தொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்

Spread the love

மருத்துவ பட்டதாரி ஆகிவிட்டேன். இனி முழு மருத்துவனாக ஓராண்டு பயிற்சி மருத்துவனாக பணிபுரிந்தாகவேண்டும். இதை மனை மருத்துவம் ( House – Surgeon ) என்றும் கூறுவர். இந்த ஓராண்டில்தான் நாங்கள் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்து குணமாக்கவேண்டும். இதுவரை நூல்களில் படித்தும் அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வார்டுகளில் பரிசோதித்தும் தேர்வுக்காகப் பயின்றோம். இனிமேல் நாங்களே வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்  பழகிக்கொள்வோம்.

முன்பு நோய்களைப் பற்றிதான் நோயாளிகளிடம் அறிந்துகொண்டோம். இப்போது அவர்களின் பிரச்னை என்னவென்பதைக் கேட்டு குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டும். அவர்களை முழுமையாக உடல் பரிசோதனை செய்யவேண்டும். அதன்பின்பு அவர்களுக்குத் தேவையான இரத்தம், சிறுநீர் அல்லது சளி போன்றவற்றை பரிசோதனைக்கு அனுப்பவேண்டும். தேவையெனில் எக்ஸ் – ரே படம் எடுக்கவேண்டும். அவற்றை வைத்து அவர்களுக்கு உண்டானது என்ன நோய் என்பதை அறியவேண்டும். இதில் ஏதாவது சந்தேகம் உண்டானால் சீனியர் மருத்துவரிடம் நோயாளியை அழைத்துச் சென்று அவருடைய கருத்துரையைக் கேட்கவேண்டும். வெளிநோயாளிப் பிரிவில் நோயாளிக்குத் தேவையான மருந்துகள் எழுதித் தரவேண்டும். தேவைப்பட்டால் நோயாளியை வார்டில் அனுமதிக்கலாம்.

இவ்வாறு பயிற்சி பெறும்போது எப்போதுமே உதவ சீனியர் மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள். கூடுமானவரை அவர்களிடம் செல்லாமலேயே நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முயலுவோம். அப்போதுதான் தன்னம்பிக்கை உண்டாகும். அதற்கு மருத்துவ நூலையும் உடன் எடுத்துச் செல்வோம். சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அது உதவும்.

பயிற்சி மருத்துவனாக வெளிநோயாளிப் பிரிவிற்கும், வார்டுக்கும் செல்லும்போது மருத்துவ கோட் அணிந்துசெல்லவேண்டும். கழுத்தில் எப்போதுமே ஸ்டெத்தஸ்கோப் தொங்கும். அதை அணிந்துகொண்டுதான் நாள் முழுதும் மருத்துவமனையில் இருப்போம். வெளியில் கடைக்குச் சென்றாலும் அவ்வாறேதான் செல்வோம். அவை பெரும்பாலும் மருத்துவமைக்கு எதிர்புறம் வாலாஜா வீதியில் இருக்கும் கடைகள்தான். அடிக்கடி அங்கு செல்வதால் அந்த கடைக்காரர்களுக்கு  எங்களை நன்றாகத் தெரியும்.

பயிற்சி மருத்துவத்தின்போது ஒரு முக்கியமான நெறியைக் கடைப்பிடிக்க எங்களுக்குச் சொல்லித்தரப்பட்டது. மருத்துவத் தொழிலை தொழிலாக எண்ணாமல் அதை புனிதமான மனிதச்  சேவையாகக் கருதவேண்டும் என்பதே அந்த நெறிமுறை. இதை வாழ்நாள் முழுதும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் எங்களுக்கு உணர்த்தப்பட்டது.  இதுவே வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் தனித்துவம்!

இங்கு படித்து வெளியேறிய பட்டதாரிகள் இந்தியாவின் பல பகுதிகளில்  உள்ள மிஷன் மருத்துவமனைகளில்தான் பணிபுரிந்துவருகின்றனர்.அடிப்படை வசதிகள் இல்லாத பல கிராமப்புறங்களிலும் இவர்கள் சேவை புரிகின்றனர்.இங்கிருந்து வெளியேறும் மருத்துவ பட்டதாரிகள், மிஷனரி மருத்துவர்களாக ஏழை எளியோருக்கு இயேசுவின் இரக்க சிந்தையிடன் சேவை புரியவேண்டும் என்பதே தலையாய நோக்கமாகும்.

