்லாம் அப்படி லேசாக தொட்டு விட்டு இன்று இப்படி வேகமாக அறைந்துவிட்டாயே ? ” என்று கேட்டார்.
” மன்னித்துவிடுங்கள். மின்னல் வேகத்தில் அப்படி நடந்துவிட்டது. ஒத்திகையின்போது அடி படாமல் விலகிக் கொள்வீரே. இன்று அடி விழுந்துவிட்டதே?” நான் சமாதானம் செய்தென்.
அதன்பின்பு பானர்ஜி எப்போது என்னைப் பார்த்தாலும் அது பற்றியே கூறுவார். நான் படித்து முடித்து வெளியேறி பல வருடங்கள் கழித்து அவரை ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் பேராசிரியராகவும் வேலூரில் சந்தித்தபோதுகூட அவர் அதை மறக்கவேயில்லை!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)படித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்