நோயை நோயாக மட்டும் பார்க்காமல் ஒரு முழு மனிதனாக அந்த நோயாளியைப் பார்க்கும்போது அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நிலை, அவன் வாழும் சமுதாயச்  சூழல், அவனுடைய பொருளாதாரம் போன்ற சமூக நோக்குடன் அவனைப் பார்த்து அவனை முழுதுமாக குணப்படுத்தவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

          பயிற்சி மருத்துவம் ஓராண்டு காலம் கொண்டது. அதில் நான்கு பிரிவுகள் உள்ளது.ஒவ்வொரு பிரிவிலும் மூன்று மாதங்கள் பயிற்சி பெற வேண்டும். அவை மருத்துவம், அறுவை மருத்துவம், பிரசவமும் மகளிர்  நோய்இயலும்,  சமூக மருத்துவம் ஆகியவை. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று மாதங்கள் கழித்தபின்பு சான்றிதழ் வழங்கப்படும்.
          பட்டமளிப்பு விழா நடந்தபின்பு விடுதியை காலிசெய்துவிட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள் பயிற்சி மருத்துவர் விடுதியில் குடிபுகுந்தோம். அங்கு தனி அறை நான்காவது மாடியில் கிடைத்தது. கீழே உணவகம் இருந்தது. வளாகத்தின் எதிரே கடைத் தெருவுகள் உள்ளன. அங்கு ஏராளமான உணவகங்களும் இருந்தன. சி. எம். சி.மருத்துவமனை வேலூர் நகரின் மையப்பகுதியில் இருந்தது. இந்த மருத்துவமனையை வைத்துதான் வேலூர் நகரும் விசாலமானது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நோயாளிகள் இங்கு வருவதால், அவர்களும் அவர்களின்  உறவினர்களும்  தங்கிக்கொள்ள ஏராளமான தங்கும் விடுதிகள் வேலூரில் பெருகியுள்ளன. அதுபோன்றே அவற்றில் தங்குபவர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவராக, பல்வேறு மொழிகள் பேசுபவர்களாகவும் இருந்தனர்.
          முதல் மூன்று மாதங்கள் நான் முதலாம் மருத்துவப் பிரிவில் பணிபுரிந்தேன். இதன் தலைமை மருத்துவர் டாகடர் பெஞ்ஜமின் புளிமூட் . இதுபோன்று இன்னும் இரண்டு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. என்னுடைய மாணவப் பருவத்திலும் நான் இந்த முதல் பிரிவில்தான் இருந்தேன். டாக்டர் புளிமூட் என்னிடம் அன்பாகப் பழகுபவர். நான் சிறுகதைகள் எழுதுவதை மறக்காமல் அடிக்கடி கேட்பவர். அதனால் அவரிடம் நான் உரிமையோடும்  நட்புடனும் மருத்துவப் பயிற்சி பெற்றேன். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முறையாகச் ( Systematic ) செய்யவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர். அவருடைய சட்டைப் பையில் எப்போதும் சில வெள்ளை அட்டைகளை வைத்திருப்பார். நம்மிடம் பேசும்போது எதையாவது செய்யச்சொல்லி கட்டளையிட்டால் உடன் அதை அந்த அட்டையில் குறித்துக்கொள்வார். பின்பு சில நாட்கள் கழிந்தபின்பு நம்மை மீண்டும் பார்க்கும்போது அந்த அடடையைப் பார்த்து அது பற்றி மறக்காமல் கேட்பார். நானும் அந்த முறையைப் பின்பற்றலானேன். அதனால், மறந்துபோனேன் என்று சொல்வதற்கே வாய்ப்பில்லாமல் போனது!
          முதல் நாள் பத்து பேர்கள் கொண்ட நாங்கள்  முதலாம் மருத்துவப் பிரிவின்  அலுவலகத்தில் கூடினோம். எங்களை இன்முகத்திடன் வரவேற்ற டாக்டர் புளிமூட் நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டு விளக்கம் தந்தார்,அதன்பின்பு நாங்கள் வெளிநோயாளிப் பிரிவுக்குச் சென்றோம். அங்கு ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர். எங்களுக்கு தனி அறைகள் தரப்பட்டிருந்தன.
          பெருமிதத்துடன் மனதில் மிகுந்த மகிழ்சியுடன் அன்று இருக்கையில் அமர்ந்தேன்.  கடவுளுக்கு நன்றி சொன்னேன். எவ்வளவோ மனக்கோட்டைகள் கட்டி பல ஆண்டுகள் உழைத்ததின் பயனாக இன்று முழு மருத்துவனாக உருவாகியுள்ளேன். இனிமேல் என்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆற்றப்போகும் இந்த புனிதமான மருத்துவத் தொழிலின் முதல் நோயாளியைக் காணாப்போகிறேன். இந்த முதல் நோயாளியைப் பற்றிய குறிப்புகளை நாட்குறிப்பில் எழுதிக்கொள்ளவேண்டும். பின்நாளில் சுயசரிதை எழுத நேர்ந்தால் இந்த முதல் நோயாளியைப் பற்றியும் நினைவு கூறவேண்டும்.
          அந்த மறக்கமுடியாத முதல் நோயாளி வனஜா. வயது இருபத்தைந்து.ஒல்லியாக உயரமாக மாநிறத்தில் இருந்தாள். அவளுடைய அழகான முகத்தில் அச்சம் நிழலாடியது.அது அவளுடைய உடல்நிலை பற்றிய அச்சமா அல்லது மருத்துவரைக் காணப்போகிறோம் என்ற அச்சமா? இருக்கையில் அமர்ந்தவள் குனிந்த தலை நிமிராமல் காட்சி அளித்தாள்.
          அவள் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளாள்.இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை செய்யவில்லை. பெற்றோர்களுடன் உள்ளாள். அவர்கள் விவசாயிகள். சொந்த நிலங்கள் கொஞ்சம் உள்ளன. கண்ணமங்கலத்திலிருந்து வந்துள்ளாள். அது வேலூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்.
நெஞ்சு வலியும் மூச்சுத் திணறலும் முக்கிய பிரச்னைகள். இந்த பிரச்னை கடந்த ஒரு வருடமாக உள்ளது. கண்ணமங்கலத்தில் அரசாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாள். இருதயத்தில் கோளாறு உள்ளது என்று சொல்லி மருந்து தருகிறார்களாம். அனால் கால்களில் வீக்கம் வந்ததால் அங்கு சென்றபோது அவர்கள் பணம் தயார் செய்துகொண்டு சி.எம்.சி. மருத்துவமனைக்குச் சென்று பார்க்க அறிவுரை வழங்கியுள்ளனர்.
          அவளிடம் வேறு சில கேள்விகளையும் கேட்டு குறித்துக்கொண்டேன். முன்பு எப்போதாவது நெடுநாட்கள் காய்ச்சல் வந்துள்ளதா என்று கேட்டேன். அவள் ஆம் என்று கூறினாள். அப்போது கால் மூட்டில் வீக்கம் இருந்ததா என்றும் கேட்டேன். ஆம் என்றாள். அது எத்தனை நாட்கள் அப்படி இருந்தன என்றும் விசாரித்தேன். சுமார் இரண்டு வாரங்கள் என்று பதிலளித்தாள்.நான் இதை அவளுடைய பதிவேட்டில் குறித்துக்கொண்டேன். இது ஒரு முக்கியமான தடயம்!
          இளம் வயதினருக்கு அதிகமாக இருதயம் பாதிக்கப்படுவது இருதய வால்வு நோய். அதிலும் குறிப்பாக மைட்ரல் வால்வு என்ற இருதயத்தின் இடது பக்க வால்வுதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்.இதை உண்டுபண்ணுவது ரூமேட்டிக் காய்ச்சல். இந்தக் காய்ச்சல் பேக்டீரியா கிருமியால் உண்டாகும். இளம் பிள்ளைகளைத் தாக்கும். இது வந்தால் கால் மூட்டுகள் வீங்கும். இது குணமாகி சில வருடங்களில் இருதய வால்வுகள் பாதிப்புக்கு உள்ளாகி அறிகுறிகள் தோன்றும். தமிழ் நாட்டில் இந்த நோய் பரவலாக அப்போது இருந்தது. ரூமேட்டிக் காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை தராத காரணத்தால் பலருக்கு இதுபோன்ற இருதய வால்வு பிரச்னை உண்டாகியுள்ளது.
          வனஜாவை நான் இன்னும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அவளுக்கு உள்ளது என்னவென்பதை ஓரளவு யூகித்துக்கொண்டேன். மைட்ரல் ஸ்டெனோசிஸ் என்ற வால்வு சுருக்கம் பற்றி மருத்துவ நூலில் படித்ததையும், வார்டில் பார்த்த நோயாளிகளையும் ஒருமுறை மனதில் நோட்டமிட்டேன். சந்தேகத்துக்கு இடமின்றி வனஜாவுக்கு உள்ளது மைட்ரல் ஸ்டெனோசிஸ் என்னும் இருதய வால்வு சுருக்க நோய்தான் என்று முடிவு செய்துகொண்டேன்.
          இனி நான் அவளை பரிசோதனை செய்தாகவேண்டும். இது இருதயப் பிரச்னை என்பதால் அவள் நெஞ்சுப் பகுதியை நான் நன்கு ஆராய்ந்து பரிசோதிக்கவேண்டும். அதற்கு அவள் ஜாக்கட்,ப்ரா ஆகிய உடைகளைக் கழற்றியாகவேண்டும். இதற்கு உதவ ஒரு தாதியர் பயிற்சி மாணவியை அழைத்துக்கொண்டேன்.இதுபோன்று பெண் நோயாளிகளைப்  பரிசோதனை செய்யும்போது உடன் இன்னொரு பெண்ணை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

          வனஜாவின் இடது மார்பின் அடிப்பகுதியில் கையை வைத்து அழுத்தினேன். அவளுடைய இருதயத் துடிப்பு கையில் பட்டது. அதோடு ஒருவித உரசலையும் உணரமுடிந்தது. இதை சிலிர்ப்பு ( thrill ) என்போம். அந்தப் பகுதியில் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்து உற்று கேட்டேன். இருதய ஓசைகள் கேட்டதோடு இரண்டாம் ஓசைக்குப்பின்பு ஒரு முணுமுணுப்பு ( murmur ) சத்தமும் கேட்டது.  அவளுக்கு உள்ளது மைட்ரல் வால்வு சுருக்கம் என்பது புலனாயிற்று. என் யூகமும் சரியாயிற்று.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationபாவங்கள்…ஆச்சி – தாத்தா